முருகன் App
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
செங்கீரைப்பருவம்3 / 10
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ் · ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை

செங்கீரைப்பருவம்

12✓
நினைத்தது முடித்திட வருத்திய குகக்கடவு
ணீங்காத வேதமுடிமேல்
நீலக் கலாபமயில் மிசையேறி னாயன்பர்
நெஞ்சமொரு குடிசையாக
மனத்தினி லிருத்தியு மமைத்தமது ரக்கவிகள்
வாயார வாழ்த்துமகிபர்
மங்காத பேரன்பு பொங்கிவரு மானந்த
மாகடலை நீந்தியென்றுஞ்
சினத்தினை விடுத்திடச் சாத்வீக நிலையினைத்
தெரிந்துமெஞ் ஞானவீட்டில்
சென்றுநின் றுண்டான சிவஞான போதனை
செப்புசற் குருவதாய்நற்
றினத்தினை மதித்தருள் வரத்தினை யளித்தவா
செங்கீரை யாடியருளே
திங்கள்முக முங்கருணை தங்குமாய்க் குடிமுருக
செங்கீரை யாடியருளே.
13✓
கானல்நீ ரெனுமுலக பாசபந் தத்திலே
கட்டுண்ட சீவரெனவுங்
கானவன் கண்ணியி லகப்பட்ட மான்போற்
கலங்கும்வா னோர்க்கிரங்கி
கூனலம் பிறையணி சடைக்கடவுள் விழியினிற்
குலவிவரு பொறியாறையுங்
கொண்டுகால் வன்னியுஞ் சரவணையி லிட்டிடக்
கோகனக மீதுதித்தே
பானல்வாய்க் குழவியா யறுமாதர் திருமுலைப்
பாலினை யருந்தியும்பின்
பசியடங் காதழப் பார்வதி யெடுத்தினிய
பாலினை யருந்தவமுதத்
தேனுண் டுதைந்தருட் சிறுமுறுவல் கொண்டவா
செங்கீரை யாடியருளே
சித்திர மிகுத்திடு மாயர்குடிச் செல்வனே
செங்கீரை யாடியருளே.
14✓
பரவவரு திருவடியர் புகழ்பெருகு மகிமையும்
பாவாண ரோதும் வியனும்
பங்கயந் தன்னிலுறை செங்கணன் மருகனே
பாலசிவ சுப்பிர மண்யா
புரவலர்கள் திறமிகுதி யுளவசுரர் கிளையறப்
போரில்வெல வந்த புதல்வா
புள்ளிமயில் வாகனக் கடவுளென வள்ளியைப்
புணரவே சென்ற மகிபா
சரவசர வஸ்துவைத் தான்படைத் தேழுலகு
தான்போற்ற வருளு மதிபா
சரவண பவாவெனப் பலர்கள்துதி யோங்கவே
தான்வ ளர்சக நாயகா
சிரவண மிகுந்துமறை யுணரவருள் சித்தனே
செங்கீரை யாடி யருளே
தெங்குகள் நெருங்குமாய்க் குடிவளரு முருகனே
செங்கீரை யாடி யருளே.
15✓
ஆதிநா யகனெனவு மோதிய தபோதனர்க்
கத்துவித மானந்தமாய்
ஆவியுடல் பொருளுனக் கற்பணம தாகவரு
மன்பருக் கனுகூலமாய்
சோதிநா யகனல்ல சாதிநா யகனெனத்
தோன்றுமயில் வாகனனுமாய்
சூட்சாதி சூட்சமாய்ச் சொரூபஞா னம்பரவு
சுகானந்த நிலையுமாகி
வாதிநா யகனெனவும் வாதிக்க வருகின்ற
வல்லழக் கென்னநவில்வாய்
மலையரசன் மகளான குமரியருள் வாய்ப்பதில்
வளர்கருணை கொண்டுவந்து
சேதியென் னாவெனக் கேட்டுதவு சிறுவனே
செங்கீரை யாடியருளே
தெண்டனிடு தொண்டர்புகழ் கொண்டதாய்க் குடிமுருக
செங்கீரை யாடியருளே.
16✓
முந்தைநற் சரவணப் பொய்கையினி லாறுபொறி
முக்கணன் விழிக்க ணூற்று
முகமாறு குழவியா யறுமாதர் பாலுண்டு
மும்மல மகன்றி டாமல்
நொந்துநொந் தேயழக் கடைவாயின் னமுதொழுக
நுட்பமது கண்டு நொடியில்
நுதல்விழிகள் சுழியவரு மதலையே யென்றுபால்
நுகருவா யென்ற ணைக்க
தந்தைதா யிவர்கருணை கொண்டுமோ ருருவதாய்த்
தானு வகையாய் மடியினில்
தானுதைத் தேமுறுவல் கண்டிடவ் விருவருந்
தாலாட்டி வோராட் டியே
சிந்தையா னதுபொங்க வந்துவளர் கந்தனே
செங்கீரை யாடி யருளே
சிந்துரத் திலதமிடு மாயர்குடி வேலனே
செங்கீரை யாடி யருளே.
