இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
ச.வே. பஞ்சாட்சரம்
சிறுதேர்ப்பருவம்10 / 10
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் · ச.வே. பஞ்சாட்சரம்
சிறுதேர்ப்பருவம்
91✓
காடைக் குருவிகள் கண்ணுக் கினியநல்
காவிய முட்டைகள் இட்டுவைத்துக்
காதற் சிறகிடைக் காக்கும்பசும் புல்வெளிக்
கான மரங்களில் பட்சியினம்
பாடிப் புகழ்ந்துயிரப் பக்குவங் கேட்டிடப்
பாலித்த ருள்இங்கு பார்த்திருப்பாய்
பாழிற் கிடந்துழல் பாவியர் வாழ்வினில்
பாசமு டன்அழைப் பார்களெனில்
ஓடிப் பரிந்தருள் ஊற்றி நறுநிழல்
உய்க்கும் இணுவையில் ஓங்கரசே
ஒன்றடி மன்றடி யாக உதைத்தெழும்
உந்திடர் ஓர்நொடித் தீர்த்தருள்வோய்
தேடித் திரிந்தவா செந்தினைச் சாரலில்
சிறுக்கியைச் சேல்விழி மானையன்று
சின்னஞ் சிறுமணிச் செம்பொன் கமழ்மலர்த்
கந்தசுச் சிறுதேர் உருட்டுகவே.
92✓
பூசைக்காம் பால்தரும் புண்ணியர் வீட்டிற்பால்
பூசகர் வேடத்தில் போய்வாங்கியே
பூட்டிய கோயிலுட் புக்குவைத் தோய்சுகப்
புத்திரப் பேற்றினை யாசித்தவர்
ஏசப்ப டுங்குணம் இற்றிடத் தன்னுள்ளே
ஏத்தியுன் கால்கள் கதறியவன்
இன்னல்செய் யாமலி ருந்துமி டர்தரும்
ஈனர் புரியும் இடும்பைகொல்ல
பாசப்பு தல்வருன் பாதம் பணிகாதல்
பாலவ யதிலி ருந்தெபெற
பக்குவ மாய்த்தொழும் பக்தர்கட் கும்வரம்
பாலித்தி ணுவையெப் பாலிப்பவா
காசிகாஞ் சிகதிர் காமம்ரா மேஸ்வரம்
கைலாயம் செந்தில்கண் டேத்துபலன்
கைதொழ இங்களி கைவளச் சேயைப்பூங்
கைதொட்டுப் பொன்தேர் உருட்டுகவே.
93✓
மண்ணவர்க் குநானோர் மன்னன் பணக்காரன்
வல்லன் அடிமைகள் ஏத்துபவன்
மாலை மதிப்புக்கள் வள்ளல் புகழ்ச்சிகள்
மன்னவைச் செல்வாக்கு மண்டியவன்
திண்ணியன் என்றுப கட்டித் திரிவதே
சிந்தனை யாகப்ப றந்தலையார்
சிந்தனை பேச்சுச் செயல்கண மேனுமே
தெய்வம்நீ எள்ளுவ தாயிருக்கா
வண்ணமே என்னையென் மக்கள் மனைவியை
வழிநடத் தென்போர் இணுவைச்சேயா
மாடி மனைபணம் மாடாடு பெண்டுமார்
வாகனம் எடுபிடி ஆசைகொல்லும்
தண்ணருள் மூலிய சால்மயில் மேலவ
சார்ந்த இடந்தொறுந் தந்தைசிவன்
தாள்தொழக் கோயில்கள் தக்கபடி வைத்த
தாழ்மையா தங்கத்தேர் ஓட்டுகவே.
