முருகன் App
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
ச.வே. பஞ்சாட்சரம்
சிறுபறைப்பருவம்9 / 10
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் · ச.வே. பஞ்சாட்சரம்

சிறுபறைப்பருவம்

81✓
உன்னைநி னைத்துநி னைத்த விசைப்பினில்
உள்ளம் நினைத்ததெல்லாம்
உந்த அளிப்பவ உட்கு மனத்துயர்
ஓடிட வைப்பவனே
இன்ன பெயர்ப்பட என்னைய ழைத்தமர்
என்றென்னுள் சொன்னவனே
எண்ணிடும் வேளைகள் ஏறு மயில்மிசை
என்னுள் ஒளிர்பவனே
முன்னை வினைப்பயன் மூளு நுகர்ச்சியில்
மூழ்கு வெறிப்பினிலே
முத்தி கெடுத்திடும் மோசப் புதுவினை
முற்றல் தடுப்பவனே
துன்னு மொலிக்குலத் துள்ளிடுந் தொண்டகம்
தூக்கினை கைகளினால்
துந்துமெ னப்பறை தொட்டொலி கொட்டுக
தொல்லிணு வைக்குகனே.
82✓
ஈரெழில் மங்கையர் எய்திட உன்னையே
இன்தவம் பூண்டிருந்தார்
ஏங்குமு தவல்லி சுந்தர வல்லி-மால்
ஈந்தப சுங்கிளிகள்
கூரெழில் வேலனே “கொள்கவரம்” நல்கிக்
கோதையர்ப் புல்லியவா
கோடி கொடுக்கினுங் கொஞ்செழிற் கற்பினைக்
குன்றவிடல் அழிந்தேன்
யாரையென் அன்பும் அன்று நினைந்ததோ
அன்னவ னையடைய
ஆண்டவ னேயருள் அல்லது கொல்லென
அங்கனி வஞ்சியர்கள்
வீரியக் கற்பினர் விஞ்சிய வேண்டுதல்
வெல்ல வருள்சுரந்த
வெற்றிமு டுக்கென வீங்குப றைகொட்டு
விண்ணிணு வைக்குகனே.
83✓
மைகறை போல்நிறம் வால்மிட றெய்திட
வானவர்க் காத்தருளி
மந்தர மத்திடை வண்கடல் மீமிசை
வந்தநஞ் சுண்டவர்சேய்
பொய்கறை தேய்ந்தொளிர் புண்ணிய நெஞ்சுகள்
பொற்றளி புக்கெழுவோய்
பொங்கருள் மாமழைப் பூப்புன லாடுநர்ப்
பொழிபவ நீளிளமை
வைகறைப் பூசையை மாண்புறக் காண்பவர்
மங்கல வாழ்த்திசைப்போர்
மாந்தர்பல் கோடியே மாறி எதிர்க்கினும்
வள்ளல்நீ ஏற்பசெய்வோர்
தொய்வறு பக்தியர் தொல்பதி வாழ்வோருன்
சொற்படி ஆடிடவே
துந்துமெ னப்பறை தொட்டொலி கொட்டுக
தொல்லிணு வைக்குகனே
84✓
கந்தம லர்வைத்துன் கால்கள் வணங்கிடும்
காதல்மி கும்புதல்வர்
காந்தன்நீ யேயுண்மைக் காத்தருள் தந்தைஎம்
கர்த்தன் எனும்தலைவர்
சொந்தம் தனக்குண்மைச் சொத்தென உன்னருள்
தோத்தாரிக் கும்மனையாள்
துய்த்திடத் துய்த்திட உன்றினை வேதரும்
சொர்க்கசெல் வஞ்சுகங்கள்
சுந்தர மாயுன்றன் சுந்தர எண்ணமே
தூண்டத்தற் காண்பவர்க்குச்
சொக்கிலந் தோற்றம்உன் தொண்டருக் கீபவ
சோர்வில் நிமிர்ச்சியனே
தொந்தி பருத்திடச் சூர மனங்கொண்டு
சோரஞ்செய் வோர்திருந்த
துந்துமெ னப்பறை தொட்டொலி கொட்டுக
தொல்லிணு வைக்குகனே.
85✓
உள்ள புவிச்சனம் உன்னை வணங்கியுன்
ஓங்கருள் பெற்றுவிடில்
உத்தம முத்தியை உற்றுப்பல் கோடிபேர்
ஓடுவர் மோட்சம்பூமித்
தள்ளரும் பாரமும் சாய்ந்திடும் இந்தநல்
சால்புறு மார்க்கம்நம்பார்
தாழரு புத்திர பாக்கியம் என்பவற்ச
சாந்தி தரஇயலார்
பிள்ளை குறைத்துமே பெண்மை அழித்துமே
பிரமனை மட்டுமல்ல
பேரிறை யுன்னையே பேயெனப் பார்க்குமப்
பேயரை எள்ளியநாம்
துள்ளுங் களிப்புடன் சொர்க்க சுகம்பெறல்
தொல்புவி கண்டிடவே
துந்துமெ னப்பறை தொட்டொலி கொட்டுக
தொல்லிணு வைக்குகனே.
