கனக மாமணிக் கூட்டினிலே உன்னைக்
கண்ணின்மணிபோலப் பேணி வளர்த்தேனே கிள்ளையே
மனமுவந்து மாடமோங்கும் செல்வ
மாநகர முருகரிடம் தூது செல்வாய் கிள்ளையே
மனக்கவலை தீர்த்துவைக்க வேண்டி நீயும்
மதியுடனே சென்றுவாராய் எந்தன் கிள்ளையே
இமையவரும் இந்திரனும் வந்து தமது
இடுக்கண் கூறி இரக்கும்போது இயம்பாதே கிள்ளையே
குறவள்ளியுடன் குலவிநிற்கும் வேளை
குதலைமொழி கூறாதிரு எந்தன் கிள்ளையே
குஞ்சரியார் சஞ்சரிக்கும் வேளை தன்னிலே
கொஞ்சுமொழி கூறாதிரு கோலக் கிள்ளையே
கந்தர்வனாம் ஐராவத பூசிக்கும் வேளை
எந்தன் காதல்தனை இயம்பாதிரு எழிற்கிள்ளையே
மருதர் கதிர்காமருக்கு முருகர் தாமே
மந்திரமியம்பும் போது உரைத்திடாதே கிள்ளையே
வீரவாகு தேவர்தாமும் வணங்கும் வேளை
வேதனையைக் கூறிடாதே வண்ணக் கிள்ளையே
மேனகை திலோத்தமையாம் நடனமாதர்
மேன்மையுற வேண்டும்வேளை இயம்பாதே கிள்ளையே
செந்தமிழாற் பாவலர்கள் வாழ்த்தும்போது
சொந்தமுள்ள கந்தனிடம் குறை சொல்லாதே கிள்ளையே
வாசமலர் தூவிப் பணிந்தேதான்
வாதை தனை உரைத்து வாராய் எந்தன் கிள்ளையே.