முருகன் App
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
ச.வே. பஞ்சாட்சரம்
செங்கீரைப்பருவம்2 / 10
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் · ச.வே. பஞ்சாட்சரம்

செங்கீரைப்பருவம்

11✓
செஞ்செவிய திருமேனிச்
சிவனுமையர் கைலையென்று
சேந்தன்உன்றன் இணுவையிலே
சேர்ந்தமர்ந்து களிகூர
விஞ்சையருந் தேவர்களும்
மிகும்பூத கணங்களுமே
விழிகனிந்து பார்த்திருக்க
விட்டொளிரும் பட்டுவிரி
மஞ்சமலர் அமளியிலே
மாலையந்தி ஒளிபரப்பி
மணிக்கரங்கள் பதித்தெழுந்து
மறைமழலை அமுதமெழீஇ
கஞ்சமுகம் மிஞ்சுநகைக்
காந்திகண்டே அண்டமெலாம்
களிமுழங்கி ஆர்ப்பரிக்கக்
கனிந்தாடாய் செங்கீரை
12✓
செந்தினைமா தெள்ளிநறுந்
தேன்பிசைந்து நெய்கலந்து
செங்கரும்பின் வெல்லமிட்டுத்
தீம்பழங்கள் பிழிவுகுத்துச்
சிந்தருவி மலைக்குறவர்
செய்திடும்மா விளக்குவந்து
செம்பவளம் நிலவெறிப்பச்
சிரித்துவரம் ஈபவனே
முந்திரிகைப் பந்தலிலே
முத்தொளிரும் பழக்குலைகள்
முக்குறிமெய் அணிம்முனிவர்
உண்ணுமனை முற்றமலி
கந்தமூல இணுவைநகர்க்
களித்துறையும் எழில்மழலாய்
கன்னல்கொழுந் தந்தவுடற்
கனியாடாய் செங்கீரை.
13✓
மாமரம்முன் நாள்தடிந்த
மங்கலவேல் இன்றுமென்றும்
மாக்களையும் மரங்களையும்
மானுடருள் தடியவைப்போய்
பாமரனும் கடவுள்சர்ச்சை
பண்ணிடவோ எனப்பழிக்கார்
பாமரற்கே அருள்புரியப்
பதிவேறாய் உள்ளதுவோ
சேமநன்னூல் படித்தறியான்
செவிஞானஞ் சிந்தனையால்
தேர்ந்தறிக தெளிகசிந்தை
திருந்துமுத்தி சேர்கவெனும்
தூமனத்தர் வாழிணுவைச்
சுடரும்பொன் நொச்சிமலி
தொல்பதியோய் மணிக்குழந்தாய்
சுகித்தாடாய் செங்கீரை.
14✓
உன்னமுகைத் தமிழில்வைத்தாய்
உந்துதமிழ் தன்னமுகை
உன்னருளால் மூங்கைவிடும்
ஓர்குமர குருபரனின்
மின்னலிடுங் கவிதையிலே
மிஞ்சஅள்ளிப் பொழிந்ததையா
வெங்கனல்நா யகன்சேவல்
வெல்கொடியுங் கொண்டவனே
தென்னைபனம் பாளைதினந்
தேயாத மேன்மையினால்
தெய்வநெறி தேய்தலிலாச்
சீரிணுவைச் செங்கோடா
என்னுயிரில் இன்பமழை
ஈந்துநிற்குந் தண்முகிலே
இன்கனிவாய்த் தேறலுக
எழுந்தாடாய் செங்கீரை.
15✓
அகிலங்கா டெரிந்ததனால்
அருஞ்சாரல் அடுக்கங்கள்
அருட்கோயில் மணம்நிலவும்
அழகாஉன் குறிஞ்சியிலே
மிகுமன்பால் குறவர்கள்
வேலெடுத்து வெறியாட
வேலன்மேல் வேலவனாய்
மெய்க்குறிசொல் மலைகிழவா
சகலவளம் இருக்கையிலுஞ்
சாந்திபெற உன்காலே
சரணமென்போர் இணுவைஐயா
தண்ணளியே கண்ணொளியே
மிகுந்தபர வசத்தில்அள்ளி
மெய்யணைக்கும் ஆசைதரும்
மின்சுடரே உயிர்க்கமுதே
விழைந்தாடாய் செங்கீரை.
