முருகன் App
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள்
த. செல்லையா
செல்வச் சந்நிதி முருகன் பேரில் கீர்த்தனை3 / 7
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள் · த. செல்லையா

செல்வச் சந்நிதி முருகன் பேரில் கீர்த்தனை

இராகம்: கர்னாடக தேவகாந்தாரம் தாளம்: ஆதி
பல்லவி✓
எப்படிப் பாடுவேனோ அடியேன் இப்படிப் பாடலாம் என்றறியாத நான் —எப்
அநுபல்லவி✓
செப்பரும் சந்நிதி திகழ்திரு முருகனை செய்யனை யீராறு கையனை வாயார —எப்
ஒப்புயர் வற்ற தோர்ஒளி தரு சிவணி
உற்ற அடியார்க் கருள் உதவிடுதவமணி
அப்பனே யெனநோகும் அன்பர்முன் வருமணி
ஆனந்த மாமணி அறுதிரு முகமணி —எப்
சரணங்கள்✓
அண்டையிலோடும் நற் றொண்டமானாறு
அதனோடு கூடும் வேள் அபிஷேகப் பாலாறு
பெண்கள் சிரங்கள் பாற் செம்புகளொடு வேறு
பேணும் கரகம் கும்பம் தோணுமே பலவாறு —எப்
✓
அழகிய மடங்கள் நீர்ப்பந்த ரெவ்விடங்களும்
அனுதினம் அடிக்கடி அன்னதானங்களும்
வழமையாய்த் தரிசிக்க வருவார் போவார்களும்
வருத்தந் தீர் குமரவேள் நிருத்தம் பார்ப்பவர்களும் —எப்
✓
சந்ததமும் அடியார் சாதுக்கள் கூட்டமும்
தாளம் மத்தளம் வீணை பஜனை ஆர்ப்பாட்டமும்
வந்தனை வழிபாடு செய்வார்கள் வாட்டமும்
வகுக் கொணாத் தொகைக் கும்பல் காவடி யாட்டமும்—எப்
✓
கற்பூர ஜெகஜோதி காணலாம் நால்வீதி
கருது நேர்த்திக்குத் தம் உடலெங்கும் செடில் கோதி
அற்புதம் அவர்கட்கு அணுகாது ஒர் உபாதி
ஆனந்த நடங் கொள்வர் அரோகரா எனஓதி —எப்
✓
புரண்டு புரண்டழுது புலனின்றிக் கிடப்போரும்
போற்று முள் மிதிதடி தனிலூர்ந்து நடப்போரும்
திரண்டு திரண்டு திருப்புகழ் தோத்திரம் படிப்போரும்
தேரில் முருகன் வரச் சிரசில் கை குவிப்போரும் —எப்
✓
அண்டம் அதிர் பெருங் கண்டா மணியோசை
அடிக்கடி அபிஷேகம் அறுகால முறுபூசை
என்றும் தரிசிக்க மண்டும் தொண்டராசை
கண்டாலே கந்தன் மேலுண்டாகும் பேராசை —எப்
✓
வீதி யெங்கும் பலர் சன்னதங் கொள்ளுவர்
வேடிக்கை பார்ப்பவர் ஆளையாள் தள்ளுவர்
காதலோ டன்பர் சங்கீதங்கள் விள்ளுவர்
கண்டார் நின்றார் கலை கொண்டெங்கும் துள்ளுவர்—எப்
✓
சங்கொடு உடுக்கை சேகண்டி மிளிருமே
தாளம் தவில் குழல் மேளம் அதிருமே
பொங்கும் அரோகராச் சத்தம் பொலியுமே
போற்றும் அன்பர்காட்சி பார்க்கக் குளிருமே —எப்
✓
எல்லையில்லா அருள் வெள்ளமே நின்துதி
சொல்லெளி தாகுமோ சோருதே என்மதி
வல்லசுரரை வதை செய்த சூரபதி
வடிவேலா உமைபாலா வாராய் நீயே கதி —எப்படி