கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
முத்தப்பருவம்6 / 7
கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
முத்தப்பருவம்
41✓
கன்னற் சுவையும் தனிமதுரங்
கனிந்த கதலிக் கனிச்சுவையும்
கனகப் பொகுட்டுச் சிவந்தவிதழ்க்
கமலத் தெழுந்த தேன்சுவையும்
பின்னற் றரங்கப் பயோத தியிற்
பிறந்த அமுதத் தருஞ்சுவையும்
பிணியின் றுயர்ந்த வேய்ங்குழலிற்
பிறங்கு மிசையின் நறுஞ்சுவையும்
வன்னத் திவவு மாடகயாழ்
மன்னும் பசிய நரம்பிசையின்
வாய்ந்த சுவையு மிகநாண
மருவு மழலை வார்த்தையினால்
முன்னைப் பொருளுந் குபதேச
மொழிவாய் முத்தந் தருகவே
முருகார் தருவா ரிலந்தைவன
முருகா முத்தந் தருகவே.
42✓
வழங்கும் பெரிய திசையினுயர்
வடவேங் கடந்தென் குமரிசுடர்
வயிரப் படையோன் திசையளக்கர்
மகர முயர்த்தோன் பெருந்திசையின்
தழங்குங் கடலென் றுரைத்தவெல்லை
தன்னின் வழங்குந் தீந்தமிழுஞ்
சகல புவனம் பொதிந்தவண்டத்
தலங்கட் குரித்தாம் வடமொழியும்
பழங்குஞ் சரவீ ருரிபோர்த்த
பரமன் சொலுமா கமப்பொருளும்
பகர்நால் வேதப் பலபொருளும்
படிக்கும் ஏனைப் பலபொருளும்
முழங்கும் பவளத் துவர்வாயால்
முத்தந் தருக முத்தமே
முருகார் தருவா ரிலந்தைவன
முருகா முத்தந் தருகவே.
43✓
வழுவை கருமா மருப்புமுத்தும்
வனைக்கார் கமுகு கழைமுத்தும்
வனசங்கரும்பு மதிமுத்தும்
மாதர் மிடற்றின் வருமுத்தும்
தொழுதி யரவின் முத்தாம
சொரிமுத் தமுமீன் றலைமுத்துஞ்
சுரபி யெயிற்றி னந்தின்முத்தும்
சொல்லும் கார்நெலு டும்புமுத்தும்
விழுது படுநீர்க் குரண்டமிப்பி
மேவு முத்தும் விலைப்பட்டு
மேனி துளையுண் டினிமையின்றி
வெளிறுங் கருவாய் முத்தமந்தோ
முழுது மினிய வுனது செவ்வாய்
முத்தந் தருக முத்தமே
முருகார் தருவா ரிலந்தைவன
முருகா முத்தந் தருகவே.
44✓
உடுவிண் டடுத்த குவட்டிமயத்
தோங்கு மரசற் கொருமகளாம்
உரிமைப் பிராட்டி தனதுமன
முவந்து முலைப்பால் கறந்தூட்டித்
தொடுகை மனககு ... பூசித்தா
துவரிட் டளவெந் நீராட்டித்
துகிலால் ஈரம் புலர்த்திமஞ்சள்
தோய்வேப் பிலைநீர் சுற்றியபின்
குடுமி திருத்தி நீறணிந்து
குலவு நிலக்காப் பணிந்துமுத்தங்
கொள்ளக் கனிவாய் முத்தமரன்
கொள்வான் குனியு மமையத்தின்
முடிகொ ணதித்தாய் முத்தமிடு
முத்தம் தருக முத்தமே
முருகார் தருவா ரிலந்தைவன
முருகா முத்தந் தருகவே.
