முருகன் App
தணிகை வெண்பா
கந்தப்ப ஐயர்
நூல்2 / 7
தணிகை வெண்பா · கந்தப்ப ஐயர்

நூல்

2✓
கார்அணிமால் வேடனும்முன் காணரும்பே ரின்புஎனக்குஇத்
தாரணியில் ஈயும் தணிகையே — போர்அணிகொள்
அஞ்ஞான சத்திதர னாம்து ரனைச்செகுத்த
மெஞ்ஞான சத்திதரன் வீடு.
3✓
அன்னம் தனிவீடு அடியார்க் குஒருங்குஉதவித்
தன்னந் தனியாம் தணிகையே — பொன்னுலகக்
கைமாப் பிடிக்குஏற்றார், காட்டில்எம்பி ராட்டிஇடும்
கைமாப் பிடிக்குஏற்றார் காப்பு.
4✓
நீர்அழல்கால் வாள்அரவான் நீள்விலங்கு சோரர்களால்
சாரும்இடர் தீர்க்கும் தணிகையே — போரில்
கழுகுஅணியா கத்தன் கதிர்வேல் எறிந்தான்
புழுகுஅணிஆ கத்தன் பொருப்பு.
5✓
பேய்ஊமை பங்குவெதிர் பித்தம் குருடுகயம்
சாய்கூனும் நீக்கும் தணிகையே — மாயை
மறப்பாவை காதுஅலின்நான் வாடாமல் காத்தான்
குறப்பாவை காதலினான் குன்று.
6✓
கண்டவரை விண்டவரை கற்றவரை உற்றவரைத்
தண்டதரன் தீண்டாத் தணிகையே—கொண்டபணம்
காட்டிவரும் பன்னகத்தார் காதலித்தார் புத்திரனார்
ஆட்டுஇவரும் பல்நகத்தார் ஆர்வு.
7✓
முப்போதும் பைங்குவனை முப்போதும் பூஞ்சுனையில்
தப்பாது பூக்கும் தணிகையே — அப்போது
வேர்அறவே றுஓட்டார் மிகும்தலை,கை, கால்கள்அற,
கூர்அறவேல் தொட்டார் குடி.
8✓
செஞ்சொல் திருப்புகழைச் செப்பிப் பணிந்தோர்க்குச்
சஞ்சிதத்தைப் போக்கும் தணிகையே — விஞ்சும்
சயம்தன்உற, கங்கள்ஐந்தான் தன்னை வரக்கூவும்
சயந்தன்உறக் கம்களைந்தான் சார்வு.
9✓
தீவினையும் தீவினையில் சிக்கும் பிறப்பினையும்
சாவினையும் மாற்றும் தணிகையே — பூவுலகை
நீண்டுஅளப்பான் மாமன்எனும் நேயத்தான் மந்திரியாம்
ஆண்டளப்பான் மாமன் அகம்.
10✓
மல்லரியும், சச்சரியும், வானவர்கள் துந்துமியும்,
சல்லரியும் ஆர்க்கும் தணிகையே — வல்அரிசேர்
இந்திரஞா லத்தேரான் ஈறுஇல் அரசுஅழித்த
தந்திரஞா லத்துஏரான் சார்பு.
11✓
பஞ்சைகள்ஆம் தேவர்களைப் பாடிஉழ லாமல்என்தன்
சஞ்சலத்தைப் பாற்றும் தணிகையே — வஞ்சிவள்ளி
காலைக் கடம்பணிவார் கையினார் திண்புயத்தின்
மாலைக் கடம்புஅணிவார் வைப்பு.
12✓
சேற்றுஇறால் பாய்பழனம் செந்நெல் வளர்கமுகின்
தாற்றுஇறால் பாயும் தணிகையே — ஆற்றின்எதிர்
அச்ச யிலம்பகத்தான் அள்இலைவே லான்எறிந்தான்
செச்சை இலம்பகத்தான் சேர்வு.
13✓
வானமிசை எந்நாளும் வந்துஎழும்ஆற் றுஏறியபொன்
தான்உரைகல் ஆகும் தணிகையே — ஞானக்
கலையமுனி வாய்நடந்தான் காட்டினான் நண்ணார்
உலையமுனி வாய்நடந்தான் ஊர்.
