முருகன் App
நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
க. சொக்கன் (சொக்கலிங்கம்)
எல்லாம் கந்தன் அருளே5 / 8
நல்லூர்க் கந்தன் திருப்புகழ் · க. சொக்கன் (சொக்கலிங்கம்)

எல்லாம் கந்தன் அருளே

✓
எழில்தங்கிய பொழிலும்பல
தருவுஞ்சுவைக் கனியும்
இதமுந்திடு வளியும்மலர்
உளரும்மது கரமும்
எவருங்களி கொளும்நல்லையில்
அமர்ந்தேயருள் ஈயும் அருளாளா
✓
இமயப்பெரு மலையத்தது
புகழ்மிக்கிடும் அரசன்
இதயத்துறு கனிவிற்கொரு
வடிவேயென வளர்வாள்
உமைமங்கையின் அருள்பங்கனின்
விழிபொங்கிடு தீயில் எழுவோனே
✓
குழல்பின்னிடு மொழிபன்னிடு
கொடியென்றிடு மாதர்
குறைசெய்தனர் எனவுன்னிடம்
பழிசொல்லிட லற்றேன்
கூரார்எயில் விழிவள்ளியிற்
குழைந்தாயலை யோநீ குமரேசா
✓
கொடிதுற்றிடு புவிவாழ்விது
குறையுண்டெனி லதுவும்
குகனீசெயும் அருள்லீலையென்
றறிவேனத னாலுன்
குறைபோல்வன நிறைவேயெனக்
கொள்வேன்மிக நன்றே குலவேலா
✓
நிழல்வெய்யினி லல்லாலினி
தாகாதெனு முண்மை
நிலைபெற்றது விலையற்றது
நிதமும்இதை எண்ணி
நீறாய்என துடல்வேகினும்
கூறேன்பிற நாமம் நிமலோனே!
✓
நிரையுற்றவர் எனதுற்றவர்
பகையுற்றவர் எனவே
நினையேனினி இவர்யாவரும்
நின்பிள்ளைகள் அலரோ
இவர்தங்களை உளந்தன்னிடை
அவமென்றுவி லக்கேன் நெடியோனே
✓
அழல்தன்னிலும் உனையல்லது
பிறவொன்றினை உன்னேன்
அலைபொங்கிடு கடல்தன்னிலும்
உனையல்லது நினையேன்
அறிவொன்றினி யுனையல்லது
பிறவொன்றினை அறியேன் அருள்வேலா
✓
இருளென்பதும் ஒளியென்பதும்
எல்லாம்உன தருளே
இதையெண்ணிய பொழுதில்லுனை
ஏத்தல்அல தொன்றும்
இறையும்அறி யாதஅடி
நாயேன்வளர் நல்லூர்ப் பெருமானே.