முருகன் App
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்
காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
அம்புலிப்பருவம்8 / 11
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் · காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்

அம்புலிப்பருவம்

62வழுவூர்✓
குழுவுடைய பதினாறு கலைவடிவு சிவன்முனம்
குறைவறக் கேட்டிடுதலால்
குளிரமுத மதிநிலவு புலவனென் றென்றுநற்
குவலயங் கொண்டாடலால்
வழுவையம் பலவனருள் பெற்றவ னென்னலால்
வானவர்க ளெந்தநாளும்
வளரிளங் குழவியென விசுவநா தன்சடா
மகுடத்தில் விளையாடலால்
ஒழுகுமொளி யாலறிவி லிருளெலாம் நீக்கலால்
ஒப்பிலா இவனோடுனை
ஒப்பிட்டுரைப்பார்கள் கவிராச ராசர்கள்
உனக்கொத்த துணையிவன்காண்
அழகுவழு வூரினுறை உமைதரு குழந்தையுடன்
அம்புலீ யாடவாவே
அனந்தகல் யாணகுண னெங்கள்கும ரேசனுடன்
அம்புலீ யாடவாவே.
63செம்பொன்பள்ளி✓
தேசுமிகு தேவர்களி னொருவனீ இந்ந்ராதி
தேவரெல் லாம்கூடியே
சிவபரப் பிரமமிவ னேயென்று பூசித்த
செம்பொற் பதாம்புயத்தோன்
வாசமல ரோனைமுன் குட்டியே சிறைவைத்து
மண்டுமண் டம்படைத்தோன்
மாலுமய னுந்தேடி அடிமுடிகள் காணாத
வளர்பரஞ் சோதிமைந்தன்
தாசரடி யார்தாச னெனவிருந் திடுமுனைத்
தன்பெருமை யறியாமலே
தனையொத்த பேரெனப் பிள்ளைவிளை யாட்டினைத்
தருமிளம் பருவத்தினால்
ஆசையோ டழைத்தன னெங்கள்கும ரேசனுடன்
அம்புலீ யாடவாவே
அழகுசெம் பொன்பள்ளி யாறான னத்தனுடன்
அம்புலீ யாடவாவே.
64ஆகமபுராணம்✓
விரிஞ்சன் பெருஞ்சிறை விடுத்தபெரு மாள்கருடன்
மேல்வரும் பெரியபெருமாள்
வேண்டவே தேவர்சிறை மீட்டபெரு மாள்மதுரை
மேவுசங் கப்பலகைவாழ்
கரைஞ்சவன் பானநக் கீரர்சிறை மீட்டவர்சொல்
கவிமாலை கொண்டபெருமாள்
காயப்பெரு ஞ்சிறை யொழிக்கவே உன்னையும்
காசிதனில் வைத்தபெருமாள்
பரஞ்சுட ரழைத்தவுடன் விளையாட வேமனம்
பதறிநீ யோடிவந்தால்
பயங்கொண்ட கட்செவியின் வெங்காள வல்லிருள்
பரந்தபற் பகுவாய்குறை
அருஞ்சிறை யொழித்தாள்வ னெங்கள்கும ரேசனுடன்
அம்புலீ யாடவாவே
ஆகம புராணமலி யோகமுரு கேசனுடன்
அம்புலீ யாடவாவே.
65சீகாழி✓
முழுமதிக் கடவுளென வுளவிருட் கறையுடன்
முயற்கறையு மில்லானென
முடங்குமொரு கூனுமில் லானென்ன வொருசீவன்
முத்தனென வுன்னைவைப்பன்
குழவிவடி வானவன் தமிழ்மறை யுரைத்தவன்
கூடல்வரு கோமாறன்முன்
குறைமதி யொழித்தவன் நிறைமதி யளித்தவன்
கூனிமிர வேபாடினோன்
பழுதமண் கறையொழித் தோனின்ப வாரிதி
பரிந்துவிளை யாடவைத்தோன்
பரசமய கோளரிமெய் யெந்தைபர சிவனே
பரப்பிரம் மெனநாட்டினோன்
அமுதனை யுமைமுலைப் பாலமுத முண்டவனோ
டம்புலீ யாடவாவே
அமரர்பணி காழிவரு குமரகுரு நாதனுடன்
அம்புலீ யாடவாவே.
66சுவேதவனம்✓
தண்டரள மெறிதிரைப் பாலாழி சததளத்
தாமரை சிங்காசனம்
தருகற்ப கக்காடு சங்கநிதி பத்மநிதி
தந்திடும் சிந்தாமணி
எண்டிசா முகமுடன் சந்திரசூ ரியர்கள்பதம்
இந்திரபு ரோகிதர்பதம்
ஈராறு ராசிபத மனுமன்னர் தம்பதம்
எண்ணிலா தோர்பதங்கள்
தொண்டுசெயு மன்பருக் கென்றே படைத்தனன்
தோன்றாத துணையாமிவன்
தோன்றுறுந் துணையென்ன முன்னின் றழைத்தனன்
துண்ணென்ன ஓடிவந்தால்
அண்டங் கொடுத்தருள்வ னெங்கள்கும ரேசனுடன்
அம்புலீ யாடவாவே
அவனிபுக ழுஞ்சுவே தவனமுறை வேலனுடன்
அம்புலீ யாடவாவே.