16✓
மாங்கனிக்குப் போட்டியிட்டு
வருந்திமலைப் பழனிசென்று
வாங்கிநின்றாய் ஆண்டியுரு
வள்ளல்சிவன் பழமானாய்
ஓங்குபழ உன்னருளாம்
ஒண்சாற்றால் உயிரனந்தம்
உந்துகளித் தேன்குடிப்போம்
உள்கிளர்ந்தே ஆடிடுவோம்
மாங்கிளைகள் வளைந்துமண்ணில்
வந்துகாய்கள் முத்தமிடும்
மன்னுகுளக் கரைப்பொழிலில்
வந்திணுவைப் பதியுறைவோய்
பூங்கரங்கள் பொன்முகங்கள்
பொழியுமருள் ஒள்விழிகள்
பொங்குபொக்கைப் புன்சிரிப்பு
புரண்டாடாய் செங்கீரை.
17✓
ஆணவமாம் சூரபன்மன்
அமர்ந்தேவ யுகல்பலவாய்
அலைந்துநொந்தே அல்லலுறும்
ஆன்மஇந்த்ர ஞாலத்தேர்
பேணிஅருள் புரிந்தடியில்
பேறிந்து முத்திதந்த
பிள்ளையுருப் பேறிறைவா
பிஞ்சுருவில் கொழுங்கனியே
காணிசெல்வப் பயன்நுகர்ச்சி
கடவுள்சக்திக் கொடுக்குமெனக்
கண்டறிந்துன் காலமர்ந்தோர்
களிப்புமட்டும் பெறும்வீரர்
காணமிகும் இணுவைநகர்க்
கசிந்துருகுந் துதியேற்போய்
கந்தமலர்க் கொத்தமுதே
களித்தாடாய் செங்கீரை.
18✓
பேயியல்பன் சூரபன்மன்
பெருமாயம் அத்தனையும்
பிழைபட்டுன் அனல்வேலால்
பிளவுபட்டுஞ் சன்னதனாய்த்
தீயெனவே அஃறிணையாஞ்
சேவலுமாய் மஞ்ஞையுமாய்
சீர்குலைந்து வரஇரங்கித்
திருநோக்கால் ஆட்கொண்டு
தூயஉன்றன் வாகனமாய்ச்
சுடர்க்கொடியின் இலச்சினையாய்
சுகந்தந்த அருட்குருவே
சுளைவெடித்துத் துளிச்சாறு
பாயுங்கனி நெருங்குபலா
மலிவீதிப் பதியிணுவைப்
பக்தருளம் பால்சுரக்கப்
பறைந்தாடாய் செங்கீரை.
19✓
கோழிபாடும் வாயாலே
குஞ்சுபாட மாட்டேனென்று
குமரனுன்றன் அடியவர்முன்
கொக்கரித்த சிவகவியைப்
பாழில்சுடும் வழியில்நல்ல
பண்புமுட்டை என்றுநின்று
பாடுவித்து முட்டையென்றே
பாட்டில்வேறு குற்றங்கண்டு
வீழக்கவி அகந்தைஅருள்
வேலவனே வீதிதொறும்
வீணைகுழல் வேய்ங்குழலில்
விஞ்சடியார் குரல்களிலே
யாழிலெலாம் உன்புகழே
அள்ளிவரும் பாட்டுவரும்
அம்மிணுவை உயிரழகா
ஆடியருள் செங்கீரை
20✓
ஆதியந்தம் இல்லாதான்
அப்பெருமான் இளம்வடிவே
ஆதியின்மை உன்னையொக்கும்
அம்மலந்தன் பந்தமிலாய்
ஏதமிலா ஆனந்தா
எல்லையிலா வல்லவனே
ஈறாதி இல்லான்மா
எண்ணரிய அனந்தம்அவை
வாதைமலக் கும்பலினால்
மயக்குபந்தம் பட்டிழுவாய்
மறைந்தின்பங் கேவலமாய்
வாடிடுதல் தவிர்த்துன்றன்
ஏதமிலா ஆனந்த
இன்பநிலை உய்த்திடவே
எண்ணிணுவை வேலவனே
எழுந்தாடாய் செங்கீரை.