திருச்செந்தூர் நொண்டி நாடகம்
முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
பெண்ணுக்குப் பொன்கொடுத்து6 / 7
திருச்செந்தூர் நொண்டி நாடகம் · முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
பெண்ணுக்குப் பொன்கொடுத்து
145விருத்தம்✓
கொம்பனை யாட்குச் செம்பொன்
கொடுக்கவே காட்டுப் பள்ளிப்
பண்புசேர் பாடி வீட்டுட்
புகுந்தியான் பயின்ற வாறும்
வம்பிலே தேசி யொன்றை
வௌவின வாறுங் கைகால்
துன்புற விழிந்த வாறுஞ்
சொல்லுவேன் சொல்லு வேனே.
146சிந்து✓
பெண்ணுக்குப் பொன்கொடுத்து-நமக்கிந்தப்
பேருபெற்றுக் கொள்வது பூருவமென்றே
புண்ணிய வான்தளவாய்-பாளையத்திற்
புரவிகொண் டுவரத்தந் திரநினைந்தேன்
147✓
புலியா சனமெடுத்தேன்-உடம்பினிற்
பூதியுந் தளமாகப் பூசிக்கொண்டேன்
குலிசா யுதன்செலுத்து-மாத்திரைக்
கோலுந்திரி தண்டுமொரு வேலுமெடுத்தேன்.
148✓
பவுத்திரம் விரற்கணிந்தேன்-உத்திராட்சப்
பழுத்தம ணிக்கோவை கழுத்திலிட்டேன்
உவப்பொரு மயிர்முடித்துக்-கவிழ்த்தியே
ஒட்டுத்தெரி யாமற்சடை கட்டிக்கொண்டேன்.
149✓
காதிற்சு வசுகுண்டலம்-ஆறுகட்டுக்
கடுக்கனிட் டாணவத்தை யொடுக்கிக்கொண்டேன்
நாதிக்குஞ் சங்கமெடுத்தேன்-பன்றிக்கொம்பு
நரிக்கொம்புஞ் சடைமேலே தரித்துக்கொண்டேன்.
150✓
காசாய வேட்டியொன்றை -மருங்கினிற்
கட்டுமெட் டாகவே கட்டிக்கொண்டேன்
பூசணம் போலிலங்க-ஒட்டியாணம்
பூட்டினேன் சிவயோக வேட்டியுடன்.
151✓
நேத்திரப் புருவமட்டும்-பூசுந்திரு
நீற்றுத்தி ரிபுண்டரக் கீற்றுமிட்டேன்
பாத்திரக் கமண்டலமுந்-திருநீற்றுப்
பையும்பி ரம்புமொரு கையிலெடுத்தேன்.
152✓
பவவினை துடைத்தவர்போல்-தந்தக்குமிழ்
பதித்தபா துகைமேன் மிதித்துக்கொண்டேன்
சிவயோக வேடங்கொண்டு-பாளையத்திற்
சிங்கத்தைப் போலமு ழங்கிச்சென்றேன்.
