திருச்செந்தூர் நொண்டி நாடகம்
முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
தனித்துப் பரதவித்து7 / 7
திருச்செந்தூர் நொண்டி நாடகம் · முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
தனித்துப் பரதவித்து
243விருத்தம்✓
நலந்திகழ்பல் வளங்களுமிக் கோங்கிடச்சொல்
வளஞ்சேரு நல்லூர் மேய
பொலந்தருதிண் மணிப்புயத்த னநந்தபற்ப
நாபனெதிர்ப் பட்டென் புண்ணும்
அலந்தலையு மாற்றுவித்தா னச்செயலு
மவனுரைத்த வழியே சென்று
சிலம்பனையான் செந்தூரிற் சேவித்துச்
சிறந்ததுவுஞ் செப்பு வேனே. 243
244சிந்து✓
தனித்துப் பரதவித்து-நான்கிடந்து
சாளையப் படுமந்த வேளையிலே
கனித்துவ ரிதழ்மடவார் -மதவேள்சங்
கரமூர்த்தி பெற்றெடுத்த வரபாலன். 244
245✓
திருநதிக் குலதிலகன்-சோலைதொறுஞ்
செல்லூர்வ ளஞ்செறிந்த நல்லூரான்
துரைகள்ச மத்தானத்திற்-கீர்த்திகொண்ட
சுப்பிரதீ பனநந்த பற்பநாபன். 245
246✓
சிறக்குங்கு மாரத்தளவாய்-கொலுவினில்
திருவடி தேசத்தின் பருவஞ்சொல்லி
நிறக்குஞ்சி விகையேறி-மனுமுறை
நீதிமக ராசனந்தப் பாதையில்வந்தான். 246
247✓
குருதியின் முழுகிக்கொண்டு-நான்கிடந்த
குறிப்பைக்கண் டேசிவிகை நிறுத்திக்கொண்டே
ஒருவர்து ணையில்லாமற்-கிடந்தவென்
ஊரேது பேரேது சீரேதென்றான். 247
248✓
மகந்துதி ருப்பதியினான்-முன்னிருந்த
வாழ்வுமிப் போநடந்த தாழ்வுஞ்சொன்னேன்.
இகழ்ந்தொன்றுங் கூறாமலே-எண்ணெய்க்கும்
எலுமிச்சம் பழத்துக்கும் விலைகொடுத்தே.248
249✓
ஆருமற்ற பாவியிவனைப்-பரிகரித்
தனுப்பென்று சமுகத்திற் றனித்தழைத்துக்
காரியத் துடன்பேசிப்-பரிகாரி
கைக்குளொரு சாளிகைப்பொன் ரொக்கங் கொடுத்தே. 249
250✓
அலமலித்திரங்காதே-காயத்தை
ஆற்றிக்கொண் டேதிருச்செந் தூர்க்குவந்தாற்
கலபம யிற்குமரவேள்-திருவனுன்
கையுங்காலு மென்றுசொல்லி மெய்யுரைத்துப்250
251✓
புரவலர் தொழுஞ்சரண-சத்தளப்
பொற்பாவை சேரநந்த பற்பநாபன்
அரமனைக் கெழுந்தருளிச்-சென்றதற்பின்
அனைவோரு மெனைக்கண்டு மனதிரங்கி.251
252✓
எண்ணெகொ திக்கக்காய்ச்சிப்-பதமறிந்
தெலுமிச்சம் பழங்கொண்டு வலுமிச்சமாய்ப்
புண்கருக வொத்தனமிட்டுக்-காலுங்கையும்
பொட்டுக்கம்பு போற்கருக்கக் கட்டுமமைத்து.252
253✓
மெய்யிற்பு ழுதிதுடைத்து-முகத்தினில்
வேர்வையுந் தீர்த்திரணப் பார்வைபார்த்து
நெய்யிற்பொ ரிக்கறியுடன்-பத்தியமாய்
நேருஞ்சம் பாவரிசிச் சோறுந்தந்தே. 253
