இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
ச.வே. பஞ்சாட்சரம்
சப்பாணிப்பருவம்4 / 10
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் · ச.வே. பஞ்சாட்சரம்
சப்பாணிப்பருவம்
31✓
அடியார் சாமரை வீசிநிற்க
அலைவாய்ச் செந்தில் தனிலுனக்காய்
அடடா உங்கள் சாமிக்கும்
அங்கம் வியர்க்கு மோஎன்றே
இடியாய்ச் சிரித்த வெள்ளைமகன்
ஏங்கி அதிரும் படியுன்றன்
எழிலார் மேனி வியர்த்தவனே
ஏத்த அவனும் இருந்தவனே
உடுசூழ்ந் திலங்கும் நிலவொளியில்
ஓலைக் குடிசை முற்றங்களில்
ஓடியற் கூழைச் சூழ்ந்துகுந்தி
ஊதிக் குடிப்போர் இணுவிலிலே
வடிதேன் மலராம் உன்கோயில்
வண்டாந் தொண்டர் சுற்றிவலம்
வந்து பாடக் கைத்தாளம்
வழங்கிக் கொட்டுக சப்பாணி.
✓
கொடுப்பார் சிவனார் உமைமூலம்
குகனை என்றண் டர்நம்பிக்
கூடாச் சூழ்ச்சி பலபுரியக்
கொடுத்தார் நெற்றிப் பொறியாக
வடக்கு வாசல் வழிவருவாய்
வாட்டந் தீர்க்க என்றங்கு
வழிபார்த் தவனாய் நானிருக்க
மற்றோர் வழியால் வந்தருளி
இடுக்கண் நீக்கிச் செல்பவனே
இன்ப மயிலாய்ச் சிறுவடலி
எழில்பல் தோகை விரித்தாடும்
இணுவைப் பதியில் பேரரசே
மிடுக்கர்ர் ஆறு முகவேளே
மின்னல் கோடி உருக்குருவாய்
விளங்கும் மேனி வீற்றிருந்து
மெல்லக் கொட்டுக சப்பாணி.
✓
தில்லை மன்றுள் திருநடம்
சிவனார் செய்த தைப்பூசத்
திருநாள் ஒன்றில் சிவனேவச்
செல்லுங் காலைப் போர்க்கன்னை
வெல்லுஞ் சக்தி ஞானவேல்
விரும்பி நல்கக் கொண்டவனே
வேதந் தெளியா மெய்ப்பொருளே
மெய்யன் பர்க்கோ எளியவனே
நல்லை மாவை சந்நிதிசூழ்
நறுந்தேன் காட்டுக் கதிர்காமம்
நலமார் இணுவைத் தொல்பழ
நகரந் தோறும் குடிகொண்டாய்
கல்லாங் கள்ள மனம்நெக்குங்
கனியாய் உருக்குங் காந்தஅருட்
கடலே முள்ளில் மலர்செய்த
களிப்பில் கொட்டுக சப்பாணி.
34✓
அகிலம் போற்றும் வைத்தியரும்
அகற்ற முடியா நோய்தீர்ப்போய்
அடிமை முழுமை யாயுனக்கே
ஆக்கிப் பிறவி நோய்தீர்ப்பாய்
முகில்கீண் டோங்குங் கோபுரத்து
முகில்புக் குலவும் மாடங்கள்
முத்தி வேண்டித் தவஞ்செய்யும்
மோன முனிவெள வாலொருகால்
சுகமாய் முருகா எனக்கூவும்
சொர்க்கப் பதியாம் இணுவிலிலே
சொக்குங் கமல முகமாறு
சுடர்ந்து பொலியுந் திருமேனி
பகலாய் விளங்கி மின்னலிடப்
பக்தர் பாவம் தீர்ப்பதிலே
படைத்த வெற்றி உலகமெலாம்
பகரக் கொட்டுக சப்பாணி.
35✓
அடுக்கச் சாரற் கொடிவள்ளி
அகழ்ந்த கிடங்கிற் கிடந்தன்பாய்
அள்ளி யெடுத்த வேடர்குலம்
ஆண்ட கொடிக்கும் ஆண்டவனே
நெடுத்த மஞ்சம் செய்வித்து
நின்றன் கோயில் கொண்டுவர
நின்ற சன்னி யாசிக்கு
நேர்வழி திறக்குஞ் சன்னதமும்
கொடுத்தோய் அன்னப் புள்வெள்ளைக்
குதிரை நான்கு பூட்டியந்தக்
கோல மஞ்சம் உலவிவரும்
குமரா சூழ ஆகாயம்
இடிக்குங் கலசத் தளிசூழும்
இணுவைக் கொன்பொன் னில்கடைந்த
ஈரா றங்கை சிவந்தொளிர
இனிதாய்க் கொட்டுக சப்பாணி.