153✓
பாளையத் தெருவொழுங்கும்-கூடாரப்
பந்திக ளுங்குதிரைப் பந்திகளும்
வேழநிகர் தளவீரர்-விடுதிமுன்
வேழங்கள் நிற்குமடை யாளங்களும்
154✓
கோடிநிதிக் கொடிநாட்டி-வர்த்தகஞ்செய்
குச்சிலியர் கூடாரத் தெச்சரிக்கையுந்
தேடிநவ மணிகுவிக்கும்-வியாபாரச்
செட்டிப்பிள்ளை மாரிருக்கும் வட்டிக்கடையும்
155✓
பத்தியாய்ப் படங்குகட்டி-வீதியிரு
பக்கத்திலுஞ் சேர்பலச ரக்குக்கடையும்
கத்தன்முனைப் பாளையத்தை-உச்சிதமாய்க்
காக்குந்தலை யாரியள்ப ராக்கிரமமும்
156✓
கதித்தம ணியகாரர்-உபதானக்
கட்டளைபோ லேநடத்துந் திட்டவட்டமும்
மதித்தவ ருகுதுரைகள்-வசீர்கள்
மறுமன்னி யர்பாளையச் செறிவுங்கண்டேன்
157✓
தழைக்குங்கு மாரத்தளவாய்-கூடாரந்
தானுங்கண் டேனதினி சாலுங்கண்டேன்
மழைக்குழ லியர்மதவேள்-தொண்டைமான்
மகராசன் கூடார வாசலில்வந்தேன்
158✓
வாசலிற் பிள்ளைமார்க்குஞ்-சேவகர்க்கும்
வரிசையு ழியஞ்செய்யும் பரிசனர்க்கும்
கூசாமல் நீறுகொடுத்தேன்-என்னைக்கண்டு
கும்பிட்டெல் லோரும்வந்து கூடியேநின்றார்158
159✓
தொண்டைமான் கொலுவிற்சென்றேன்-சென்றவுடன்
தொழுந்தெய்வம் போலெனைக்கண் டெழுந் திருந்தான்
மண்டலா திபனிருக்குங்-கம்பளத்தில்
மதியாமற் சென்றிருந்தே னதிசயம்போல் 159
160✓
சாமியென்று வணங்கிநின்றான்-திருநீற்றைச்
சற்றேதொட்டுக் கைப்பிடித்து நெற்றியில் வைத்தேன்
வாமியென்ப தறிந்துகொண்டான்-அறுசுவை
வர்க்கமெ லாம்பூசைமு கத்திற்கொணர்ந்தான்160
161✓
அமைந்ததை விடுவேனோ-தேவியென்
றானந்த மாகமத்ய பானங்கொண்டேன்
சமைந்தது சோறுங்கறியுங்-கொண்டுவந்தார்
சனங்களு டிருந்துபோ சனம்பண்ணினேன்161
162✓
துரைதொண்டை மானருளால்-பந்திதனில்
தோசையு முப்பழமும் பூசைகொண்டேன்
இரைகொண்ட விரியனைப்போல்-கடையெலும்
பெடுக்கநித் திரைவந்து படுத்தேனே 162
163✓
படுத்துநித் திரைவிழித்து-விடிந்தபின்
படையிருப்பைச் சுற்றினேன் தடையறவே
அடுத்தடுத் துபசரித்துக்-காவற்றலை
யாரிப தாதிகள்வி சாரிப்புங்கண்டேன். 163
164✓
வளங்கொண்ட பாளையத்தில்-உண்டான
வளப்பமு மதிற்றள வளப்புங்கண்டேன்
உளங்கொண்ட துணிவுடையோர்-சஞ்சரிக்கும்
உளவுமங் கேநடக்குங் களவுங்கண்டேன் 164
165✓
பறைதட்டி மணியடித்துப்-பறைகாரர்
பாளையஞ்சுற் றியேகாக்கும் வேளையுங்கண்டேன்
குறையற்ற பாக்யதுரைகள்-பாளையஞ்செய்
கூடாரந் தோறுஞ்சென் றூடாடினேன். 165
