ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
தாலப்பருவம்4 / 10
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ் · ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
தாலப்பருவம்
22✓
நித்தம் பணிவோ ருள்ளமதி
னிறைந்த விளக்கே யருள்விளக்கே
நிமல விளக்கே மெஞ்ஞான
நெறிதந் திடுநன் னலைவிளக்கே
சித்தத் திருளை யகற்றுஞ்சிவ
போக விளக்கே திருவிளக்கே
செகமெய் விளக்கே யானந்தந்
தேக்கும் விளக்கே பூரணமாஞ்
சுத்த விளக்கே சுகவிளக்கே
துரிய விளக்கே பிரமமெனுஞ்
சொரூப விளக்கே சுழிமுனையிற்
றோன்றும் விளக்கே யெந்நாளும்
அத்தர்க் கருமைப் பொருள்விளக்கே
அமலா தாலோ தாலேலோ
அன்பர் குடிகொள் ளாய்க்குடிவா
ழரசே தாலோ தாலேலோ.
23✓
கொண்டல் மருவுங் குணமணியோ
குணத்திற் சிறந்த குலமணியோ
கூடு மடியார்க் கின்பமெலாங்
கொடுக்கு மணியோ சுழிமுனையிற்
கண்ட மணியோ ஆனந்தக்
கரும்பா மணியோ கதிமணியோ
கலியைத் தவிர்த்தாட் கொண்டருளுங்
கருணை மணியோ தினைமாவை
யுண்ட மணியோ வுண்மைமறை
யுரைக்கு மணியோ மதுரகவிக்
குகந்த மணியோ வடியருளத்
துறையு மணியோ முன்னாளில்
அண்ட மளந்தோன் றன்மருகா
அறுமா முகனே தாலேலோ
அடியார் துதிசெய் யாய்க்குடிவா
ழரசே தாலோ தாலேலோ.
24✓
செம்பொற் சிலையோ வலதுமணித்
திரளோ திரளிற்றெளித்தெடுத்த
சிலம்போ சிலம்பிற் றிகழ்மணியோ
……….......................
பைம்பொற் கமலத் தாயுளத்துப்
படிந்து சிவந்து படர்மணியோ
பரமன் றிருநேத் திரத்துதித்துப்
பாரில் விளங்கும் பரமணியோ
தம்பொற் பாதம் பணிவோர்கள்
தமக்குட் செறிந்த தவமணியோ
சத்து சித்தா னந்தமெனத்
தயங்கு மணியோ அறியேனே
அம்பொற் குவட்டைக் குடைபிடித்த
வரியோன் மருகா தாலேலோ
அன்பர் பெருகு மாயர்குடிக்
கரசே தாலோ தாலேலோ.
25✓
சிந்தா குலத்துக் கொருமருந்தே
தேவர் புகழ்சே னாபதியே
தித்திக் குஞ்செந் தமிழ்த்தேனே
திகழ்பா வலருக் கருள்விருந்தே
தந்தா யமுதந் தானருந்தச்
சத்தா யுதித்த தனிமுதலே
சதுர்வே தத்தி லுண்மைதனைத்
தானாய்க் காட்டுஞ் சண்முகனே
வந்தா தரிக்குந் துணையாக
மயில்வா கனத்தி லேறிமுனம்
வள்ளி தெய்வ யானையொடு
மகிழ வரும்வே லாயுதனே
செந்தா மரைத்தே னெனத்தமிழைச்
செப்பும் வாயாய் தாலேலோ
தென்றல் வலங்கொள் ளாய்க்குடிவாழ்
செல்வா தாலோ தாலேலோ.
26✓
பண்டைக் கொடிய வினைவினையின்
பயனால் மாயை யினிலுதித்து
பாரில் வந்த நாள்முதலாய்
பாழாய் நாளை வீண்போக்கி
கொண்டத் துயராங் கடல்மூழ்கிக்
குழறி யுளறி யேதிரிந்து
கூடு மதியைக் காமமெனக்
கோரும் பாம்பு தான்விழுங்கத்
தொண்டத் தொகையிற் சேராத
சுரும்ப னெனினு மாதரிப்பாய்
தோன்றாத் துணையாய் முன்னுவந்து
சுதனைக் காத்தல் கடமையன்றோ
தண்டை யணியுந் திருத்தாளாய்
தாலோ தாலோ தாலேலோ
சங்கு முழங்கு மாயர்குடித்
தலைவா தாலோ தாலேலோ.
