முருகன் App
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
முத்தப்பருவம்6 / 10
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ் · ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை

முத்தப்பருவம்

42✓
கானஞ் செறிசோலை யில்வளருங்
கழையில் வெடித்த மணிதனக்குங்
கடுவா ரரவ மணிதனக்குங்
கரியின் மருப்பில் விளைமணிக்குந்
தேனா ரமுத மெனப்பொங்குந்
திருப்பாற் கடலில் வலம்புரிகள்
திரைச்சு லாகி யீன்றெடுத்த
செய்ய மணிக்கும் விலையுண்டு
வானோ ரரசன் வாகனத்தில்
வருநல் மணிக்கும் விலையுண்டு
மதுரம் பொலியு முனதுமூத்த
மணியை மதிக்க விலையுண்டோ
மோனா னந்த வமுதருந்து
முருகா முத்தந் தந்தருளே
முருகார்ந் திலங்கு மாயர்குடி
முதல்வா முத்தந் தந்தருளே.
43✓
உவக்கு நெல்லி யங்கனியே
வுவட்டா தளிக்குந் தமிழ்முனியே
ஓவா துதவுங் கற்பகமே
யுருகு மனத்தற் கற்பகமே
நிவக்கும் பொருப்புக் கரசேநன்
னிலோற் பலமே மாதளையே
நீங்கா தருண கிரிதுதியை
நிதமு மறக்காப் பசுங்கிளியே
தவக்குஞ் சரமே சிவக்கொழுந்தே
தண்டா மரையே நற்கரும்பே
தாது விரியாப் பூமணமே
தண்டே ணுண்ட தனிமுதலே
சிவக்கும் பவள விதழ்வாயாய்
திருவாய் முத்தந் தருகவே
திருவு மகலா வாயர்குடித்
தேவே முத்தந் தருகவே.
44✓
நித்தங் கழம்புன் னீராட்டி
நீல விழிக்கு மையுமிட்டு
நெற்றி யதனிற் றிலதமிட்டு
நிமலி மகிழ்ந்து கலன்பூட்டி
அத்த நினைப்பொற் றொட்டிலிட்டு
அப்பா வரசே யெனத்துதித்து
அம்மை தாலாட் டிடவைய
னதனைக் கண்டு முறுவல்செய்து
சித்தத் தினிக்குஞ் சிவபோகந்
திகழுந் தேவா ரப்பண்ணுந்
திருவா சகமுந் திருப்புகழுஞ்
செப்பச் சைவ வேளாளர்
முத்தம் பெறவே வருள்புரியு
முதல்வா முத்தந் தருகவே
மும்மல மகற்று மாய்க்குடிவாழ்
முருகா முத்தந் தருகவே.
45✓
வழுவி லாத தமிழ்ப்புலவர்
வாழ்த்துந் துணைத்தாட் கிருமுத்தம்
வளருங் கணைக்கால் முழந்தாட்கு
மார்பி னுக்கு மெழுமுத்தம்
பழுதி லாத வுடைதனக்கும்
பகர்பொன் ஞாற்கும் பத்துமுத்தம்
பருத்த தொந்தி கந்தரமும்
பனிமா மலர்க்கைக் கெட்டுமுத்தம்
எழுத வாரிய சிரமாலைக்
கிருபத் தைந்து முத்தமென
வெடுத்துக் கோர்த்து கலன்பூட்டி
யிசையப் பொருந்துந் திருமேனி
முழுதுந் தாயார் முத்தமிட
முளைத்தோய் முத்தந் தந்தருளே
மும்மல மகற்று மாயர்குடி
முதல்வா முத்தந் தந்தருளே.
46✓
செழியன் புகழச் சமணிருளைத்
தீரத் தொலைத்துத் தீப்பிணியைத்
தீர்த்து வைத்துச் சிவசமயஞ்
சேர வரசன் றிகிலடையப்
பொழியுந் தமிழி னழகொழுகப்
புவி லூமைப் பெண்பாட
பொன்னின் முத்துச் சிவிகையுற
புகழ்சம் பந்தப் பெருமானாய்
வழியுந் தேனைப் பொலிமதுரை
வளர் சொக்கேசர் மகனாக
வந்து பிறந்து மலைக்கரராய்
வள்ளி தெய்வா னையுமணந்த
மொழிமெய் யாக வேல்பிடித்த
முருகா முத்தந் தருகவே
முருகார்ந் திலங்கு மாய்க்குடிவாழ்
முதல்வா முத்தந் தருகவே
47வேறு✓
சத்திவடி வேல்கொண்டு சூரரையு வென்றமரர்
தஞ்சிறை தவிர்த்ததுண்டு
சஞ்சலமி லாதுனது செந்தமிழை யருணகிரி
சாற்றவருள் செய்ததுண்டு
பத்திவலை யுற்றவடி யார்தமது நெஞ்சமே
பதியா யிருத்தலுண்டு
பரமனார் தவமுதிர்ந் தறுமுகக் குமரனாய்ப்
பாரினி லுதித்ததுண்டு
நித்தியமும் வள்ளிதெய் வானையொடு நாளுநீ
நேயமாய் வாழ்வதுண்டு
நீங்காத வானந்த முற்றமெஞ் ஞானியரும்
நிதமுனைப் பணிவதுண்டு
முத்தியின் பந்தருவ துண்டுமத னால்வந்து
முத்த மளித்தருள்வையே
முருகவிழ் மலர்ச்சோலை சூழுமாய்க் குடிமுருகா
முத்த மளித்தருள்வையே.