166✓
படுக்கையுந் களமுங்கண்டேன்-உக்களத்திற்
பழிப்பற்ற சேவகர்கண் விழிப்புங்கண்டேன்
கொடைக்கிந்த்ர தாருதளவாய்-துரையேற்றக்
குதிரையைச் சதுரான குதிரைதனைச் 166
167✓
சேவிக்கும் ராவுத்தமார்-எவரையுந்
தினசரி காத்திருந் தனுசரித்தேன்
ஏவற்காக தாரிப்பயல்கள்-என்னோ
டிணங்கிவ ணங்கிடவங் கணம்பண்ணினேன்.167
168✓
விரவுந றுநெய்க்கடலை-வெத்திலைக்கும்
மிளகுக்குங் கையேந்திப் பழகிக்கொண்டேன்
ஒருதாய் பெற்றபிள்ளைபோல்-எல்லோர்க்கும்
உடந்தைய தாகவே நடந்துகொண்டேன். 168
169✓
எத்திலே மனஞ்செலுத்தி-அரமனையி
லாயத்துப் பயல்கள்ச காயத்தினால்
பத்துநாள் திரியுமுன்னே-குதிரைகள்
பயிலுந்தொ ழிலுநன்றாய்ப் பயின்றுகொண்டேன்169
170✓
மையும்வெண் ணையும்போலே-சனங்களை
மருட்டிய மழைக்கா லிருட்டைக்கண்டேன்
கொய்யுளை தனைத்திருட-ஒருமித்துக்
கோழையில் லாமலிது வேளையென்றே. 170
171✓
தனித்தொரு தலத்தில்வந்து-வேடங்கொண்ட
சங்கடமெல் லாங்கழற்றி யங்குவைத்தேன்
மனித்தர்க்கு ருத்தெரியாமற்-கூட்டிய
மையத்த டவிக்கொண்டேன் மெய்யெங்குமே171
172✓
காங்குச்சல் லடந்தரித்து-மருங்கினிற்
கறுத்தக்கச் சையைக்கட்டி யிறுக்கிக்கொண்டு
கோங்கிற்புல் லுருவியுடன்-குளிரநிரிக்
கொம்புஞ்சி கைக்குள்வைத்தேன் கெம்பீரமாய்ப் 172
173✓
பூனைக்கண் மணிக்குளிசம்-மாயச்சொக்குப்
பொடித்திரு நீற்றைக்கச்சைக் கொடுக்கில் வைத்தேன்
சேனைத்த லைவர்களெல்லாம்-எழுதிய
சித்திரத்தைப் போலுறங்கு நித்திரைகண்டேன்.173
174✓
காயத்தை யொடுக்கிக்கொண்டு-நாளைப்படுங்
காயத்தை யறியாமல் லாயத்திலே
மாயத்து டன்புகுந்தேன்-புல்லுக்கட்டு
மறைப்பிற்சென் றேவிளக்கை நிறப்பிக்கொண்டேன். 174
175✓
மருவற்ற சீவரத்தினம்போற்-கட்டிநின்ற
வாம்பரியைக் கண்டுச லாம்பண்ணினேன்.
முருகர்செ ழுங்கருணையாற்-சிறந்தபொன்
முகந்தொட்டு பசரித்தி லாகன்பூட்டினேன்.175
176✓
பாளாசந் தனையவிழ்த்தேன்-முறுக்காணி
பறித்துக்க முத்துக்கட்டி தெறிப்பும்விட்டேன்
தோளாச மானபயல்கள்-கையைக்கொண்டு
சுருக்கிய மேல்வாகை திருத்திக்கொண்டேன்.176
177✓
குறுக்கின்மு றுக்குப்போட்டு-வெள்ளிக்கச்சைக்
கொடிக்கயிற் றைப்பிடித்து வெளிக்குள்வந்தேன்
அறிக்கைய றிந்தகுதிரை-கைக்குள்வசம்
ஆச்சுதெ னக்குநன்றாய் வாய்ச்சுதென்றே.177
178✓
சதிர்கொண்டு வலஞ்சுற்றியே-மேற்கொள்ளச்
சறுக்காமல் நான்வந்த கறுப்பைக்கண்டு
