முருகன் App
நல்லை வெண்பா
யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார்
நூல்2 / 5
நல்லை வெண்பா · யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார்

நூல்

1✓
பூமாது பூவினுளப் பொன்மலரென் றெண்ணிநித
நாமா துடன்வாழு நல்லூரே - தேமாது
பாலனய னத்தன் பரிந்தறியா நின்றவரன்
பாலனய னத்தன் பதி.
2✓
பொன்னுலக மன்ன புகழீழ மண்டலஞ் சேர்
நன்னகர நாகரிக நல்லூரே - முன்னிலகுங்
காற்படையான் பூத கணப்படையா னென்னையினி
மேற்படையான் மேவும் பதி.
3✓
சீர்விளங்கு மெப்பதிக்குஞ் செப்புகின்ற சொற்பெயரே
யூர்விளங்கு நாமமா நல்லூரே - யூர்விளங்கு
நன்கதிரை நாகத்தா னண்ணலரென் றஞ்சுவிக்குந்
தென்கதிரை நாகத்தான் சேர்வு.
4✓
போற்றுமடி யார்பிறவிப் புன்மையிரு ணீக்குதலா
னாற்றிசையும் வந்திறைஞ்சு நல்லூரே - யேற்ற
மருவலரை நேர்முடித்தான் வானவர்க்காய் நீப
மருவலரை நேர்முடித்தான் வாழ்வு.
5✓
ஆம்பன் முகவோடை யார்ந்தங் குசந்தழுவி
யோம்பொருளா மைங்கரனேர் நல்லூரே - பாம்பஞ்ச
வாடு மயிலா னமருலகு வாழவம
ராடு மயிலா னகம்.
6✓
கண்முளரி சங்கங் கவின்றுநா கம்பொருந்திப்
பெண்ணிடத்தன் போலும் பெருநல்லை - விண்ணிறமா
ரங்கத் திருந்தா ரமரழித்தா ரன்றுதமிழ்ச்
சங்கத் திருந்தார் தலம்.
7✓
பொன்னங்கலையார் விலோதனத்தான் மாதிரம் போய்த்
துன்னியசீ ராலுமை நேர் தூநல்லை - முன்னயனைத்
தாரகங்க டாவினான் றாபரக்கட் பீலியைச்சூர்
போரகங்க டாவினான் பூ.
8✓
சசிதவள வானையும் தாமனையென் றெய்த
விசைகடவுள் யானையன்ன நல்லை - நிசிசரர்கள்
பஞ்சர யுதவகன்போற் பற்றியுண்க வென்று தொட்ட
பஞ்சா யுதன்றன் பதி.
9✓
மாகுலவர் நம்பியுள மாதருடன் போற்றுதலாற்
கோகுலமா வல்லிநிகர் நல்லையே - கோகனக
வையற் கறைந்தா னருமறையினுட்பொருளை
யையற் கறைந்தா னகம்.
10✓
தும்பி மருப்பொசித்துச் சூழ்ந்தவன மாலையினாற்
கம்பமருங் கையினனேர் நல்லையே - யும்பருறை
மாகனக வில்லார் மகனா ரடியருளக்
கோகனக வில்லார் குலம்.
11✓
எண்ணம் புயத்தா லிசையுங்கா யத்திரியார்
நண்ணுதலால் வேதனா நல்லையே - விண்ணுலவுங்
கங்கை வயிற்றுதித்தார் காதலுளார் போற்குறவர்
மங்கை வயிற்றுதித்தார் வைப்பு.
12✓
மெய்ப்புலவ ருள்ளுறலான் மேகமதி லூர்தலா
லொப்புவணை நாயகனா நல்லூரே - யப்புருவ
நஞ்சார் கணியானா னன்கா னவர்முன்பு
நஞ்சார் கணியானா னாடு.
13✓
நத்தமூ ருங்கயத்தா னன்கிளைகொள் பாடலத்தாற்
சித்தசவேள் போலுந் திருநல்லை - முத்தின்
றிருத்தணிகை மாமலையுந் திண்கோட்டிற் காட்டுந்
திருத்தணிகை மாமலையான் சேர்வு.
14✓
தாவார் கலியடக்கு மத்தவளந் தாங்குதலா
னாவார் தமிழ்முனிநேர் நல்லூரே - பூவாரும்
வாளங் கெடுத்தார்ப்பில் வந்த தனிமாயா
வாளங் கெடுத்தார் வழி.
