சங்கப் பாடல்களில் முருகன்
பரிபாடல் எட்டு3 / 13
சங்கப் பாடல்களில் முருகன்
பரிபாடல் எட்டு
நல்லந்துவனார்
✓
மண்மிசை யவிழ்ந்துழாய் மலர்தரு செல்வத்துப்
புண்மிசைக் கொடியோனும் புங்கவ மூர்வோனும்
மலர்மிசை முதல்வனு மற்றவ னிடைத்தோன்றி
உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும்
மருந்துரை யிருவருந் திருந்துநூ லெண்மரும்
ஆதிரை முதல்வனிற் கிளந்த
நாதர்பன் னொருவரு நன்றிசை காப்போரும்
யாவரும் பிறரு மமரரு மவுணரும்
மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும்
பற்றா கின்றுநின் காரண மாகப்
பரங்குன் றிமயக் குன்ற நிகர்க்கும்
இமயக் குன்றினிற் சிறந்து
நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை
மின்னீன்ற விளங்கிணரூழா
ஒருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின்
அருவிதாழ் மலைச் சுனை.
முதல்வநின் யானை முழக்கங் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல்கேட்ட கோழி குன்றதிரக் கூவ
மதநனி வாரண மாறுமா றதிர்ப்ப
எதிர்குதி ராகின் றதிர்ப்பு மலைமுழை
ஏழ்புழை யைம்புழை யாழிசைகேழ்த் தன்ன வினம்
வீழ்தும்பி வண்டொடு மிஞிறார்ப்பச் சுனைமலரக்
கொன்றைக் கொடியிண ரூழ்ப்பக் கொடிமலர்
மன்றல மலர மலர்காந்தள் வாய்நாற
நன்றவிழ் பன்மலர் நாற நறைபனிப்பத்
தென்ற லசைவருஉஞ் செம்மற்றே யம்மநின்
குன்றத்தாற் கூடல் வரவு.
குன்றமுடைத்த வொளிர்வேலோய் கூடல்.
மன்றல் கலந்த மணிமுரசி னார்ப்பெழக்
காலொடு மயங்கிய கலிகூடலென
மால்கடல் குடிக்கு மழைக்குரலென
ஏறதிர்க்கு மிந்திர னிருமுருமென
மன்ற லதிரதிர மாறுமா றதிர்க்குநின்
குன்றங் குமுறிய வுரை.
தூதேய வண்டின் றொழுதி முரல்வவர்
காதன்மு தூர்மதில் கம்பலைத் தன்று
வடுவகிர் வென்றகண் மாந்தளிர் மேனி
நெடுமென் பணைத்தோட் குறுந்தொடி மகளிர்
ஆராக் காம மார்பொழிற் பாயல்
வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்
அடியோர் மைந்த ரகலத் தகலா
அலர்ஞெமன் மகன்றி னன்னார்ப் புணர்ச்சி
புலரா மகிழ்மறப் பறியாது நல்கும்
சிறப்பிற்றே தண்பரங் குன்று.
இனிமன்னு மேதிலார் நாறுதி யாண்டுப்
பனிமலர்க் கண்ணாரோ டாட நகைமலர்
மாலைக்கு மாலை வரூஉம் வரைதுணில்
காலைப்போய் மாலை வரவு.
இனிமணல் வையை யிரும்பொழிலுங் குன்றப்
பனிமொழி சாரலும் பார்ப்பாரும்………
துனியன் மலருங்கண் சொல்வேறு நாற்றம்
கனியின் மலரின் மலிர்கால்சீப் பின்னது
துனிய னனிநீநின் சூள்.
என்பாணி நின்னி லெலாஅபாணி நீநின்சூள்
சான்றாள ரீன்ற தகாஅத் தகாஅமகாஅன்
ஈன்றாட் கொருபெண் ணிவள்.