குதிகொண்ட னுமானித்துக்கிட்டநின்ற
குமையத்துக் கெடுத்தது சமையத்திலே. 178
179✓
புரவிமு ழக்கங்கேட்டே-எழுந்தனர்
பூணித்த ரட்டர்களுஞ் சாணிமாரும்
திரவியக் கட்டிபோலே-கட்டிநின்ற
தேசியைத் தேடுமென்றார் காசலையாய். 179
180✓
நாட்டங்கு திரைமேலே-என்றறிந்து
நமக்கென்ன பாவமென்று சமத்துடனே
ஓட்டத்தி லோடியொளிந்தேன்-பேசாமல்
ஒப்பத்துடன் தப்பிக்காணக் கொப்பரைக்குளே. 180
181✓
லாயத்தைச் சோதித்தபேர்-தலந்தப்பி
லகத்துக்கு ளாய்நின்றது ரகத்தைக்கண்டார்
மாயத்தி ருடனிவனைத்-தேடியோடி
மட்டுத்துறை மட்டும்வழி கட்டுக்கட்டென்பார்.181
182✓
விழுந்தப ணமுந்தெரியத்-தீவட்டியும்
விளக்கும்ப கல்வத்தியும் விளக்கிக்கொண்டு
கழுந்துமொட் டையாராகத்-திரிந்தனர்
காசுதாரிப் பயல்கள் பி சாசுகள்போலே. 182
183✓
பக்கத்தில் விடுதிகளும்-பறையர்கள்
பச்சைப்புல்லி னான்மடக்குங் குச்சுகளுந்
திக்கெங்குங் கும்பல்கும்பலாய்க்-கல்லணைகள்
சேணங்கள டுக்குமுக்கி ராணங்களும். 183
184✓
விரித்தப டங்குமறைப்பும்-புல்லுக்கட்டும்
விறகுக்கட் டுக்கடுத்த மறைவுகளும்
அரித்துச்சல் லடையிட்டுத்-தேடியென்னை
அலைந்தார திற்கிடந்து மலைந்தேனே. 184
185✓
கிடந்தச மயந்தனிலே-விழிப்பாய்க்
கிரமத்திற் றப்புவது முறைமையென்றே
கடந்துகொப் பரையைவிட்டுச்-சீக்கிரத்திற்
கழித்துபுற் சூட்டிற்சென் றொளித்தேனே. 185
186✓
சோதனை பெரிதெனவே-கையைக்காலைச்
சுருக்கியு டலைமறைத் திருக்கையிலே
காதிலெ றும்புதுளைக்க-நட்டுவக்
காலியொ ருபுறத்திற் காலிற்பிடுங்கத் 186
187✓
தேளொரு புறத்திற்கொட்டச்-சகனத்திற்
செய்யான்க டிக்கச்சற்று மெய்யாமலே
ஆளொரு புறந்தேட-அடுப்பிலிட்ட
ஆராற்போற் றுடித்தேனந் நேரத்திலே. 187
188✓
கடுப்புமெ ரிப்புமரிப்பு-மிகுந்திடக்
கல்லுப்போ லசையாமல் புல்லுக்குளே
இடுப்புமு றிந்தநாய்போற்-கிடந்துகொண்
டெத்தனைய வத்தைக்கென் றுத்தாரஞ்சொல்வேன். 188
189✓
பதினெட்டுக் கொட்டுவகைக்கு-மருந்திட்ட
பையில்லை யோவெடுக்கக் கையில்லையோ
விதிசுற்றி விளைந்து கொண்டாற்-செய்வதென்ன
வெறுவாய்மென் றேனந்தத் தறுவாயில் 189
190✓
தருணத்தைக் குறித்துக்கொண்டு-நாமினிச்
சாதிக்க வேணுந்தெய்வஞ் சோதித்ததென்றே
விரணத்தைப் பொறுத்துக்கொண்டு-புட்டுத்தின்று
விக்கினாற் போலிருந்தேன் வெக்கினாற்போல். 190
191✓
