முருகன் App
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
ச.வே. பஞ்சாட்சரம்
வருகைப்பருவம்6 / 10
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் · ச.வே. பஞ்சாட்சரம்

வருகைப்பருவம்

51✓
சினப்புலி உலவுஞ் சாரல்
தினைப்புன வள்ளி சாயல்
திணறடித் துன்றன் சாந்தி
சிதறடித் ததனால் ஏங்குன்
மனக்குறை தீர்க்காள் மௌனம்
வாட்டப்பேர் ஊர்கள் கேட்டும்
மரமென நின்றா ளுக்கும்
மனங்கனிந் தருள்செய் தோனே
நினைத்தொழு தோங்கும் நாமுன்
நிறப்பொலி வள்ளி மாந்தி
நின்றனம் இணுவைக் கோவே
நிலவெழுஞ் சுடர்மு கத்தோய்
பனிப்புனற் கங்கை தாங்கப்
பரிந்துதன் தலையே ஈந்த
பரம்பொருள் மைந்தா வாராய்
பச்சிளங் கொழுந்தே வாராய்.
52✓
வழாபெருந் தவத்தால் உன்னை
மணந்திடும் வரமந் நாள்கொள்
மால்மகள் தேவ சேனா
மகிழ்ந்துனைத் தழுவும் வாழ்வை
விழாப்பெரு மணநாள் தந்தாய்
மிகுஞ்சிலைப் பரங்குன் றத்தில்
மின்னலங் கொடியே யன்னாள்
விழிநிகர் இணுவை நாதா
விளாத்தியின் அடிய மர்ந்தோன்
வியக்குமற் புதங்கள் செய்வோன்
மிகும்பொங்கல் வடைமா லைகொள்
மிளிர்வி ரவன்பாங் குற்றோய்
அழாக்குறை யாக உன்றன்
அருள்முகங் காண எங்கும்
அடியவர் இணுவை ஐயா
ஆனந்தம் பொங்க வாராய்.
53✓
சுக்கிர வாரம் என்னுஞ்
சுடர்வெள்ளிக் கிழமை நோன்பு
தொடர்ந்துமூன் றாண்டு நோற்றுச்
சுரன்கொள் எரசும் மீட்டான்
துக்கமாய்த் தோற்று மக்கள்
துணைவியோ டடவி புக்குச்
சோர்பகீ ரதநாம் மன்னன்
தூயஇந் நோன்பு காத்தால்
தக்ககற் போங்கும் இல்லாள்
சான்றமக் களுஞ்செல் வங்கள்
தாழும்நீ தருவா யென்று
சாற்றுவ சரிதை யாவும்
சுக்கிர வாரம் அன்றித்
தொடர்ந்ததெல்லா நாளும் நோற்கும்
தொண்டர்மிஞ் சிணுவைக் கோவே
சொர்க்கமே ஐயா வாராய்.
54✓
கந்தநல் விரத நாளாம்
கார்த்திகை மாதம் நண்ணும்
கார்த்திகைத் தினத்தில் நின்றாள்
கருதியே பன்னீ ராண்டாய்
அந்தநா ரதனும் நோற்க
அருஞ்சப்த ரிஷிகள் கோன்மை
அளித்தனை இன்னும் பல்போ
அடைந்தனர் பலனுன் நோன்பால்
எந்தையே அரசும் வேம்பும்
இணைந்தர்த்த நாரி ரூபம்
எண்ணிலா இடத்தில் காட்டும்
இணுவையம் பதியில் வேந்தே
கந்தமா மலர்கள் மேலாங்
கந்தமா மலராம் உன்றன்
கமலமா முகங்கள் தாமோ
கால்கண்டாற் போதும் வாராய்.
55✓
பழிமிகும் அசுரர் செய்யும்
பாதகந் தாங்காத் தேவர்
பணிந்தப்ப சியினில் நண்ணும்
பரிமளக் கந்தர் சட்டி
எழிலனுன் சரிதங் கேட்டும்
இனியபல் பூசை செய்தும்
இராப்பகல் ஒடுங்கி நோற்றே
இரங்கிடா அசுரர் வீழ்த்தி
முழுதுல காளும் பேற்று
முருகுனுன் வரம்பெற் றார்கள்
முழங்கிடும் உடுக்கொ லித்து
முற்றங்கள் தோறும் நின்சீர்
அழகுறப் பாடும் பக்தர்
ஆயிரம் பொன்னேற் கின்ற
அரும்பதி இணுவைச் செல்வா
ஆனந்தா அழகா வாராய்.