94✓
அன்றுன்றன் சந்நிதிக் கான கருவறை
அன்புடன் கட்டிடும் வேளையிலே
அப்பணிக் காய்வந்தே அங்குறும் ஓர்கல்லின்
ஆழ்பொந்தி லேயணிற் குஞ்சிருக்க
ஒன்றிலம் பிஞ்சுயிர் உன்பொருட் டாகவே
உற்றிடல் கூடும் மரணமென்றே
ஊக்கோர் திருப்பணி யாளனின் ஓர்கனா
ஒதுக்கிவை இன்னகல் என்றவனே
சென்றுன்றன் வேட்டைத் திருவிழா தோரணச்
செய்பந்தற் சிங்கார வீதியெல்லாம்
தெய்வீகம் பாய்ச்சிடுஞ் சீரிணு வைக்குக
தேகஞ் சிலிர்க்குமுன் கோயில்புகுந்
தென்றலுன் பூசையிற் சிந்திடுஞ் சந்தன
செவ்வுது பத்தி திகழ்அகிலின்
சிந்தையுள் ளும்மணஞ் சீரூர்ப்ப ரப்பிடும்
சேயன் திகழ்தேர் உருட்டுகவே.
95✓
பண்டொரு கூத்திங்கு பார்க்க வந்ததனிப்
பையனின் செம்பொன்னின் சங்கிலியைப்
பற்றிப் பறித்திடக் கள்வர் விரட்டவே
பையன் புகுந்துன்றன் காலில்அழ
அண்டுந் திருடர்க்குன் ஆலயஞ் சாமத்தும்
ஆள்பலர் நிற்பதாய்க் காட்டிஅவர்
அஞ்சிக் கலைந்திட அப்பையன் காத்தவா
ஆலயம் மூழ்கவோர் மாரிவெள்ளம்
தண்டு வலித்தையர் தந்த பனம்பழந்
தன்னை நைவேத்தியங் கொண்டவனே
தத்தம் துயர்பிணி சாய்ந்திட நேர்த்திவை
தக்கவர் பெற்றுன்றன் தண்ணென்வரம்
மண்டபம் முட்டவே வாகனா திதரும்
வாழிணு வைப்பதி மன்னவனே
வண்சுடர்ப் பொன்மணி வாச மலர்புரி
மங்கல ஒண்டேர் உருட்டுகவே.
96✓
பால்தந்துன் பூசைக்குன் பச்சைப் பசளியைப்
பைங்கறி யாக்கப் பறித்துச்செல்லும்
பண்டையோர் தொண்டர்க்குப் பகடி புரிந்திட
பாங்கா யவர்கன வில்எழுந்து
பால்சமம் பசளியென் றேபகர்ந் தோய்நறும்
பால்கமழ் வாயிணு வைக்குழந்தாய்
பாசத்து டன்ஆறு பக்குவக் காலமும்
பண்ணிடப் பூசை புரிந்தருள்வோய்
வேல்சமம் முத்திக்கு வீரிய வித்தென
மெய்யடி யார்தொழும் வேற்சிறுவா
வேடர் குலத்தினை வீழ்த்தி வள்ளிமுலம்
மீண்டும் உயிர்த்தெழ வைத்தவனே
நூல்பல கற்றுமே நோய்மலந் தீர்த்திடும்
நோக்கம் பெறாதவர் உன்சுடர்வேல்
நோக்கிய மட்டிலே எய்துவர் நுண்மையாய்
நூல்கடந் தோய்தேர் ஓட்டுகவே.
97✓
மண்டபத் தில்தினம் மாலைநே ரங்களில்
மண்டும் முதியராம் பக்தர்குழாம்
வான்பேறு பற்றியும் வள்ளலுன் பற்றியும்
வண்ணக் கதைகள் மகிழ்ந்திருப்பார்
அண்டிய தோட்ட அகல்வெளி யில்குடில்
ஆக்கிச் சிலர்தவம் ஆழ்ந்திருப்பார்
அற்புதங் கள்பண்ணி ஆல்பூளி ஒன்றிய
அண்ணமார் இளந்தாரி ஆலயவூர்
பெண்டுபிள் ளைநலம் பேணத்தன் பொன்நிலம்
பிள்ளைப்பங் காகக் கொடுத்துநெஞ்சைப்
பித்துறுந் தெய்வப்பங் காகப் பிரித்தளி
பீடிணு வைப்பதிக் காவலனே
தொண்டுக் குறுந்துாய்மை தூய்மைக் குறும்முத்தி
சொர்க்கப் பரிசாய் அளிப்பவனே
டுண்டுண் எனநவ வீரர் துடிகொட்டச்
சுந்தர சுந்தரத் தேருருட்டே.
