க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்
காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
வாரானைப்பருவம்7 / 11
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் · காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
வாரானைப்பருவம்
52எண்கண்✓
சீராரு மயில்காண வேல்காண அடல்கொண்ட
சேவற்ப தாகைகாணத்
திருமுகத் தாமரைக ளோராறு காணநின்
செம்பருதி மேனிகாண
ஓராறு நவரத்ன மணிமௌலி காணவுள்
ளுகந்துருகு நகைகள்காண
உபயபரி புரமறைகள் தண்டையொடு கிண்கிணி
ஒலிக்கும் பதங்கள்காணத்
தாரா றிரண்டுபுய சயிலங்கள் காணவே
தங்கமுப் புரிநூலணி
தடமார்பு காணவே ஈராறு செவியிலணி
தருகுண் டலங்கள்காண
ஈராறு கைகாண அடியர்முன் னோடிவரும்
எந்தைஎன் முன்வருகவே
எண்கண்ண னுக்கருள்செ யீராறு கண்ணனே
எண்கண்வே லவன்வருகவே.
53கீழ்வேளூர்✓
அண்டகோ டிகள்பணிய ஆயிர முகக்கங்கை
அபிடேக மஞ்சனமென
அணிமாலை மலர்பத் திரந்தருநந் தனவன
மாற்கற்ப காடவியென்னக்
கொண்டமே னியிலணி நறுஞ்சந் தனத்திரள்
கொடுப்பதம் பொதியமென்னக்
கொள்ளுமுப கரணங்கள் தந்திடும் பண்டாரி
குறைவறுகு பேரனென்னப்
பண்டுதான் மகிழ்பஞ்ச கவ்வியம் கொடுப்பது
பகர்காம தேனுவென்னப்
பணிவிடைகள் நலவீரர் முதலான
பலகோடி தேவரென்ன
மண்டுபே ரொளியான கேடிலியை யர்ச்சித்த
வள்ளிநா யகன்வருகவே
மாகாளி காத்தக்கீழ் வேளூரில் மாதவ
வளர்த்தவே லவன்வருகவே.
54நாகப்பட்டினம்✓
தாணுமா லயனுடன் மயேசுரர் சதாசிவர்
சச்சிதா னந்தசாந்தர்
தந்தநவ சத்தியருள் போகாங்க மூர்த்திகள்
தருமட்ட வித்தியேசுரர்
பேணுமெழு கோடிமா மந்திரே சுரரைந்து
பேதமா மாகேசுரர்
பேதமொன் றில்லாத நந்திமா காளர்சொல்
பிருங்கியுட னைங்கரத்தோன்
பூணிடபர் நீள்கவுரி தண்டியெண் டிசைநாதர்
போற்றுந்த சாயுதங்கள்
பூமண்ட லத்திலுள தெய்வங்கள் வேதங்கள்
புகழ்கொண்ட தேவர்முனிவர்
காணவரு சிவராச தானியெனு நாகைவரு
கந்தசுவா மிவருகவே
கைகண்ட அடியர்பணி மெய்கண்ட வேலவன்
கருணையங் கடல்வருகவே.
55சிக்கல்✓
முக்கட்பு ராரியொடு சக்கரா யுதக்கடவுள்
முண்டகத் தவிசிருந்தோன்
மூவரும் சிரகர கம்பிதஞ் செய்துநம்
முருகன்ப ராக்கிரமனெனச்
சக்ரவா ளத்துடன் மிக்கநவ கண்டமும்
தருமட்ட குலகிரிகளும்
சத்தசா கரமும் கணத்தினிற் சுற்றிவரு
தாருகன் வாயினுதிரம்
கக்கிப் பதைத்துக் கிடந்தே யிருக்கக்
கடைக்கண் சிவந்தவேலன்
கற்பகா டவிதடவு மண்டபம் கோபுரம்
கனகமதில் நின்றிலங்கும்
சிக்கலம் பதிமேவு சிங்கார வேலனாம்
தேவர்நா யகன்வருகவே
திகழும்வெண் ணெய்ப்பிரா னொருபா லுறைந்தமெய்ச்
செல்விபா லகன் வருகவே.
56எட்டிகுடி✓
இட்டமுறு பூதப்ப டைத்தலை மாமோக
மென்னுநித் திரையொழியவே
இருவருட னிந்த்ராதி யிமையோர்கள் முகமலரும்
இதயகம லமுமலரவே
துட்டக்கிர வுஞ்சகிரி மாயையிரு ளழியவே
துங்கப்பிர சண்டகோடி
சூரியர்க ளுதயமென வெற்றிவேல் விட்டருள்செய்
சுப்பிரமணி யன்வருகவே
மட்டுவிரி செந்தாம ரைத்தடஞ் சூழ்கழனி
வளர்செந்நெல் கன்னல்நிகராம்
வளர்கன்னல் பூகநிக ராங்கமுகு தெங்கொக்கும்
வளர்தெங்கு வானளக்கும்
எட்டிகுடி வாழ்குமர இமையோர்குழாம்பணியும்
இருபதாம்பு யன்வருகவே
இபமா முகத்தனெனு மைங்கரவி நாயகற்
கிளையசண் முகன்வருகவே.
