க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்
காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
தாலப்பருவம்4 / 11
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் · காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
தாலப்பருவம்
22மதுரை✓
நாதன் விளையாட் டறுபத்து
நாலு நடத்தும் தமிழ்மதுரை
நாலா யிரத்து நானூற்று
நாற்பத் தொன்ப தருட்புலவர்
ஓதும் தலைச்சங் கத்தினுக்கு
முயர்நா னூற்று நாற்பதுடன்
ஒன்ப தான தமிழ்ப்புலவ
ரொழியா இடைச்சங் கத்தினுக்கும்
வேத னிகர்நக் கீரர்முதல்
விரிவா நாற்பத் தொன்பதுபேர்
மேவும் கடைச்சங் கத்தினுக்கும்
விதிசொல் குருவா மகத்தியற்கும்
ஆதி குருவா மாறுகுணத்
தமலா தாலோ தாலேலோ
ஆல வாய்வா ழாறுமுகத்
தையா தாலோ தாலேலோ.
23சந்திரகுமாரகிரி✓
மிக்க புகழ்நா ரதமுனிவன்
விண்ணோர் புடைசூழ் வேள்வியினில்
வெற்றிச் செங்கட் கிடாய்தோன்றி
விரிஞ்சன் முதலோர்க் கடங்காமல்
துக்க முறவே பாதாளம்
துலங்கு பூமி அந்தரமும்
சுவர்க்கம் புகழ்சத் தியலோகம்
துன்னுஞ் சக்ரா யுதனுலகம்
திக்கெ லாமும் புகுந்துலவத்
தீரன் வீர வாகுமுன்னே
சென்று பிடித்து வரவந்தச்
செங்கட் கிடாயை மகிழ்ந்தேறிச்
சக்ர வாள கிரிவலஞ்செய்
சதுரா தாலோ தாலேலோ
சந்த்ர குமார கிரிமேவுஞ்
சரணா தாலோ தாலேலோ.
24கந்தகிரி✓
இந்த்ரன் வசுக்க ளுருத்திரர்கள்
இமையா நாட்ட மருத்துவர்கள்
எமனக் கினிமா ருதநிருதி
இலங்கும் வருண னளகேசன்
சந்த்ர னொடுசூ ரியர்வந்து
தாமுன் விளையாட் டறியாமல்
சரமா மாரி பொழியவவை
தண்பூ மாரி யாய்க்கொண்டே
எந்தை மகிழ்ந்தே சரம்விடுப்ப
இளைத்தே யாறு முகப்பெரியோன்
என்றே யறிந்து பிழைபொறுத்திங்
கெமையா ளென்று பூசைசெய்யக்
கந்த கிரியில் மகிழ்ந்தருள்செய்
கண்ணே தாலோ தாலேலோ
கனகக் கிரிவாழ் குருநாதா
கந்தா தாலோ தாலேலோ.
25விராலிமலை✓
ஒண்பார் மறையோர் மாமகத்தில்
உயர்ந்த முனிவோர் அவியுண்ண
ஓங்குஞ் சுவர்க்கத் திந்திராணி
உபய விழிவேல் மையுண்ண
விண்பா லிமையோ ரமுதுண்ண
விண்ணோர் முதலாம் பெரியவர்க்கு
விரோதஞ் செய்யுந் தகுவர்தசை
மிகும்பேய் கூடி விருந்துண்ணப்
பண்பார் நீல மால்புகழப்
பாகீ ரதிவாழ் சரவணத்துள்
படிக வொளியாஞ் சிவனிடத்தில்
பச்சை யுமையாள் முலையொழுகும்
வெண்பா லுண்ட செவ்வாயா
வீரா தாலோ தாலேலோ
விராலி மலைக்குள் குழந்தைவடி
வேலா தாலோ தாலேலோ.
26சையகிரி✓
ஐய னைமா முகத்தானை
ஆறு முகநீ யாகிவர
அமரர் கோமான் புகலியினு
ளரிய தவஞ்செய் தருச்சிக்கத்
துய்ய மலர்கொய் நந்தவனந்
தூய்நீ ரின்றி வாடல்கண்டு
சோம னணிந்த சடாமௌலிச்
சோதி கயிலா யத்தளித்த
மெய்யன் கும்ப முனிகடத்துள்
மேவும் புனித தீர்த்தத்தை
மேலைங் கரத்தோன் கவிழ்த்தருள
விரிகா விரிமா நதிபெருகும்
சைய கிரிவாழ் சண்முகனே
சைவா தாலோ தாலேலோ
சதுமா மறைக்கும் முத்தமிழ்க்கும்
தலைவா தாலோ தாலேலோ.
