சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள்
த. செல்லையா
சூரசங்காரம்2 / 7
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள் · த. செல்லையா
சூரசங்காரம்
இராகம்: கல்யாணி தாளம்: ஆதி
பல்லவி✓
சூரசங்காரன் துணையே வேண்டியுருகும்
தொண்டர்க்கு முண்டோ இணையே —சூர
சந்தம்✓
சுரரிடர் தவிர் பர சிவகுரு என வரு
திரிபுர மெரிபட முறுவல் செய்தவர் தரு —சூர
திடமொடு ரதகஜ துரக பதாதிகள்
திரள் படை யழிபட நெடுவடி வேல்விடு —சூர
துடித்த வேல் பிடித்துக் கொந்தளித்த போர் முடித்தருள்
துய்யன் சரவணபவ ஐயன் பன்னிரு கையன் —சூர
சரணங்கள்✓
பார் நடுங்கிடும் பானுகோபன் தாரகன் சிங்கன்
பருத்த போர் தொடுத்தமர்க் களத்தவர் தளத்தொடு
மாண்டிட வழல் மூண்டதென வுளம்
படபடத்துத் துடித்தளவில் கோபாக்கினி
பறக்கக் கண் சிவக்கப் பற்கடித்துக் கொக்கரித் தெங்கும்
பருத்த கோஷமிட்டுரத் திடியேயென பாரொடு எண்டிசை
அண்டம் படீரென
அதிர்த்த சூரனை எதிர்த்துடனே சங்
கரித்துத் திருவடி இருத்தி இருள்கடி —சூர
✓
பருத்த இனத்தை அழித்த புயபல பகைவரை விரைவில்
நரி கழுகுகள் பல பட்சித்திடவே வெட்டிப் படுகள உதிரம் முட்டிப் பாய்ந்து பரந்திடவே
பிணங்கள் தோய்ந்து மிதந்திடவே பழக்குப்பழி வாங்க முனைந்து
பரபரப்பொடு படையோடு விரைந்து
அடுசமர் இடைமலையென எதிர்சூரனை
மடியவே வேலாலிரு பிளவாடிய —சூர
✓
பாலனான கொடும் பகைவனைப் பற்றிக்
கீலங் கீலமாய் கிழித்திதோ வெற்றி
மாலை சூடுவே னெனவே கோபம் முற்றி
வீரப் படைகளை வேகத்தொடு பெரும் வெள்ளம் போல் நிறைத்து
விரைவமர் புரிதரு வீரரை நேரில் வெகுண்டுடனே முறைத்து
வீர முரசு கோடை இடிபோல் முழங்க
வெற்றிக் கொடி தேர் முடிமேல் இலங்க
திரையொடு திரையடி கடல் பெருகிடு வகை
நிரையொடு நிரை துடியடர் படை வரு தொகைக்
கண்டதும் சூரன் நின்றார்ப்பரித்து
மிண்டிடு சமரிடை வென்றிடு வலியுடை —சூர
✓
அண்டமதிர வீறு கொண்டு திரண்டு
அதிவிரைவொடு அமர் பொருத வெகுண்டு
தண்டொடு வில்வாள் கொண்டுயர் தேரில்
மண்டு சமர்க்களம் அண்டிய நேரில்
கண்டதும் பாலனை இன்றடு போரில்
கொன்றிடு வேனெனக் குபீரென எதிரில்
பாய்ந்து பாலன் மேற்பல படுகணை தொடுத்தான்
மேலும் சூரன் கணைகள் விடுத்தான்
விடுத்த கணைகள் பாலனை யடுத்து அப்பால் மறையும்
விந்தையினைக் கண்டு திகைத்தான்
வெகுளி கொண்டு சிரசை யசைத்தான்
பாலனை மண்டியிட்டுப் பார்த்து நகைத்தான்
வீராவேசங் கொண்டு படையெங்கும் நிறைத்தான்
சரசரெனப் புற்றீசல் போல் விளைந்து மொய்த்த அசுரர் வளைந்து
சுற்றிலுஞ் சரமாரி பொழிந்தார்
பொழிந்தவர்கள் அத்தனை பேரும் அழிந்தார்
சக்தி வேலொன்று நூறாயிரமாய்க் கண்டபடி பெருகி
உரத்த அசுரர் உடல்கள் பொடிபட
வளைத் தெதிர்த்தவர் சிரமெலா முருள்பட
துளைத்து எஞ்சிய சூரர் தெரிபட
மேலும் ஊடுருவி யுக்ர வீரம் பெருகிட
தடித்த யானை குதிரை சகடங் கடகடெனத்
தகர்த் துடைத்திடப் படை
சாய்ந்து சரிந்துயிர் மாய்ந்துடல் வீழ்ந்திட
சமர் செய்தமரரிடர் தவிர் வடிவேலன்
சரவண பவனருள் தரு சிறுபாலன் —சூர
✓
அண்ட மொடெண்டிசையுந் திகில் கொண்டிட
அதிர்த் திடியேயெனக் குதித்தவர் வென்றிட
முறைத்துச் சிறுவனைப் பிடித்துப் பிழிந்துதிரங் குடித்து
இரு பாதியாய்க் கிழித்துக் குடலை வேறாய்ப் பிரித்து
மாலையாய்த் தரித்துடனே வெற்றி யெடுத்திடு வேனென