67திருக்கடவூர்✓
சக்கிரவா ளத்தையரை நொடியில்வலம் வந்தவன்
சலராசி யேழுமேக
சமுத்திரம தாக்கினான் விறலினால் வேள்விவரு
தகரைப் பிடித்தேறினான்
பக்கமுறு சேடனைச் சாட்டையென மேருகிரி
பம்பரம் தாயாட்டினான்
பானுவின் தேரிலுனை வைத்துனது தேரின்மேற்
பானுவை எடுத்துவைத்தான்
திக்கெட்டும் வாழ்கிரி பிடித்தொன்ற னோடொன்று
சினமாக முட்டவிட்டான்
சேயுன்னை விளையாட வேயழைத் தானிவன்
திருமுன்வா ராதிருந்தால்
அக்கணம் கோபம்வைப் பானெங்கள் குமரனோ
டம்புலீ யாடவாவே
அருள்கால காலனுறை கடவூரில் வேலனுடன்
அம்புலீ யாடவாவே.
68திருத்தருப்பூண்டி✓
இவனழைத் தானுனைத் தன்னோடு விளையாட
இப்போது வாராவிடில்
ஏதிவன் திருவுளத் தெண்ணுமோ குற்றம்நீ
எங்கள்மேற் சொல்லவேண்டா
புவனநா யகனிவ னழைத்துமுன் வாராத
பொங்குவெஞ் சூரனுயிரைப்
புலிங்கமெறி கோபவட வைக்கிரைய தாக்கினோன்
புகழ்கொண்ட பானுகோபன்
உவரிநிகர் தானையந் தலைவரா மவுணர்கள்
உரங்கிழித் தேயுதிரநீர்
உகந்தவெள் ளத்தைநிக ராகவே வைத்தவன்
உயர்வீர வாகுதேவன்
அவனையொரு தம்பிமகிழ் தூதனென ஆண்டவனொ
டம்புலீ யாடவாவே
அகத்திய ரருச்சித்த பூண்டிவரு வேலனுடன்
அம்புலீ யாடவாவே.
69பாவாலி✓
தாயினிலு மன்புடைய சண்முகன் காணிவன்
தன்னுடன் விளையாடநீ
சாமபே தத்துடன் யாவரும் விரும்பிவரு
தானமெல் லாமுரைத்தோம்
நீயிவன் தனையொரு குழந்தையென் றெண்ணிவா
னின்றுவா ராதிருந்தால்
நிருமலன் செய்தண்ட மோதுவோ மெங்கள்மேல்
நிட்டூர மோதவேண்டாம்
பாயுந்தி ரைக்கடல்க ளேழென்ன வுதிரம்
பரக்கவே பாரினின்று
பங்கயச் செங்கையொன் றாலண்ட முகடுறப்
பந்தாயெ டுத்தெறிந்தே
ஆயிர முகங்களுள சிங்கனைக் கொன்றவன்
அம்புலீ யாடவாவே
அத்தனருள் பாவாலி முத்துக்கு மாரனுடன்
அம்புலீ யாடவாவே.
70பேரூர்✓
தரைக்கண்ணு மிந்திரன் கண்ணுமுன் கண்ணுமுயர்
சக்கிரவா ளத்தின்கணும்
தருமட்ட கிரியெனுங் குலகிரிக ளின்கணும்
சத்தசா கரநீர்க்கணும்
கரைக்கண்ணு மெண்டிசா முகமொடிர விக்கணுங்
கருதுதண் மதியின்கணும்
காற்றுமுகி லின்கணு முடுக்கள்கண் ணும்பெரிய
கனகமா மேருவென்னும்
வரைக்கண்ணு மப்புறத் தண்டங்க ளின்கணும்
மயேந்திர புரத்தின்கணும்
மண்டும்பிர சண்டமா ருதமென்ன இடசாரி
வலசாரி யாகவந்தே
அரைக்கணிமை யிற்சூர பத்மனைக் கொன்றவெனொ
டம்புலீ யாடவாவே
ஆராத கருணைமிகு பேரூரில் வேலனுடன்
அம்புலீ யாடவாவே.
71மயிலம்✓
பொங்குந்தி ரைக்கடல்க ளேழுமேழ் தீவுமுயர்
புகழ்பூத ரங்களெட்டும்
பொன்மேரு கிரியுமணி மயமாக நின்றிலகு
பூச்சக்கர வாளகிரியும்
மங்குல்தவ ழண்டமுக டுந்தலையும் வேறுமுற
வருசூரன் மாவானநாள்
வளரனந் தங்கோடி யண்டங்கள் தனதுருவின்
வருரோம முனையினிற்க
எங்குந்தன் வடிவென விசுவரூ பங்கொண்ட
ஏகநா யகன்பிரமமிங்
கிறப்பொடு பிறப்பிலான் நம்பிறவி மாற்றவே
ஈசனொரு மதலையானோன்
அங்கைகொண்டெட்டிப் பிடிக்குமுன் முருகனுடன்
அம்புலீ யாடவாவே
அயில்வேலன் மயிலம்வரு மயில்வா கனத்தனுடன்
அம்புலீ யாடவாவே.