57திருமறைக்காடு✓
ஒருமேரு கிரியேக தந்தமென வெள்ளிமலை
ஒருகையிற் கொம்பென்னவே
உயர்சக்ர வாளகிரி அரைஞா ணெனச்சேடன்
உதரபந் தனமென்னவே
தருமிரவி ஈராறு முகபடா மணியெனச்
சந்திர னங்குசமெனச்
சலராசி யேழுமத சலமெனக் கடையுகச்
சண்டமா ருதமெனும்வளி
இருசெவி எறிந்திடும் காற்றெனக் கண்ணிலெரி
இலங்குகா லாக்கினியென
எங்கும்வடி வாய்நின்று திருமறைக் காட்டினில்
இராமர்பின் னேதொடர்ந்து
வரும்வீர கத்திதீர்த் தருள்செயும் விநாயகன்
மகிழ்கோ தரன்வருகவே
மறைகணா ளும்பணியு முபயசர ணாம்புயன்
வள்ளிநா யகன்வருகவே.
58திருவிடைக்கழி✓
குருசரண ரொருநால்வர் போய்ப்போய்க் குழக்கன்று
கோவினைக் கூப்பிடுதல்போல்
கோயில்தொறு மூர்பெரிய விண்ணினை யளாவிடும்
கோடிதரு கயிலாயனைக்
கருணையுட னேகண்டு கண்டுசுரக் கரைநறை
கலந்தமுக் கனியின்மதுர
கவிபாடு கின்றகரு வூர்ச்சித் தரைக்கண்டு
கன்றின்முன் தாய்வருதல்போல்
ஒருவடிவு காட்டியே திருவிடைக் கழியினில்
உகந்தநம் மைப்பாடென
உல்லாச வானந்த வெள்ளத்துள் மூழ்கியவர்
உள்ளன்பு டன்பாடிய
திருவிசைப் பாமாலை சூடுமோ ரீராறு
திண்புயா சலன்வருகவே
திருக்குரா நீழலில் சிவஞான யோகமருள்
சித்தகுரு வேவருகவே.
59பிரம்பூர்✓
மரகதப் பச்சையொளி மயில்வாக னன்வருக
வளர்வெற்றி வேலன்வருக
வருகுக் குடத்துவசன் வருகவென் னைப்பெற்ற
வள்ளிமண வாளன்வருக
வரதவப யன்வருக தெய்வானை குமரி
மணவாளன் வருகவருக
மலைமக ளுடன்கங்கை யொருமக னெனப்பெற்று
மகிழுங் குழந்தைவருக
பரவிந்து நாதமுதல் நவபேத மேவருக
பகரெண் குணத்தன்வருக
பரையதி பஞ்சசத் திகள்கிரண ரவிவருக
பகரகண் டாகாரமாம்
பிரமமா மேகசிவ ஞானவா னந்தமெய்ப்
பெருவாழ்வு வருகவருக
பிரம்புரி லடியர்க் கிரங்குசெவ் வேலனாம்
பெரியபெரு மாள்வருகவே.
60மாயூரம்✓
ஐந்தரு வெனுங்கற்ப கச்சோலை வருகஅறி
வானந்த வெள்ளம்வருக
அனந்தகல் யாணமே ருகிரி வருகவே
அங்கையா லகம்வருக
சிந்தையில் மகோதயஞ் செய்திருளை நீக்கிடும்
சிவஞான பானுவருக
செனனவெப் பந்தணிக் குங்கோடி மதிவருக
தித்திக்கு மமுதம்வருக
எந்தையே வருகஎனை ஈன்றதா யேவருக
என்கண்மணி வருகவருக
எண்ணனந் தங்கோடி மன்மதா காரமாம்
என்றுமிளை யோன்வருகவே
மைந்தனே வருகமணி யேவருக வள்ளலே
வருகவைப் பேவருகவே
மாயூர நகர்மேவு கேயூர மணிபுய
மயூரவா கனன்வருகவே.
61தருமபுரம்✓
உம்பர்பணி யாரூர னருளினா லானந்த
ஒளிவடிவ மானகுரவன்
ஒருசெந்தி லம்பதியி லுன்னருளி னாற்பாடும்
உயர்குமர குருபரமுனிக்
கம்புயத் தாள் சென்னி சூடினோன் எலிபூஞை
அரவுபோத் துகுயில்கிளி
அத்துவித மாகவே சத்திநிரு வாணமெனும்
அருள்ஞான தீட்சைசெய்தோன்
எம்பவ மகற்றினோ னெண்ணிலா அடியவரை
இன்பவா ரிதியில்வைத்தோன்
எழில்வேள்வி மலையிலோ ரம்பையெங் கேயென்
றியம்பியே திருமுனிற்கும்
சம்பந்த னுக்கருள்செ யென்றுவள் ளிக்கருள்செய்
சைவநா யகன்வருகவே
தருமையம் பதிமுருக ஒருநாலு பாதமுந்
தருகுமர குருவருகவே.