முருகன் App
திருமுருகன்
அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி
தைப்பிங் தண்டபாணி3 / 6
திருமுருகன் · அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி

தைப்பிங் தண்டபாணி

1✓
அலைமேவும் நீர்சூழ்ந்த மலைய கத்தில்
ஆன்றசீர் வெள்ளிஎனும் மாநி லத்தில்
உலையாத இயற்கையெழில் உலவு கின்ற
ஒய்யாரத் தைப்பிங்கில் உயர்ந்தி லங்கும்
நிலையான பைந்தண்ணீர் மலையின் பக்கம்
நெடுநாள்முன் தனவைசிய நகரத் தார்கள்
சிலையாகத் தண்டபாணித் தெய்வம் வைத்துத்
திருக்கோயில் சமைத்துவழி பட்டார் நன்றே.
2✓
பின்னாளில் வழிபாட்டின் வசதிக் காக
பீடார்ந்த தைப்பிங்கின் சிம்பாங் சாலை
என்னும்நல் இடத்திலொரு கோயில் கட்டி
எடுத்துவந்த தண்டபாணிச் சிலையை நாட்டி
அன்னாளில் திருக்குடநீ ராட்டி அன்பால்
அன்றாடம் அவனருளை வேண்டி னாரால்
எந்நாளும் இயம்புகின்ற வேண்டு கோளை
இனிதருளும் அவனடிகள் போற்று வோமே.
3✓
இங்கிதமாய் மாங்கனியை வேழம் ஏற்க
எழுந்ததொரு முனிவாலே இமயம் நீங்கித்
தங்கமுடி குண்டலங்கள் சார்ந்த தாளின்
தண்டையணி கிண்கிணிச்ச தங்கை யோடும்
அங்கமதில் அணிந்திருந்த ஆடை நீக்கி
அடியார்க்கு நல்லின்பச் செல்வம் எல்லாம்
பொங்கிடவே தந்தருள ஆண்டிக் கோலம்
பூண்டுவந்தான் தைப்பிங்கின் தண்ட பாணி.
4✓
விண்டுரைக்க வியலாத வியனைக் கொண்டான்
வீரசக்தி விழைந்தளித்த வேலைக் கொண்டான்
பண்டுரைத்த வேதசாரப் படிவம் கொண்டான்
பக்தர்களின் மனக்குகையில் படிந்து கொண்டான்
தண்டமிழின் சங்கத்தின் தலைமை கொண்டான்
தம்அடியார் துயர்களைய அருளைக் கொண்டான்
தண்டுகொண்டு தகையுறவே தழைக்கக் காப்பான்
தமிழ்த்தெய்வம் தைப்பிங்கின் தண்ட பாணி.