15✓
பூமேல்வாழ்ந் தீகை யுடையார் மனைப்பொலிவான்
மாமாது போல வளர்நல்லை - மாமணிகொ
ளாறா னனத்தா னருட்குரவ னம்புயநே
ராறா னனத்தா னகம்.
16✓
சீரயனால் வாயிசைந்து செய்ய கலைமருவிப்
பாரதியை மானும் பதிநல்லை - நாரதன்செய்
யாகத் துவந்தா ரெதிர்வருமை யாரொருவி
யாகத் துவந்தா ரிடம்.
17✓
காளகண்ட னன்கிசைமெய்ப் பூவையரி கண்ணுறலால்
வாள்வயங்கொ ளையனா மாநல்லை - நீளசுர
மாநாக மாளவைத்தார் வைவேல் பணித்தரியூர்
மாநாக மாளவைத்தார் வாழ்வு.
18✓
மற்குரிய தோளரசர் மாமுடியுங் கையகமும்
பொற்கவிகை காட்டும் புகழ்நல்லை - விற்குலவு
நாகங் கலந்தா ரெனநயந்தார் சேயிருவர்
பாகங் கலந்தார் பதி.
19✓
பொன்னனையார் சிற்றிடையும் பூசுரர்கள் சொற்கிடையு
நன்னூல் கலைவிளங்கு நல்லூரே - முன்னிளைஞ
ரேற்றமருள் வீட்டினா னீர்வேலா னன்பருக்கே
யேற்றமருள் வீட்டினா னில்.
20✓
அரும்புமுலை யார்வாணி யைம்பா லுடனே
கரும்பிரசங் காட்டுங்கார் நல்லை - பெரும்போர்
மலையுருவ வேறொட்டார் வாழ்த்தினரை மாய
மலையுருவ வேறொட்டார் வாழ்வு.
21✓
கண்ணீல வாளிக் கரும்புருவ வில்லினல்லா
ரெண்ணார் மதனோ டிகனல்லை - விண்ணா
கருவா வினன்குடிஞை காலுலவும் பண்ணைத்
திருவா வினன்குடியான் சேர்வு.
22✓
கற்பகஞ் சேர் காமக் கொடியார்பண் பாலீழ
நற்பதியான் மேலுலகா நல்லூரே - கற்பமுறுங்
காலங் கடந்தான் கமலா சனனெனவே
ஞாலங் கடந்தா னகர்.
23✓
தெங்குயிலா னண்ணிச் சிறுமியர்மா லைக்குயிலாற்
பூங்குயில்க ளேங்கும் பொழினல்லை - யோங்கும்
பரங்கிரியார் நள்ளாரிற் பாறா தருளும்
பரங்கிரியார் நள்ளார் பதி.
24✓
மொய்ம்மணிமேன் மாளிகையின் மின்னார் முகமதியை
மெய்யிற் சகோரம் விழைநல்லை - துய்ய
திருவே ரகம்பதியான் சீரடியார் தம்மைக்
கருவே ரகம்பதியான் கால்.
25✓
சுவாசகமுந் நூலோர் சுருதியிசை தேர்ந்து
சுவாசகமுஞ் சொல்லுசீர் நல்லூர் - தவாத
பரதத்து வத்தன் பரையாள் குடையாம்
பரதத்து வத்தன் பதி.
26✓
தேக்கும் புலவருடன் சீரகத்தார் மார்பினருந்
தூக்கின் பொருள் பகருந் தூநல்லை - காக்குமவன்
கந்தப் பொகுட்டான் கரியவனுங் கைதொழுசீர்க்
கந்தப் பொகுட்டான் களம்.
27✓
வேதவொலி வேள்வியொலி மிக்க விழாவொலியா
லோதவொலி நாணுமுயர் நல்லை - காதரவின்
மாற்கிழவ னாகி வரைக்குறவர் முன்வள்ளி
பாற்கிழவ னானான் பதி.
28✓
அத்திபல வாலரசு நாக மிசையுறலா
லித்தரணி போலு மெழினல்லை - தத்த
னனந்தனந்தி மெய்யிளைஞர்க் கன்றருள்வா
னவ்வி யனந்தனந்தி மெய்யா னகம்.
29✓
வச்சிரனல் லில்லான் மகிழரம்பை யாரிசைவா
லச்சுந் தரிநே ரணிநல்லை - மெய்ச்சிவ நூன்
மாமலை யத்தவற்கே வாய்மலர்ந்தான் மன்னுதுடி
நாமலை யத்தவனல் லூர்.