254✓
ஆறேழு நாளைக்குளே-காயத்தை
ஆற்றியென் னுடம்பையுந் தேற்றிவிட்டார்
நூறாறு மிஞ்சினதெல்லாங்-கணக்கிட்டு
நொடிக்குளொ டுக்கிக்கொண்டேன் முடிப்புக் கட்டிப் 254
255✓
பொதிவைத்துப் பிச்சையெடுத்துப்-பட்டசளம்
போதுந்த லைமுறைக்கும் போதுமென்றோர்
குதிரைசம் பாதித்துக்கொண்டே-னோர்பயலைக்
கூட்டிக்கொண் டேன்முகூர்த்தங் கேட்டுக் கொண்டேன். 255
256✓
அயனதெட் சணதிசைக்குள்-கதிர்வாரம்
அத்தநா ளிரவுற்ற சத்தமியிற்
பயணமென் றெழுந்திருந்தேன்-திருக்காட்டுப்
பள்ளிவிட்டுத் திருச்சிராப் பள்ளியில்வந்தேன்.256
257✓
திருவானைக் காவுங்கண்டேன்-காவேரிச்
செலத்திற்கு ளித்தரங்கர் தலத்தில்வந்தேன்
பெருமானைத் தொழுதிறைஞ்சும்-வயினவப்
பெரியோரைத் தெரிசித்து வரிசைபெற்றேன்.257
258✓
உறையூர் வழிநடந்தேன்-அரமனை
ஓலையஞ்சற் காரரன்ன சாலைதோறுங்
குறைதீரப் பசியாறி-நடந்தெங்கள்
குலக்கள்ளர் வளர்சோலை மலைக்குள்வந்தேன்.258
259✓
பழமுதிர் சோலைதொழுது-முச்சங்கப்
பாடலு வந்தசொக்கர் கூடலுங்கண்டேன்
கிழமுதிர் வடிவுகொண்டே-குறத்தியைக்
கெஞ்சிய தெய்வமேயுன் தஞ்சமென்று 259
260✓
திருப்பரங் கிரியில்வந்தேன்-அதினுள்ள
செய்கையுஞ் சரவணப் பொய்கையுங்கண்டேன்
பொருப்பர சிறகரிந்தோன்-பெற்றெடுத்த
புண்ணியம் போல்வந்த பெண்ணமுதை 260
261✓
மணஞ்செய்த கோலங்கண்டேன் -அங்கிருந்த
வடிவேற் கடவுளை யடிதொழுதேன்
குணஞ்செய்து மனங்குளிர்ந்து-திருப்பரங்
குன்றுகடந் தொருமித்துச் சென்றுநடந்தேன்.261
262✓
நடந்துவ ழியைத்தொலைத்துச்-சோலைதொறும்
நத்தூருஞ் சீவில்லி புத்தூர்கண்டேன்
அடர்ந்தவச் சாலைவழியே-வந்துகயத்
தாறுங்குற் றாலச்சிற் றாறுங்கண்டேன். 262
263✓
திருநெல்வே லியில்வந்தேன்-பசுங்கழைச்
செடிவாழ் வோடநடந்த வடிவாள்தன்
மருமலர்ப் பதந்தொழுதேன்-அனுதினம்
மறையவில் சிந்துபூந் துறையுங்கண்டேன். 263
264✓
விரிபுனல் பொருநைகண்டேன்-கோட்டையுடன்
விளங்குபா ளையங்கண் டுளங்குளிர்ந்தேன்
குருமணிச் சிகரிவளர்-முத்தாலங்
குறிச்சியில் வந்தொருநாள் தரித்திருந்தேன். 264
265✓
சந்தசல சாமியருளால்-எந்நாளுந்
தவறாத வாழ்வுபெற்ற கவிராயன்
கந்தசா மியைக்கண்டேன் -அவன்சொன்ன
கவித்வஞ் செவிபருகி மகத்வம் பெற்றேன்.265
266✓
சீமா னுபசரித்து-வயிற்றுக்குஞ்
செவிக்கும்வி ருந்துதந்த சவுக்யங்கொண்டு
கோமான் திருச்செந்திலான்-உம்பளக்கற்
குளமுங்க ளஞ்சியநெற் களமுங்கண்டேன்.266