கடித்துச்செ விக்குருத்திலே-அடிக்கடி
கறும்பிக்கொண் டேயிருந்த எறும்புக்குநான்
முடித்தகு றைதானுண்டோ-இதுக்கென்மேல்
முற்பிறப்பி லேதேனு முட்பகையுண்டோ. 191
192✓
வேதனை கொடிதெனவே-நானிருக்கும்
வேளையிற் றேடினபல் வாள்வீரர்
ஏதைநி னைத்தார்களோ-கழிப்புல்லை
இழுத்துப்ப டப்பிற்றியைக் கொளுத்துமென்றார். 192
193✓
தீயென்ற சத்தங்கேட்டு-நாமிருந்த
செடிக்குங்கொ ழுத்தசனி பிடித்ததென்றே
வாயொன்றும் பேசாமல்-தீக்கொளுத்தி
மருண்டபு கைமறைப்பி லுருண்டேனே. 193
194✓
தொங்கத்த னம்பண்ணாமலே-உருண்டுருண்டு
செந்தூர்க்கும ரேசர் திருத் தேருக்குப்பின்னே
அங்கப்ர தட்சணம்வந்தே-னானாலும்
அதற்கான தவப்பேறி லவித்திடுமே. 194
195✓
தொலையாத வேதனையெலாம்-போதாமல்
துறண்டிபோற் செறிந்தமுட் குறண்டிமுள்ளுந்
தலைமயிர் தனையிழுக்க-முனைக்கல்லுத்
தைத்துடல மெல்லாஞ்சில் ரத்தம்பாய 195
196✓
உப்புமண் தரையெரிக்க-நெரிஞ்சிமுள்
உருளையி லேதைக்க வுருளையிலே
குப்புறப் போய்விழுந்தேன்-சட்டாளக்
குதிரைநீர்க் கேடயக் குழியுக்குளே. 196
197✓
வாயிலு நாசியிலும்-விழியிலும்
மாத்திர மோகுதிரை மூத்திரம்வந்து
தீயிலுங் கொடிதாக-எறும்பிருந்த
செவியுட்பு குந்ததுமு தவியல்லவோ. 197
198✓
மரச்செக்கு லக்கைபோல-உருண்டநான்
வழிதப்பிக் கேடயக் குழியுக்குளே
இரைச்லு டனேவிழுந்தென்-கள்ளன்மதி
இழந்தா னெனவந்து வளைந்தாரே. 198
199✓
கேடயக் குழிதனிலே-சுற்றிமொய்த்த
கேசமற்ற துருக்கரும் ராசபுத்திரருங்
கூடிய வடுகர்களும்-ஓடிவந்து
கூக்குரலெ ழுப்பிநின்று நாக்குவளைத்தார்.199
200✓
சட்டையைத் தொங்கவாண்டு-குதிரையைத்
தகக்கரம் பண்ணவந்தா னிசிக்குளென்பார்
வெட்டவேணும் கட்டுகட்டென்பார்-கிடக்கிறான்
வெறிமுண்டா தொத்தனோரி கரிமண்டம்போல்200
201✓
பரியிவ னுக்குத்தகுமோ-அற்றே
பான்சோத்து பக்கொடு பக்கொடென்பார்
அரமனைக் கருவூலத்தைத்-திருடவந்
தழுந்தந ரகத்திடை விழுந்தானென்பார். 201
202✓
சலக்குழித் தண்ணீருங்-குதிரைத்
தாரைத்தண் ணீருலர்த்திச் சாரத்துடனே
கலக்கிய சேற்றுக்குளே-ஐம்புலன்
கடந்திட்ட ஞானிகள் கிடந்தானென்பார். 202
203✓
முகத்தைத்தி ருப்பிக்கொள்வா-ரப்புறம்போய்
மூச்சுவிடு வார்கெட்டி யாச்சுதென்பார்
குகைக்குழி தன்னிற்கிடக்குங்-காசுதாரிக்
கூத்திமக னைக்கரை யேற்றுமென்பார். 203
204✓
நாய்க்குந ரிக்கும்பொருந்தா-நாற்றமிவன்
