இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
ச.வே. பஞ்சாட்சரம்
சிற்றில்பருவம்8 / 10
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் · ச.வே. பஞ்சாட்சரம்
சிற்றில்பருவம்
71✓
குலம்விட்டு வேறு குலத்தாளவ் வள்ளிக்
குறத்திப்பின் சென்ற கதையைக்
குறையாகப் பேசிக் குளிர்ந்தோமோ எங்கள்
குருவாகுங் குழந்தை அழகா
பொலந்தெய்வ யானைப் பொற்பாவை தன்னைப்
பொலிதார மாக மணந்தும்
புலந்தாயவ் வள்ளிப் புனக்காமக் கிழத்தி
புகற்கென்றும் நாங்கள் பழிக்கோம்
தலங்கோடி உண்டித் தரணிக்கு ஞன்னைத்
தமிழ்பாடி யாடி வணங்க
தவிப்பார்கள் உன்றன் தரளங்கொள் மேனி
தனைக்காண என்றுஞ் செல்வோய்
மலஞ்சாய ஆன்ம வளஞ்சேர நோற்று
மகிழ்மக்கள் இணுவைச் சேயே
வைரங்கள் போல மலியுன்றன் வீதி
மணலில்தம் சிற்றில் சிதையேல்.
72✓
வியப்பாக உன்றன் விழாக்காலம் வந்து
மிகத்தாழ்வி னோடு நடப்போம்
விளையாடி ஓடி மிகும்பத்தர் ஏத்த
விளைத்தோமோ ஊறுன் தளியுள்
நயப்பாக உன்றன் நறுங்கோலங் கண்டு
நாமுன்னைச் சுற்றித் தொழுவோம்
நவின்றின்னல் வார்த்தை நல்வாக எங்கள்
நடித்தோமோ ஏறி மிதித்தே
உயத்தானே எங்கள் உயர்தந்தை தாயர்
உனைப்பூசை கண்டு தொழுவார்
ஊர்வம்பு பேசி உன்கோயில் தூய்மை
ஊறெய்தச் செய்வ துண்டோ?
பெயலார்ந்த வெள்ளப் பெருவீதி மண்ணில்
பெண்மக வினங்கள் சேர்ந்தோம்
பிழையாத பக்திப் பெருமக்க ளிணுவைப்
பிள்ளாய்தம் சிற்றில் சிதையேல்.
73✓
குமரிப்பொன் தீர்த்தம் குளித்தாடி முத்தி
கூர்நோன்பு செய்ய வந்தாய்
குறிஞ்சிக்குள் வள்ளிக் கொடித்தந்தை மாட்டுக்
கூறுன்பொய் பற்றிப் பறையோம்
அமரர்க்கு மீட்சி அளிக்கும்உன் கீர்த்தி
அழகா எங்கும் உரைப்போம்
அடிமைக்குக் கஞ்சி அரையாடை நல்கும்
அழிமாந்தர் போல அன்றி
உமர்த்தொண்டர் உண்மை அடியார்க்கு மண்ணில்
ஒளிகாலுஞ் செல்வம் வழங்கி
ஒப்பற்ற கூலி உச்சமான முத்தி
உவந்தீயுங் கருணைக் கடலே
எமைக்காக்கும் இன்ப எசமான வேல
இணுவையம் பதியில் வளரும்
இளஞாயி றாறில் இருள்வண்டு பூத்த
எழிலானஞ் சிற்றில் சிதையேல்.
74✓
அழகன்நீ ஆடும் அபிடேகம் வேண்டும்
அருஞ்சாதி இளநீர்த் தென்னை
அரும்பாக்கு மரங்கள் ஆக்கள்செங் கரும்பு
அந்தோடை மாது ளைகள்
செழுவாழை பலவு தேன்மாக்கள் ஓம்பும்
திருவூரெம் மிணுவில் சிறுவா
தீத்தந்தை தக்கன் சிந்தைக்கு மாறாய்த்
திரிநார தன்சொல் கேட்டோர்
வழிபாடு செய்து வான்முத்தி பெற்ற
வழிநாடு மகளிர் இணுவை
மயிலாடுஞ் சேயே மணல்வாரி நாங்கள்
வந்திங்கு கூடி அமர்ந்தோம்
ஒளியாடும் பூக்கள் உன்காலில் வைத்த
உன்னன்பர் சிற்றில் சிதையேல்
உன்வீதி தன்னில் ஒளிர்பள்ளி கற்கும்
உன்னன்பர் சிற்றில் சிதையேல்.
75✓
தீவர்த்தி தாங்கித் திகழ்சங்கம் ஊதித்
திருக்கீர்த்தி பாடி அமுதுத்
தேன்பொங்க லிட்டுத் திருமாலை கட்டித்
திருமண்ட பங்கள் கழுவி
தேவர்க்கு நேர்ந்த சிவநிந்தைத் தண்டம்
சேராத வண்ணம் பணிந்தும்
சீலங்கொள் நெஞ்சர் சிவநிந்தைக் தக்கன்
தீயாய் எதிர்த தீசி
மேவற் கொணாத வெறிப்பக்தி தீரம்
விளைகின்ற தன்மை பூண்டும்
விரிதோளில் உன்னை விருப்போடு காவி
வெள்வீதி சுற்றுந் தொண்டர்
கோவிற்குள் மிஞ்சுங் கொழிசீர்நல் லிணுவைக்
குடிகன்உன் மோட்ச உலகம்
குடியேறும் ஆவல் கூர்த்தார்கள் அன்புக்
குருவேநம் சிற்றில் சிதையேல்.
