முருகன் App
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது
சந்தனா நல்லலிங்கம்
திருவுடைய பூந்தொடையல்2 / 7
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது · சந்தனா நல்லலிங்கம்

திருவுடைய பூந்தொடையல்

2✓
திருவுடைய பூந்தொடையல் சூழ்ந்த
கருங்குழ லவிழ்ந்ததென்ன மகளே
மருவுகந்தன் மால்மருகன் றானும்
மங்கையுன்னை வந்தணைந் ததாலோ
விருப்புடன் மலர்வனத்திலே
சுரும்பூதும் மலரெடுக்க விரைந்தேன்
மலர்க் கொடிகள் மாறுசுற்றியே
மலர்க் குழலும் அவிழ்ந்ததென்றன் தாயே
பைந்தொடியே நுதலிலிட்ட
பசுஞ் சாந்தம் அழிந்ததென்ன மகளே
ஆறுமுகவேலன் சந்நிதியான்
ஆருமறியாம லணைந்தாரோ
வேயுறு தோழியர்களோடு
வெயிலில் விளையாடியதனாலே
வியர்வை மிக்குச் சிந்தியதாலே
விரைசாந்தம் அழிந்ததென்றன் தாயே
கெண்டை விழிகளிரண்டுமே
கேடுபடச் சிவந்ததென்ன மகளே
தொண்டை மானானுறையும் வேலர்
தொட்டணைத்ததால் சிவந்ததாமோ
தீட்டியமை விழியினையுடையார்
நாட்டியங்கள் புரிந்ததனாலே
வாட்டமின்றிப் பார்த்திருந்தேன்
நாட்டவிழி சிவந்ததென்றன் தாயே
கொவ்வைக்கனி இதழ்களிலே
குறிகள் பதிந்த தென்ன மகளே
கோதிலாத குமர வேளும்
கோலமுடன் கூடி யணைந்தாரோ
பஞ்சவர்ணக் கிள்ளையதற்குப்
பாலடிசில் ஊட்டி நின்றேன்
வளைந்த சொண்டால் கனியெனவே
வாகாகக் கௌவியதென் தாயே
புரிசங்கம் நேர்கழுத்தின்
புனைந்த வைரம் நெரிந்ததென்ன மகளே
பூந்தாரா செங்கடம்பனாரும்
பூவையுன்னைக் காவிலணைந்தாரோ
வனிதையர்களோடு கூடியே
வரிப்பந்து விரைந்தாடுகையிலே
வசையேதும் இல்லாமலே
வயிரமணி நெரிந்ததென்றன் தாயே
தையலே உன் செங்கரத்தில்
தங்கவளை நெரிந்ததென்ன மகளே
தெரியலுடைச் சேந்தனவனும்
செல்வச் சந்நிதியானும் அணைந்தாரோ
பாவையர்களோடு கும்மி கொட்டி
பாங்குடன் நான் ஆடும் போது
பொன்வளை நெரிந்த தென்றன் தாயே
புரிந்திடுவீர் காரணத்தை நீரே
பொற்சுணங்கு மார்பினில்
பதிந்த நகக் குறிகளென்ன மகளே
வெற்றிபெறு வேலவராம் செல்வ
சிவ சண்முகரும் வந்தணைந்தாராமோ
பொல்லாத பூனையொன்று தான்
பொன்ற நகக்கியதென் கிள்ளைதனையே
நில்லாது காக்கச் சென்றேன்
நகத்தாலே கீறியதென் தாயே
மார்பிற்றுணி கொய்தலைப் பாக
மாற்றியணி காரணந்தான் யாது மகளே
மால்மருகன் ஆறுமுகனாரும்
மாலுங்கொண்டு உன்னை அணைந்தாரோ
கான் சுனையில் கன்னியர்களோடு
களித்து நீராடி நின்றேன் தாயே
வானரமுந் துள்ளிய தனாலே
வீண் பயத்தால் மாறு தலைப்பாச்சே
இந்தவிடை யத்தனையும் சொல்ல
இங்கிதமாய் எங்கு கற்றாய் மகளே
பந்துமுடை சண்முகனார் தாமும்
படித்துச் சொன்ன வார்த்தைகளோ கூறாய்
குன்றிலுறை குமரவேள் தான்
உன் கரம் பிடிப்பா ராயின்
மின்னனைய என் மகளே கேளாய்
பொன்னுலக வாழ்வு பெறுவாயே
எனையீன்ற எந்தன் அன்னாய்
துணையுறு தோழியின் இல்லம்
சென்றுமே கடிதில் மீள்வேன்
சீருடன் விடையுந் தாரீர்.