இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
ச.வே. பஞ்சாட்சரம்
காப்புப்பருவம்1 / 10
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் · ச.வே. பஞ்சாட்சரம்
காப்புப்பருவம்
1திருமால் காக்க✓
மலர்மங்கையர் வளைதண்டெனும்
வல்லிக்கரங் கோத்து
மடிநீரலை வழியாடிடும்
மரஞ்சூழ்வனப் பொய்கைத்
தலமாஞ்சர வணப்பூம்மடித்
தலையாறொளிர் மைந்தன்
தனிவேல்கொண்டு சகங்காத்திடத்
தழைப்போந்தனைக் காக்க
அலைபாற்கடல் அரவுச்சுருள்
அரும்பள்ளியில் துயில்வோன்
ஆமேய்ப்பவர் குடிகாப்பவன்
ஆண்டாள்தழு வினியன்
மலைக்கீண்டிடுந் தனிவேலவன்
மலையைக்குடை பிடித்த
மகிழ்மாமன்இவ் விணுவைத்தமிழ்
வளநாட்டவர் தொழுவே!
2சிவபெருமான் காக்க✓
ஒழுகும்எழில் விழியன்!உளம்
ஊறும்பெரும் அளியன்
உருகும்மனம் அனந்தம்!அவை
உறத்தன்னடி கொண்டோன்
பழகுந்தமிழ் இனியன்!செழும்
பவளஞ்சுட ரழகன்
பசுமையயில் மிசையன்!பரம்
பணிகந்தனைக் காக்க
இழிமுப்புரம் எரிவிட்டவன்
எழில்முப்புரி மார்பன்
இருடிக்கணம் விடுமப்புலி
இருந்தோலுடை யாளன்
விழிநெற்றியன் வெண்ணீற்றவன்
மிளிர்செஞ்சடைப்! பிறையன்
மெய்குங்குமன் இணுவைத்தமிழ்
விரிநாட்டவர் தொழுவே!
3சிவகாமி காக்க✓
இன்னல்வரும் வேளைதன்னை
எண்ணிஅழு வேளை
இம்மென்னுமுன் காப்பான்மனம்
எரியில்மெழு காவேன்
சின்னப்பயல் எனஎண்ணிய
தேவர்குலங் கலக்கிச்
செய்தோம்பிழை எனுமாறவர்த்
திருத்திஅருள் சேயை
அன்னைசிவ காமிதனை
அண்ணல்சிவன் தழுவி
அளியான்நுதல் விழியால்அனற்
பொறியாய்அளித் தாலும்
முன்னம்முத்தம் முலைப்பால்தந்த
முறையில்இணுங் காக்க
முழங்கும்இசை இணுவைத்தமிழ்
முதுநாட்டவர் தொழுவே!
4பிரமா காக்க✓
கலிகொஞ்சிய யுகமுய்ந்திடுங்
கருணைமழை பொழிவோன்
கனலும்பொறி ஆறும்ஒரு
கனியாய்முரு கானோன்
கலிமிஞ்சுகார்த் திகைமாதர்பொற்
கனிகொங்கைகள் உண்டோன்
கணக்கில்உயிர் பெறமுத்தியுன்
கையாற்றுவன் காக்க
மலர்மேலவ மறைதேர்ந்தவ
வாணியுறை நாவ
மாயையெனும் மண்ணையள்ளி
வனைவோய்கலம் அனந்தம்
உலகம்பல அண்டங்களை
ஒழுங்காய்ப்படைப் போனே
ஒருநான்முக இணுவைத்தமிழ்
ஒளிநாட்டவர் தொழுவே!
5விநாயகர் காக்க✓
நீலக்குற வள்ளிஅக
நெஞ்சங்குழைந் தாலும்
நீசம்புரி பிகுபண்ணிட
நெக்கிமனம் உருகிப்
பாலொத்தொளிர் தந்தக்கண
பதியுன்னையுன் தம்பி
பாசத்தொடு வாவென்றெணப்
பயந்தந்தெதிர் வந்தாய்
கோலக்குற வள்ளிகுலை
நடுங்கிக்குதித் தோடிக்
கொங்கைக்குலம் முதுகிற்புகக்
குமரன்தனை அணைத்தாள்
வேலற்கெழில் வள்ளிதந்த
வேழமுகன் காக்க
விண்செய்தனை இணுவைத்தமிழ்
விறல்நாட்டவர் தொழுவே!