நாசிக்கும் பொறுக்குமோ சீசீயென்பார்
மூக்குப்பு ரினகழுதை-இவனுக்கு
மோசம்வந் தாலுமிலை ரோசமென்பார். 204
205✓
மரத்தினு முணர்ச்சிகெட்டு-நான்கிடந்து
வருணசெ பஞ்செவிக்குந் தருணத்திலே
கரைக்கிழுத் தெறிவனென்று-துணிந்தொரு
கழுக்காணி மொட்டையன்வந் திழுத்துவிட்டான்.205
206✓
இலக்கற்ற மழுங்கலென்னைக்-கொணர்ந்துபன்
னிரண்டுவ யதுசென்று திரண்டபெண்போல்
தலைக்குத்தண் ணீர்சொரிந்தார்-சண்டாளச்
சடத்தில ழுக்கனைத்துந் துடைத்துக்கொண்டேன்.206
207✓
கதலமி தலப்போமோ-கையிறுகக்
கட்டியே கேக்கையிட்ட தட்டிக்கொண்டு
பதனம்ப தனமெனவே-பரிகாரப்
பறையர்கொ ணர்ந்துவிட்டார் சிறைதனிலே. 207
208✓
காவற்ற லையாரிகள்-நமக்கின்று
களைதீர்ந்த தென்றுநாலு மூளைகளறைந்
தேவற்ப யல்களைவிட்டுக்-காலுங்கையும்
இழுத்துக்கட் டக்கிடந்தேன் முழுத்துக்கமாய்.208
209✓
விடியத்தெ ரியாமலே-ஏழெட்டு
வெறிகாரப் பயல்கள் வண் டுறுக்கிக்கொண்டு
கடினப்ர வர்த்தகமாக-நான்கிடந்த
காவற்பு ரைக்குள்வந்தா ரேவற்பேய்போல்.209
210✓
அவிழ்த்தென்னை முன்னேவிட்டு-மயிர்முடி
அவிழுத்த லையைமெள்ளக் கவிழுத்தள்ளித்
துவக்கிய கொடிக்கயிற்றிற்-பிடித்துத்
தொண்டைமான் திருமுன்னர் கொண்டுபோய் விட்டார். 210
211✓
திசைபெற்ற மன்யராயர்-ராவுத்தமார்
சேவகத் துரைமக்கள் யாவர்களும்
வசைபெற்ற திருடனிவன்-வந்துநின்ற
மார்க்கத்தைப் பாரும்வெகு தீர்க்கனென்பார்.211
212✓
நாடறிந்த களவுசெய்து-காலைக்கையை
நடுக்காம னின்றான்மிகு துடுக்கனென்பார்
ஊடறிந் திவனல்லவோ-அன்றுசிவ
யோகியாய் வந்தஅனு போகியென்பார். 212
213✓
தளமித்த னைவந்திரங்கும்-பாளையத்திற்
சாண்காட்டி லெட்டுமுழத் தூண்காட்டினான்
களவுக்குச் சேமனென்பார்-சேமனிவன்
காலுக்குப்பற் றான்களவு நூலுக்கென்பார்.213
214✓
கள்ளனிவ னாகாசத்தை-வடுப்படக்
கடிப்பானி னைத்ததெல்லா முடிப்பானென்பார்
மெள்ளவந்து சிக்கினதெல்லாஞ்-சிவயோக
வேசத்தைத் தூசணித்த தோசமென்பார். 214
215✓
ஒருத்தனி வனுக்கிணையோ-சிவசிவா
ஒருகூடு கோழிதின்ற வெருகிதென்பார்
செருக்குநெ ளிப்பும்பாரும்-இவனிட்ட
திலகத்தி லேமயங்கு முலகமென்பார். 215
216✓
கொடுமைசெய் பாதகனை-வங்கிகொண்டு
குத்துமென்பார் யானைக்காலா லெத்துமென்பார்
வெடிவைத்துச் சுடுவமென்பார்-ஒருவெட்டாய்
வெட்டுமென்பார் கையொடியக் கட்டுமென்பார்.216
