தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி
ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ
விடையரை யசைத்த வேலன் கடிமரம்
பரவின ருரையொடு பண்ணிய விசையினர்
விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக்
கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ
மாலை மாலை யடியுறை யியைநர்
மேலோ ருறையுளும் வேண்டுநர் யாஅர்
ஒருதிறம், பாணர் யாழின் றீங்குரலெழ
ஒருதிறம், யாணர் வண்டி னிமிரிசையெழ
ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபெழ
ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை யூத
ஒருதிறம், மண்ணார் முழவி னிசையெழ
ஒருதிறம், அண்ண னெடுவரை யருவிநீர் ததும்ப
ஒருதிறம், பாடனல் விறலிய ரொல்குபு நுடங்க
ஒருதிறம், வாடை யுளர்வயிற் பூங்கொடி நுடங்க
ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின்
நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற
ஒருதிறம், ஆடுசீர் மஞ்ஞை யரிகுர றோன்ற
மாறுமா றுற்றனபோன் மாறெதிர் கோடல்
மாறட்டான் குன்ற முடைத்து.
பாடல் சான்று பல்புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றினிடைக்
கமழ்நறுஞ் சாந்தி னவரவர் திளைப்ப
நணிநணித் தாயினுஞ் சேஎய்ச் சேய்த்து
மகிழ்மிகுதேஎங் கோதையர் கூந்தல் குஞ்சியிற்
சோர்ந்தவி ழிதழி னியங்குமா றின்று
வசைநீங்கிய வாய்மையால் வேள்வியாற்
றிசைநாறிய குன்றமர்ந் தாண்டாண்
டாவி யுண்ணு மகில்கெழு கமழ்புகை
வாய்வாய் மீபோ யும்பரிமை பிறப்ப
தேயா மண்டிலங் காணுமா றின்று
வளைமுன்கை வணங்கிறையார்
அணைமென்றோ ளசைபொத்தார்
தார்மார்பிற் றகையியலார்
ஈரமாலை யியலணியார்
மனமகிழ் தூங்குநர் பாய்புட னாடச்
சுனைமலர்த் தாதூதும் வண்டூத லெய்தா
அனையபரங் குன்றி னணி.
கீழோர், வயல்பரக்கும் வார்வெள்ளருவி பரந்தா னாதரோ
மேலோர், இயங்குதலால் வீழ்மணி நீலஞ் செறுவுழக்குமரே
தெய்வ விழவுந் திருந்து விருந்தயர்வும்
அவ்வெள் ளருவி யணிபரங் குன்றிற்கும்
தொய்யா விழுச்சீர் வளங்கெழு வையைக்கும்
கொய்யுளை மான்றேர்க் கொடித்தேரான் கூடற்கும்
கையூழ் தடுமாற்ற நன்று.
எனவாங்கு
மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப்
பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ
பணியொரீஇ நின்புக ழேத்தி
அணிநெடுங் குன்றம் பாடுதுந் தொழுதும்
அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும்
ஏம வைகல் பெறுகயா மெனவே.
இசையமைத்தவர்: நல்லச்சுதனார்.
பண்: நோதிறம்.