சங்கப் பாடல்களில் முருகன்
பரிபாடல் ஐந்து2 / 13
சங்கப் பாடல்களில் முருகன்
பரிபாடல் ஐந்து
கடுவனிளவெயினனார்
✓
இசையமைத்தவர்: கண்ணனாகனார்.பண்: பாலையாழ்.
பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்
சேயுயர் பிணிமுக மூர்ந்தம ருழக்கித்
தீயழ றுவைப்பத் திரியவிட் டெறிந்து
நோயுடை நுடங்குசூர் மாமுத றடிந்து
வென்றியின் மக்களு ளொருமையொடு பெயரிய
கொன்றுண லஞ்சாக் கொடுவினைக் கொற்றகை
மாய வவுணர் மருங்கறத் தபுத்தவேல்
நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடைக்
குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து
மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை
மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்
ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்
சால்வ தலைவவெனப் பேஎ விழவினுள்
வேல னேத்தும் வெறியு முளவே
அவை,வாயு மல்ல பொய்யு மல்ல
நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற்
சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை
சிறப்பினு ளுயர்பாகலும்
பிறப்பினு ளிழிபாகலும்
ஏனோர்நின் வலத்தினதே
ஆதி யந்தண னறிந்து பரி கொளுவ
வேத மாபூண் வையத்தே ரூர்ந்து
நாக நாணா மலைவில் லாக
மூவகை, ஆரெயி லோரழ லம்பின் முளிய
மாதிர மழலவெய் தமரர் வேள்விப்
பாக முண்ட பைங்கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
அமையாப் புணர்ச்சி யமைய நெற்றி
இமையா நாட்டத் தொருவரங் கொண்டு
விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்
விரிகதிர் மணிப்பூ ணவதற்குத்தா னீத்த
தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்
எரிகனன் றானாக் குடாரி கொண் டவனுருவு
திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்
கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசே யாக்கை
நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து
வசித்ததைக் கண்ட மாசு மாதவர்
மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்
சாலார் தானே தரிக்கென வவரவி
உடன்பெய் தோரே யழல்வேட் டவ்வவித்
தடவுநிமிர் முத்தீப் பேணிய மன் னெச்சில்
வடவயின் விளங்கா லுறையெழு மகளிருட்
கடவு ளொருமீன் சாலினி யொழிய
அறுவர் மற்றையொரு மந்நிலை யயின்றனர்
மறுவுறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நீந்து லினரே
நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயற்
பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே
அரிதமர் சிறப்பி னமரர் செல்வன்
எரியுமிழ் வச்சிரங்கொண் டிகந்துவந் தெறிந்தென
அறுவேறு துணியு மறுவ ராகி
ஒருவனை வாழி யோங்குவிறற் சேஎய்
ஆரா வுடம்பினீ யமர்ந்துவிளை யாடிய
போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய
அல்லலி லனலன் றன்மெய்யிற் பிரித்துச்
செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து
வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரித்துத்
திகழ்பொறிப் பீலி யணிமயில் கொடுத்தோன்
திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித்
திருங்கண் வெள்ளாட் டெழின்மறி கொடுத்தோன்
ஆஅங், கவரும் பிறரு மமர்ந்துபடை யளித்த
மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும்
பொறிவரிச் சாபமு மானும் வாளும்
செறியிலை யீட்டியுங் குடாரியுங் கணிச்சியும்
தெறுகதிர்க் கனலியு மாலையு மணியும்
வேறுவே றுருவினிவ் வாறிரு கைக்கொண்டு
மறுவி றுறக்கத் தமரர்செல் வன்றன்
பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம் பிகந்தோய்
நின்குண மெதிர்கொண்டோ ரறங்கொண்டோ ரல்லதை
மன்குண முடையோர் மாதவர் வணங்கியோ ரல்லதை
செறுதீ நெஞ்சத்துச் சின நீடி னோரும்
சேரா வறத்துச் சீரி லோரும்
அழிதவப் படிவத் தயரி யோரும்
மறுபிறப் பில்லெனு மடவோருஞ் சேரார்
நின்னிழ லன்னோ ரல்ல தின்னோர்
சேர்வா ராதலின் யாஅ மிரப்பவை
பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
அருளு மன்பு மறனு மூன்றும்
உருளிணர்க் கடம்பி னொலிதா ரோயே.