முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல்
க. மயில்வாகனப் புலவர்
விருத்தம்2 / 5
மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல் · க. மயில்வாகனப் புலவர்

விருத்தம்

1✓
பூமேவு சூரியனைப் புடைத்து நீட்டிப்
புரிந்ததுபோன் மாணிக்கப் புதுத்தூ ணாட்டி
ஏமேவு சந்திரனைப் பிடித்து வாட்டி
யிசைத்ததுபோல் வயிரவளை யிறுக மூட்டி
மாமேவச் சுதைமுத்தக் கயிறு பூட்டி
வான்மணிபோ னவரத்நப் பலகை மாட்டித்
தேமேவச் செய்யுஞ்சற் பீடத் தேறிச்
சிவசுப்ர மண்யரே யாடீ ருஞ்சல்.
2✓
நானமணி மண்டபத் தளாவி யாவு
நறுவிரைநீர் மூழ்கியிழைப் பட்டா லொற்றி
ஆனதிரு வாபரணங் கலைகள் சாத்தி
யமைவுபெறச் செய்ததிருப் பந்தர்க் கீழாப்
போனகநீர் கைதொட்டுப் பூசி வாசம்
பொலியமடுத் தரும்புகைபஃ றீப மாடித்
தேனமரும் பூமலிதென் மயிலை வாழுஞ்
சிவசுப்ர மண்யரே யாடீ ருஞ்சல்.
3✓
வெண்கவரி யெழுந்துசர வணத்தி னார்ந்து
மிளிர்திரைபோ லிருபாலும் வீச முத்தத்
தண்கவிகை நிழற்றவொளி ரால வட்டந்
தயங்கிக்கால் செய்யவலம் புரிக ளார்ப்பக்
கண்கள்சுக நீர்சொரியக் கரங்கள் கூப்பிக்
கசிந்துதொழு வன்பர்குழாங் கருவி யேங்கத்
தெண்கமலை யுறைந்திடுதென் மயிலை வாழுஞ்
சிவசுப்ர மண்யரே யாடீ ருஞ்சல்.
4✓
பணியார்ந்த வரவினினங் கால்க ளாகப்
பார்மகளே சேருமொரு பலகை யாக
அணியார்ந்த கரைமரம்வா ணாண்க ளாக
வழுகுதரு பொய்கைமலர் பாய லாக
மணியார்ந்த சரவணமா மஞ்ச மேலா
மகிழ்மென்கா லசைப்பவுறை மைந்த கந்தா
திணியார்ந்த மரஞ்செறிதென் மயிலை வாழுஞ்
சிவசுப்ர மண்யரே யாடீ ருஞ்சல்.
5✓
தாங்கரிய துன்பமெலாந் தேவர்க் காக்கித்
தகையநிலை போக்கிநிதஞ் சிறையில் வாட்டும்
ஓங்கசுர குலச்சூர னாவி போக்கி
யும்பரர சியலையிந்தி ரற்கு நாட்டிப்
பாங்கிலுறு வோர்துயரம் பலவு நீக்கிப்
பங்கமிலா நெறியன்பர் தமக்குக் காட்டித்
தேங்குநிரை பால்பொழிதென் மயிலை வாழுஞ்
சிவசுப்ர மண்யரே யாடீ ருஞ்சல்.
6✓
வான்பூத்த பரங்குன்றிற் றெய்வ யானை
மணந்தாடி நின்றதிரு வுஞ்ச லாட்டும்
மான்பூத்த விழிவள்ளி தன்னை வேட்டு
வரையகத்துப் புரிந்ததிரு வுஞ்ச லாட்டுங்
கான்பூத்த திருவுஞ்ச லாட்டி லொன்றுங்
கண்டறியாப் பேதையரேங் களிக்கு மாறு
தேன்பூத்த கழைவளர்ததென் மயிலை வாழுஞ்
சிவசுப்ர மண்யரே யாடீ ருஞ்சல்.
7✓
பூதமெடுத் தன்றுமலைக் குகையில் வைத்துப்
புனிதமுறு நீர்படியப் போக வன்பின்
ஓதுதலுங் கீரனுக்குச் சிறையை நீத்த
வொப்பிறிரு முருகாற்றுப் படைசொல் வாருங்
காதுகவ ரருணகிரி நாதர் சொன்ன
கனிந்ததிருப் புகழோது வாரு மேவச்
சீதமலர்த் தடநிறைதென் மயிலை வாழுஞ்
சிவசுப்ர மண்யரே யாடீ ருஞ்சல்.
8✓
கன்னியராம் வள்ளியொடு தெய்வ யானை
காதலொடு மிரண்டுபுறத் தேயு மேவத்
துன்னசுர குலங்களைவேல் வலக்கை யோங்கச்
சுந்தரமார் மஞ்ஞையுனைத் தாங்கி நிற்ப
மன்னுவணத் தரியிரண்டு பெண்க ளோடும்
வலியாழி கொண்டிருத்தல் போல வைகிச்
சென்னிபணி தவர்செறிதென் மயிலை வாழுஞ்
சிவசுப்ர மண்யரே யாடீ ருஞ்சல்.
9✓
தஞ்சமெனும் பேர்க்களியீ ராடீ ருஞ்சல்
சரணடையாப் பேர்க்களியீ ராடீ ருஞ்சல்
கஞ்சவிதிக் குரைமொழியீ ராடீ ருஞ்சல்
கமலமுகத் தருள்விழியீ ராடீ ருஞ்சல்
விஞ்சுமயன் மாற்கரியீ ராடீ ருஞ்சல்
விழுமியவன் பர்க்கெளியீ ராடீ ருஞ்சல்
செஞ்சொலறி வோர்புகழ்தென் மயிலை வாழுஞ்
சிவசுப்ர மண்யரே யாடீ ருஞ்சல்.
10✓
பூவாழு மாந்தரெலாந் தழைத்து வாழப்
புயல்பசுக்கண் மகளிர்கற்புப் பொலிந்து வாழப்
பாவாழுஞ் செந்தமிழ்சித் தாந்தம் வாழப்
பயின்மறையோ ரரசரொடு பின்னோர் வாழ
நாவாழு நான்மறையா கமங்கள் வாழ
நவ்வீர ரஞ்செழுத்தா றெழுத்தும் வாழச்
சீர்வாழுந் தென்மயிலை செழித்து வாழச்
சிவசுப்ர மண்யரே யாடீ ருஞ்சல்.