காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ்
வ.த. இராம சுப்பிரமணியம்
சப்பாணிப்பருவம்4 / 10
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ் · வ.த. இராம சுப்பிரமணியம்
சப்பாணிப்பருவம்
31✓
பரநிந்தை செய்திடும் பான்மையில் தக்கனும்
பகரொணா வினையி லாழ
பரிவுறா வேள்வியைப் புரிந்திடும் நாளினிற்
பகர்வீர பத்ர னாகிச்
கரமேந்திப் பார்த்தனும் போற்றிடும் வேடனாய்க்
கானிடை யமர்பு ரிந்து
கனிவுடன் பாசுப தத்தினை ஈந்துநற்
கவினுறு வரங்கள் தந்தும்
புரமெரித் தருள்தரும் தனிப்பெரும் வேந்தனாய்ப்
புலவனாய்க் கூலி யாகி
போற்றிடும் அடியவர் நற்பதம் எய்தவே
போந்தருள் பரமன் ஈன்ற
தரமிகும் காஞ்சியின் குமரகோட் டத்தனே
சப்பாணி கொட்டி யருளே
தனியக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
சப்பாணி கொட்டி யருளே.
32✓
சிலையேந்தித் தீயரைச் செறுத்திடும் நோக்கினால்
செம்மையாய் நாட்ட முற்றுச்
சீரோங்கும் சக்கரப் படைகொளும் செய்கையால்
சிவனாரைப் போற்றி நிற்க
நிலையான ஒருமலர் மறையவே புரிந்திடும்
நிலைதனைக் காண மேவும்
நேயமாய்க் கண்ணிடந் தருச்சனை செய்திடும்
நெடியமால் நயந்து தந்த
கலைமேவும் வள்ளியின் கருத்தினைக் காத்திடும்
கனிவுறும் அருள்புரிந்து
காடுற்ற கருணையால் குன்றெலாம் ஓங்கிடும்
கந்தனே பால முருகா
தலையான காஞ்சியின் குமரகோட் டத்தனே
சப்பாணி கொட்டி யருளே
தகவக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
சப்பாணி கொட்டி யருளே.
33✓
பாரோங்கு வாய்மையால் குறுமுனிக் கருள்செயும்
பரிவினில் தமிழ்ப பகர்ந்து
பணிமேவும் ஒளவையின் பொன்மனம் மகிழ்வுறப்
பாங்குடன் கனியும் ஈந்து
தேரோங்கும் அருணையின் தவமுனிச் செம்மலாம்
சீர்மேவும் அருண கிரியின்
திருப்புகழ்ப் பனுவலில் விருப்புடன் விளங்கிநற்
றினைப்புனம் தனில்தி ரிந்தும்
சீரோங்கு இளையவேல் தாங்கிநன் னலந்தரும்
செவ்வேள்வி காத்து கந்தும்
சிற்றினச் சூரனைத் தடிந்திடும் செம்மையால்
திகழ்வே லெறிந்த முருகா
தாரோங்கு காஞ்சியின் குமரகோட் டத்தனே
சப்பாணி கொட்டி யருளே
தகவக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
சப்பாணி கொட்டி யருளே.
34✓
நித்தமாய் மேவிநற் செம்பொரு ளாகிவான்
நிலையமாய் மலர்ந்தி ருந்தும்
நிறைவுறும் மகிழ்வொடும் நான்மறை போற்றவும்
நின்மலப் பொருளு மாயும்
பத்தியாய்ப் போற்றுநற் பாவலர் நெஞ்சினிற்
பாங்குடன் விளங்கி நின்றும்
பாரினில் மாந்தரின் பாசமேர் துயரினைப்
பரிவுடன் தீர்த்து வானோர்
அத்தியும் வள்ளியும் சூழவே வீற்றிருந்
தருள்சுரந் தாண்டு நிற்கும்
ஆறுமா முகத்தனே அம்பிகை மைந்தனே
அண்ணலே தெய்வ மணியே
சத்தியார் காஞ்சியன் குமரகோட் டத்தனே
சப்பாணி கொட்டி யருளே
தகவக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
சப்பாணி கொட்டி யருளே.
35✓
வண்மைசேர் அறங்களை வகையுடன் நாட்டிநன்
மாவடிப் பூசை செய்தும்
மலையத் துவசனின் மகளெனும் பேற்றினில்
மாண்புடன் தவம்பு ரிந்தும்
திண்மைசேர் கூடலின் தனிப்பெருஞ் செல்வியாய்ச்
சிறப்புடன் ஆட்சி செய்தும்
சீலமார் பட்டரின் செந்தமிழ்ப் பாடலைத்
திருச்செவிக் கமுத மாக்கி
உண்மையாய் ஏத்திடும் அடியவர்க் கருள்தரும்
ஒண்ணருள் தாயு மாகி
உலகெலாம் பரவிடும் உமையருள் மைந்தவென்
றுளந்தனில் விளங்கு குகனே
தண்மைசேர் காஞ்சியின் குமரகோட் டத்தனே
சப்பாணி கொட்டி யருளே
தனியக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
சப்பாணி கொட்டி யருளே.