98✓
மஞ்சஞ் செய்யவரு மாறன் றழைக்கையில்
மாட்டோமென் றவண்ணத் தச்சர்குழு
வாரமொன் றுள்தோணி வள்ளங்க ளேறியே
வந்திறங்கி மஞ்சஞ் செய்யவைத்த
கஞ்சம லர்அடிக் கட்டழ குக்குக
காத்தெம் மிணுவையை ஆள்பவனே
கன்னித்நமிழ் சவைக் கல்வியை ஊருக்குள்
காத்தோர்வா ழையடி வாழையாக
வஞ்சமி லாஇற்றை வாரி சறிஞர்கள்
மாணவர்க் காணாராய் வாடவிட்டு
வாலிபர் இக்கலி மன்னர்க ளாம்நிலை
மாறிட நோற்போர் மகிழ்ந்திடவே
மிஞ்சச்சை வந்தமிழ் மீட்டும்ஆ தீனங்கள்
வேண்டிப் படைத்துன்றன் ஆட்சியிலே
மென்கரந் தொட்டிந்த வீங்கொளிப் பொன்னெழில்
விஞ்சுஞ் சிறுதேர் உருட்டுகவே.
99✓
சத்திரங் கள்மடம் சாருப கோயில்கள்
சன்னதச் சோதிடர் ஆச்சிரமம்
சால்சிவ பூசையர் சாணிப் பசுங்குடில்
சாந்திஊஞ் சல்மடத் தண்வனத்தோய்
இத்திறன் உன்னருள் என்றறி யாவண்ணம்
எள்ளிரு ளாணவம் போடுந்திரை
என்னுங் கிரவுஞ்ச இன்னல் மலைதனை
எங்குடித் தெய்வமுன் வேல்கிழிக்க
முத்தொளிர் வேலுடன் மொய்சிறைத் தோகைமேல்
மோகனந் தாங்கியே ஓங்குபவா
முந்தியும் இன்றுமுன் மூழ்கித் திருப்பணி
முற்றுநர்க்கு முத்தி ஈபவனே
சித்திரத் தேரினில் சேர்ந்துலாச் செல்லும்நீ
சிற்ப எழில்ரதத் தோங்கிவிட்டாய்
சீரிணு வைத்தமிழ் தேர்சங்கத் தென்றுமே
தேன்தலை வாதேர் உருட்டுகவே.
100✓
மாசறு நெஞ்சினர் மாசறு காட்சியர்
மானுட வேலர்தேன் வாரியனார்
மங்கல மானவர் மாமருந் தானவர்
மந்திர வாய்மொழி நோக்குடையார்
தேசுறு மேனியர் செய்யநின் றொளியர்
தேசுறு நெற்றியர் தீர்வினையார்
தீயையுந் தண்பனி செய்திட வல்லவர்
தீவிர தெய்விக சக்தியுளார்
ஈசுர காதலைத் தீட்சையில் ஈந்திடும்
இன்குரு உன்புக ழேந்தியவர்
ஏகன்அ னேகன் எனும்படி யானவர்
இன்முத்தி எய்தத் தருங்குமரா
ஓசைகள் யாவினும் ஓங்கி ஒலித்திட
ஓம்முரு காஎனும் ஓரொலியே
உள்நெகிழ்ந் தேத்துநர் ஓங்கிணு வைக்குகன்
ஓம்திகழ் பொன்தேர் உருட்டுகவே.