முருகன் App
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது
சந்தனா நல்லலிங்கம்
கோபுரம் உயர்ந்த7 / 7
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது · சந்தனா நல்லலிங்கம்

கோபுரம் உயர்ந்த

11விருத்தம்✓
கோபுரம் உயர்ந்த நல்ல கோயிலிற் குடிகொண்டோங்கும்
கோமள வண்ணச் செவ்வேள் கோழிக் கொடியுடையான்
பூமகள் புளக மெய்தப் பொலிந்திடும் சந்நிதி பதியான்
தோமறு செல்வச் சீரை சொற்கொடு உரைக்கலாமோ.
12நொண்டிச் சிந்து✓
கன்னல் கதலி வளரும் நல்ல
சென்னெலும் சிறந்து வளர்ந்திடுமே
மன்னு புகழ் வளரும் நல்ல
மாதவம் புரி செல்வச் சந்நிதியில்
வரிக்கை தேன் மாரிபொழிந்து
வரம்பினை உடைத்துமே வயல்பாயும்
மாங்கனிகள் சிதறி நிற்க
வாழைக் கனிகளும் புவியிற் சிதறிடுமே
மாதவி புன்னை வெண் செருந்தியுமே
தாதவிழ்ந்து சுகந்தம் சிறந்திடுமே
தானம் தவமிவை ஓங்கும்
அன்ன தானமும் ஓங்கிடும் ஆச்சிரமத்தில்
சித்தரும் யோகியரும் ஞானியரும்
சித்தம் வைத்தே உறைந்திடும் பதியிதுவே
செந்தாமரை செங்கழு நீர்
செறிந்திடுமே நீர் ஓடை யெங்குமே
கண்டா மணியின் ஓசை
கனகாதம்வரை கேட்டிடுமே
குன்றாடும் குமர வேளும்
குஞ்சரியும் சஞ்சரிக்கும் கர்ப்பக்கிருகம்
வண்டாடும் மலர்க்கூந்தல்
வள்ளியம்மை யாருக்குத் தனிக்கோயில்
கொண்டாடும் வாரணமும்
குலவிடும் கோயிலின் இடப்புறமே
நிலவிடும் வினை தீர்க்கும்
நீர்க்கேணியும் தானதன் அயலிலுண்டு
தீபங்கள் தூபங்களும்
திருவினை விளக்கும் கற்பூரவொளியும்
மேளங்கள் தாளங்களும்
மேன்மையைக் காட்டிடும் நாதங்களும்
தொல்புகழ் காவடிகள்
தொல்வினைகளை அவை களைந்திடுமே
தொண்டர்கள் பசனைகளை
விண்டுமே விளக்கிட வார்த்தையில்லையே
பொல்லாத பிறவித் துயரம்
பொன்றிட இறைஞ்சுவர் அடியவரே
கல்லாத மாந்தர்களும் நல்ல
கல்வியறிவிற் சிறந்த மேதைகளும்
சொல்லாலே துதித்திடுவர்
செல்வச் சந்நிதிவேலவனின் அருள்பெறவே
நீற்றினைப் பூசியேதான்
நீண்டநாள் வருந்திடும் நோய்தீர்வர்
போற்றுவர் வேலினையே
புகழ்பாடுவர் ஆடுவர் பொலிந்திடுவர்
சிங்காரச் சந்நிதியான் உந்தன்
சிந்தையுறவே நீர் வாழ்ந்திடுவீர்
மங்காத புகழுடனே என்றும்
மாண்புறு சந்நிதி வேள் வாழ்ந்திடவே
தங்கிடு தவத்துடனே
தவஞானியர் யாவரும் சிறந்திடுவர்
பொங்கிடும் அருள் பொலிய
பொன்னகரில் வேலர் வீற்றிருப்பர்.