காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ்
வ.த. இராம சுப்பிரமணியம்
அம்புலிப்பருவம்7 / 10
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ் · வ.த. இராம சுப்பிரமணியம்
அம்புலிப்பருவம்
61✓
தேவமா தேவனாய்ச் சூரனை வென்றவன்
தேவருக் குகந்த தலைவன்
தீரமாய்த் தாருகன் வீழ்வுறச் செற்றவன்
செவ்வேல் ஏந்துங் குமரன்
சேவலும் மஞ்ஞையும் சேர்த்திடப் பெற்றவன்
செந்தமிழ் பகர்ந்த செல்வன்
செந்திலில் நின்றவன் தென்பரங் குன்றிலே
செவ்வருள் புரியும் அழகன்
பூவையாள் வள்ளியும் போற்றிடும் நாயகன்
புண்ணிய மாந்தர் நெஞ்சில்
போந்தருள் செய்பவன் தொல்வினை தீர்ப்பவன்
பூதலத் தருளும் குகனே
ஆவளர் காஞ்சியின் கந்தவேள் வாழ்த்தவே
அம்புலி ஆட வாவே
ஆயக மண்டலத் தண்ணலும் வாழ்த்தவே
அம்புலி ஆட வாவே.
62✓
வானவர் காவலன் நாரணன் இராகவன்
வாமனன் யசோதை மைந்தன்
மாலவன் கேசவன் இராதையின் காதலன்
மாதவன் பரசு ராமன்
ஏனமாய் வந்தவன் சங்கொடும் சக்கரம்
ஏந்திவான் அருளும் தேவன்
ஏற்றமார் பாற்கடல் நாயகன் கோவலன்
எணுறும் தூய செம்மல்
மேனலம் செய்பவன் வேங்கடன் சீதரன்
மேதினி காக்கும் கண்ணன்
வேதனின் தாதையாய் ஆண்டருள் அச்சுதன்
விரும்புநல் மருக னாய
ஆனநற் காஞ்சியின் கந்தவேள் போற்றவே
அம்புலி ஆட வாவே
ஆயக மண்டலத் தண்ணலார் போற்றவே
அம்புலி ஆட வாவே.
63✓
தக்கனின் வாக்கினால் தேய்ந்தநின் எழில்தனைத்
தரணியில் திகழ வைக்கும்
சக்தியார் பாலகன் நற்றமிழ்க் காவலன்
தவமெலாம் காக்கும் தீரன்
பக்கலில் நின்றுநின் பையிருள் போக்குநற்
பரமனே சுப்ர மண்யன்
பாங்குடன் நின்றணக் காருயிர்த் தோழனாய்ப்
பரிந்தருள் புரியும் குமரன்
மிக்கபே ரழகனாய் நிலவிடும் நித்தியன்
மிகையுடன் அருளும் முருகன்
மெய்யெனக் காப்பவன் மெய்யனாய் நிற்பவன்
வெம்மையில் லாத விமலன்
அக்கமேர் காஞ்சியின் கந்தவேள் வாழ்த்தவே
அம்புலி ஆட வாவே
ஆயக மண்டலம் தாங்கிடும் குமரனோ(டு)
அம்புலி ஆட வாவே.
64✓
திறத்துடன் வரத்தொளிர் பெற்றிகொள் சூரனைத்
திருக்கரத் தொளிரும் வேலாற்
செருக்குடன் யாக்கையும் மாற்றிமாக் கருணையால்
திருவருள் புரிந்த குமரன்
புறத்தினில் திரிந்திடும் நின்னியற் பாங்கினிற்
பொலிவினைச் சேர்க்கும் நோக்கில்
புரந்தருள் செய்பவன் பேரெழில் சண்முகன்
பூமகள் மருக னாகிச்
சிறந்தருள் சரவணன் தெய்வானை நாயகன்
திருப்பரங் குன்ற மர்ந்து
சீரருள் செய்பவன் தணிகையின் வேந்தனாய்த்
திகழ்ந்திடும் சீல முருகன்
அறம்வளர் காஞ்சியின் கந்தவேள் மகிழவே
அம்புலி ஆட வாவே
ஆயக மண்டலம் தாங்கிடும் குமரனோ(டு)
அம்புலி ஆட வாவே.
65வேறு✓
பிரமனைத் தடிந்து சிறையில் வைத்துப்
பேரருள் புரிந்த குமரன்
பேசரும் பொருளை ஈசனார்க் குரைத்துப்
பெரியனாய் விளங்கும் சதுரன்
சரவணப் பொய்கை சார்ந்தெழில் மலரத்
தவழ்ந்திடும் நேயன் அமரன்
தண்ணருள் புரியும் சண்முகத் தரசன்
சந்ததம் காக்கும் தேவன்
வரந்தரும் வரதன் பதந்தரும் பரமன்
வள்ளிம ணாளன் மணியன்
மகபதிக் கருளும் வித்தகன் நிமலன்
மதிநலம் புரியும் மேலோன்
அறம்வளர் காஞ்சிக் குமரவேள் மகிழ
அம்புலி ஆட வாவே
அரன்விழி மணிகொள் அண்ணலார் மகிழ
அம்புலி ஆட வாவே.