76✓
தண்ணீர்ப்பந் தல்கள் தகுமன்ன தானம்
சால்தொண்டு செய்தும் உன்றன்
தழைபுல்லின் வீதி தனைச்சுத்தஞ் செய்தும்
சருகள்ளி மஞ்சள் தெளித்தும்
புண்ணாகக் கைகள் பூந்தோட்டங் காத்தும்
பூசைக்குப் பூக்கள் அளித்தும்
பொன்னள்ளி வீசிப் புதுமண்ட பங்கள்
பொலிகோவிற் பணிகள் முடித்தும்
விண்ணோரின் தஞ்ச வேலன்உன் கீர்த்தி
விரிகந்த புராணம் படித்தும்
விளக்கிப் பயன்கள் விருப்பமா யமர்ந்து
விழிநீர் பொழிந்து கேட்டும்
உண்ணாமல் நோற்றும் ஓங்கிணுவை வேந்தன்
உன்பாத மோட்ச உலகம்
உறுங்காதற் குரவர் உவப்போடு காக்கும்
உயர்பெண்கள் சிற்றில் சிதையேல்.
77✓
உனக்கன்பர் நல்கும் உயர்காணிக் கைகள்
உறுபக்தர் நல்கும் நிலங்கள்
ஒருபோதும் ஆள எண்ணார்நம் ஊரர்
உன்தாளே போற்றும் அடியார்
எனக்கோயி லுக்குள் வருமுன்றன் ரூப
வார்தேனி லாடுங் களியர்
“வைத்தேத்து பூக்கள் வணங்கையன் கால்கள்
வைகறைகள் மாலை” என்று
கனிச்சொல்லி லூக்குன் காந்தர்நம் பெற்றார்
களித்துன்றன் வீதி மணலில்
கணக்கின்றிக் குந்திக் கவின்வீடு செய்வோம்
கயிலாய நாதன் புதல்வா
வினைத்தீயன் தாரு கனைமாமன் விஷ்ணு
வெல்லரிய வீரன் தன்னை
வீழ்த்திட்ட வீர மிகுந்தொண்டர் இணுவை
வேந்தேநம் சிற்றில் சிதையேல்.
78✓
நெல்லாலை ஓசை நெசவாலை ஓசை
நெய்யாலை ஓசை பண்டு
நிமலன்சொல் வேத நிறையாக மங்கள்
நெஞ்சாரக் கற்கும் பள்ளிச்
சொல்வோசை நீரைச் சொரிஎந்தி ரங்கள்
துடியோசை சுருட்டு வெட்டித்
துண்டாடும் ஓசை சுகவாத்தி யங்கள்
சுவையோசை மண்டு மிணுவைக்
கல்லால நீழற் கவின்யோகி செல்வ
கடவுள்இப் பாரில் கொஞ்சம்
களிவைத்துத் துன்பம் கடலாக வைத்தல்
கருணையோ என்று குழம்போம்
இல்லாத தொடக்கம் எமைப்பற்றும் பாச
இடர்மலந்த னாலே துன்பம்
இவைவீழ்த்தி இன்பம் ஈவைநீ என்றே
ஏத்தெங்கள் சிற்றில் சிதையேல்.
79✓
பிருந்தைப்பேர்க் கீர்த்திப் பேரழகுப் பெண்ணில்
பேரிச்சை கொண்ட திருமால்
பிறன்பெண்டிர்க் கூடற் பெருங்குற்றம் பாரான்
பித்தாகி மோக வெறியால்
கரந்தன்ன வள்தன் கணவன்கொள் தோற்றம்
களவாக அவளைத் தழுவிக்
களிகொண்ட னாளைக் களிவெள்ள மாட்டிக்
கபடம் வெளிக்கப் பதைத்த
பிருந்தைதன் சாபப் பெருந்தீட்டை ஏற்றுப்
பிறந்தா னிராமன் சீதை
பிறன்கொண்டு போகப் பேயா யலைந்தான்
பிழைசெய்யில் இறையும் அழிவே
அருந்தத்து வத்தை அறிந்தோர்ஓர் குற்றம்
அணுகாது வாழும் இணுவை
அரும்பக்தர் எங்கள் அருட்பெற்றார் காக்கும்
அழகாநம் சிற்றில் சிதையேல்.
80✓
பார்முற்றும் அண்டப் பரிபூர்ணம் ஒன்று
பதிமட்டும் என்ப துணர்ந்தோர்
பழிணக்க யார்க்கும் பலவீனம் ஒன்றுட்
பகையாக நிற்ப துணர்ந்தே
கூர்ரொங்கை மாதர் குவிசெல்வம் பூமி
குலவாசை கோடி தமில்தாம்
கூசாமல் கோடி பழிசெய்யத் தூண்டிக்
குழிவீழ்த்தும் அவைகள் தெரிந்தே
யார்யார்க்கும் உய்தி அருள்வோயுன் கால்கள்
அணுகாத வைகல் இனிமேல்
அரணாக நிற்கும் அருண்வேண்டி உன்றன்
அடிமீது நெஞ்சம் அழுத்தி
ஊர்தோறும் நின்றும் உரவோருன் பக்தர்
ஓடோடி வந்து தொழுவார்
ஒளிமாட வீதி உயரிணுவை வேலா
உன்அன்பர் சிற்றில் சிதையேல்.