30✓
கந்துகமுந் தானைவேற் காளையருங் கன்னியருங்
கந்துகமுந் திக்களிகூர் நல்லூரே - சந்திரமா
மாவைப் பிழந்தார் மகிழ்பூப்ப வீரையிலோர்
மாவைப் பிழந்தார் வழி.
31✓
தூவிமயின் மீதாகச் சுந்தரநல் லூரிறைவன்
சேவலங்கை யான்பவனி சேர்ந்ததுதான் - தீவகம்போ
லக்குருகு முன்னா வவர்க்குருகு மாயிழையார்
கைக்குருகு கொள்ளவே காண்.
32✓
சந்தமணி சீர்பொருள்கள் சார்ந்தகர முன்னதாச்
செந்தமிழே போலுந் திருநல்லை - செந்தேனு
மாவுங் கனியுமென்றார் வல்லிசெவ்வாய்த் தேனுக்கு
நாவுங் கனியுமென்றார் நாடு.
33✓
பாகனசொல் லார்நகையும் பன்னு சிவநூலு
மாகதியைக் காட்டு மணிநல்லை - நாகவுரி
போர்க்குமரன் சத்திதரப் போந்தசுரர் மாளவடும்
போர்க்குமரன் சத்திதரன் பூ.
34✓
கண்டைமா வேயன்றிக் கற்றவரு மற்றவருந்
தண்டம் பொருந்தாத் தனிநல்லை - விண்டுதொறு
மாடும் பதத்தினா னண்டர்களு நான்மறையுந்
தேடும் பதத்தினான் சேர்வு.
35✓
நீல னிலவார னீள்கதிர்பொன் வெள்ளிபச்சை
சால்பவனத் தால்வான் றகுநல்லை - யால்வளருந்
தாமோதரன் மருகன் றண்ணகையால் விண்ணமரர்
தாமோ தரன்மருகன் சார்பு.
36✓
புலிசேர்ந் துவாக்கள் பொலியப் பிணாக்க
ளிலகுகள பத்தொடிசை நல்லூர் - புலவோர்
பொருந்தாரை வேலையிடைப்பொன் றுவிக்கும் சோதிப்
பொருந்தாரை வேலான் புரம்.
37✓
சங்கமுடன் றாமரைநற் செந்தாது தானுறலாற்
பிங்கலனூர் போலும் பெருநல்லை - பொங்கரியின்
மாது வசத்தினான் மானிடனு மாகியோர்
மாது வசத்தினான் வாழ்வு.
38✓
சிலம்புவளை யார்பதம்போற் செவ்விப் பறம்புஞ்
சிலம்புபுனை செய்யதிரு நல்லூர் - வலஞ்சேர்
சதகோடி யன்னான்கைத் தாக்குமுக்க ணான்பொன்
சதகோடி யன்னான் றலம்.
39✓
தாரா பதந்தழுவுந் தண்பூகத் தாறருணன்
றேர்மேற் புனைமணியாஞ் சீர்நல்லூர் - சீர்மேவுந்
தூக்குக் குடத்தான் சுதனும் தொழுந்தோகைக்
கூக்குக் குடத்தான் குலம்.
40✓
ஓங்கு வளைக்குழையா ரொண்கண்ணுஞ் செங்கரமும்
தேங்குவளை காட்டுந் திருநல்லூர் - பூங்குறிஞ்சிக்
கார்த்திகையா ரும்பல் கனங்கிரியான் காயமுலாங்
கார்த்திகையா ரும்பல் களம்.
41✓
ஆசினிவே ணிப்பொலிவா லாரமணி கன்னிகையார்
தேசதனாற் காசிநிகர் தென்னல்லை - வாசவன்மு
னண்டரண்ட ராயநிலை யட்டருளி னானகில
வண்டரண்ட ராய னகம்.
42✓
செல்வமலி நல்லூரே செஞ்சிலைக்கை வெஞ்சூரன்
றொல்வலியன் றன்மாயச் சூழ்வினாற் - பல்விதமரம்
புல்லுருவங் காட்டினா னென்பதெல்லாம் போக்கியோர்
நல்லுருவங் காட்டினா னாடு.
43✓
இரவலராய் வாய்மலர்வ தீங்குவளை முன்னா
வரவலரே வாய்ந்தவெழி னல்லை - திரமா
முரவா குவையுய்த்தான் பின்னவனொற் றோதி
வரவா குவையுய்த்தான் வைப்பு.