217✓
முண்டைமக னிவன்முகத்தில்-கண்விழியு
மூக்குந்தெ றிக்கரெண்டு தாக்குமென்பார்
மண்டலீகர் சமுகத்திலே-துச்சனனை
வாவென்ற ழைத்தாலும்பாவமென்பார். 217
218✓
மதுரைச்ச மத்தானத்தில்-இவன்செய்த
வல்லமைசெய் வாரொருவ ரில்லையென்பார்
குதிரைக்க ளவுக்கெனவே-துணிந்துவந்த
கூற்றுவ னைக்கழுவி லேற்றுமென்பார். 218
219✓
தரைபுகழ் துரைதொண்டமான்-கோவிக்குஞ்
சனங்களைக் கையமர்த்தி மனம்பொறுத்துப்
பரமெனும் ஞானியாரே-கையிற்க
பாலமெங் கேயெடுத்த கோலமெங்கே. 219
220✓
சளமித்த னைவந்துதோ-கம்பளியிற்
சரியிருப் பாயிருந்த பெரியவரே
களவுக்குத் துணிந்தீரோ-நமக்கன்று
கையிற்றிரு நீறுதந்த ஐயரல்லவோ. 220
221✓
கட்டுமெட்டாய் வந்தீரே-உமக்கினிக்
கரையேற்ற மேதுகாணும் பரமார்த்தமே
வெட்டுமட்டும் தொழிலாச்சே-நீதிரிந்த
மேதைக்கென்று சொல்லிநெஞ்சி லேதைக் குறித்தோ. 221
222✓
களவா யிரஞ்செய்யினு-நாமிவனைக்
கண்டிப்ப தில்லையென்று விண்டுரைத்துத்
தளவாய் சமுகத்திற்போய்ப்-பண்டாரஞ்
சனுப்பெற வேணுமங்கே யனுப்புமென்றார்.222
223✓
தீரன்கு மாரத்தளவாய்-மனுநீதி
செலுத்திய ரசுசெய்யுங் கொலுத்தனிலே
ஆருந்த டைபண்ணாமற்-கூட்டிச்சென்
றருமைய றிந்ததுரை திருமுன்விட்டார். 223
224✓
விடுத்துச்ச முகந்தன்னிலே-நான்கொண்ட
வேசத்தை யுமுடித்த தோசத்தையுந்
தொடுத்துக்க தையாச்சொல்லி-நம்முடைய
துரகதந் திருடிய துரகனென்றார். 224
225✓
துரையென்மு கத்தைப்பார்த்தே-ஏமிரா
துஞ்சத்தொழி லிட்டுவந்த லஞ்சக்கொடுக்கா
வரலாறு மூரும்பேரும்-குலமுமுன்
வகையுஞ்சொல் லென்றாரந்த மகராசன். 225
226✓
சாமிநான் கள்ளனென்றே-ஒளியாமற்
சாதியுஞ்சொன் னேனடந்த சேதியுஞ்சொன்னேன்
சீமையு மென்பதியுஞ்-சொன்னவுடன்
சிரித்துக்கொண் டாரெசமான் கருத்தைக்கண்டேன். 226
227✓
மனங்கலங் காமனின்றேன்-உயிர்ச்சேதம்
வாராது குறைநம்மைச் சாராதென்றே
சனங்களைச் சாத்திரிகளை-நோக்கியிந்தச்
சல்லிக்குச் சிட்சையென்ன சொல்லுமென்றார்.227
228✓
வேதநூ லறிந்தவர்கள்-மனுநீதி
விவகார மறிந்தெனக் குவகாரமாய்ச்
சாதனைசெய் திருடனையே-காலுங்கையும்
தறிப்பது மனுநீதி குறிப்பதென்றார். 228
229✓
குறித்ததைத் துரையறிந்து-களவுசெய்
கொலைகாரப் பொட்டிமகன் தலைபிழைத்தான்
சுறுக்குடன் காலுங்கையுந் தறித்தப்பால்
துரத்துமென் றோருத்தர முரைத்தனரே. 229
230✓
ஐயன்கு மாரத்தளவாய்-அரண்மனை