267✓
சீர்கொண்ட சீவைகுண்டத்தூர்-வழிவந்து
சிகரிசூழ் ஆழ்வார்திரு நகரிகண்டேன்
பேர்கொண்ட திருக்கோளூர்-தென்திருப்
பேரையுங் கடந்துநல் லூரையுங்கண்டேன்.267
268✓
சந்திர கலையைப்போலக்-குளிர்ந்திட்ட
சண்முகச் சாலையைக்கண் டுண்மகிழ்ந்தேன்
செந்திலம் பலமுங்கண்டேன்-வேற்படைச்
செட்டிதன் பணிவிடைச் செட்டியைக்கண்டேன். 268
269✓
அங்கைமுகில் நிகர்கொடையான்-மஞ்சவாள்
அனுப்பர்கு லத்துரையக் கினிப்பரியான்
எங்கள்வட்ட ராமேந்திரன்-நாலா
யிரமுடை யார்குளத்திற் பரவிச்செய்த 269
270✓
வேலவன் பாலமேறி-இடம்வலம்
விலகாம லேநடந்தேன் நிலமகட்கு
மாலைபோ லேநிறைந்த -புனல்கொண்ட
வள்ளிவாய்க் கால்கடந்து மெள்ளநடந்தேன்.270
271✓
ஆலைப்ப ழனநெருங்கும்-புனற்றலை
அணைமடத் தினில்வந்து பனைமரத்தைக்
காலுக்குட் பொருத்திக்கொண்டு-கிந்திக்கிந்திக்
கவரயர் மடம்வந்து தவையாற்றினேன். 271
272✓
மட்டவிழ் துணர்க்கடம்பன்-வேட்டைவெளி
வழியுமண் டுகொண்டான் புளியுங்கண்டேன்
கொட்டகை வாசலுங்கண்டேன்-திருநாட்
கொண்டருளுஞ் செவ்வந்தி மண்டபங்கண்டேன்.272
273✓
தெருவிற்சிங் காரமுங்கண்டேன்-செங்கனகத்
தேருஞ்சி றந்தமகா மேரெனக்கண்டேன்
இருபிறப் பாளரெல்லாஞ் -சஞ்சரிக்கும்
இடமுந்தெ ருநிறைந்த மடமுங்கண்டேன். 273
274✓
பொய்யுங்க ளவுங்கொடுமை-யுங்கொலைசெய்
புன்மையும விரும்பினா னிம்மையிலே
செய்தபா வந்தீரக்-கடற்கரைச்
செந்தூர்த்த லத்துக்குள் வந்தேனே. 274
275✓
மூவரும் முனிவர்களும்-அட்டதிக்கு
முதல்வர் பராசரர் முதல்வர்களுந்
தேவருந் தொழுதிறைஞ்சுங்-கடற்கரைச்
செந்தூர்த்த லத்துக்குள் வந்தேனே. 275
276✓
வரைமுத்துங் கமுகின்முத்துங்-கதலியின்
மடல்முத்தும் வளைமுத்துங் கடலின்முத்துந்
திரைமுத்துஞ் சொரிந்துநிற்குஞ்-சந்தமலைச்
செந்தூர்த்த லத்துக்குள் வந்தேனே. 276
277✓
சோலையுஞ் சாலையுங்கண்டேன்-சாலையிற்
சொன்னவரந் தந்தவையன் சந்நிதிகண்டேன்
காலைக்கொ டுவிடங்கொண்ட-கட்செவியைக்
கண்டதுண்டங் கண்டமயின் மண்டபங்கண்டேன் 277
278✓
தாண்டும யின்மேல்வருங்-குமரற்குத்
தந்திகடி கொண்டிறந்த தையலைமுன்னாள்
தூண்டிய கரமுடைய-விநாயகன்
துணைமலர்ப் பதந்தொழு திணையிலதோர் 278
279✓
வில்வேடர் குலக்கொடிக்குங்-குஞ்சரிக்கும்
வேலைப்பி டித்தகையான் மாலையிட்டோன்
கல்யாணத் திருவாசல்-கண்ணாரக்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன் 279
280✓