இருண்மையீ ருண்க ணிலங்கிழை யீன்றாட்
கரியளோ வாவ தறிந்திலே னீதா
வருபுனல் வையைமண றொட்டேன் றருமணவேள்
தண்பரங் குன்றத் தடிதொட்டெ னென்பாய்
கேளிர் மணலின் கெழுவு மிதுவோ
ஏழுலகு மாளி திருவரைமே லன்பளிதோ
என்னை யருளி யருண்முருகு சூள்சூளின்
நின்னை யருளி லணங்கான்மெய் வேறின்னும்
விறல்வெய்யோ னூர்மயில் வேனிழ னோக்கி
அறவ ரடிதொடினு மாங்கவை சூளேல்
குறவன் மகளாணை கூறேலா கூறேல்
ஐய சூளி னடிதொடு குன்றொடு
வையைக்குத் தக்க மணற்சீர்துள் கூறல்
யார்பிரிய யார்வர யார்வினவ யார்செப்பு
நீருரைசெய் நீர்மையில் சூளென்றி நேரிழாய்
கயவாய நெய்தலலர் கமழ்முகை மணநகை
நயவரு நறவிதழ் மதருங்கண் வாணுதல்
முகைமுல்லை வென்றெழின் முத்தேய்க்கும் வெண்பல்
நகைசான்ற கனவன்று நனவன்று நவின்றதை
இடுதுனி கையாறா வெற்றுயர் கூரச்
சுடுமிறை யாற்றிசி னடிசேர்ந்து சாற்றுமின்
மிக, ஏற்றுதுமல ரூட்டுது மவி
கேட்டுதும் பாணி யெழுதுங் கிணைமுருகன்
தாட்டொழு தண்பரங் குன்று.
தெரியிழாய் செல்கென்றா யெல்லாயாம் பெற்றேம்
ஒருவர்க்கும் பொய்யாநின் வாயில்சூள் வௌவல்
பருவத்துப் பன்மாணி சேறலிற் காண்டை
எருமை யிருந்தோட்டி யெள்ளீயுங் காளை
செருவஞ் செயற்கென்னை முன்னைத்தன் சென்னி
அருள்வயினாற் றூங்கு மணிகையாற் றாக்கி
நிரைவளை யாற்றிருஞ் சூள்.
வளிபொரு சேட் சிமை வரையகத்தால்
தளிபெருகுந் தண்சினைய
பொழில்கொளக் குறையாமலரக்
குளிர்பொய்கை யளறுநிறைய
மருதநளி மணன் ஞெமர்ந்த
நனிமலர்ப் பெருவழிக்
சீறடியவர் சாறுகொள வெழுந்து
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறுசெல் வளியி னவியா விளக்கமும்
நாறுகமழ் வீயுங் கூறுமிசை முழவமும்
மணியுங் கயிறு மயிலுங் குடாரியும்
பிணிமுக முளப்படப் பிறவு மேந்தி
அருவரைச் சேராத் தொழுநர்
கனவிற் றொட்டது கைபிழை யாகாது
நனவிற் சேஎப்பநின் னளிபுனல் வையை
வருபுன லணிகென வரங்கொள் வோரும்
கருவயி றுறுகெனக் கடம்படு வோரும்
செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும்
ஐயம ரடுகென வருச்சிப் போரும்
பாடுவர் பாணிச்சீரு மாடுவா ரரங்கத் தாளமும்
மஞ்சாடு மலைமுழக்கும்
துஞ்சாக் கம்பலைப்
பைஞ்சுனைப் பாஅ யெழுபாவையர்
ஆயித ழுண்க ணலர்முகத் தாமரை
தாட்டா மரைத்தோட் டமணியக் கயமலர்
எங்கைப் பதுமங் கொங்கைக் கயமுகைச்
செவ்வா யாம்பல் செந்நீர்த் தாமரை
புனற்றா மரையொடு புலம்வேறு பாடுறாக்
கூறெயிற்றார் குவிமுலைப் பூணொடு
மார னொப்பார் மார்பணி கலவி
அரிவைய ரமிர்தபானம்
உரிமை மாக்க ளுவகையமிர் துய்ப்ப
மைந்தர் மார்வம் வழிவந்த
செந்தளிர் மேனியார் செல்ல றீர்ப்ப
எனவாங்கு
உடம்புணர் காதலரு மல்லாருங் கூடிக்
கடம்பமர் செல்வன் கடிநகர் பேண
மறுமிடற் றண்ணற்கு மாசிலோ டந்த
நெறிநீ ரருவி யசும்புறு செல்வ
மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா
தண்பரங் குன்ற நினக்கு.