14✓
சந்திரனே கல்ஆக, தம்கிளையே கைஆக,
சந்தனங்கள் தேய்க்கும் தணிகையே — இந்திரற்காய்
நீல்தத்துஉ வாஇரவா நெஞ்சுஅவுண ரைத்துணித்தான்,
ஆறுஅத்து வாஇரவான் ஆர்வு.
15✓
இந்திரவில் ஏர்நுதலார் இந்துமுகம் கண்டு,புனல்
சந்திரகாந் தம்கால் தணிகையே — முந்துஉரத்தில்
வேய்ஜமத லைக்கணியார் வீயா துஅருள்வரத்தை
மாயைமத லைக்குஅணியார் வைப்பு.
16✓
மாதர்எழு மாடமிசை வந்துஊரும் கன்னிதனைத்
தாதின்எனக் கூவும் தணிகையே — பூதரம்நேர்
அவ்வீர ஆகுவினை அங்குஊர் கரிக்குஇளையோன்
செவ்வீர வாகுவின்ஐ சேர்வு.
17✓
இந்திரவில் வாசிகையாய் இந்துஇரவில் வெண்குடைஆம்
தந்திரம்உற் றுஓங்கும் தணிகையே — எந்திரம்போல்
ஆங்காரத்து உண்மையினார்க்கு ஆகும் பிறப்புஒழியான்
ஓங்காரத்து உண்மையினான் ஊர்.
18✓
கோள்அரவம் மஞ்ஞைக் கொடிக்குஅஞ்சி கோபுரத்தின்
சாளரம்புக்கு ஓடும் தணிகையே — வாள்அரவம்
வில்லம் பிறைமதித்தார் வேணியன்மேல் ஏவுகழை
வில்அம் புஇறைமதித்தார் வெற்பு.
19✓
செங்காந்தள் பூத்துடுப்பைத் தீயஅரா என்றுதிங்கள்
தங்காதுஅங் குஓடும் தணிகையே — மங்காது
நீள்தரும பேத நெறிக்குமரன், ஞானியர்க்குத்
தாள்தரும்அ பேதன் தலம்.
20✓
சோதிஉறும் சோதிமரம் துன்னி,எறி வோர்மழுச்செந்
தாதுமயம் ஆக்கும் தணிகையே — நீதி
பராசரன்ஆள் தற்குஇசையாப் பாலரைக் காத்துஆண்டான்
சராசரம்நா டற்குஇசையான் சார்பு.
21✓
மாத்தூலம் ஆம்குவட்டின் மாடுவரு மேடமிசைச்
சாத்தூலம் பாயும் தணிகையே — ஏத்தும்
அரிமுகன்ஐ யம்குலைத்தார், ஆழ்கடற்குஏ காமுன்
கரிமுகனை அங்குஉலைத்தார் காப்பு.
22✓
மேகம்அணை யும்கரியை வேறுஅணைந்தது என்றுபிடி
தாகமுடன் ஊடும் தணிகையே — ஆகமம்சொல்
பத்துவிதத் தாரகத்தான் பாவனைக்குஎட் டாதகுகன்
அத்துவிதத் தாரகத்தான் ஆர்வு.
23✓
சந்தின் குளகுஒடிந்து தாழ்சுளைவீழ் தேன்தோய்த்து
தந்திபிடிக் குஊட்டும் தணிகையே — செந்தினைசேர்
காட்டுஅத்தா ரோதியினார் காதலித்தார் பன்னிரண்டு
நாட்டத்தார் ஓதியினார் நட்பு.
24✓
பூம்தேற்றி னால்முடிமேல் பூண்டபசும் பொன்கழைகள்
சாந்தாற்றி மானும் தணிகையே — தோம்தோற்றும்
கோத்திரஏ தத்துஇனியான் கூடா துஅருள்முருகன்
சாத்திரவே தத்துஇனியான் சார்பு.
25✓
வெண்மதியி னால்குறவர் வெண்கமலப் பூஎனவான்
தண்மதியைச் சூடும் தணிகையே — விண்ணுலகத்
தான்அனத்தான் நத்தன் அரன்தமக்குஐ மூஇரட்டி
ஆனனத்தான் அத்தன் அகம்.