48✓
பிறவிசா கரமது மெய்யன்று பொய்யெனப்
பேசுகமறைகேட்டுமறியாப்
பேதைமதி கொண்டுனது பாதசே வையையானும்
பெற்றிங்கு வுய்குவேனோ
அறவினை யதுசெயப் பொருளுண்டு மோயிலை
யப்பாவி யானவென்னை
ஆசைப் பெருங்கடலில் மூழ்கவைத தாயிதுவு
மநியாய மநியாயமே
துறவியா னவருறவு சற்றேனு மில்லாத
துஞ்சனர்க ணேசமுறவே
தொந்தவினை யின்பயனை யீய்ந்தவனை நோகுந்
துரும்பநா னென்செய்குவேன்
முறமைநீ தியுமிதா முன்வந்து சொல்குகா
முத்த மளித்தருள்வையே
முருகவிழ் மலர்ச்சோலை சூழுமாய்க் குடிமுருகா
முத்த மளித்தருள்வையே.
49✓
பரவைநீ ருண்டமுனி வர்க்கருளு மகிமையும்
பணியுமெய் யடியர்புகழும்
பன்னிரு கரக்கடவு ளென்னவரு பெருமையும்
பஞ்சலக்ஷண வுரிமையும்
அரசுர வெனச்சுரர்க ளாசிசொலு மாக்ஷிய
மரம்பையர்செய் நடனவியனும்
அமரரொடு மின்புற வருங்கருணை யாளனென
வாகுபுரி காக்ஷிநலனும்
சிரவண மிகுந்தருள் பிரணவப் பொருளினைச்
செப்புமுப தேசநிலையுஞ்
செழுங்கனி யுணச்சென்று செகமுழுது மொருநொடி
செல்லுமுன் வந்தசெயலும்
முரகர னுவந்தரு ளோங்குமவன் மருகனே
முத்த மளித்தருள்வையே
முருகவிழ் மலர்ச்சோலை செறியுமாய்க் குடிமுருக
முத்த மளித்தருள்வையே.
50சந்தம்✓
பத்தி நினைத்தவர் சித்தம் துற்றருள்
பண்பா கண்பாருன்
பக்க மிருத்தி வருத்து மகத்துவ
பக்குவ மொக்காதோ
புத்தி வரட்டு மெனப்புகல் காட்டுதல்
போதாதே யிதுவுன்
புத்திர ருக்கு மயக்கம் வரச்செயல்
பூபதி நிற்கழகா
சித்திய தெட்டும் வருத்தி யளித்தருள்
சிற்பர மப்போதா
சிட்டரை மெத்த மிரட்டி யழைப்பது
சித்ரவி சித்திரமோ
முத்தி யளித்தரு ளாய்க்குடி முருகா
முத்த மளித்தருளே
முத்தொழில் கற்ற சமர்த்தா முருகா
முத்த மளித்தருளே.
51✓
முத்தே முத்தில் முதலா மணியே
முத்தந் தந்தருளே
முத்தொழி லுக்கு மதிபா குகனே
முத்தந் தந்தருளே
முத்திக் கொருவழி காட்டிடு முதல்வா
முத்தந் தந்தருளே
முக்கண னுக்கு விழிப்பொறி யானோய்
முத்தந் தந்தருளே
முத்தர் தனக்கருள் சித்தா யருள்வோய்
முத்தந் தந்தருளே
மூல பலத்தைத் தொலைத்தவன் மருகா
முத்தந் தந்தருளே
முத்தலை வேலா யுதமணி வோனே
முத்தந் தந்தருளே
முருகலர் சோலை சூழாய்க் குடிவேல்
முத்தந் தந்தருளே.
52✓
சுருதி மெய்க்கும் புகழ் பெருக்குஞ்
சொரூபன் முத்தந் தருகவே
துற்கு ணத்தின் சமண ழிக்குந்
தோன்றல் முத்தந் தருகவே
பருவ ரைத்தின் புயமி குத்த
பரமன் முத்தந் தருகவே
பனிம லர்ச்செஞ் சடைய னான
பண்பன் முத்தந் தருகவே
கருதி வைத்த பொருளை ளிக்குங்
கந்தன் முத்தந் தருகவே
களிமி குத்த வள்ளி தெய்வை
கணவன் முத்தந் தருகவே
திருவு றையாய்க் குடி வளருஞ்
செல்வன் முத்தந் தருகவே
சிவன் விழிக்குட் பொறியாய் வந்த
சிறுவன் முத்தந் தருகவே.