விரைந்து நேரிற் கடும்போர் புரிந்திட வேற்படை
இரைந்து பாய்ந்தெதிர் திரண்டு தொடர் மலைபோல்
குவிந்து அசுரர் படை வெகுண்டு நிரைநிரை
வரவர அவரவர் சிரமுடல் பரபரென்
றறுத்துத் துளைத்து வதைத்துக் குவித்திடு
அதி பலமுடை அமரபதிபடை
அன்றமரிடை நின்று போர் புரிகின்ற பாவனைகண்டு வேதனை கொண்டனல் சிந்திட
இன்றரை நொடியில் அண்ட சராசரம் ஒன்று மிலாமலே
அழித்துப் போர் தொடுத்துப் பேரெடுத்திடுவே னென
அதிர்த்து மலையெனப் பெருத்துக் கொடிய இரு
வக்ர தந்தங்கள் கடைவாயிடைப் பீறிட
உக்கிரமிக்க பயங்கரப் போரிட
எதிர்த்த சூரன் துணிகரத்தையோ
அதிர்த்த பெரும்படைப் பலத்தையோ—அன்றி
அவன் புய பலத்தையோ
மகாதவத் துழைத்த ஆண வத்தையோ
வாயால் எடுத்தவரேனும் உரைத்திடற் கரும்
விதத்தில் மேவிடு வலுத்த சூரனைக்
கணத்தில் வதைக்கு முரைத்த வேலேவிடு —சூர
✓
அதிர்த்து மேலும் ஆர்ப்பரித்தடர் படையொடு
எதிர்த்த சூரன் ஆணவத்தை வேரொடு அழித்துவிட
அவன் தரித்த மதிப்புறு
முத்துமாலை ஆரம் மணி உத்தரீயம் அத்தனையும்
மிக்க விரைவாக அறுத்து—மேலும் அவன்
தேர்முடி மீதுடு வெற்றிக் கொடிகுடை பற்றிக் கிழிபட
எற்றித் தரையிடை சுற்ற சுரப்படை
சற்று நேரத்திடை யுத்த களத்திடை
மாண்டு மடிந்துடல் வீழ்ந்து சரிந்திடக்
கண்ட சூரன் வெகுண்டெதிர் படை
மண்டைகள் சிதறுண்டிட உடை
தண்டொடு மலைக் குன்றென இடை
நின்று சாட அத்தண்டு முறிந்துடனே—பல சிறு
துண்டுகளாகக் கைவிண்டு பறந்திட
மண்டிடு சினங் கொண்டு விரைந்து வில்
வளைத்துக் கணைதொடுக்கத் தொடுகணை
தெறிக்கப் பல விதத்தில் போரிட்டலுத்துத்
திருமுருகனைத் தேரொடு நெரித்துத் துகளாக்கிடு நோக்கொடு
தடித்த தனது பெருத்த தேரைக் கொண்டிடிக்கப்—படீரெனக்
கற்பாறையிலகப் பட்டுடை கப்பல் போல்
சூரன் முடி இடியோடு தகர்ந்திட
தேரிலச்சடி யோடு நகர்ந்திட
சரிந்து வீழ் தேரின் கீழ் நெரிந்து
கேவலமடைந்து மேலும் விரைந்து அதி வேகமாய்
சூடுண்ட வேங்கை போல் துடித்துப் பாய்ந்தெதிர்த்துப் போர்தொடுத்துப் பேரெடுத்திடு
பாலன் சிரம் வீழ்த்த உன்னி வேகமாக வாளை வீசினான்
வீசவே சூரன் வாளும் பறி போகலாயினான்
அந்தோ இனிமேலென் செய்வதென்று கூசினான்
நிராயுதனாய் நீள் விசும்பதிர மூசினான்
நெடிய பெரும் மாமரமாய் மேலுந் தாவினான்
தாவநெடிய மரமுங் கிளைகிளையாய் ஒடிய அடிசரிய ஓடி மாயமாய் மறைய
மூடியிருள் மழையோடு புயலடி கூடியண்டங் குலுங்க எங்கணும்
தேடியமரிட வருதிரு முருகனை சீறி மேலுமொரு மாறிமாறியிடு
போரினில் படுதோல்வியுறக்கடு வீறுகொளேறென கோர பயங்கர ஈறுவெஞ்சமர்
ஆட அஞ்சிடும் அரியயன் இந்திரன் வாடிடாவகை வலி மிகுசூரனை
வதைத் தமரரிடர் தவிர்த்திட அருள் வெற்றிவேல் கரம்பற்றித் திருமுரு
காற்றுப்படையுடனே மிகுபரிவொடு சாற்று நக்கீரர் முன்தோற்றி அவரொடு
சிறையுறை ஆயிரவரு மொரேமுறையில் விடுதலை எய்திடவே வெகுவிரைவில்
அடைத்த பூதத்தை வதைத்துக் குகையினை உடைத்துக் கிரியினைத் துளைத்திரு பிளவாய்
தகர்த்த வகையினை நிகர்த்த தெனவலி மிகுத்தசூரனின்
அடர்பெரு மார்பை சுடர் வடிவேலாலிரு பிளவாய்க் குடைந்தான்
சூரன் மயில் சேவல் வடிவாகிப் பால முருகன் பாதமே சரணடைந்தான்
ஞாலமெங்குந் திகில் தானே ஒழிந்திட சால யாவருமே களி கூர்ந்திட
✓
தேவர்முனிவ ரானோர் மலர் சிந்திடச்
சிவனுதல் விழிவெளி வருசரவண
பவனடியவர் பணி புரிதிரு வரகுண —சூர