முருகன் App
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ்
வ.த. இராம சுப்பிரமணியம்
சிறுபறைப்பருவம்9 / 10
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ் · வ.த. இராம சுப்பிரமணியம்

சிறுபறைப்பருவம்

81வேறு✓
மருவையின் சத்தியாய் மாரியாய்க் காளியாய்
மலையனூர் நீலி யாகி
வாராகி கௌரியாய்த் துர்க்கையாய்க் கங்கையாய்
வரந்தரும் காமாட் சியாகிக்
கருமுகில் தேவியாய்க் கன்னியா குமரியாய்க்
காசிவி சாலாட் சியாகிக்
கண்ணனின் தங்கையாய்க் காத்திடும் வாமியாய்க்
கனிந்தருள் அபிரா மியாகி
அருள்புரி ஆதியாய் ஆகமப் பொருளதாய்
அருமறை போற்று கின்ற
அரியதாய்க் கற்பகத் தன்னையாய் விளங்குநல்
ஆரணி பெற்ற முருகா
திருவளர் காஞ்சியின் குமரகோட் டத்தனே
சிறுபறை முழக்கி யருளே
திகழுநன் மணியுடன் கமண்டலம் கொண்டவா
சிறுபறை முழக்கி யருளே.
82✓
வெம்மைகொள் வினையுடன் முன்வினை யாவையும்
இனிமையாய் ஆக்கி நின்சீர்
இதமுடன் ஏத்துநல் லடியவர் தமக்கெலாம்
இன்மலர்ப் பாதம் நல்கி
வெம்மையைக் காய்ந்திடர் நீக்கிநல் வாழ்வருள்
வேலனே அம்பிகேயா
வேதனும் நாரணன் மறையொடுந் தேடவான்
மேன்மையாய்த் திகழ்ந்து யாண்டும்
அம்மையாய் அப்பனாய்த் திகழ்ந்தருள் ஈசனின்
அன்பினில் விளைந்த குகனே
அரியநல் வேடனாய் வேங்கையாய் விருத்தனாய்
அருவுரு வாகும் முருகா
செம்மைகொள் காஞ்சியின் குமரகோட் டத்தனே
சிறுபறை முழக்கி யருளே
திகழுநன் மணியுடன் கமண்டலம் கொண்டவா
சிறுபறை முழக்கி யருளே.
83வேறு✓
முந்தையாய் முதலாய் முற்றுறும் வினையை
முற்றறுத் தாளும் வகையில்
முழுமுதற் பொருளாய் நிலவிடும் எந்தை
முருகனே குமார வேளே
நந்துறும் கோளால் நேரிடும் புன்மை
நலிவுறும் பிணிகள் மற்றும்
நன்மனம் காணும் அச்சமும் மயலும்
நாடவொண் ணாது புரிவாய்
பந்தமாம் இடரிற் படுதுயர் தம்மைப்
பரிவொடு நீக்கி நின்று
பதந்தனைக் காட்டி நல்லருள் புரியும்
பாலசுப்ர மணிய னேயென்
சிந்தையார் காஞ்சிக் குமரகோட் டத்தா
சிறுபறை முழக்கி யருளே
திகழுநன் மணியும் கமண்டலம் கொண்டாய்
சிறுபறை முழக்கி யருளே.
84✓
நெய்யுடன் பாலும் தேனுடன் கன்னல்
நெத்துறு தெங்கும் சேர்த்து
நிரவுநற் சூட்டின் நிலையொடும் வாழை
நீலமாங் கனியின் சாறும்
துய்யவே சேரும் சுவையினும் மிக்கத்
தோன்றுநற் சுவையின் நல்கும்
தூயனே நேய தூமறை வாச
சோதியாய்த் துலங்குங் குகனே
மெய்யுறை தேவ வள்ளியின் காந்த
விமலனே மஞ்ஞை யேறி
விண்ணெலாம் வலங்கொள் அமரனே முருகா
வெற்பினில் ஓங்கும் அழகா
தெய்வமா காஞ்சிக் குமரகோட் டத்தா
சிறுபறை முழக்கி யருளே
திகழுநன் மணியும் கமண்டலம் கொண்டாய்
சிறுபறை முழக்கி யருளே.
85✓
சூலமும் பிறையும் மான்மழு கங்கை
சூழவீற் றிருந்து யாண்டும்
சோதியாய்த் தோன்றி ஆதியாம் நங்கை
அன்புடன் வரிக்க மேனாள்
ஆலகா லத்தை அருந்திமுப் புரத்தை
அழலுறுங் காட்சி தந்தும்
அலகிலா வரங்கள் சூரனுக் களிக்கும்
அண்ணலாம் ஈசன் நுதற்கண்
ஞாலமே ஓங்கத் தோ ற்றுநற் குகனே
நாடுநல் தணிகை யானே
நாடொறும் போற்றும் பாவலர் நெஞ்சில்
நடமிடும் ஞான முருகா
சீலமார் காஞ்சிக் குமரகோட் டத்தா
சிறுபறை முழக்கி யருளே
செம்மைநன் மணியும் கமண்டலம் கொண்டாய்
சிறுபறை முழக்கி யருளே.