36✓
குருவருள் புரியும் குறிப்பினிற் றொன்மைக்
குருந்தையின் நிழலொ துங்கும்
குரிசிலாய்க் கூத்துக் கதிபனாய்க் கோலக்
கூலியாய் வணிக னாகி
மருவிடும் மாதின் பங்கனாய் மேவும்
மாமனாய் மகிழ்ந்து காக்கும்
வரதனாய் சோதிப் பிழம்பதாய் மாலும்
வாழ்த்திடும் முதல்வ னாகித்
திருவருள் புரியும் திகம்பர னாகிச்
செவ்வருள் காட்டும் ஈசன்
திருச்செவிக் கமுதம் தந்திடும் குகனே
சீரருட் கமண்டல மேந்தித்
திருவளர் காஞ்சிப் பதிவளர் முருகா
சப்பாணி கொட்டி யருளே
தனியக்க மணியைத் தாங்கிடும் குமரா
சப்பாணி கொட்டி யருளே.
37✓
அஞ்செழுத் தாகி யதனுளே வைகி
அம்மையும் அப்பனும் ஆகி
அஞ்செழுத் துறவால் அரும்பொருள் காட்டி
அஞ்சிடும் வினைய கற்றி
அஞ்செழுத் தோதும் அரியதும் ஆகி
அதனுளே ஒளிரும் வண்மை
ஆறெழுத் தாகி அன்பருக் கருளும்
அரும்பதச் செழுமை காட்டி
அஞ்சலென் றாளும் அறுமுகத் தரசே
அத்தியும் வள்ளி மானும்
அழகுடன் திகழ அறுபடை மேவும்
அண்ணலே முருக வேளே
சஞ்சலம் தீர்க்கும் காஞ்சியின் குமரா
சப்பாணி கொட்டி யருளே
தகவுடன் அக்க மணிகொளும் குகனே
சப்பாணி கொட்டி யருளே.
38✓
பற்றாக நின்னையே பற்றாத சூரனைப்
பணிசெயும் மஞ்ஞை மற்றும்
பாரினில் நின்புகழ் பாடிடும் சேவலாய்ப்
பரிவுடன் மேவ வைத்து
நற்றாளின் தண்ணருள் நித்தமும் காட்டிடும்
நல்லருட் பாங்கு தன்னை
நானிலத் தன்பர்கள் யாவரும் போற்றவே
நளினமாய்ச் செந்தில் மேவி
வற்றாத வண்மையை வாசமாய்த் தந்திடும்
வடிவேல னேசண் முகனே
மன்னுதெய் வானையும் வள்ளியும் சூழவே
மகிழ்வொடும் வீற்றி ருக்கும்
சத்தான காஞ்சியின் குமரகோட் டத்தனே
சப்பாணி கொட்டி யருளே
தகவக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
சப்பாணி கொட்டி யருளே.
39✓
மாலவன் தங்கையாய் மாதரி யன்னையாய்
மலையனின் மகளு மாகி
வானமார் கங்கையாய் தேவிகா மாட்சியாய்
வளந்தரும் மாரி யாகிக்
காலனைக் காய்ந்திடும் கன்னியாய்க் கௌரியாய்க்
காலபை ரவியு மாகிக்
கனிந்தருள் புரிந்திடும் ஏலவார் குழலியாய்க்
கற்பகத் தன்னை யாகி
நீலியாய்ச் சத்தியாய் நேயமார் மாந்தரின்
நினைவில் நிலைத்து நிற்கும்
நிகிலமாய் விளங்கிடும் நிமலையின் மைந்தனே
நித்தமாய் மேவும் குகனே
சாலநற் காஞ்சியின் குமரகோட் டத்தனே
சப்பாணி கொட்டி யருளே
தனியக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
சப்பாணி கொட்டி யருளே.
40✓
நீலகண்டத்தனாய் நித்தனாய் வேந்தனாய்
நிமலனாய் ஏன மாகி
நேர்கொளும் வணிகனாய்ச் சித்தனாய் மறவனாய்
நிறைமிகு மறையு மாகிச்
சீலமுக் கண்ணனாய்ச் சிந்தையார் வண்ணனாய்
செம்மைசேர்ப் புலவனாகித்
தேவமா தேவனாய்க் குருந்தையார் குரவனாய்த்
தேவியோ டொன்றி மேவும்
சூலமார் கரத்தனாய்க் கங்கையார் சடையனாய்ச்
சுந்தரக் கடவு ளாகிச்
சூழ்வினை தீர்த்தருள் ஈசனின் மைந்தனே
தொழும்பரைக் காக்குங் குகனே
சாலையார் காஞ்சியின் குமரகோட் டத்தனே
சப்பாணி கொட்டி யருளே
தனியக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
சப்பாணி கொட்டி யருளே.