க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்
காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
காப்புப்பருவம்2 / 11
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் · காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
காப்புப்பருவம்
2கயிலாயம் - விஷ்ணு✓
கயிலாய சிகரத்து விசுவபதி யுலகீன்ற
கருணையுமை வீற்றிருக்கும்
கனகமணி மந்த்ரசிங் காதனத் தேமேவு
கந்தசுவா மியைமுருகனைக்
குயிலான அதிமதுர மொழிகங்கை மைந்தனைக்
குணபூ தரக்கடவுளைக்
கோகனக னுக்குமுன் குடிலையுப தேசஞ்செய்
குமரகுரு வைப்புரக்க
மயலான பரையாதி யிச்சைஞா னக்கிரியை
வந்துதரு மேகசத்தி
மகிழ்சிவன் போககா லத்திற் பவானியாய்
வளர்கோப காலத்திலே
அயிலாரும் வேற்காளி யாயுத்த காலத்தில்
அதிபல மகாதுர்க்கையாய்
அகிலந் துதிக்குநா ளறிதுயில்கொள் ளரியாம்
அனந்தகல் யாணகுணமே.
3கந்தமாதனம் - பரமசிவம்✓
செங்கனக மானசபை யம்பரக் கூத்தினன்
திங்களர வாறிதழி தும்பையைச் சூட்டினன்
திண்புவியில் நால்வர்புகழ் செந்தமிழ்ப் பாட்டினன்
சிம்புள்வடி வாகிநிறை யண்டரைக் காத்தவன்
தங்குமணி வாயுரக கங்கணக் காப்பினன்
சந்த்ரனிக ராகவொளிர் சங்கநற் றோட்டினன்
சம்புசன காதியர்க ளின்புறப் பார்த்தருள்
தந்தைகயி லாயனடி சிந்தையைத் தேத்துதும்
மங்குல்படி வானவர்கள் பைந்தருத் தோப்பினுள்
மண்டுகுற மாதர்பயில் செந்தினைக் காட்டினுள்
வந்தவருள் மாதரனைக் கந்தனைக் கூக்கரல்
வண்டுநிமிர் தேனிறை கடம்பனைக் கீர்த்தியொண்
கங்கையுமை பார்வதிகு ழந்தையைப் பூவிலுறை
கஞ்சமல ரோன்மொழி யகந்தையைத் தீர்த்துநங்
கண்கள்களி கூரவரு மெந்தையைக் கோட்டுயர்
கந்தகிரி யாறுமுக மைந்தரைக் காக்கவே.
4திருப்பரங்கிரி-உமையம்மை✓
புவனமிரு பத்துநா லிருநூறு முய்யவே
பூமேவு சதுமுகத்தோன்
புகழுஞ் சடங்குக ளியற்றப் புரந்தரன்
பூம்புனல் பொழிந்துநிற்பச்
சிவபரங் கிரியிலரு ளாறான னத்திலோர்
திருமுகத் தால்மகிழ்ந்தே
செகதன்னை யாகிவரு தெய்வானை யைமணஞ்
செய்குமர னைப்புரக்க
நவபேத முஞ்சத்தி பேதமுந் தானாகி
நாதகுண் டலிசிலம்பாய்
நாதபர மானந்த மேசிலம் பொலியாக
ஞானவா னந்தவடிவாய்ப்
பவமகற் றும்பெரிய வத்துவித மாகவே
பரமநா டகநடிக்கும்
பரமசிவ சூரியன் திருவருட் கிரணமாம்
பரப்பிரம வித்தையுமையே.
5திருச்செந்தூர்-கங்கை✓
செந்திலம் பதியில்வந் தாறான னத்திலொரு
திருமுகத் தால்மகிழ்ந்தே
சிங்கனொடு தாரகன் சூரபத் மாமுதல்
தெவ்வரையெ லாஞ்செயித்தே
இந்த்ரன்முதல் முப்பத்து முக்கோடி தேவர்களும்
இருவருடன் முனிவரர்களும்
எல்லாரு மகிழவே தேவர்சிறை மீட்டருளும்
எந்தைகுக னைப்புரக்க
சந்த்ரா யுதங்கோடி யனையதிரு மேனியும்
சலராசி பொழிகும்பமேல்
தாங்குசெங் கைகளும் அபயமும் வரதமும்
தன்கருணை முகமிரங்க
அந்திவண் ணச்சடா மௌலியுங் காசியும்
அடியர்கண் ணுங்கருத்தும்
அகலாம னிறைகின்ற கங்கைநா யகியென்னும்
ஆனந்த அருள்வெள்ளமே.
6திருவாவினன்குடி-விநாயகர்✓
திருவாவி னன்குடியி லாறான னத்திலொரு
திருமுகத் தால்மகிழ்ந்தே
செகதலப் பூமியந் தரசொர்க்க முத்தலந்
தேவரொடு மனிதராகி
வருவோர்கள் கேட்டவரம் வரையாம லேதினம்
மகிழ்ந்துதந் தருள்வள்ளலை
வளரண்ட கோடிகள் வளர்க்குமயில் வாகனனை
மைந்தனைத் தனிபுரக்க
உருவான தோன்முகனை வென்றஞான் றிந்திரனும்
உம்பர்களு மாலுமயனும்
ஓங்குதோன் முகனுக்கு நாங்கள்செய் குற்றேவல்
ஒருவனீ கைக்கொளென்று
மருவாரு மலர்தூவி யனைவருந் தங்கள்சிரம்
வாய்மூடிக் குட்டிநின்று
மதசலவி பானனத் தெந்தையுரு ளென்னவே
வந்தருள்செய் கருணைமலையே.