17✓
நீறேறு திருமேனி வேல்விழிகள் குழையாட
நித்திலச் சுட்டி யாட
நீண்டபுய வலியாட வாண்டகையுன் மார்பிலணி
நீலப் பதக்க மாடச்
சோறேறு மனவலியர் துன்பமது தானாடத்
துலங்குபூ ணூலு மாட
தொண்டர்களு நின்றாட வண்டர்புகழ் கொண்டாட
சுடர்ஞான வொளியு மாட
யேறேறு பவனாட மயிலாடச் சேவலு
மிசைந்த காவலு மாட
யெந்தையா டத்தனது தந்தையா டத்தினமு
மிசைவா யரம்பை ரம்பை யாடச்
சேறேறு நிலவளஞ் செறியுமாய்க் குடிமுருக
செங்கீரை யாடி யருளே
திமிரமல மகலவருள் சிவசுப்பிர மண்யனே
செங்கீரை யாடி யருளே.
18✓
ஒருகொம் பொடித்தெழுதி வைத்தவர்க் கிளவலாய்
யோங்குபுகழ் கொண்ட குமரா
ஒன்னலரை மாய்த்தமர ரின்னலது தீர்த்தின்ப
முறவருள் புரிந்த முருகா
இருகொம் புடைத்தான மாதர்கண் சிக்கவே
யெங்கும்விளை யாடு மதிபா
யீராறு கையுமுன் னோரராறு வதனமு
மிலங்கவரு மயில் வாகனா
அருகொன் பதாமாணி யழுத்தியபொற் சுட்டியு
மழகான தண்டை கொலுசும்
அரும்புஞ் சிலம்பினொலி யார்த்திடவும் விளையாடும்
மையனாய் வந்த மகிபா
திருகுமொம் புடையசெம் மான்வள்ளி கணவனே
செங்கீரை யாடி யருளே
சிந்தனை தவிர்த்தருளு மாய்க்குடிவாழ் முருகனே
செங்கீரை யாடி யருளே.
19சந்தம்✓
சிந்தித் திடுபவர் பந்தத் தையுமிகல்
செய்யும் வேலவனே
தீரத் தொடுவளர் வீரத் தொடுவரு
தெய்வ சிகாமணியே
சந்தித் தருள்பிர பந்தக் கவியது
தந்தருள் சண்முகனே
தானவர் வானவ ராதியர் புகழும்
தனயா தற்பரனே
முந்திக் கனியுண வந்தற் புதமொடு
முன்னே சென்றவனே
முக்கண னுக்கொரு சற்குண வானாய்
முறுவல் புரிந்தவனே
சிந்துத் துதிசொல முந்தி வருங்குக
செங்கோ செங்கீரை
தெங்குநெ ருங்குமாய்க் குடிவாழ் முருகா
செங்கோ செங்கீரை.
20✓
தண்டைக் காலுங் கிண்கிணி யொலியோய்
சாற்றுக செங்கீரை
சரவண பவகுக வறுமுக குருபர
சாற்றுக செங்கீரை
பண்டைற் புலவர்கள் கொண்டுற் றிடுமொழி
பகர்வாய் செங்கீரை
பத்தி மிகுந்தவர் சித்தத் துறைவோய்
பகர்வாய் செங்கீரை
கண்டுற் றிடுமொழி தந்தக் கரையொடு
கழறுக செங்கீரை
கானக வேடுவர் குறமகள் கணவா
கழறுக செங்கீரை
செண்டினை யொத்த தனத்தியர் நாயகா
செங்கோ செங்கீரை
தென்றல் மிகுந்தரு ளாய்க்குடி முருகா
செங்கோ செங்கீரை.
21✓
குமரக் குருபர சிகாரிக் கிறைவா
கூறுக செங்கீரை
கோமளை யாள்சுத னாகிய குமரா
கூறுக செங்கீரை
தமரக் கடல்விட முண்டவன் சுதனே
சாற்றுக செங்கீரை
சண்முக மாகிய கண்ணின் மணியே
சாற்றுக செங்கீரை
சமரத் தினில்வடி வேல்விட் டவனே
சாற்றுக செங்கீரை
சஞ்சல மகலவு வந்தருள் பவனே
சாற்றுக செங்கீரை
திமிர மலக்கட் டவிழ வருங்குக
செங்கோ செங்கீரை
தென்றல் வலங்கொளு மாய்க்குடி முருகா
செங்கோ செங்கீரை.