26✓
முத்துஉதிர்வேய்த் தேனடையில் மொய்த்தஅளி ஆதுலர்சேர்
சத்திரம்நேர் ஆகும் தணிகையே — அத்தன்
உருகாஎன் அத்தந்தான் ஓம்மொழிக்கு மாயோன்
மருகா! எனத்தந்தான் வாழ்வு.
27✓
நீலவட்ட வான்கதிரை தேடுஅரவின் குஞ்சரங்கள்
தாலவட்டம் வீசும் தணிகையே — ஞாலவட்டம்
தீமைஊர் அக்கொடியார் தீயநகைத் தான்அருள்
மாமாயூ ரக்கொடியார் வைப்பு.
28✓
துள்ளும்இர லைக்கோட்டால் சோர்தருகோல் தேன்மணிகள்
தள்ளிஅலைத் துஓடும் தணிகையே — விள்ளுமலர்
தீமையின்மேல் ஏவுஅருவான் தேகம்எரித் தார்க்குஅருள்வான்
மாமயில்மே லேவருவான் வாழ்வு.
29✓
காய்பறித்துத் தெங்கின் கடுவன்உயர் கற்பகத்தில்
தாய்க்குதித்துஉ லாவும் தணிகையே — தீப்பொறியை
வெல்லார் அலார்பயம்தான் மேவும் பவம்ஒழியான்
நல்ஆர லார்பயந்தான் நாடு.
30✓
வல்லியத்துக் குஉட்காத வானவர்முள் மெய்விதிர்க்கும்
சல்லியத்துக் குஅஞ்சும் தணிகையே — நல்இயல்சேர்
மாத்துரிய தீதத்தார் மாயைப் பிறப்புஒழித்துக்
காத்துஉரிய தீதுஅதீதத் தார்காப்பு.
31✓
தட்டைஉறும் கிள்ளைதினைத் தட்டைஉற பூவையர்கைத்
தட்டையின்அ தட்டும் தணிகையே — சிட்டர்
இதையகம லந்தவிர்ந்தார் ஈர்ஆறு தோளார்
சிதைஅகம லம்தவிர்ந்தார் சேர்வு.
32✓
நீண்டவரை வான்அளக்க நீண்டவரைப் போலமார்த்த
தாண்டவரைக் கூடும் தணிகையே — பாண்டவரைச்
சத்தியத்துஅத் தூதுஅரித்தான் தன்மருகன் மெய்ஞ்ஞான
சத்திஅத்தத் தேதரித்தான் சார்பு.
33✓
நீளவட்டப் பாறையின்மேல் நின்றுமயில் ஆடமந்தி
தாளவட்டம் தாக்கும் தணிகையே — மாளஅட்ட
நஞ்சுஅரவுஅ ணங்குஒண்தார் நாதர்அழற் கண்பொறியாய்
நம்சரவ ணம்கொண்டார் நாடு.
34கந்தமாதனகிரி✓
தாழ்வுஆகும் பைங்கிளைகள் சார்பருதிப் பைங்கிளைகள்
தாழ்வுஆக மேல்ஆம் தணிகையே — வாழ்வுஆம்
இருக்குஅந்தம் ஆதனத்தார் என்னையும்ஆட் கொள்ளும்
திருக்கந்த மாதனத்தார் சேர்வு.
35தேவகிரி✓
வெம்தழலி னால்வெடித்த வேய்முத்தம் விண்மடவார்
தந்தமுலை தாக்கும் தணிகையே — கந்தம்உறும்
மாவகிரிஅம் பின்ஆர் மைக்கண் குறத்தியர்வாய்
தேவகிரி நம்பினார் சேர்வு.
36வேங்கடம்✓
விண்உயரும் ஆசினியின் மென்கனியை மந்திபெருந்
தண்ணுமைபோல் கொட்டும் தணிகையே — பண்ணும்உடல்
தீவேம்க டத்தன்மை செப்பினன்மா வேங்கடத்தன்
மாஏங்குஅ டத்தன் வரை.
37பொதியமலை✓
கிட்டும் பிறைக்குணிலால் கேவேடர் தம்துடியைத்
தட்டும் ஒலிமல்கும் தணிகையே — அட்டுஉடலம்
சாம்கலகத் தானவர்அஞ் சப்பொருதான் தண்பொதிய
ஓங்கல்அகத் தான்அரசு ஊர்.