இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
ச.வே. பஞ்சாட்சரம்
முத்தப்பருவம்5 / 10
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் · ச.வே. பஞ்சாட்சரம்
முத்தப்பருவம்
41✓
அங்கமே வேள்வியின் அழலெரிக் கிடங்கிலே
அறிந்தெறி வைர பக்தி
அல்லலோ அசுரரை ஆண்டவன் மெச்சிநல்
அருவரம் நல்க வைக்கும்
உங்களின் உள்மனம் ஒருமனம் ஆகவே
உறுதியாய் வேண்டிட முத்தி
உதவுவேன் என்பவா உருகிவா என்பவா
உந்தருள் கந்த வேளே
தெங்கின்ஓர் ஓலையே செவ்விய குடிசையாய்ச்
செழுநிழல் பரப்பி நிற்கும்
தென்னையந் தோப்புக்கள் திக்கெலாம் பொங்கிடும்
திகழ்பதி இணுவை வேலா
கங்கைவார் சடையனும் களியுமை கணங்களும்
கணக்கிலா அன்ப ருயிரும்
கனியிதழ் முத்தமுண் கனவுறுஞ் சிலிர்ப்புறக்
கருணைகூர் முத்த மருளே.
42✓
குறிவைப்பர் மெய்யெலாம் குழம்புவர் நெஞ்சமோ
குறிவைக்கும் உலக போகம்
குமிழ்மிதி தடியிலே குருக்களாய் உலவுவர்
குமிழியிடும் நெஞ்சில் நஞ்சு
நெறியிலா இவர்குரல் நெருங்கருஞ் சந்நிதி
நிமலனே நெருங்கு பவள
நிறவெங்கா யப்பயிர் நிறைபுனம் இருந்துமே
நின்புகழ்ப் பாடல் கேட்கும்
செறிபனை கமுகுகள் தெளிநிழல் இணுவையில்
சேந்தனே சிந்தை முதலே
சிறைவிடத் தேவரைத் தீரமாய்ப் பொருதவா
செந்திலாய் கந்த வேளே
மறிகடல் திரையினில் மலிந்தெழும் குமிழ்நுரை
முத்தென வாரி வாரி
மாய்ந்திடும் மூடரும் வான்முத்தி எண்ணவே
மந்திர முத்த மருளே.
43✓
மஞ்சமொன் றாக்கியே மகிழ்ந்துநின் னருள்பெற்ற
மாதவச் சன்யா சியார்
வாழ்ந்தமஞ் சத்தடி மாதவத் தலத்திலும்
மன்னியருள் புரியும் வேலா
பஞ்சுவளர் பருத்தியடைப் பானபதி செகராசப்
பழமன்னன் பண்ட மைத்த
பதியமரு வேழமுகன் பாங்கமர்ந் தோய்அரசன்
பரராச சேகரன் தன்னால்
மிஞ்சுபழம் உதிரமர விளாத்தியடி நிறுவுற்ற
விநாயகன் அருகில் கொண்டோய்
விம்முமுலை சுரந்தூட்ட விரைந்தணுகு மண்மையினை
வேண்டியிணு வில்அ மர்ந்த
செஞ்சொலருள் சிவகாமி சிதம்பரநல் வளவிலுள
திருக்கோயில் நீங்கி வருவாள்
சிவதேவ கணஞ்சூழஞ் சீரிணுவைப் பதிவாழுஞ்
சேந்தனே முத்த மருளே.
44✓
கல்லிடை அமர்ந்துயர் கடுந்தவஞ் செய்துமே
காசிபன் என்ன ஆனான்?
கண்கவர் பேரெழிற் கன்னியாம் மாயையின்
கவர்ச்சியால் தவமி ழந்தான்
இல்லறத் தாருகா எழில்வனத் திருடிகள்
இழிந்தனர் மோகி னியினால்
இழிதகை மனிதரில் இடர்விலங் கேற்றமே
இன்றவத் துறவுக் கென்றே
செல்லினும் வனமிடர் சேரலாம் என்றுன
செந்திருப் பாதம் நீங்கார்
திண்பிரம சாரியர் செய்தவங் காப்பவா
சேவலங் கொடியு யர்த்தோய்
வெல்கவி வல்புலம் வீறுணும் புலவர்கொள்
மேன்மைபொங் கிணுவை நாதா
வெந்துமல பந்தத்தின் மீண்டுவரு மடியர்க்கு
விடிமுத்தி முத்த மருளே.
45✓
பழமரச் செல்வரே பரமெனப் பணிந்திடும்
பலவௌவால் பக்தி யாலே
பழமரச் செல்வரும் பரங்களே தாமெனப்
பரிணமித் திருப்ப தாலே
தொழுவெனோ மனிதனைத்தூவென்போர் உன்னையும்
தொழுமறந் திருப்ப தாலே
தொழுபவர் குறைந்தீடுஞ் சோறுணி உலகிலே
தொழுபவர் மலியு மிணுவில்
அழகன்நீ தினமுறும் அபிடேகச் சோம்பைகள்
அள்ளுமாற் சனைம லர்கள்
ஆடுகள் மந்தைமேய் அருவியுஞ் சாரலார்
அகில்கமழ் குன்ற மாகும்
செழுமையார் நொச்சியில் திகழருட் செல்வமே
தித்திக்கும் முத்த மருளே
செங்கனி வாய்மலர்த் தேறலின் தண்ணெனும்
சிந்துதுளி முத்த மருளே.