6வைரவர் காக்க✓
செக்கச்சிவந் தொளிரும்மலர்ச்
சிலம்பின்னடி யாளன்
சிவனைத்தொழல் பிழைபட்டவர்ச்
சிறைவைத்தொரு குகையில்
நக்கீரர்உட் படஆயிரம்
நல்லோர்க்கொல நின்ற
நலிபூதமொன் றதஞ்செய்தனன்
நக்கீரனின் பாட்டில்
சொக்கி!அவன் தனைக்காக்கவே
சொக்கர்தமை இகழும்
துட்டச்செருக் கயன்ஐந்தலைத்
தொகைகுன்றுவித் தடக்கி
ஒக்கக்கெடுத் தமரர்தருக்
குயர்வைரவ நாதன்
ஓங்குங்கலை இணுவைத்தமிழ்
ஒளிநாட்டவர் தொழுவே!
7காளி காக்க✓
பழந்தாங்கிய பலவின்மலை
பரன்காதினைச் சாரல்
பசும்பூஞ்சுனைப் படுகோயிலில்
பறைதொண்டகம் முழங்க
எழுந்தோங்கிய நெடுமூங்கிலின்
இமிர்கூட்டினிற் செழுந்தேன்
இனிதுண்டவர் இணைந்தாடிடுங்
குரவைதனில் மகளிர்
கொழும்பூங்கரங் கோத்தாடிடுங்
கூர்வேலிளங் குமரன்
குழைத்தின்னருள் பொலிபல்வளம்
கொடுப்போன்அவற் காக்க
விழுந்தக்கனின் வெகுள்புத்திரி
வெறிதந்தக பாலி!
வெங்காளியே இணுவைத்தமிழ்
மிகுநாட்டவர் தொழுவே!
8தேவேந்திரன் காக்க✓
மழையாடிய மலையாடிய
மயிலாடிய குமரன்
வளையாடிய கடல்பொங்கிட
மலைவீசியே இளமை
விளையாடிய இளவல்பிர
ணவத்தின்பொருள் விரிவை
விளங்காமலும் விதியாய்த்தனை
வணங்காமலும் அகந்தைத்
தளையாடிய பிரமன்தனைத்
தடுத்துச்சிறை செய்தோன்
தமிழாடிய தண்பூங்கவித்
தலைவன்தனைக் காக்க
பழிபாடிய பணியுஞ்நிற்
பரமற்சரண் புகுந்த
பதியிந்திரன் இணுவைத்தமிழ்ப்
பழநாட்டவர் தொழுவே!
9அகத்தியர் காக்க✓
திடமாத்தகர்ப் பிடர்பாய்ந்ததன்
திமிர்சாய்ந்திட உலவுந்
திறலோன்தமிழ் தெரிநுண்புலஞ்
சிறந்தோர்சங்கத் தலைவன்
நடமாமயிற் படமாவர
வல்குற்றகு றங்கை
நடைமாப்பிடித் தேவகுஞ்சரி
நகுவேலனைக் காக்க
குடமாமுனி முதலிலக்கணங்
கொழிதேன்தமிழ்க் கீந்தோன்
கொடுந்தக்கனுக் கொடுங்காமலே
குறைவேள்வியை இகழ்ந்தோன்
அடங்காப்புனற் செழுங்காவிரி
அறல்தென்னிலம் விரித்தோன்
அறவீரியன் இணுவைத்தமிழ்
அருள்நாட்டவர் தொழுவே!
10பிறதெய்வங்கள் காக்க✓
குறிஞ்சித்திணைக் குறுங்கோயிலிற்
குறிஞ்சிப்பண்ணில் பாடி
குறவஞ்சியர் கோழிக்கொடி
குனிபூந்தலை வணங்கி
நறுஞ்சந்தனம் நறும்பண்ணிற
நகைஒண்மலர் தூவி
நல்கத்ததர்க் குருதிப்பலி
நயந்தோன்தனைக் காக்க
பொறிமைந்தனைப் புயமேந்திய
புயல்வேந்தனும் அனலாம்
பொன்வேந்தனும் பூங்கொன்றையன்
புணர்கங்கையும் உமையாள்
செறிபொன்சிலம் புகுநல்மணி
சிந்தொன்பது சக்தித்
திகழ்தாயரும் இணுவைத்தமிழ்த்
திருநாட்டவர் தொழுவே.