44✓
வாரணியுங் கொம்மையா ரோதிமன்ன ரம்புயம்போற்
றாரணியைத் தாங்குந் தனிநல்லை - நாரணிதன்
செங்கைக் குமாரன் சிறுகுடியில் வாழ்ந்தமா
னங்கைக் குமார னகர்.
45✓
வண்டேறு கையார் மதனனையார் மார்பினிற்கோ
வண்டேறு காட்டு மணிநல்லை - வண்டேறு
செச்சையங் கோடலான் சிந்தையிலு முந்துகதிச்
செச்சையங் கோடலான் சேர்வு.
46✓
பாலனத்தை நண்பாம் பசுங்கிளிகள் மாலெனவே
பாலனத்தை யாரும் பகர்நல்லை - யாலைக்
கழனிவரைக் கந்தநீர் காலருவி பாயும்
பழனிவரைக் கந்தன் பதி.
47✓
அம்பரத்தைத் தாவியருஞ் சூரனேர் சந்திசைவான்
மொய்ம்பினனா மொய்பொழில்சூழ் நல்லூரே - யும்பரிலே
கோக்குஞ் சரத்தான் குடியேறத் தானவரைக்
கோக்குஞ் சரத்தான் குலம்.
48✓
நந்தா வனத்தருவி நன்மதுவா ருந்தேன்கள்
மந்தாரத் தேனளவு மாநல்லை - முந்தா
மடங்கலையம் பிற்செற்றான் மாறூர்ந்த வெய்ய
மடங்கலையம் பிற்செற்றான் வாழ்வு.
49✓
காவலர்கள் வேந்து கதித்துயர்ந்த மேற்குலத்தான்
மேவுங் கவுசிகநேர் மெய்ந்நல்லை - தூவரையிற்
காஞ்சிமணி மாநிழலார் கன்னிவள்ளி சேர்கந்தன்
காஞ்சிமணி மாநிழலான் காப்பு.
50✓
பண்ணை மடந்தையரும் பாணரும் பாய்பரியும்
பண்ணையிசை பண்பாரு நல்லூரே - யெண்ணரிய
மாமாய வீட்டினான் மாயுவுரு வாஞ்சூர
மாமாய வீட்டினான் வாழ்வு.
51✓
போதப் பொலிவுள்ளார் முத்தீ நலம்பொருந்தி
யோதக் கடல்போ லுயாநல்லை - பாதக்
கனகச் சிலம்பன் கலைப்புலவன் செவ்வே
ளனகச் சிலம்ப னகம்.
52✓
ஓவர் புனையோ வியம்புதுக்க மேனிலையிற்
றேவரெம ரென்றணையுஞ் சீர்நல்லை - பூவுலகங்
காப்பா னளிப்பானற் கஞ்ச னெனவனைத்துங்
காப்பா னளிப்பான் களம்.
53✓
சங்கந் தரியாமா லானா ளலர்தழீஇ
யங்கம்பொன் னாயு மனம்வெறுத்தா - ளெங்கும்
விரும்பவனி போற்றுநல்லை வேலர் மயின்மேல்
வரும்பவனி கண்டுவந்த மான்.
54✓
பொங்கர்சூழ்ந் தங்கார் முகச்சிகரிப் பொற்பினாற்
றங்கமலை போலுந் தனிநல்லை - யங்குளத்திற்
கோட்டம் புரிந்தார் குறிக்கரியார் நன்குமா
கோட்டம் புரிந்தார் குலம்.
55✓
என்னீலங் கட்கிடைந்ததென்னு மின்னார் மொய்ந்நகையா
லந்நீல மாங்கே யலர்நல்லை - பொன்னூர்த்
திருக்குமரி ஞாங்கரான் றெவ்வொடன்பர் நெஞ்சிற்
றிருக்குமரி ஞாங்கரான் சேர்வு.
56✓
வாவிக் கயலுகளும் வான்கவரிக் கன்றுடனே
வாவிக் கயலுகளு மாநல்லை - தூவிப்
பொருந்தோகை மேற்கொண்டான் பூம்புனத்தோர்பூவை
பொருந்தோகை மேற்கொண்டான் பூ.
57✓
ஏழிசைநன் கந்தருவ மேந்திரதஞ் சேர்நலத்தாற்
சூழுங் கதிர்போலுந் தூநல்லை - யேழையர்தம்
பொய்க்கதிர்கா மத்தினார் புந்தியுறார் பைந்தடஞ்சூழ்
செய்க்கதிர்கா மத்தினார் சேர்வு.