86✓
பழமையார் பதியிற் பாங்கொடும் மேவி
பழமையிற் புதுமை சேர்க்கும்
பரிவினால் காதல் கிழவனாய் ஏகிப்
பத்தியார் வள்ளி தன்னை
உழுவலாய் மணங்கொண் டுலகினைக் காக்கும்
ஒருதனி முதல்வ னாகி
ஓமெனும் மொழியின் விளக்கமாய் ஓங்கும்
ஒருவனே கந்த வேளே
தழுவுநல் பத்தர்க் கருள்தரும் பதியாய்த்
தரணியிற் குன்ற மர்ந்த
தணிகைநன் னிதியே பழனியம் பதியே
தரியலர்க் கரிய கோவே
செழுமையார் காஞ்சிக் குமரனே நாதச்
சிறுபறை முழக்கி யருளே
சிற்குணத் தொளிரும் சீலனே வேதச்
சிறுபறை முழக்கி யருளே.
87✓
உருவெலாம் கடந்த ஒருவனும் ஆகி
உருவினுள் அருவும் ஆகி
உண்மையும் உண்மைப் பொருளெனும் ஆகி
உண்மையின் ஒளியும் ஆகிக்
கருவினுட் பொதியும் கருப்பொருள் ஆகிக்
கருத்தினுட் கருத்தும் ஆகிக்
கனிவுறும் பொருளிற் கனிந்தருட் கனியாய்க்
காத்தருள் பரமும் ஆகிப்
பெருவெளித் திரளாய்ப் பேரொளிப் பிழம்பாய்ப்
பெருந்தவப் பொழிலும் ஆகிப்
பேதபே தமுமாய்ப் பேரெழில் தருவாய்
பெருகுநல் லாறு முகனே
திருவளர் காஞ்சிக் குமரனே ஞானச்
சிறுபறை முழக்கி யருளே
சிற்குணத் தொளிரும் சேந்தனே நாதச்
சிறுபறை முழக்கி யருளே.
88✓
இம்மையின் பயனாய் ஏற்றநற் றுணையாய்
இகநலம் புரியும் பரமாய்
ஏந்திழை இருவர் சேர்ந்திடும் நடுவாய்
இனியசெவ் வேளெனும் ஆகி
மும்மையின் பயனாய் மன்னுமெய்ப் பொருளாய்
முந்துறும் வினையைத் தீர்க்கும்
மூலமாய் அருளும் வேலனாய்க் குகனாய்
முத்துவேல் ஏந்திக் காத்து
மும்மரைத் தீர்க்கும் மணியனாய் வேத
வண்ணனாய் ஞான ஒளியாய்
வரந்தரும் ஆறு படைகொளும் பதியே
வாசவன் மருக னேநல்
செம்மையார் காஞ்சிக் குமரனே நாதச்
சிறுபறை முழக்கி யருளே
சிந்தையார் வாஞ்சைச் சேந்தனே சீலச்
சிறுபறை முழக்கி யருளே.
89✓
நாவலார் செயலில் நனிமகிழ் வுறவே
நாவலா ரூரர் தம்பால்
நவமுறும் தோழன் ஆகிநற் பரவை
நாச்சியார் அகத்தை நாடி
மூவெயிற் பொடிக்கும் முறுவலைச் சொரிந்த
மூலமாய்த் திகழும் வாயால்
முத்தெனும் உரையைப் பாரினிற் பகர்ந்த
முழுமுதற் பரமன் ஈன்ற
சேவலங் கொடிகொண் டோங்குசண் முகனே
சிந்தையார் பால் முருகா
சீற்றமேர் நிருதர் செருக்கினைத் தகர்க்கும்
சேந்தனே சுப்ர மண்யா
தேவமாக் காஞ்சிக் குமரனே மேவும்
சிறுபறை முழக்கி யருளே
திண்மைகொண் டாளும் இருவினை நீங்கச்
சிறுபறை முழக்கி யருளே.
90✓
தந்தையும் தாயும் தனிப்பெரும் பொருளாய்த்
தரணியும் அறியும் நிலையில்
தகவுடன் பணிந்து செழுங்கனி யடைந்து
தடையெலாம் நீக்கும் மருந்தாய்
விந்தையார் பாலச் சந்திரன் என்றே
வேண்டுவார்க் கருளும் வள்ளல்
வேதக ணேசர்க் கியைந்தசோ தரனே
வேலனே பால குகனே
கந்தனே கார்த்தி கேயனே வள்ளிக்
காந்தனே அமரர் கோனே
கடம்பனே பழனிக் குமரனே வெற்பிற்
கனிந்தருள் ஆறு முகனே
சிந்தையார் காஞ்சி முருகனே நேயச்
சிறுபறை முழக்கி யருளே
தெறித்திடும் வினையைத் துரத்திடும் நாதச்
சிறுபறை முழக்கி யருளே.