27✓
சங்குக் குழையி லணிவயிரந்
தளத ளென்னப் பவழவிதம்
தானா யிலங்க மரகதப்பச்
சையுமார் பதக்க முந்துலங்க
தங்கத் தகட்டிற் பொதிந்த ரத்தினத்
தரளம் விளங்க வரைஞாணுந்
தண்டைச் சிலம்புங் கலகலெனத்
தாதி மாரம் பலங்கடொறும்
அங்க ணேறி விளையாடி
யலைந்து திரிந்து தானும்வந்திங்
கழகாந் தொட்டி லதிற்கிடந்து
மயரவு றங்கா யறுமுகனே
செங்க ணுடையோன் றிருமருகா
தேவர்க் கரசே தாலேலோ
திருவாழ்ந் துறையு மாயர்குடிச்
செல்வா தாலோ தாலேலோ.
28✓
திங்கட் கமல முகமதியே
தெய்வ யானைக் கதிபதியே
தீங்கு புரியாப் பசுபதியே
செந்த மிழ்ப்பா வலர்மாதியே
கங்கை வளஞ்சூழ் நிலக்கரும்பே
கற்கண் டேமா மலரரும்பே
தகனர் புகழும் கற்பகமே
கவிஞர் புகலுஞ் சொற்சுகமே
மங்கை யுமையா ளின்சுதனே
மறையின் முடிவி லச்சுதனே
மாலா யுற்றோன் றன்மருகா
மயில்வா கனத்தில் வருமுருகா
செங்கை யினில்வேல் கொண்டவனே
சேவல் பிடித்தோய் தாலேலோ
தேவர் புகழு மாயர்குடிச்
செல்வா தாலோ தாலேலோ.
29வேறு✓
பத்திநிலை நின்றுதான் பணியுமெய் யடியவர்
பாவம தெலாமகற்றிப்
பரிபால னஞ்செயு முரிமையா னதுகண்டு
பத்தனுனை யிச்சித்துநான்
சித்திதரு தென்பரங் கிரிபழனி சோலைமலை
செந்திலம் பதியேரகந்
திருவார்வி னன்குடி சுவாமிமலை திருமலை
சென்றுகுன் றாடலுடனே
சத்திசிவ மொத்திடவு மெத்ததியு மருள்தருந்
தயாளகுண முள்ளவியனுஞ்
சத்துருசம் மாரனென வெற்றிபெறு வீரமுந்
தற்காக்கு கின்றசெயலுந்
தித்திக்கு மஞ்செழுத் தாறெழுத் தாய்வருஞ்
செல்வ தாலாட்டியருளே
சிம்மா சனத்திலுறு பெம்மானா மாய்க்குடிச்
சிறுவ தாலாட்டியருளே.
30வேறு✓
அண்டர் புகழ்ந்து வணங்கவ ரம்பைய
ரானவர் நடனமிட
அன்புட நாரதர் வீணை பயின்றிட
வந்தண ராசிசொலக்
கண்ட தபோதனர் முனிவரர் களுமது
ரக்கவி தானோதக்
கணிகையர் சூழ்ந்து மருங்கினில் நின்றுகா
ளாஞ் சிகையேந்திடவே
தெண்டமெ னத்திரி புண்டர மேவிய
சித்தர்கள் பத்திசெயச்
செயசெய வெனமணி யசைய முழக்கொலி
சேண்புக மெய்யடியார்
தண்டமிழ் மாலை புனைந்து வளர்ந்திடு
சண்முகா தாலேலோ
தருவள ராய்க்குடி முருகக் குருபரா
தாலோ தாலேலோ.
31✓
மதனனு பவமே பெறவுனு தினமே
வள்ளியின் மணவாளா
வரமருள் குகனே யரனவன் மகனே
மாமல ரணிதோளா
நிதமதி சயமே யுறவருள் செயமே
நேருற வருகுமரா
நிருதர்கள் கலகா அழகிய திலகா
நிபுணர்கள் புகழ்தீரா
சுதனென மயில்மீ திதமொடு வலம்வரு
சொரூபஞா னச்சுடரே
சுரர்துதி சொலவென் மனதிடர் செலவே
தோன்றிடு நற்றுணையே
சதமகன் மருகா வரகர முருகா
தாலோ தாலேலோ
தண்டமி ழோங்கிடு மாய்க்குடி முருகா
தாலோ தாலேலோ.