36✓
அடைய முத்தி அழு வோர்க்கே
அருள்வேண் முதலில் என்பான்போல்
அண்டர் அவுணர்த் தெறல்வேண்டி
அழுது தொடர்ந்தும் ஆர்வமுறான்
முடிய வேதந் தெரிந்துதவம்
முனைந்தும் மனமொடுங் காமைசொலி
முன்னின் றழுத சனகாதி
முனிவர்க் கருள ஞானபதம்
நெடிய கல்லால் நிழல்சார்ந்தோன்
நிதியே இமயச் சிகரமிசை
நெடுங்குன் றம்வைத் துச்சிரிநின்று
நிலமண் டஞ்ச ராசரங்கள்
திடமாய்க் கேட்க ஆனந்தஞ்
சேர வாரீர் முருகனடி
சீவர்க ளேயென்று கூவோமோ
சீரினு வையஒலி சப்பாணி.
37✓
மறையவர் இல்ல வரிசைகள்
மங்கள இசையோர் மாளிகைகள்
மாதவன் பூசை மலர்சேர்க்கும்
மாலைத் தொழிலர் குடியிருக்கை
இறையவன் உன்றன் தளியருகில்
இருத்திக் காக்கும் இணுவையையா
இரங்கி அருள்கூர் ஒள்விழிகள்
இலங்கி மயக்கும் உன்னழகு
மறுவில் ஆறு நிலவூறி
மங்கல மோங்கும் புன்முறுவல்
மதிக்கீற் றன்ன குளிர்விரல்கள்
வண்டாய்த் திரியும் மலர்விழிகள்
நிறைந்து வழிய நம்நெஞ்சில்
நீட்டும் இன்பத் தேன்மாரி
நிமிரா வண்ணம் நம்மலங்கள்
நிமலா கொட்டுக சப்பாணி.
38✓
தோன்றாக் கொடுங்கோல் ஆணவனார்
சூக்கும அரசின் கையாளாய்த்
தொடுவோன் பழிகள் பின்னந்தத்
தொடர்பால் இருளார் வாங்குமடி
தான்கூ டத்தான் படவேண்டும்
சரியில் லாத நாடகத்தில்
தானுந் தொடர்ந்தும் நடிக்காமல்
சரவண சரணம் என்பானேல்
தேன்பாய் அருளால் காப்பவனே
சிவனை இகழ்தக் கன்வேள்வித்
திளைத்த சிவநிந் தைதன்னைச்
செய்த தேவர் திகழ்ச்சாட்சி
ஈன்ற தம்புத் திரரிருந்தும்
இருஞ்சொத் துனக்கே எழுதல்பர்
இணுவைச் சேயே பெருஞ்சொத்தே
இனிக்கக் கொட்டுக சப்பாணி.
39✓
பதிகம் கோவை கலிவெண்பா
பள்ளு புராணம் பிள்ளைத்தமிழ்
பாமா லைபோற் பொன்கலங்கள்
பலவும் அள்ளிக் குறையாத
அதியற் புதம்வீ றருட்கடலே
அன்று வார்க்க வார்க்கஉரு
அமையா ஆறு முகமையர்
அகத்தாள் தாலி உருக்கியிட்டுப்
புதிதாய் மீண்டும் வார்த்திடவே
பொலிந்து மங்கள எழில்பூண்டு
பூத்தாய் இணுவைப் பதியினிலே
பொய்க்கா உன்றன் அருள்பெற்றால்
எதுதான் இன்பம் இலைவாழ்வில்
இல்லை யானால் உன்கருணை
எதுதான் உண்டு வாழ்வினிலே
எழிலா கொட்டுக சப்பாணி.
40✓
படைபடை யாகப் பாசங்கள்
பற்றுண் டழுங்கும் ஆன்மாவைப்
பலபல பிறவிச் சலவையிலே
பக்குவ மாக்கி விதவிதமாய்
உடலுளம் போகம் நல்கெழிலா
ஒரறி வையறி வாற்றிவாய்
ஓரா யிரந்தரம் பிறந்தீற்றில்
ஓங்கிய மனிதப் பிறவியிலும்
கொடுமா ணவத்தின் கூத்தாகக்
கோடி கன்மம் ஆற்றியதால்
கோடி அவலம் ஆணவத்தின்
கூர்கெட நுகர்ந்த பரிசுத்தஞ்
சுடர்ந்து மெல்லத் துலங்குயிர்க்குத்
துன்பம் முழுதும் ஆணவத்தின்
தொடர்பா லெனும்ஞா னம்ஊட்டுந்
தொல்லிணு வையெனொலி சப்பாணி.