56✓
வேங்கைமா மரமாய் மாறி
வேடர்கள் மிரள நின்றோய்
வெள்ளிய தாடிச் சாமி
விருத்தனாய் மாயஞ் செய்து
தேங்குட நீல வள்ளி
சிங்காரம் பருகுங் கண்ணாய்
தீங்கனி தினைமா வள்ளி
தந்திடத் தின்றோய் விக்கி
மூங்கைநீங் காஅக் குமர
குருபரத் தவளை மூர்க்கர்
முருகுனைப் பாடித் தோற்கும்
மொய்ப்புனற் குளக்க ரைக்குள்
ஓங்கிணு வைத்த லத்தில்
உறுங்கந்த சட்டி நாட்கள்
ஓமென மயில்கள் பாட
உவப்பவா வருவாய் ஐயா.
57✓
ஓங்கிய மரங்கள் ஏறி
ஒண்மலர் பறித்து வந்தோர்
ஊறுமுட் செடிகொ டிக்குள்
ஒளிந்தலர் பூக்கொ ணர்ந்தோர்
பூங்குளப் புனல்புக்கு கேந்தும்
புதுமலர் கவர்ந்து வந்தோர்
புனிதமாய் இதயப் பூக்கள்
போற்றிட மறந்தால் அன்னார்
பாங்குறல் மறுக்கும் ஐயா
பக்குவர் பலர்மேல் நின்று
பயம்பிணிக் குறைதீர் பார்வை
பரிந்தருள் இணுவைக் கோவே
சாங்குசக் கரவா கம்ஒங்
கிடுமணற் குன்றா ழியதாய்
எழுமிச்சை அவுணர் மாள
எழுந்தருள் புரிய வாராய்.
58✓
புள்ளிமான் கூட்டம் சாமெப்
புனங்களில் ஊடே பாய்ந்து
புறப்படுஞ் சுனைப்பூஞ் சாரல்
பொழிமத யானை வாழும்
வள்ளியங் குன்றில் சோலை
வளர்தினைப் புனங்கா வல்செய்
வள்ளியின் அழகிற் சொக்கி
மரபினை உடைத்தெ றிந்தோய்
புள்ளொலி குளக்க ரைக்குள்
புலம்பெயர்ந் துறையும் வெள்ளம்
புந்தலைச் சிறுவர் கூடிப்
புணையென மிதக்குஞ் குற்றி
வள்ளங்கள் ஏறி யாடும்
மலிவள இணுவை வேந்தே
மண்டுநர் நின்றன் கீர்த்தி
வாழ்த்துநர் களிக்க வாராய்.
59✓
காங்கேய தழுவ நீயுன்
காந்தமேந் தழகு வள்ளி
கானவர் கோனாந் தந்தை
கதிர்தினை முற்றிற் றென்று
வேங்கையில் விரிந்த பூக்கள்
விளம்பின விடுக காவல்
வீடுவா என்ற போது
வீழ்ந்திடி நெஞ்சில் தாக்க
ஏங்கினள் அதுபோல் உன்னை
எங்குகாண் போமோ என்றும்
இன்னலுற் றழுங்கா வண்ணம்
இங்கெம்முன் எழுந்து நிற்போய்
ஓங்கிய மருதும் செந்நெல்
உறும்பசும் வயலும் இங்கும்
உண்டென மருதங் கூறும்
ஒள்ளிணு வைச்சேய் வாராய்.
60✓
மாயையாங் கைவி ளக்கின்
மயங்கிய வெளிச்சந் தன்னில்
மலங்கடி பிறவி நூறு
மண்ணிடைத் தாங்கி ஓங்கி
தூயநின் னருள்வெ ளிச்சந்
துணைசெயத் தனைய றிந்து
தொடேனொரு கன்மம் முன்பு
தொட்டவை பொறுப்பாய் என்று
தாயநின் னடியார் கூட்டஞ்
சங்கமித் துன்னில் மூழ்கி
தரிசனம் தரநீ பெற்றுன்
தாளிணை நெஞ்சம் வைத்தார்
கோயில்கொண் டிணுவை யூரில்
குவலயம் முழுதுங் காக்கும்
கோலமா மயில்மேற் சேவற்
கொடியனே குழகா வாராய்