66வேறு✓
பழமாகி நின்றவன் பரங்குன் றமர்ந்தவன்
பத்தியாய்ப் பாடி நின்று
படியேறித் தணிகையில் மனமலர் சாற்றிடப்
பதமருள் பால முருகன்
கிழமாகிச் சென்றுநற் குறமகள் வள்ளியின்
கிளையுடன் வார்த்தை பேசிக்
கீர்த்தியார் நன்மணம் புரிந்தவன் அமரினிற்
கிளர்ந்தெழில் புரியும் தேவன்
தழலாக நின்றவன் றன்னுநற் றீயினிற்
றழைக்கவே தோற்றம் ஏற்றுத்
தளராத தண்டமிழ் செய்தருள் குருபரன்
சரவணன் நின்னின் மேலோன்
அழகான காஞ்சியின் குமரவேள் மகிழ்வுற
அம்புலி ஆட வாவே
அருளக்க மணியுடை யண்ணலார் மகிழ்வுற
அம்புலி ஆட வாவே.
67✓
பணியாத பண்டனைப் பாரினில் வீழ்த்திநற்
பாங்கொடும் நன்மை சேர்த்துப்
பற்றாத மாந்தரைப் பக்குவம் ஆக்கிநற்
பரிவுடன் ஈர்த்து மேவும்
பிணிநீக்கி மாறிலா வரமெலாம் தந்துருட்
பேற்றினை நயந்து நல்கி
பிறவாத தன்மையும் மாறாத மெய்ம்மையும்
பெருமைசேர் முத்தி நலமும்
தணியாத அன்புடன் தந்தருள் அம்பிகை
சக்தியின் இனிய குமரன்
தண்ணருள் புரிபவன் நின்னினும் மேலவன்
சந்ததம் வாகை சூடும்
அணியான காஞ்சியின் கந்தவேள் வாழ்த்தவே
அம்புலி ஆட வாவே
அலங்காரச் செம்மைகொள் குமரகோட் டத்தனோ
டம்புலி ஆட வாவே.
68✓
உண்மையாய் ஒருகணம் எண்ணிடும் போதெலாம்
உடனருள் ஒருவ னாகி
ஓதரும் இருவரை உடையனாய்ச் சீலமார்
மூவரும் ஏத்தி நிற்கத்
தன்மையார் நான்மறை போற்றநல் ஐந்தொழில்
தலைவனாய் ஆறு முகனாய்ச்
சந்ததம் ஏழிசை யாகியெண் குணத்தனாய்ச்
சாலஒன் பதின்மர் காணக்
கண்ணுறும் பத்தருக் கருள்தரும் சண்முகன்
கருத்தொடும் நின்னை ஏற்பன்
காலனைக் காய்ந்தவன் றன்மகன் முனிவுறக்
கருதியேல் மீட்சி யுளதோ
அண்மைசேர் காஞ்சியின் கந்தவேள் மகிழவே
அம்புலி ஆட வாவே
ஆயக மண்டலம் கொண்டருள் குமரனோ
டம்புலி ஆட வாவே.
69✓
நாவலா ஞரனின் நற்றிருத் தோழனாய்
நலந்தரும் தேவ னாகி
நங்கையாள் நாணநல் ஆடலும் புரிந்துநன்
ஞாலமும் போற்றும் வண்ணம்
மூவரும் காணவெம் முப்புரக் கோட்டையை
முறுவலால் எரித்த பரமன்
ஒண்பொருள் நாடிடத் தண்ணருள் பாங்குடன்
ஒருமொழி பகர்ந்த முருகன்
மாவளம் கொண்டவன் வேலவன் சண்முகன்
வள்ளியை விழைந்த செவ்வேள்
மும்மரைத் தீர்ப்பவன் சினமுறின் நின்றனை
மாநிலம் ஏற்கு மோகாண்
ஆவளர் காஞ்சியின் கந்தவேள் மகிழவே
அம்புலி ஆட வாவே
ஆயக மண்டலம் கொண்டருள் குமரனோ
டம்புலி ஆட வாவே.
70✓
சீதரன் போற்றிவாழ் செந்திரு மருகனாய்த்
தேர்ந்தநல் வரங்கள் நல்கும்
செஞ்சடை யண்ணலார் சிதைகொள் மைந்தனாய்ச்
செந்திலில் மேவி என்றும்
மாதரார் சூழ்ந்திடத் தண்ணருள் புரியுநல்
வள்ளலாய்த் தணிகை தன்னில்
வாகையாய் வீற்றருள் வேலவன் விரும்புநல்
வகையுடன் வருதி இன்றேல்
போதனார் கண்டவெஞ் சிறையுனக் காகுமே
புண்ணுறுமேனி யாமே
பொற்பிலாச் சூரனின் கதியுனக் காகுமே
புகலுதல் எளிய தாமோ
ஆதமார் காஞ்சியின் குமரவேள் மகிழவே
அம்புலி ஆட வாவே
ஆயக மண்டலம் கொண்டருள் குமரனோ
டம்புலி ஆட வாவே.