27சதுரகிரி✓
அகிலம் புகழும் சிவானந்த
அமுதம் புசிக்கும் சித்தர்களும்
அட்டாங் கத்தா னாதவடி
வான யோக சித்தர்களும்
உகிரா லூன்றிப் பருப்பதத்தை
யுயரத் தூக்கும் சித்தர்களும்
ஓட்டைக் கல்லைப் பரிசித்தே
யுயர்பொன் னாக்கும் சித்தர்களும்
செகதண் டங்கள் தமதுளத்தே
தெரிசித் திருக்கும் சித்தர்களும்
திரிகா லங்கண் டணிமாதி
செய்யும் சித்தர் களும்பணிந்து
மகிழுஞ் சதுர கிரிசுப்ர
மணியா தாலோ தாலேலோ
மதுரை யெல்லாம் வல்லசித்தன்
மைந்தா தாலோ தாலேலோ.
28பழனி✓
கரமைந் துடைய கணபதியும்
கருணா நிதிநீ இருவருமாய்க்
கயிலைக் கிரிமேல் விளையாடக்
கௌரி யுடன்வாழ் கண்ணுதல்கண்
டிரத மிகுந்த மாங்கனியொன்
றேழு கடற்கு மெண்மலைக்கும்
இலங்கு நவகண் டங்களுக்கு
மெயிலாம் சக்ர வாளத்தை
ஒருகைந் நொடிக்குள் வலம்வந்தோர்க்
குகந்தே தருவோ மெனமூத்தோன்
உமைநா யகனை வலம்வரநீ
யொருகைந் நொடிக்குள் செகதண்டமும்
பரமன் மகிழ வலம்வந்த
பாதா தாலோ தாலேலோ
பழனிப் பதியாய் குமரகுரு
பரனே தாலோ தாலேலோ.
29கொடுங்குன்று✓
ஊகந் திரிகா லத்தியல்பு
முணர்ந்த வுபய முனிவரர்கள்
ஒருசா பத்தாற் கழுக்குன்றி
னுயர்ந்த கழுகாம் காரணப்பேர்
ஏகன் சம்பந் தப்பெருமான்
இலங்குந் திருநா வுக்கரசிங்
கெனையாள் சுந்த ரப்பெருமா
னெழின்மா ணிக்க வாசகன்சொற்
பாகு நிகர்தே வாரங்கள்
பகருந் திருவா சகங்களும்பொற்
பரமன் செவியி லேறமங்கை
பாகா வென்று துதிசெய்து
கூகை வலஞ்செய் கொடுங்குன்றிற்
குமரா தாலோ தாலேலோ
குருவே குணமாம் பொன்மேருக்
குன்றே தாலே தாலேலோ.
30இரத்தினகிரி✓
பாக மிகுந்தே தினந்திருமுன்
பரிவாய் நடஞ்செய் தாசிதனைப்
பாராள் மன்னன் தன்பதிக்குப்
பற்றார் பிடித்துக் கொடுபோகக்
காக மணுகா மலைக்கிலையோ
காட்டுந் தெய்வீ கங்களீங்கே
கல்லை யோநான் கைதொழுதேன்
காப்பா யென்பாள் காணவந்து
சோக மறவே யருள்செய்து
துட்ட னாகும் மன்னவனைத்
தூரத் துரத்தும் பரமசிவன்
துணைத்தாட் கமல முலகறிய
மேகம் வணங்கும் இரத்னகிரி
வேலா தாலோ தாலேலோ
வெற்றிக் கலப மயிலேறும்
வீரா தாலோ தாலேலோ.
31திருமுருகன் பூண்டி✓
திருகன் மனத்து வேடரெனத்
திரளாம் பூத கணநாதர்
சேரர் பெருமான் கொடுத்தமிகு
செம்பொன் னாடை யாபரணம்
வருகல் வழியி லெதிர்நின்று
மறித்துப் பறித்துக் கொடுபோக
மதுர மாமுக் கனிதேன் பால்
வானோ ரமுதத் தானகைக்கும்
பருகும் பரமா னந்தமெனப்
பதிகம் பாடும் சுந்தரர்க்குப்
பறித்த பொருள்க ளனைத்தினையும்
பரிசு கொடுக்கும் பரமர்திரு
முருகன் பூண்டி யினிதுறையு
முருகா தாலோ தாலேலோ
முக்கட் பெருமா னருளாறு
முகனே தாலோ தாலேலோ..