காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ்
வ.த. இராம சுப்பிரமணியம்
சிற்றில்பருவம்8 / 10
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ் · வ.த. இராம சுப்பிரமணியம்
சிற்றில்பருவம்
71வேறு✓
முருகா ஈசன் புதல்வோனே
முத்தமிழ்த் தேவா வேலவனே
முகுந்தன் மருகா சரவணனே
முதல்வா வள்ளிக் கினியவனே
அருவாய் யாண்டொரும் திகழ்பவனே
அணியார் தணிகைக் குமரோனே
அருளார் செயலைப் புரிபவனே
ஆறு படைகொண் டருள்பவனே
மருவும் அடியார் மனத்துறையும்
மதியே செந்திற் பதியோனே
மயக்கும் வினைதீர்த் தருள்பவனே
மயிலத் துறையும் அழகோனே
கருவார் காஞ்சிப் பதியினில்வாழ்
கந்தா சிற்றில் சிதையேலே
கனிவார் காஞ்சிப் பதியினில்வாழ்
கனியே சிற்றில் சிதையேலே.
72✓
பாவைக் குறமா மகள்நாடிப்
பாங்காய்த் தேனும் தினைமாவும்
பரிவாய் அருந்தி மகிழ்பவனே
பரவும் தருவாய் நிற்பவனே
மாவார் கானில் திரிபவனே
மயில்மீ தமரும் மாண்பினனே
டவலூர் வள்ளற் பெருமான்றன்
வண்மைத் தமிழில் நிற்பவனே
தேவர் போற்றும் குருபரனே
திருவார் தணிகைத் தனிப்பரனே
சேரும் வினையைக் களைபவனே
சேவற்கொடியின் நாயகனே
பூவார் காஞ்சிப் பதியினில்வாழ்
புனிதா சிற்றில் சிதையேலே
பொன்னார் படைப்புத் தொழில்மேவும்
பொருளே சிற்றில் சிதையேலே.
73✓
அறத்தின் நிலையாய் நிற்பவனே
அனுதினம் காக்கும் அரன்மகனே
அருளார் பாம்பன் பெருந்தகையின்
அருந்தமிழ்ப் பண்ணில் ஒளிர்பவனே
திறஞ்சேர் சூரன் மாய்ந்திடவே
சேவலும் மயிலாய்ச் செய்தவனே
திகழும் வள்ளிக் குகந்தவனே
திருவார் திருமால் மருகோனே
பிறவா நிலையைத் தருபவனே
பிஞ்சுகன் போற்றும் சரவணனே
பிணிசேர் வினையைக் களைபவனே
பேறுக ளெல்லாம் அருள்பவனே
உறவார் காஞ்சிப் பதியினில்வாழ்
உருவே சிற்றில் சிதையேலே
ஒளியார் படைப்புத் தொழில்மேவும்
ஒருவா சிற்றில் சிதையேலே.
74✓
கார்த்திகை மாதர் போற்றிடவே
கனிவாய் அருளும் குமரோனே
காமனைக் காயும் பரமனுக்கே
கருதும் மறையைப் பகர்ந்தவனே
ஆர்த்தெழு சூரன் மாய்ந்திடவே
அணிவேல் எறியும் சண்முகனே
அழகார் வள்ளிக் குறமகளின்
அன்பினில் திகழும் முருகோனே
சார்ந்திடும் அடியார்க் கருள்பவனே
சாம்பவி போற்றும் சிவகுகனே
சத்தினி பாதம் அருள்பவனே
சந்ததம் காக்கும் வேலவனே
சீர்விளர் காஞ்சிப் பதியினில்வாழ்
திருவே சிற்றில் சிதையேலே
திகழும் படைப்புத் தொழில்மேவும்
தேவா சிற்றில் சிதையேலே.
75✓
அங்கியும் மானும் மழுவுடனே
அரவும் மதியும் உடுக்கையுடன்
அருளார் மாதோர் பங்கினனாம்
அரனார் நுதலில் திகழ்பவனே
செங்கையில் ஆழிப் படைகொள்ளும்
சீலத் திருமால் மருகோனே
சினவெஞ் சூரன் மாய்ந்திடவே
செருவேல் எறியும் சண்முகனே
திங்களும் கதிரும் முதலாகச்
சேரும் கோளால் உறுபிணியைச்
செறுத்துக் காக்கும் முருகோனே
திகழும் உமையின் புதல்வோனே
மங்கலக் காஞ்சிப் பதியினில்வாழ்
மணியே சிற்றில் சிதையேலே
மகிழும் படைப்புத் தொழில்மேவும்
மறவா சிற்றில் சிதையேலே.