58✓
வன்ன வுவளகத்து மாழை தவழகத்து
மன்னம் வழங்கு மணிநல்லை - முன்னயனை
யுட்காந் தளையிட்டா ருச்சியினிற் செச்சையந்தா
ருட்காந் தளையிட்டா ரூர்.
59✓
தண்டாளி னம்புயமுந் தார்வயவ ரம்புயமும்
வண்டா சனங்கொள்ளு மாநல்லை - தண்டாத
வேகத் தடுத்தான் விடுமிரத ஞாலநிலை
யாகத் தடுத்தா னகம்.
60✓
கற்கடக வில்லாற் கலைவளருங் காட்சியா
லற்கதிரை யொப்பாகு நல்லூரே - முற்கீரன்
சொற்கா மரத்தா னணிதூய மாலையான்
பொற்கா மரத்தான் புரம்.
61✓
என்னாசை யம்பரமே லானே னினிநாண
மென்னாசை யம்பரமே பாதலால் - முன்னொருநாட்
டந்தார் வந்தாரார் நல்லூரார் தழைகடப்பந்
தந்தார் வந்தாரார் தனி.
62✓
நந்திக் கிளையா னயக்குங் குழக்கன்றுந்
தந்திக் கிளையாத் தனிநல்லை - வந்திக்கா
யன்றா றுடையா தடைத்தான்சே யக்கரங்க
ணன்றா றுடையா னகர்.
63✓
வல்விலங்கே தன்பேர்ப் பொருள்பூண்ப வாய்மறந்துஞ்
சொல்விலங்கா நல்லோர்வாழ் தூநல்லை - கல்விலங்கல்
வேற்றா னையினட்டான் மேலவரைத் தான்பதியா
மாற்றா னையினட்டான் வைப்பு.
64✓
செந்நெல்லும் வேள்வித் திறத்தினருங் கன்னலுமே
கன்னனிலை காட்டுங் கவினல்லை - மன்னுசிவ
னுண்மைகோ லானிறுத்தா னொட்டிவருஞ் சூர்மாயத்
திண்மைகோ லானிறுத்தான் சேர்வு.
65✓
வாழைநலி யக்குதிக்கும் வன்கடுவன் மாறாகத்
தாழையிள நீருகைக்குந் தண்ணல்லை - நாளுங்
குடத்தியரை வேட்டான் கொடுத்தவிரு கொம்மைக்
குடத்தியரை வேட்டான் குலம்.
66✓
புண்டரிக னீள்போகி போற்றிப் பணிகுதலாற்
புண்டரிக மாபுரநேர் நல்லையே - மண்டமரி
லார்ப்பினடைத் தானவர்சே ரண்ட நெறிவாளிப்
போர்ப்பி னடைத்தான் புரம்.
67✓
பூசல் வளைக்கையார் பூங்குழலும் பொன்மலரும்
கேசரநன் காருங் கிளர்நல்லை - யாசினியிற்
செக்கரிந்து நேர்மலைந்தார் செல்வர் வடிவேலாற்
கொக்கரிந்து நேர்மலைந்தார் கோ.
68✓
வான்புலவர் போல்வேளை வாழ்த்தும் புலவோருந்
தானமுதங் கொள்ளத் தகுநல்லை - யூனா
ருடம்பிடிக்கைச் சீரா னுறுநரையஞ் சேலென்
றுடம்பிடிக்கைச் சீரா னுலகு.
69✓
காரணி கையினண்ணிக் காவினன்மே னாடுறலால்
வாரணிமந் தாகினிநேர் மாநல்லை - நாரணன்றன்
மால்வளைசேர் கண்டன் மறமழித்தான் வான்வளரும்
பால்வளைசேர் கண்டன் பதி.
70✓
வேலிகவா மன்னவரு மெய்ம்மை யணங்கினருங்
கோலி னிறைகுன்றா நல்லூரே - மாலுதவு
மாதங்க மாகமுற வந்தருள்வா யைந்துகையாய்
மாதங்க மாகவென்றான் வாழ்வு.
71✓
கம்பை யிசையொலியாற் காமாரி மேலுறலா
னம்புகச்சி யொப்பாகு நல்லூரே - யம்பரகப்
பாலார்ந்த வாயன்கைப் பைந்தொடித னம்பொழியும்
பாலார்ந்த வாயன் பதி.