45✓
கத்துந் தரங்க மணிகொழிக்குங்
கடல்து மூலக்கும் வானுலகுங்
கதிர்வெங் குலிசத் தவன்முதலோர்
காணி களுமாந் திசைகளொரு
பத்துங் கலங்க வரும்புரத்தைப்
பலிசெய் நகையின் வெம்மையுந்தண்
பணியைத் துரக்குங் கடுங்கிரணப்
பகலோ னெனும்கண் வெம்மையுஞ்சீர்
மெய்த்தும் பகழி மதனுடலம்
வெதும்பப் பொடித்த திருநுதலின்
விழிவெம் மையுந்தீர்ந் தான்மேனி
மிகவும் குளிர்ந்து புளகமெழ
முத்தங் கொடுக்கும் கனிவாயால்
முத்தம் தருக முத்தமே
முருகார் தருவா ரிலந்தைவன
முருகா முத்தந் தருகவே
46வேறு✓
குடமானு மடிசுரந் தான்கன்றை யுன்னமென்
குவிமுலை சொரிந்தபாலுங்
கொள்ளுநகை மனமிசைக் கற்பிலகு சிற்றிடைக்
கொங்கையிடை மாதர்பகரும்
இடமீது சிந்துவெண் டயிருநறு நெய்யுமயல்
ஏர்வளமை மள்ளர்தத்தம்
இனியமட மாதர்மொழி யொப்பொன்ற குறைதவிர
எந்திரத் தனியாலையிட்
டடல்போல வாட்டுபைங் கன்னலின் சாறுநறை
அம்புய மலர்த்தேறலும்
அலைமோது நதிகால்கள் குளமேவு நீருநிறை
வாயுவரி யொன்றலாகக்
கடலாறு மெனமன்னு பதரிவனம் வருமுருக
கனிவாயின் முத்தமருளே
கனகாச லப்பெணரு ளனகா சிலைக்குமர
கனிவாயின் முத்தமருளே.
47✓
பாரவர் மதிக்குமண வாரநிறை முலையினாற்
பண்புறு குறிஞ்சிநிலனும்
பன்னிகளி வண்டரிசை பாடியுழை தோன்றியமர்
பைங்குழலின் முல்லைநிலனும்
வாரநிகழ் வஞ்சியுறு காஞ்சிமிசை மன்னியெழில்
வளர்கரு நிலப்போகமார்
வளமைதர லாலிலகு மருதநில னம்பெருமை
வாய்ந்துநெடு வேலைமோதி
சாரமறு நீலத்தை யுற்றவிழி யிணையினாற்
றட்பமிகு நெய்தனிலனுஞ்
சாற்றுமொழி யால்வெய்ய பாலையும் காட்டிவரு
தையலார் விளையாடுசிங்
காரமொடு சீருமலி பதரிவனம் வருமுருக
கனிவாயின் முத்தமருளே
கனகாசலப் பெணரு ளனகா சிலைக்குமர
கனிவாயின் முத்தமருளே.
48✓
வானமுறு கின்னர முதற்பறவை யினமெலாம்
மருளுற்று நிலம்வீழவும்
வானவரு மன்னவரு மெழுதுசித் திரமென்ன
மன்னியசை வற்றமாவும்
பேனமுறு வாரிமுத லானபுனல் யாவையும்
பெற்றவொலி யற்றமையவும்
பின்னமொடு பட்டமர முந்தளிர் துதைந்தலர்
பிறங்கிமீ மிசைவளரவும்
ஈனமுறு வன்கல்லு நவநீத மாயுருகி
யிறுகா திருந்துவிடவும்
எண்ணரிய பண்ணும்ரா கமுமுருவ மானவெழில்
ஏந்திழை நலார்கள்பாடும்
கானமுறு புரிசைமலி பதரிவனம் வருமுருக
கனிவாயின் முத்தமருளே
கனகா சலப்பெணரு ளனகா சிலைக்குமர
கனிவாயின் முத்தமருளே.
49வேறு✓
அகர வுகர வடிவ முடைய
அமலர் புதல்வ சிற்குண
அரிய பெரிய எவையும் அருள்செய்
அருளின் உருவ கற்பக
மகவி னந்திப னூரிய குமரி
மகிழு மினிய பொற்புய
மறவர் சிறுமி மழலை மதுர
வசன முரைசெய் விற்பன
சகல புவன சமுக தலைவ
சதுர மறையி னுத்தம
சரவ ணபவ நிலவு குலவு
சடிலர் விழியி னுற்பவ
முகர மருவு பதரி வனசண்
முகவ தருக முத்தமே
முதிரு மமுத மதிய வதன
முருக தருக முத்தமே.
50✓
பரவு மடிய ரிதய தவள
பதும மலர நற்பொருள்
பயிலு மொருமை மொழியை யருள்செய்
பரம குரவ நித்திய
இரவு விடிய நெடிய குரல்செய்
திலகு பெரிய குக்குட
இணையி லரவு முறிய விட்றி
யகலு மயிலி னிச்சைய
குரவுவினிய நறிய தெரியல்
குலவு மரும பற்பல
கொடையு மணமு மதிக விசைய
குணமு முயர வைத்தமும்
முரச மொலிசெய் பதரி வனசண்
முகவ தருக முத்தமே
முதிரு மமுத மதிய வதன
முருக தருக முத்தமே.