காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ்
வ.த. இராம சுப்பிரமணியம்
வருகைப்பருவம்6 / 10
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ் · வ.த. இராம சுப்பிரமணியம்
வருகைப்பருவம்
51✓
வாதவூர் அண்ணலார் வாசகம் தன்னிலோர்
வண்ணமாய் விளங்கி நின்று
மாலயன் காண்கிலா மாண்புசார் சோதியாய்
மலர்ந்தருள் வாய்மை யாகி
மாதரார் பிறையுடன் விடைதனிற் றோன்றியும்
வாணிகா மாட்சி மகிழ
வரித்தருள் சிறக்கநல் லுலகெலாம் காத்தருள்
வடிவமாய்க் கோல மேற்றுச்
சீதமார் கங்கையைத் தரித்திடும் ஈசனின்
சிந்தையும் குளிரும் வண்ணம்
செம்மைகொள் பிரணவப் பெரும்பொருள்
பகர்செயும்
சேந்தனே சுவாமி நாதா
வேதமார் காஞ்சியின் குமரகோட் டத்தனே
வேதனே வருகை புரிவாய்
வேயுநன் மணியுடன் கமண்டலம் கொண்டவா
விழைந்துநீ வருகை புரிவாய்
52✓
மாயமான் வீழ்வுறச் செற்றுகா னத்திடை
வாழ்தவச் சபரி மேவும்
மாவளர் சாலைகண் டன்புசார் அமுதினை
மகிழ்வுடன் ஏற்று கந்து
ஆயநற் கலைஞனாம் அனுமனை யாண்டுகொண்
டகந்தனில் இனிமை நல்கி
அருள்தரும் இராகவன் மருகனாய்த் திகழ்ந்தருள்
அழகனே மஞ்ஞை யேறி
தூயநல் லுலகெலாம் ஏத்தநல் வளந்தரும்
சோதியே பால குகனே
தூமறை போற்றுமா தேவனே தேவர்தம்
துயரெலாம் தீர்க்கும் பரனே
நேயமார் காஞ்சியின் குமரகோட் டத்தனே
நிமலனே வருகை புரிவாய்
நீலநன் மணியுடன் கமண்டலம் கொண்டவா
நித்தனே வருகை புரிவாய்.
53✓
மூவடி மண்கொளும் வாமனச் செம்மலாய்
முதல்வனாய் உலக ளந்து
மூலமாய்த் தோன்றிநல் யானையைக் காத்தருள்
முகுந்தனின் மருக னாகிச்
காவடி கொண்டுனைப் போற்றிடும் மாந்தரைக்
கருத்துடன் காக்கும் வகையிற்
கார்மயில் மீதமர்ந் துலகெலாம் வலம்வரும்
கந்தனே சுப்ரமண்யா
பூவடிக் குறமகள் அன்பினிற் றிகழ்ந்தருள்
புனிதனே ஈசன் மகனே
புகலரும் சூரனைத் தடிந்தருள் நல்குநற்
புண்ணியா தணிகை நாதா
மாவடிச் சீர்கொளும் காஞ்சியின் குமரனே
மாரனே வருகை புரிவாய்
மணியுடன் கமண்டலம் கொண்டருள் வேலனே
வரதனே வருகை புரிவாய்.
54✓
கீசகன் செய்பிழை கண்டுசீற் றத்தினிற்
கிளர்ந்துடற் கிழித்து வென்று
கேடிலா வாய்மையாற் றிகழுமா வீமனின்
கீர்த்திகொள் இளவ லான
ஆசுறு பார்த்தனார் தேரினிற் சாரதி
ஆகிய கண்ணன் மருகா
ஆர்த்திடும் சூரனைப் பார்புகழ் மஞ்ஞையென்
றவனியிற் றிகழ வைத்து
வாசமார் வள்ளிதெய் வானையோ டிருந்துநல்
வரங்களை நல்கி மகிழும்
வண்மையோ டறுபடை வீடுகொண் டருள்தரும்
வள்ளலாய் விளங்கும் முருகா
நேசமார் காஞ்சியின் குமரகோட் டத்தனே
நிமலனே வருகை புரிவாய்
நீலநன் மணியுடன் கமண்டலம் கொண்டவா
நித்தனே வருகை புரிவாய்.
55✓
தந்தையார் தாளறுஞ் செயல்புரி மைந்தனின்
தரமிகு பூசை யேற்றுத்
தாழ்விலாத் திருவடிப் போதினால் தடவியும்
தண்ணொளிர் விழியை யப்பிச்
சிந்தையே சிவமெனத் திகழ்ந்திடும் அண்ணலாம்
திண்ணனார் மகிழும் வண்ணம்
செவ்மையாய்த் திருமொழி பகர்ந்துடன் முத்திநற்
சீரினை யுகந்து நல்கி
எந்தையாய்த் திகழுமுக் கண்ணனின் மைந்தனே
என்றனை யாளும் குகனே
இளங்குற மகளொடும் விளங்கிடும் அமுதனே
ஈடிலா வரங்கள் நல்கும்
சந்தமார் காஞ்சியின் குமரகோட் டத்தனே
சார்ந்துநல் வருகை புரிவாய்
தண்மைசேர் மணியுடன் கமண்டலம் கொண்டவா
தளிர்நடை பயின்று வருவாய்.