கள்ளவிழ் மலர்க்கடம்பன்-கோவிற்சி
கரமுமே லக்கோ புரமுங்கண்டேன்
வள்ளியம் பலமுங்கண்டேன்-சந்நிதி
வாசலிற் சண்முகவி லாசமுங்கண்டேன். 280
281✓
மடற்கடம் பணியுத்தன்-உமைபெற்ற
வரசுதன் குருபர னரசுசெய்யுங்
கடற்கரைச் சினகரத்தைக்-கண்ணாரக்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன். 281
282✓
சனகர்ச னற்குமாரர்-சனாதனர்
சனந்தர்மு தன்முனிவர் தினந்துதிக்குங்
கனகதெக் கணவாசல்-கண்ணாரக்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன். 282
283✓
புனற்கடல் கரைப்புறமும்-ஈழத்திற்
புத்தளமட் டுந் தெரியுங் கொத்தளமுங்
கனத்தம ணற்புரிசையுங்-கண்ணாரக்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன். 283
284✓
மதிக்கதிர் போற்குளிர்ந்து-செந்தூரில்
வண்மைபெ றும்புகழ்போல் வெண்மைபெற்றுக்
கதித்தம ணித்திரள்களும்-கண்ணாரக்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன். 284
285✓
முதுதமிழ் வழுதிமகள்-வாடிய
முகத்தைக்கண் டழகிய முகத்தைத்தந்த
குதிரைமு கத்தீர்த்தத்தால்-நமக்கந்தக்
குதிரைமு கத்தில்வந்த வினைதீர்க்கும் 285
286✓
வதனா ரம்பமெனவே-குணதிசை
வாசலிற் கடலாடி நேசத்துடன்
கதிதரு காசியிலும்-மிக்கான
கந்தபுட் கரணியில் வந்துபடிந்தே 286
287✓
அயிரா வததீர்த்தந்-தன்னிலும்வந்
தாடிக்கொண் டேன்சுகிர்தந் தேடிக்கொண்டேன்
உயர்சந்த வரையக்கண்டேன்-ஆறெழுத்தை
உச்சரித்துக் கிரிப்பிர தட்சணம்வந்தேன். 287
288✓
வளங்கொள்சி ருச்செந்தூரில்-குருபரன்
வாழ்ந்திடுங் கோயில்வலஞ் சூழ்ந்துவந்தேன்
விளங்குதட் சணவாசல்-தன்னினின்று
வெள்ளிப்ப டியிறங்கி யுள்ளேசென்றேன்.288
289✓
வசந்தமண் டபத்திற்சென்றேன்-ஐயன்சுக்ர
வாரக்கொ லுவிருக்கு நேரமென்றார்
பசங்குவ டெனத்திளைப்ப-விம்மியுடல்
பூரித்து நின்றேனொரு பாரிசத்தில் 289
290✓
கமலா சனன்வணங்கப்-பாதத்திற்
காத்திருந்து திருமால் தோத்திரஞ்செய்ய
இமையோர் வட்டஞ்சாய்ப்பக்-கந்தருவர்
இயக்கர்சித் தர்விசிறி யசைத்துநிற்பச் 290
291✓
சந்திரன்வெண் குடைநிழற்றக்-கதிரவன்
தங்கவட்டம் பொற்பரிகை செங்கையிற்பற்றப்
பைந்தரு நிழல்தன்னில்வாழ்-மகுபதி
பாலன வெண்கவரிக் காலசைப்பத் 291
292✓
தனதன டைப்பம்பிடிக்க-வருணன்
தாங்குகா ளாஞ்சிகொண்டு பாங்குநிற்க
அனலியு மருத்துவரும்-பொற்சரிகை
யாடைவி ரித்துப்பா வாடைவீச 292
293✓
அதிர்த்தபொற் கேடயங்கொண்டு-தென்றிசை