46✓
வள்ளியைத் தழுவினை வவ்வினை அவள்நலம்
வருந்தநீ பிரிந்து நின்றாய்
வாடினள் சோர்ந்தனள் மலர்விழி அலமர
மயங்கினள் என்று காக்கக்
கள்ளமாய்க் குறிச்சிபோய்க் கவர்ந்துசென் றிருளிலே
களிப்புனல் நீச்ச லிந்து
கட்டிலங் காளையாய் நின்றவா கார்மழைக்
களித்தோடும் மாரி வெள்ளம்
அள்ளிப்பன் னிறமலர் ஆடையாய்ப் போர்த்துடல்
ஆடிவந் துணைவ ணங்கும்
அயல்பல ஊரிருந் தடியவர் சூழ்ந்திடும்
அண்ணலே இணுவை வேலா
உள்ளதேல் இனுமினும் உலகிடைப் பிறவிகள்
உன்னடித் தொண்ட ராகும்
உத்தமப் பிறவியே உதவிடென் றழுகிறோம்
ஓகையார் முத்த மருளே.
47✓
காசுண்டு நிலமுண்டு கடையுண்டென் றெணிவந்து
கடவுளுண்டு எண்ணம றப்போர்
காசில்லை சொத்தில்லை காணியில் லையென்று
கடவுளும் இல்லை என்போர்
மாசுண்ட மலங்கெட்டு வளர்தூய நெஞ்சினார்
வள்ளல் நீஉண் டென்பராய்
வளமென்ப முழுதுண்டு மனச்சாந்தி யுடனோங்கு
வல்தவம் மூழ்கு மிணுவைத்
தேசுண்ட பதியனே திருநந்த வனமெனத்
திகழ்பெரும் வளவி லெல்லாம்
சிறுசிறு மனைகளில் சிறந்துறை தபசியர்
தினந்தினம் வணங்கு மழகா
வாசங்கள் மலியுன்றன் மலராறு முகமேவு
வடிவூறும் அமுத வாயால்
வானேந்து முத்திக்கு வழங்கச்ச வாரமாய்
வளமோங்கு முத்த மருளே.
48✓
காசிபத் தந்தைசொல் கடவுள்தர் மங்களைக்
கண்டித்த மாயை அம்மாள்
காட்டினள் அண்டங்கள் கட்டியாள் ஆசையை
கண்ணிலா அசுரர் நம்பி
ஏசிடப் படும்படி இழிந்தனர் அழிந்தனர்
இன்றும்அன் னவர்அ னந்தம்
இன்றுபல் தாயர்கள் இருப்பதால் மாயைபோல்
இளவலே ஆடல் கொள்ளில்
தேசுறும் பொறியில் சேவல்கள் கோடியாய்ச்
சேர்ந்திடும் விடுக வேண்டாம்
தென்றலே உலவிடுஞ் செங்கதிர் நுழைவருஞ்
சிவவனங் காரைக் காடு
மாசறு தவவனம் மன்னிடும் இணுவையில்
மகிழ்ந்துறை மஞ்ஞை வேலா
மங்கலம் மின்னிதழ் மலர்பன்னி ரண்டினால்
வானேறு முத்த மருளே.
49✓
மந்திரம் தந்திரம் மாயங்கள் கட்டலாம்
மனிதரை மனித ருள்ளே
மன்னுனக் கடியவர் தம்மையுங் கட்டவோ
வாழ்வருன் அடிமை யானோர்
சுந்தரக் கடவுளே சூரனப் போரிலே
சூழ்ந்தமந் திரங்கள் மாயம்
தூரசெனத் துத்தவா தொல்வரஞ் சாய்த்தவா
தூர்ந்திட மலர்கள் மாரி
செந்தகர் வாகனஞ் செய்கையில் உனக்கெனச்
சென்றவ்வா சாரி கனவில்
சீரிணு வையன்நீ திருந்திய கொம்புகள்
செய்கொடி உள்ள தானம்
விந்தையாய்க் காட்டினை மெய்க்கன வின்படி
வெட்டியே கொம்பு செய்த
வீரமா எழில்தகர் விளங்கூர்நி கொண்டவா
விளையாடி முத்த மருளே.
50✓
வலிமைகெட் டாணவம் மலைதிட்டி யாய்க்கன்மம்
மாயையொழிற் பாடு வற்றி
வருத்தும் அவாவெகுளி வஞ்சனை அச்சமொடு
மனச்சஞ்ச லங்க ளற்று
நலிவுகள் ஓய்ந்துயிர் நண்ணடக் கத்திலே
நகைபூக்க இனிய சாந்தி
நாடியெழு வைப்பவா நான்யா ரெனும்வினா
நல்குவோய் நற்ற ரிசனம்
நிலைபெற நித்தமும் நின்நிலா னந்தமே
நீங்குபசு வினைகள் பேணு
நின்மல நிலைசரண் நிற்குவேன் நாம்என
நெஞ்சிலே கூறி நிற்போய்
கலியுகக் கடவுளே கருணைபூண் விழியனே
கனகவேல் தாங்க வந்தோய்
கலைமலி இணுவையில் களித்துறை அழகனே
கனிந்துயர் முத்த மருளே.