56✓
அருணையின் முனிவரும் அருணகி ரித்தமிழ்
அழுதினை விழைந்து மேலாய்
அருள்சொரிந் தாற்றலார் கீரனின் செந்தமிழ்
அரங்கினில் மேவி நின்று
மருவிலாக் குறுமுனிக் கருள்தரும் வண்மையால்
மாண்புடன் தமிழ்பு கன்று
வண்ணமாய்ப் பாம்பனார் தவமுனி வாழ்த்தவும்
மன்பெரு பாதை காட்டிக்
கருணையோ டருள்தரும் கந்தனே நேயனே
காமனை வென்ற குகனே
கற்றவர் போற்றிடும் வித்தகச் செம்மலே
காலத்தில் அருளும் குமரா
தருவளர் காஞ்சியின் குமரகோட் டத்தனே
சால்புடன் வருக வருக
சாலநன் மணியுடன் கமண்டலம் கொண்டவா
தனிவே லுடள்வ ருகவே.
57✓
மாசிலா அடியவர் வாழிடம் தேடியும்
மகிழ்வுடன் நாடி நின்றும்
மாவருள் சேர்த்தவர் மனமுறைந் தாட்கொளும்
வடிவேற் குமார வேள்ளன்
மாசுறு மனத்தினும் வாசமாய் ஏற்றிடும்
வண்மையாற் குடிபுகுந்து
மாண்பொடும் அருள்செயும் வாய்மையை மறந்திடும்
மாசினைக் கொண்டு வாடும்
மாசுடை யேனைநின் மாநெறிக் காக்குநல்
வரமெலாம் விழைந்து நல்கி
மாநிலம் உய்யநல் வள்ளிதெய் வானையும்
வகையுடன் அருள்க ரக்க
மாசிலாக் காஞ்சியின் குமரகோட் டத்தனே
மாநடை கொண்டு வருக
மன்னுநன் மணியுடன் கமண்டலம் கொண்டவா
மணிவே லுடன்வ ருகவே.
58✓
தீவினைச் சேர்க்கையால் போரிடும் சூரனைத்
திருவளர் மஞ்ஞை யாக்கித்
தீங்குசெய் தகர்செருக் கடக்கிவான் காத்தருள்
செம்மையைப் புரிந்து வேதன்
நாவினில் உறைந்திடும் கலைமகள் நாணமாய்
நாசியை இழந்து நிற்கும்
நலமறும் வேள்வியைத் தீய்த்தவன் மைந்தனாய்
ஞானமாய் விளங்கும் முருகா
காவியம் தந்திடும் கந்தனே சேந்தனே
கானுறை வள்ளி மானைக்
காதலாற் பற்றிடும் சண்முகத் செம்மலே
கனிவுடன் நல்வேல் ஏந்தி
மாவியற் காஞ்சியில் மேவிடும் அழகனே
மாநடை கொண்டு வருக
மகிழுநன் மணியுடன் கமண்டலம் கொண்டவா
மாவேலு டன்வ ருகவே.
59வேறு✓
வாமசந் திரனைச் செஞ்சடை தாங்க
வாகையார் கொன்றை சூடி
மானொடு மழுவும் நற்கரம் தாங்க
மங்கைதன் னிடத்தி லோங்க
ஏமமார் கங்கை இணங்கிமேற் சேர
இடபமாய் மாயன் ஏந்த
இபந்தனை யுரித்த இணைக்கரம் தன்னில்
ஏற்றமார் சூலம் தாங்கித்
தாமமார் முக்கண் தண்ணருள் சேர்க்கத்
தழைத்தருள் ஈசன் மகனே
தமியனேன் றன்னைத் தடுத்தருள் புரியும்
சரவண பவகு மரனே
காமகோட் டத்திற் கனிந்தருள் காஞ்சி
கந்தனே வருகை புரிவாய்
காலனை வாட்டும் பாலனே குகனே
கனிவுடன் வருகை புரிவாய்.
60வேறு✓
ஈசனார் மைந்தனே இராகவன் மருகனே
இமவான் மடந்தை மகனே
ஏற்றவைந் தொழில்செயும் அறுமுகச் செல்வனே
இடும்பனுக் குகந்த குகனே
வாசமார் கார்த்திகை மாதரார் ஏத்திடும்
வடிவேல னேசண் முகனே
மன்னுதே வேந்திரன் மாமகள் தன்னொடும்
மதிமிகும் வள்ளி மாதை
ஏசலாய்க் கொண்டருள் வேடனே வணிகனே
இதயத்தில் ஒளிரும் பரனே
ஏற்றகா லாயுதப் பதாகையும் மஞ்ஞையும்
இனிமையாய்ப் போற்றி நிற்க
நேசமார் காஞ்சியின் குமரகோட் டத்தனே
நெருங்கிநீ வருகை புரிவாய்
நித்தமார் மணியுடன் கமண்டலம் கொண்டவா
நிகரிலா வருகை புரிவாய்.