அடையாளம் வேணுமென்று புடையிருந்த
கையம்பு தனையெடுத்துத்-தலையாரி
கையிற்கொ டுத்தாரேதோ பையச்சொல்லியே.230
231✓
மறுத்தொருத் தரஞ்சொல்லாமல்-அரமனை
வாசலுக்கப் பாற்கொணர்ந்து பூசல்விளைத்தார்
பொறுத்தோரி ரவுவிழித்தாற்-சாளிகைப்
பொன்கட்டுஞ் செல்லக்கையைப் பின்கட்டுகட்டி 231
232✓
மணக்கோல முனக்கிதென்றே-எருக்கலை
மாலைக ழுத்திலொரு காலைதறித்துப்
பிணைத்தகொ லுவைக்காளைபோல்-என்னைமுன்னும்
பின்னுந்தள்ளிக் கன்னங்கன்ன மென்னத் தகர்த்துக் 232
233✓
கடைத்தெரு தனிற்கொணர்ந்து-பொரியுண்டை
கடலைய வல்பயறு விடலையுடன்
எடுப்பெடுத் தெனக்குத்தந்து -பாளையம்
இரையத்தி டுதிடென முரசறைந்து. 233
234✓
தெருக்களெல் லாங்கடந்து-கேட்டவர்க்குச்
சேதிசொல் லிச்சின்னது வெதுறுக்கியே
விருக்கென்று டல்பதறவே-கோட்டைவாசல்
வெளியிற்றி ரும்பியொற்றைப் புளிகடந்தே. 234
235✓
இடருற்றென் போலத்திருடுங்-கள்ளருக்கென்
றீட்டிமுனை போலக்கழு நாட்டினிற்குந்
திடருக்கப் புறமிருத்தி-அம்பட்டச்
சிலையானை யழைப்பித்தார் தலையாரியள். 235
236✓
பரிகாரிச் சிலையான்வந்து-காலுங்கையும்
பறிக்கும்பொ ருத்தறிந்து குறித்துக்கொண்டு
கருவிக திக்கத்தீட்டி-மாறுகாலுங்
கையும்வாங் கிவைத்தார் மெய்பதறவே. 236
237✓
தாளுங்க ரமுந்துணித்து-வைத்தவுடன்
தளர்ச்சியுற் றாக்கினைக் களத்துக்குளே
தோளுந்தொ டையும்பறந்து-மூர்ச்சைவந்து
சோர்ந்தும திமயங்கிச் சாய்ந்துவிட்டேன். 237
238✓
திருப்பதி மலைதனிலே-பெருமாளைத்
தெண்டனிட்ட டிதொழுது தொண்டருடனே
இருப்பதுக் கிசையாமல்-தலத்தைவிட்
டிழிந்தபா வம்நம்மை வளைந்ததென்றே. 238
239✓
புழுதியிற் கிடந்துருண்டு-அழுதழுது
புலம்பித்து ரும்புகுத்தி நிலம்பரண்டிக்
கழுதைபோற் காலுதைத்தே-ஊழ்விதி
கடக்கரி தென்றுநான் கிடக்கையிலே. 239
240✓
செறிந்தந்தப் பாளையத்திலுஞ்-சந்தத்
திருக்காட்டுப் பள்ளியிலு மிருக்கின்றபேர்
அறிந்தும றியார்கள் போல்-ஏதுக்கிந்த
ஆக்கினை வந்ததென்று கேட்பாரும் 240
241✓
பெரியவர் போலவந்து-பாளையத்திற்
பிச்சையெடுத் துத்திரிந்த துச்சனனென்று
பரியாசஞ் சொல்வாரும்-வீணிலிந்தப்
பாவமு னக்கெனென்று நோவாரும். 241
242✓
உருவழிந் தறிவிழந்து-நான்கிடந்த
ஒருநாளும் பத்துநாட் டிருநாள்போல்
வருவாரும் போவாரும்-என்னைக்கண்டு
மலைக்குஞ்ச னங்களுக்கு மிலக்கில்லையே. 242