7திருவேரகம்-வயிரவர்✓
ஏரகத் தேயாறு வதனத்து ளருள்பொழியும்
ஏகமா மானனத்தால்
எவ்வுயிரை யுந்தடுக் கும்பாச மோகமா
மேகவிருள் மாற்றவடியார்
நாரகத் தேநாக வட்டத்த னந்தாவி
நற்சோதி போலுதிக்கும்
ஞானப்பிர காசத்தை வைத்தருளு மொருசுவாமி
நாதனைத் தனிபுரக்க
தாரகப் பிரமவுப தேசஞ்செய் காசிபொற்
சபையாதி பதிகளுறைவோர்
சரியைகிரி யாயோக ஞானபா தஞ்செயும்
தன்னடிய ரைப்புரக்கக்
காரகத் தெமனூர்தி மணிவா யடைக்கக்
கனாவோடு நனவிலுந்தன்
காலிற்சி லம்புகல கலவென வேவரும்
காலவயி ரவநாதனே.
8குன்றுதோறாடல்-வீரபத்திரர்✓
குன்றுதோ றாடலுட் குளிர்வதன மாறனுட்
குறுநகைசெய் வதனமொன்றால்
கொண்டவகி லாண்டகோ டிகளினிறை வாஞ்சீவ
கோடிக ளிளைப்பாறவே
அன்றுதா னுறுபாச வைந்தந்த காரமற
அருளாம கோதயத்தால்
ஆனந்த வெள்ளத் தழுத்திவிளை யாடுமென்
அருள்முருக னைப்புரக்க
ஒன்றுதா னானசிவ னும்பர்நா யகன்விழியின்
ஓராயி ரந்திருமுகம்
உபயமெனு மாயிரஞ் செங்கையுட னேயுதித்
தொருசண்ட மாருதமெனச்
சென்றுதா ணுவைமறந் திடுதக்கன் முதலாம்
சிவத்ரோக முற்றபேரைச்
சிட்சித்து லோகத்தை ரட்சிக்க வேவந்த
செயவீர பத்ரகுருவே.
9பழமுதிர்ச்சோலை—பிரமன்✓
ஏர்கொள்பழ முதிர்ச்சோலை மலையினுட் சண்முகத்
தேகமெனும் மதிமுகத்தால்
இந்த்ராதி யிமையோர்கள் சந்த்ரரொடு சூரியர்கள்
எண்டிசா முகநாயகர்
கூர்கொள்படை மனுமன்னர் வாழுமறை யோர்களைக்
கொண்டுமறை வேள்விசெய்யும்
குமரனைப் பாகீ ரதிச்சர வணத்துக்
குழந்தையைத் தனிபுரக்க
கார்கொள்திரு மேனியன் செங்கமல நாபிவரு
கான்முளை மலர்ந்தவெள்ளைக்
கமலாச னத்தம்மை குடிகொண்ட நாவினன்
கருணைபொழி சதுரானனன்
பார்கொள்பிர மாண்டமு மனந்தமுனி வரர்களும்
பகர்வரிய பழமறைகளும்
படைத்துவைத் துப்படிப் பித்திடும் சததளப்
பத்மாச னக்கடவுளே.
10சிதம்பரம்-காளி✓
சீரார் திருச்சிற் றம்பலத்துட்
செம்பொன் மேலைக் கோபுரத்தே
திகழு மூவா யிரர்பூசை
செய்யு மாறு முகவேளைக்
காரார் கூந்தற் சிவகாமி
காண வருளா னந்தநடம்
காட்டும் பரம சிவனருளுங்
கருணா நிதியைத் தனிபுரக்க
நீரார் வெண்டா மரையாளும்
நெடியோன் செந்தா மரையாளும்
நிறைவாஞ் சத்த மாதாவும்
நினைக்குந் துர்க்கை மாதாவும்
பாரார் தரிக்கு முகாங்கரங்கண்
பரவா யிரமீ ராயிரமேற்
பகரு மூவா யிரம்வீர
பத்ர காளி யன்னையுமே.
11காசி - முப்பத்துமுக்கோடி தேவர்கள்✓
உருவா தென்றுதன் னெல்லைவட் டத்தினுள்
உற்றிருந் தேயிறந்தோர்க்
குத்தரீ யத்தினா லுமையிளைப் பாற்றவே
உம்பர்கோன் விசுவபதிவந்
தொருவலச் செவியினுட் டாரகப் பிரமத்தை
உபதேச மாயருளியும்
ஓரெட்டு வடிவுதரு காசிநகர் வேலவனை
யொருமுருக னைப்புரக்க
தருவெனுங் கற்பகா டவியரச னிந்த்ரனொடு
சங்கரர்ச டாடவியில்வாழ்
தருதரங் கக்கங்கை மாநதி படிந்துசிவ
சாரூப முற்றவர்கள்போல்
முருகுவளர் கொன்றையணி கோடிபதி னொன்றென்னும்
முக்கணிமை யாதருத்ரர்
மொழிந்திடு மருத்துவர் வசுக்களெனு முப்பத்து
முக்கோடி தெய்வங்களே.