76✓
அகரப் பொருளாய் விளங்கியொளிர்
அமுதே ஆறு முகத்தரசே
அகிலம் புரக்கும் தனிப்பொருளாய்
அருளும் சோதி நடத்தரசே
இகரப் பொருளாய் இனிதோங்கி
எல்லா நிலைக்கும் கருப்பொருளாய்
இனிமை வழங்கும் இகத்தரசே
இடரைத் தீர்க்கும் மணியரசே
உகரப் பொருளாய் எஞ்ஞான்றும்
ஒளிரும் தெய்வப் பதிக்கரசே
உகப்பாய்ச் சேவற் கொடியுடனே
உயர்ந்த மயில்மீ தமர்ந்தருளும்
சிகரக் காஞ்சிப் பதியினில்வாழ்
திருவே சிற்றில் சிதையேலே
சிந்தைக் குகந்த குகனேயென்
செல்வா சிற்றில் சிதையேலே.
77வேறு✓
மயலே விளங்கித் துயரால் ஒடுங்கி
மதிமேவு நெஞ்சம் தடுமாறிச்
செயலே மயங்கி வினையால் நலிந்து
சிவநிந்தை காணும் செயலாலே
அயலே நினைத்தும் அணுவாய் நினைக்கும்
அடியாரைக் காக்கும் முருகோனே
மயிலே றிவந்து திருத்தாள் சிவக்க
வயமான் சிற்றில் சிதையேலே.
78✓
நினையா மனத்திற் பதியா திருந்து
நினைவோரின் நெஞ்சின் அமுதாகி
வினையாவு நீக்கித் துணையாயி நின்று
விரைவாக நல்ல செயலோங்கக்
கனையாற் செழிக்கும் பதிக்காஞ்சி யிற்கண்
கனிந்தோங்கி மேவும் முருகோனே
உனையே நினைக்கும் பனையேன் உகக்கும்
ஒளியான சிற்றில் சிதையேலே.
79வேறு✓
சிவனார் நெற்றிக் கண்ணொளியாய்ச்
சேவற் கொடியின் அதிபதியாய்ச்
சிந்தைக் குகந்த மஞ்ஞையினில்
சேவை யருளும் ஒருசுடராய்ப்
புவனம் யாவும் வலம்கொண்டு
புரக்கும் பழனிப் பெருநிதியாய்ப்
புகலும் கீறற் கருள்புரியும்
புகழற் றோங்கும் பண்டிதனாய்
நுவலும் மொழியின் நுண்பொருளாய்
நூபு ரத்தின் நல்லொலியாய்
நுகரும் எல்லாப் பொருள்களிலும்
நுண்மைப் பொருளாய் ஒளிர்பவனே
தவமார் காஞ்சிக் குமரோனே
தலைவா சிற்றில் சிதையேலே
தனியார் காஞ்சிப் பதிமேவும்
தலைவா சிற்றில் சிதையேலே.
80✓
மித்தை யகற்றும் மணிவிளக்கே
மேதினி காக்கும் ஒளிவிளக்கே
மேவும் மனத்திற் பதிவிளக்கே
மேலாம் கருணைக் கணிவிளக்கே
சித்தத் தொளிரும் சுடர்விளக்கே
செழுஞ்சுட ராகும் தனிவிளக்கே
சிவனார் நுதலின் அருள்விளக்கே
செந்திற் பதியின் நனிவிளக்கே
பத்தர்க் கருளும் மனவிளக்கே
படியார் சோதி நல்விளக்கே
பணிவார்க் கருளும் குலவிளக்கே
பழைமைக் குயிராம் பொன்விளக்கே
முத்தார் விளக்காய் முன்னியருள்
முருகா சிற்றில் சிதையேலே
மூலச் சுடராய் விளங்கியருள்
முதல்வா சிற்றில் சிதையேலே.