யாளுந்த ருமனுடை வாளெடுக்கத்
துதிக்கைநி ருதிதனுவுந்-தூணியுஞ்
சுமந்துபோர்க் கோலஞ் சமைந்துநிற்க 293
294✓
நாரதர் தும்புருவுடன்-வீணையின்
நாதச்சு ருதியிற்சங் கீதம்பாட
வீரவா ணசூரன்-மெய்ப்பரதம்
விளங்கக்க ரங்கொடுமத் தளங்கொட்டவே.294
295✓
தேவரம் பையர்நடிக்க-முகவீணை
தித்திசதி கூடுதொனி யொத்துமுழங்க
மூவரு ரைத்ததமிழும்-பரியாக
முந்தநரி கொண்டுவந்த மந்த்ரிதமிழும் 295
296✓
கீரனி சைத்தமிழுடன்-அருண
கிரிசொன்ன திருப்புகழ் தெரிதமிழுஞ்
சீர்தளை பதச்சுவடு-சொற்கவடு
சிறந்தவித் தைப்பரசங்க நிறைந்துநிற்க. 296
297✓
முச்சதந் தரர்களெல்லாம்-அன்பொடு
முன்னும்பின்னுந் துன்னிவெகு நன்னயத்துடன்
மெச்சுமறை யுபநிடதம்-விதிமுறை
விளம்பிடு துதியொலி கிளம்பிடவே. 297
298✓
வானவர் முனிவரெல்லாம்-அவரவர்
வரம்புதப் பாமனிற்சுப் பிரம்புகொண்டு
சேனைத்தி ரளொதுக்கியே-திருமுன்பு
செயவீர வாகுகட் டியமுரைக்கச் 298
299✓
சீரியற் றிறல்வீரர்-எண்மருஞ்
சிலைத்திறல் வீரர்க ளிலக்கர்களும்
பாரிடைத் தளத்துடனே-நூற்றெட்டுப்
படைத்தலை வருந்தொழு திடத்தினிற்கத் 299
300✓
தேவதுந் துமியதிரத்-திண்டிமம்
திமிலைக னகதப்பு முருடுபம்பை
தாவுதி ரைப்புணரிபோன்-முழங்குந்த
டாரித வின்முரசு பேரிகையுடன் 300
301✓
சல்லரி துடியிடக்கை-காளளந்
தாரைநா கசுரம் பூரிகைமுதற்
செல்லுரு மெனத்தொனிக்கப்-பானுகோபன்
செங்கையிற்பி டித்திசைத்த சங்குமுழங்கத் 301
302✓
தேனும்ப பா லும்போலவே-இதமிக்க
தெய்வக்கு லமகளும் வள்ளிக்கொடியும்
மானும்பி டியும்போலவே -மணிப்புய
வரையரு கினிலிருந் தரசுசெய்ய. 302
303✓
அருணனு தையமெனவே-மவுலிகள்
ஆறுந்தி ருமுகங்க ளாறுமிலங்கத்
தருணம திப்பிளவுபோல்-நுதல்நொறுஞ்
சாத்துந்தி ரிபுண்டரக் கீத்துவிளங்கக் 303
304✓
கருமணிச் சிலையனைய-புருவந்தொறுங்
கருணைசொ ரிந்திடுபன் னிருவிழியுங்
குருமணித் தொங்கபதித்த-பொன்மகர
குண்டலமி லங்குபன்னி ரண்டுகுழையுஞ் 304
305✓
சிவந்தக னிவாய்தொறும்-பவளத்திற்
சிறுமுத்தெ னநிரைத்த குறுநகையும்
தவழ்ந்தபு னலருவிபோன்-மார்பின்முத்துத்
தாழ்வடமு மாபரணக் கோவைகளும் 305
306✓
ஈராறு கரதலமுங்-கரங்களில்
எங்கணுங்கி டந்திலங்கு கங்கணமுஞ்
சூராதி பத்யமுடியத்-தொடுத்தசெஞ்
சுடர்க்கதிர் வேலுமற்றப் படைக்கலமும் 306
307✓
ஆடைக்கி சைந்தமருங்கும்-மருங்கினில்
அரைஞாணு நவமணி அரைவடமுங்
கூடக்கி டந்துதுவளச்-சரணத்திற்
