முருகன் App
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்
கொஞ்சும் குழந்தை வடிவேல் பரஹம்சதாசன்3 / 6
நல்லூர்க் கந்தன் திருவருள் தேன்மலர்கள்

கொஞ்சும் குழந்தை வடிவேல் பரஹம்சதாசன்

✓
கொஞ்சும் குழந்தை வடிவேல்;—தீயர்
கொட்ட மடக்கக் கொதிக்கும் தழல்வேல்
தஞ்சருக் கஞ்சல் தரும்வேல்;—ஆத்ம
தாகம் தணித்திடும் தியாகப் புனல்வேல் (கொஞ்சும்)
✓
ஆறு முகங்கொண்ட சீர்வேல்;—வஞ்சர்க்
கஞ்சு முகந்தந்து துஞ்சிக்கும் கூர்வேல்
ஏறு நடைகொண்ட போர்வேல்;—தெய்வம்
இல்லையென் பாருள்ளும்; துள்ளும் உயிர்வேல்! (கொஞ்சும்)
✓
உண்மை உணர்த்தும் ஒளிவேல்;—தவம்
ஊக்கம், முயற்சி, உழைப்பிற் குளிர்வேல்;
திண்மை வளர்க்கும் ஜெயவேல்;—இளஞ்
சிங்கத் தமிழ்நெஞ்சிற் பொங்கும் திறல்வேல்! (கொஞ்சும்)
✓
அண்டம் சுழற்றும் அணுவேல்;—சச்சி
தானந்த மாய்நிறை மோனக் குகவேல்!
தொண்டருக் குற்ற துணைவேல்;—உயிர்
தோறும் கலந்தருட் பேறு தரும்வேல்! (கொஞ்சும்)
7✓
கண்டவர் உள்ளம் கவர்வேல்;—வழி
காணா தவர்க்கொளி காட்டும் விழிவேல்!
விண்டிட வொண்ணா விறல்வேல்;—அன்பு
வீறுகொண் டாளுளத் தூறும் சுவைவேல்! (கொஞ்சும்)