முருகன் App
குன்றக்குடிப் பதிகம் 1,2,3
தண்டபாணி சுவாமிகள்
குன்றக்குடிப் பதிகம் - 35 / 5
குன்றக்குடிப் பதிகம் 1,2,3 · தண்டபாணி சுவாமிகள்

குன்றக்குடிப் பதிகம் - 3

1அறுசீர் விருத்தம்✓
நந்தாரும் காதினன்போல் நானிலத்தில்
வாழும்நலம் நண்ணும் என்னை
நொந்தாருள் தலையாக்கல் முறைகொல்லோ?
அருட்கடைக்கண் நோக்கி யாள்வாய்!
இந்தாரும் சடைப்பெருமான் தருமதலாய்!
வடிவேலொன்(று) எடுத்த கையாய்!
கொந்தாரும் மலர்க்கடப்பந் தண்சோலை
குலவுகுன்றக் குடிக்கோ மானே.
2✓
நீதயைசெய் யாக்கொடுமை மலிந்ததனாற்
பரதவித்து நெஞ்சம் புண்ணாய்ப்
பாதகரும் இகழவொரு கரும்பாறை
தொடும்எனைக்கண் பார்க்க வேண்டும்
சீதமலி கங்கைதரு சிறுவனே!
வெண்சேவற் றிருக்கை யானே!
கோதறுமா தவமுடையார் பெருங்கூட்டம்
குலவுகுன்றக் குடிக்கோ மானே.
3✓
வேதாளத் தினும்கொடிய மனப்பேயாற்
பரதவித்து வெதும்பும் என்னைப்
பாதாளம் படுபாறைக் கிணறுதொ(டு)என்
றுரைத்துமிகப் படுத்த லாமோ?
மாதாளம் கொடுபொதுவில் நடம்புரிவார்
விழிக்கனலில் வருஞ்செவ் வேளே!
கூதாளம் புனைவேடர் குலம்பரவக்
குலவுகுன்றக் குடிக்கோ மானே.
4✓
திக்குமுழு மையுமறியத் தொடும்பாறைக்
கிணற்றினிடை தெண்ணீர் உண்டாய்
நெக்குருகித் தொழுமடியார் அனைவருக்கும்
ஒருபெருமை நிகழ்நாள் என்றோ?
முக்குணமும் கடந்தபர மோனபரா
னந்தம்நல்கும் முருக வேளே!
குக்குடகே தனம்இயலும் திருவிழாக்
குலவுகுன்றக் குடிக்கோ மானே.
5✓
பத்தர்களுக்(கு) எளியான்என் றுருமறையும்
ஆகமமும் பகர்சீ ருள்ளாய்க்(கு)
இத்தனைபா டடியனேன் படுமளவும்
பொறுத்துறும்வல் லிதயம் ஆமோ?
முத்தமிழ்மா முனிபரவு முருகா!விண்
ணவர்படைக்கோர் முதல்வா! மொய்ப்பூங்
கொத்தலர்மென் குழல்மடவார் விளையாடல்
குலவுகுன்றக் குடிக்கோ மானே.
6✓
அஞ்சலளித் தாண்டாய்என்(று) இறுமாந்த
பெருமைமுற்றும் அழிந்திட்(டு) ஒல்கிப்
பஞ்சரிக்கின் றேனதுசொற் பன்னிருகா
தினும் புகுதாப் பாரங் கொல்லோ
கஞ்சமலர்த் தொட்டிலிடம் சரவணவா
வியிற்றுயின்ற கந்த வேளே!
குஞ்சரிவௌ வியகொழுநா! குறைவுறுசீர்
குலவுகுன்றக் குடிக்கோ மானே.
7✓
அறமொருசற் றானாலும் விழையாதார்
களும்இகழ அடியேன் உள்ளத்
திறம்நெகிழப் படுத்துகின்றாய்! இதுதகுதி
அலகருணை செயத்தான் வேண்டும்
பெறலரிய மெய்ஞ்ஞானக் கடலமுதே
ஆறிருதோட் பெருக்கத் தெந்தாய்!
குறமகளுக் கினியநலம் முயல்வோனே!
குலவுகுன்றக் குடிக்கோ மானே.
8✓
இச்சைமுழு தொழித்தருள வல்லாய்நீ
எனஅடுத்தேன் எனைஎல் லோரும்
சைச்சைஎனற் காமாறு செயவிடுத்தாய்!
இதுவுமொரு தருமந் தானோ?
செச்சைமலர்த் தொடைசூடும் திருத்தோளாம்
பெருமானே! தெண்ணீர்ப் பொய்கைக்
கொச்சைநகர்ப் புலவோனே! குளிர்தமிழ்சீர்
குலவுகுன்றக் குடிக்கோ மானே!
9✓
கடுங்கோடைத் துயர்தவிர்ப்பத் தொடுங்கிணற்றில்
கடும்பாறை காணச் செய்தீண்(டு)
இடுங்கோதென்(று) ஒழித்தருள்வாய் எனக்கிரங்கா(து)
இருப்பதுவும் இசைதான் கொல்லோ?
நெடுங்கோலத் தினன்மகிழும் மருகோனே!
அறுமுகத்தோர் நிமல வேளே!
கொடுங்கோபச் சூர்தடிந்த கொற்றவனே!
குலவுகுன்றக் குடிக்கோ மானே.
10✓
உன்னிருபங் கயமலர்த்தாள் கருதியருள்
புரிவாய்என்(று) உறுதி கொண்டு
பன்னியபாட் டத்தனையும் பயனுறுபாழ்
படுமெனில்எப் படியீண் டுய்வேன்?
சென்னியைந்து ளான்திருமால் அயன்முதலோர்
களும்பரவச் சிகண்டி யூர்வாய்!
கொன்னிமிர்வேற் படைப்புகழே கூறுவார்
குலவுகுன்றக் குடிக்கோ மானே.
11✓
ஒருபரம்நீ யேஎனநன்(கு) உணராதார்
சிலர்க்குமருள் உதவும் நின்றன்
இருபதமே கருதுமெனை இப்படிச்சோ
திப்பதற்கும் இசைந்தாய் அந்தோ?
சொரூபநிரா மயமுடிவாம் பிரணவத்தின்
பொருள்விரித்துச் சொல்லும் ஞானக்
குருபரனே! உருவனந்தம் கொள்வானே!
குலவுகுன்றக் குடிக்கோ மானே.
12✓
கோடானு கோடிவளம் குன்றாது
குலவுகுன்றக் குடிக்கோ மானைத்
தேடாத நெஞ்சனைய கரும்பாறை
தொடுமொருவன் தெண்ணீர் வேண்டிப்
பாடாக்கித் தமிழ்ப்பதிகம் பரவுவார்
எவரேனும் படியிற் சற்றும்
வாடாத பேறடைந்து வானகத்தும்
இந்திரன்போல் வசிப்பா ரன்றே.