குரவுக டம்புபரி புரமிலங்கச் 307
308✓
சிம்புட்கு ருளையெனவே-தாங்கிய
சிங்கத்தினி லமைத்த தங்கத்தவிசில்
உம்பர்க்க ருள்குமரவேள்-கொலுத்திரு
ஓலக்கஞ் செய்திருந்த கோலத்தைக்கண்டேன்.308
309✓
வேத்திரம் பிடித்துக்கொண்டு-முன்புநின்ற
வீரவா குவைக்கண்டு நேரேசென்றேன்
தோத்திரஞ் செய்துகும்பிட்டேன்-பனைமரச்
சுமையாற்ற வுனக்கிது சமையமென்றார். 309
310✓
கட்டியச் செயவீரன்-என்னைக்கண்டு
கண்காட்டிக் குளிர்ந்தமு கண்காட்டினான்
கெட்டியாய்ச் சமுகத்திலே-காலைமெள்ளக்
கிந்திக்கிந்திக் கொண்டுசென்று சந்தித்தேனே.310
311✓
சைவக்கு ழாத்துடனே-நெருங்கிய
சதுமறை வேதியர் துதிமுழங்குந்
தெய்வக்கொ லுவினிற்சென்றேன்-முருகனைச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 311
312✓
தானாப திக்குவீரன்-கொண்டுவந்த
தகதேறி நடத்துஞ்சண் முகராயனைச்
சேனாப தித்தலைவனைக்-குமரனைச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 312
313✓
கங்கைத ருகுமரனைச்-சரவணத்திற்
கார்த்திகைப்பெண் முலையுண்ட மூர்த்திதன்னைச்
செங்கைவ டிவேலனைக்-குருபரனைச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 313
314✓
புத்தியுனக் கீதெனவே-பிரமனைப்
புடைத்தோனை யுலகம் படைத்தோனைச்
சித்திரம யில்வீரனைக்-கடற்கரைச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 314
315✓
காவற்க டவுண்முதலோர்-வணங்கிடு
கருணைக்க டலனைப்பன் னிருபுயனைச்
சேவற்கொ டிவீரனைக்-குடநாட்டுச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 315
316✓
விருப்பமங் கீகரித்து-வழங்கும்வி
சாகனைத் தெய்வானை பாகனைநான்
திருப்பரங் கிரியானைக்-குகனைச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 316
317✓
சூரலை வாய்மலைக்க-வேற்படை
தொடுத்தோனைத் தேவர்சிறை விடுத்தோனைச்
சீரலை வாயுகந்த-கடவுளைச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 317
318✓
தருவாய் கனியெனவே-வந்தவுடன்
தந்தைதா யாசைபழ நீதானெனத்
திருவாவி நன்குடிவாழ்-முதல்வனைச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 318
319✓
கருவே றறத்துணித்தே-அடியவர்
கன்மவி னைதவிர்க்கு நின்மலனைத்
திருவே ரகத்தினில்வாழ்-சேவகனைச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 319
320✓
குறுமுனிக் கருள்புரிந்த -குழகனைக்
குன்றுதோ றாடியெங்கு நின்றோனைச்