86✓
புண்ணிய மண்ணெனும் பொன்னிணு வைதரும்
புத்திரர் புத்திரியர்
பொன்விலங் கில்லறம் பூண்டய லூர்களில்
போய்ப்புக்கு வாழ்க்கையிலும்
நண்ணிநின் றன்னிய நாடு நகர்களில்
நற்றொழில் செய்கையிலும்
நாடி யழைத்திட நண்ணிய வர்க்கங்கு
நல்லருள் தூர்ப்பவனே
கண்ணிமை யாமலுன் கால்தொழு விண்ணவர்க்
கண்ணிமை போற்புரப்போய்
கட்டஉன் கோயிலை கல்மணல் உன்னருட்
கால்நிதி யாய்ச்சுமப்போம்
துண்ணெனு முன்மணி தொக்குநின் றேத்தியுன்
தூயபூ சைக்களிப்போம்
துந்துமெ னப்பறை தொட்டொலி கொட்டுக
தொல்லிணு வைக்குகனே.
87✓
ஆறடி மண்ணிலுன் ஆக்கை எரிந்திற
ஆவியெங் கேயடையும்
ஆகியே பக்குவம் அனுபவித் தெஞ்சிய
அக்கன்மப் பேறடைய
வேறொரு மெய்புக்கு மீண்டிடு வாயிங்கு
மீண்டும்மீண் டிப்படியே
வீணலைச் சற்பட வேண்டிய தோசற்று
விட்டு மனத்தவிப்பை
ஆறுநி தானமாய் அமர்ந்து நினையென்னை
அறைதல்போல் ஆறுமுகன்
ஆனச ரவண ஆன்மாக்கள் தூங்குவ
அகிலமாந் தர்மக்கு
தூறுக்குள் புள்ளெனத் தள்ளியே பாய்ந்துடன்
தூக்கங் கலைந்திடவே
துந்துமெ னப்பறை தொட்டொலி கொட்டுக
தொல்லிணு வைக்குகனே.
88✓
பத்தென நூறெனப் பக்தர்கள் கூடியே
பாற்செம்புக் காவடிகள்
பாய்செதில் மேனியர் பாய்ச்சுவேல் வாயினர்
பைங்கமழ் சந்தனத்தர்
தத்தித்தை தாவெனத் தாளமும் மேளமும்
சன்னதங் கூட்டிநிற்க
தத்திப்பாய்ந் தாடியே சந்திகள் ஆடியே
சார்குவர் உன்தளியில்
மெத்திய பத்தியின் சித்திர உத்தியர்
விஞ்சிணு வைப்பதியில்
வேற்றுநாட் டன்பர்கள் வித்தகர் தத்துவர்
விருந்தயர் வோய்தினமும்
சுத்தம னத்தருன் தொண்டர்க ளிப்புறத்
தொண்டக மாம்பறையில்
துந்துமெ னப்பறை தொட்டொலி கொட்டுக
சொக்கழ குக்குகனே.
89✓
இம்மண்ணில் யாருளர் என்னைவெல் லவெனும்
எண்ணம் மிகுந்தவராய்
எந்தையே நாம்பட்ட இன்னல்கள் போதுமே
எல்லாமவ் வாணவத்தால்
பொம்மைகள் நாம்வெறும் பொம்மைகள் எம்மையுன்
பொற்கரத் தால்பிடித்துப்
புண்ணியப் பாதையில் போக்கியிந் நிலைவரப்
போம்பிறப் பெத்தனையோ
நம்முள் இனியேனும் நாச மலம்எழா
நன்னிலை காத்தருள்வாய்
நம்செய லாவது யாதுமில் லையுன்றன்
நாதப் பறைகளேநாம்
சும்மா இருந்திடு சொல்லற என்னுமச்
சுந்தரச் சொல்புரிந்தோம்
துந்துமெ னப்பறை தொட்டொலி கொட்டுக
தொல்லிணு வைக்குகனே.
90✓
ஐந்துமொ டுங்கிட ஐயநின் நாமமே
ஆறிய மர்ந்திசைப்போர்
அர்ப்பணம் உன்றனுக் காகஎச் செய்கையும்
ஆற்றி நிறைந்திருப்போர்
சிந்தை தெளிந்திடுந் தெய்வபு ராணங்கள்
தெள்ளிதின் கேட்டிருப்போர்
திண்சரி யைசெய்வோர் தீர்த்தங்க ளாடுநர்
தீந்திமி காவடியோர்
உந்தும் கிழ்வினில் உன்புகழ்த் தோத்திரம்
ஓதி நயந்திருப்போர்
ஓய்ந்தம லக்குலம் ஊடுரு வாவணம்
ஓந்தி மனம்விழித்தோர்
சொந்த முனக்கெனச் சொக்கி யிருப்பவர்
சுத்தர்நின் பேரடைய
துந்துமெ னப்பறை தொட்டொலி கொட்டுக
தொல்லிணு வைக்குகனே.