சிறுகண்டும் மதக்களிற்றின்-துணைவனைச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 320
321✓
பருத்தமு லைக்குறத்திசேர்-கணவனைப்
பழமுதிர் சோலைமலைக் கிழவோனைத்
திருத்தணி மலைபுரக்கு-மொருவனைச்
செந்திற்ப ரும்பொருளைச் சந்தித்தேனே. 321
322சிந்து✓
சந்தித்து விழிகுளிர்ந்து-நவமணித்
தண்டைப்ப தத்தைமுன்னே தெண்டனிட்டுச்
சிந்தித்தென் குறைபகர்ந்து-தியானித்துத்
தினைப்போது வணங்கினேன் மனப்பூர்வமாய்ப்322
323✓
பரவசத் துடன்வணங்கி-நித்திரைவந்து
படுத்தவர் போற்கிடந்தே னடுச்சபையில்
சரணிலே சரண்புகுந்தேன்-முருகனென்
தன்மானி தனைக்கண்டு சன்மானித்துத் 323
324✓
துச்சனஞ் செய்துதிரிந்து-வந்துநும்மைத்
தொழுந்திரு டாவினி யெழுந்திருடா
தற்செய லாகவளரக்-காலுங்கையுந்
தந்தோமென் றுகனவில் வந்தோமென்றார்.324
325✓
தெரிசனங் கண்டுவிழித்தேன்-காலுங்கையுந்
திருந்திமுன் போலவளர்ந் திருந்ததினாற்
கிரிதனில் வேல்விடுத்தோன்-சமுகத்திற்
கிடந்தேன் நானெழுந்து நடந்தேனே. 325
326✓
நடந்தவ திசயங்கண்டு-கொண்டாட
நாமோத ரம்பிரமன் தாமோதரன்
தொடர்ந்தெங்குந் தேடினாலுங்-காணரிய
சோதிப்பெ ருமையையா னேதுசொல்வேன்.326
327✓
கையுங்கா லும்வளர்த்தே-யெனைவளர்த்த
கத்தனைத் திருச்செந்தி லெந்தைதனைத்
தெய்வயா னைத்தாயை-மான்பெற்ற
தேனைத்தொ ழுதிறைஞ்சி ஞானம்பெற்றேன். 327
328✓
கலியுகந் தனிலெனக்குச்-செந்தூரிற்
காலுங்கை யும்வளர்ந்த மாலிமைகண்டு
வலியவந் துபசரித்துத்-தலத்தார்
வரிசைகொ டுத்தெனைக்கண் దதிசயித்து.328
329✓
வண்மைகொண் டாதரித்துக்-காவியால்
வட்டமொன்று மட்டமொன்று கட்டளையிட்டுச்
சண்முகன் கைங்கரியத்-திருப்பணிவி
சாரிப்போன் என்றெனக்கோர் பேருமிட்டார்.329
330✓
பணிவிடை மறவாமற்-கொலுத்திருப்
பணிமுற்றும் பொன்னினவ மணியிற்செய்து
துணிவுட னேசெந்தூரிலே-கிளைவாழந்து
சூழ்ந்துசி றந்திருக்க வாழ்ந்தேனே. 330.
331✓
ஆறுமு கங்கள்வாழி-செங்கையிற்பொன்
அயில்வாழி சேவற்கொடி மயில்வாழி
பூருவவு பேந்திரன் பெற்ற-தெய்வானைப்
பொன்னும்பொன் மான்பெற்ற மின்னும்வாழி.331
332✓
வீரவா காதியர்வாழி-இலட்சத்தெட்டு
வீரர்ப டைத்தலைவ ராரும்வாழி
பாரிடம் முற்றும்வாழி-திருச்செந்திற்
பதிவாழி சண்முகன்சந் நிதிவாழி. 332.
333✓
வேலாயு தன்கருணைசேர்-தலத்தார்
மிக்கதா னீர்கரு ணிககர்வாழி
மாலோன்ம ருகனான-குருபரன்
வாழிநீ டூழிதமிழ் வாழிவாழி. 333.