முருகன் App
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ்
வ.த. இராம சுப்பிரமணியம்
செங்கீரைப்பருவம்2 / 10
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ் · வ.த. இராம சுப்பிரமணியம்

செங்கீரைப்பருவம்

11✓
துவராடை தாங்கிநற் றவம்புரிந் தோங்கிடும்
தூயநற் பிருங்கி மேனாள்
துயருற்ற வேளையிற் றண்டினைப் பெற்றிடும்
துணையிலா மரபு கண்டு
சிவமுற்ற வாய்மையாற் பூசனை புரிந்துநற்
சீரிடப் பாகம் ஏற்றுத்
திருவோங்கு நல்லருள் புரிந்திடும் தேவியின்
செம்மைசேர் சிவகு மரனே
தவறுற்ற அசுரரைத் தனிப்பெரும் வேலினாற்
சமரினிற் செருத்து மேவும்
தவமுற்ற செந்திலிற் றண்ணருள் புரிந்திடும்
தலைவனே ஞான குகனே
சிவமோங்கு காஞ்சியின் குமரகோட் டத்தனே
செங்கீரை யாடி யருளே
திருவக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
செங்கீரை யாடி யருளே.
12✓
மோனமாம் நிலையினிற் செம்பொருள் காட்டியும்
முந்துறும் கருணை மேவி
மொய்வினை மாய்த்திடும் மொழிபகர்ந் தோதரும்
உவகையோ டாடல் செய்தும்
ஏனமாய்ப் பால்சுரந் தருள்தரும் விமலனை
எழிலுடன் வரிக்கு மாற்றால்
இன்மனத் தையனாம் மலையனின் புதல்வியாய்
இயம்பிடும் எண்ணம் கொண்ட
வானதிச் செல்வமாம் தேவியின் மைந்தனே
மாயவன் மருக னேதெய்
வானையின் கணவனே தேவரின் தலைவனே
வள்ளியை விழைந்த குகனே
தேனலர் காஞ்சியின் குமரகோட் டத்தனே
செங்கீரை யாடி யருளே
திருவக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
செங்கீரை யாடி யருளே.
13✓
மருள்நீக்கும் அண்ணலார் தொழுதேத்தும் வேளையில்
மயல்நீக்கி யாண்டு ஞாலம்
மதிசேர்க்குங் குரவனாய் வலிந்தாளும் பாங்கினில்
மாதேவி மகிழும் வண்ணம்
திருநாவுக் கரசெனும் ஒருநாமம் நல்கிநற்
செம்பொன்னும் சோறும் ஈந்து
செயலோங்கு மதுரையிற் றிருவோங்கச் செய்திடும்
சீலத்த தாத கைதன்
திருவார்க ரந்தனைச் செறிவாகப் பற்றிடும்
சிவனார் நயந்த குமரா
தென்தமிழைக் காக்கவும் தீயோரைக் காயவும்
திகழ்வேல் எடுத்த முருகா
திருவோங்கு காஞ்சியிற் செயலோங்கு குமரனே
செங்கீரை யாடி யருளே
திருவக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
செங்கீரை யாடி யருளே.
14✓
உம்பரின் தலைவனாய் நீலகண் டத்தனாய்
உமையொடும் காட்சி நல்கி
ஓயாது வீசிடும் அலையெனும் வினைகளைந்
துறங்காது பித்த னாகிச்
செம்பதச் சீரினைத் தந்தருட் பாங்கினிற்
றில்லையம் பதியில் மேவிச்
செறிவான ஆடலைப் புரிந்தருள் ஈசனைச்
சிந்தையில் நினைந்து போற்றும்
செம்மைக் குவந்தருள் இராகவன் மருகனே
சேந்தனே சிவகு மரனே
தேற்றமார் நற்பதம் தந்திடும் கடம்பனே
சீலனே செந்தி லோனே
செம்மையார் காஞ்சியின் குமரகோட் டத்தனே
செங்கீரை யாடி யருளே
திருவக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
செங்கீரை யாடி யருளே.
15✓
அறமோங்கு நாட்டினில் அருளோங்கி மல்கவே
அறுபத்து நான்கெ னும்சீர்
அருளோங்கும் ஆடலைச் செய்துநற் செம்மைசேர்
அருந்தமிழ்ச் சங்கம் ஏறிப்
புறமோங்கிப் பாரெலாம் புகழ்ந்தோங்கும் பித்தனாய்
போகத்தைச் சேர்க்கு மாறு
பொற்போங்கு நங்கையை இடந்தனிற் கொண்டருள
புரிசடைக் கடவுள் ஈன்ற
திறமோங்கும் குமரனே தேவர்தம் தலைவனே
சீரோங்கும் திருமு ருகனே
தேனோங்கும் தலைவனே குன்றோங்கும் குமரனே
திருவோங்க அருளும் குகனே
சிறந்தோங்கும் காஞ்சிவாழ் செய்யார் பதத்தனே
செங்கீரை யாடி யருளே
திருவக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
செங்கீரை யாடி யருளே.
16✓
சீரோங்கு வள்ளியின் செங்கரம் பற்றிடும்
செம்மையைக் கொண்ட முருகா
தீராத வினையெலாம் தீர்த்தருள் புரியநற்
றிருவேலை ஏந்தும் குமரா
பாரோங்கி உய்ந்திடும் காட்சியில் செவ்வரம்
பரிசாக அருளும் குழகா
பாராளு்ம் மங்கையாய்த் தோன்றிடும் அன்னையாம்
பராசக்தி ஈன்ற அழகா
ஏரோங்கி மல்கிடும் ஏரகத் தண்ணலே
ஏகம்பர்க் குரைபு கன்ற
ஈராறு விழிகொளும் சீராறு முகத்தனே
எளியேனை யாளும் குகனே
தேரோங்கு காஞ்சியின் குமரகோட் டத்தனே
செங்கீரை யாடி யருளே
திருவக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
செங்கீரை யாடி யருளே.
17✓
நீலகண் டத்த………ாய் நீள்சடை யண்ணலாய்
நிமலனாய்ப் பித்த னாகி
நெடிதுயர்ந் தோங்கிடும் சோதியாய் அயனொடு
நெடியவர்க் கரிய னாகிச்
கோலமார் வெண்பிறை சூடிடும் அழகனாய்க்
குலமுறை வளர்க்கும் நெறியிற்
கொற்றமேர் பாண்டியன் மருகனாய் மதுரையின்
குழகனாய் வேந்த னாகி
ஞாலமார் கூலியாய்க் குரவனாய் மறவனாய்
நல்வளை வணிக னாகி
நலமெலாம் தந்திடும் ஈசனின் மைந்தனே
நற்றொழில் இனிது மேவும்
சீலமார் காஞ்சியின் குமரகோட் டத்தனே
செங்கீரை யாடி யருளே
செம்மையார் மணியுடன் கமண்டலம் கொண்டவா
செங்கீரை யாடி யருளே.
18✓
அம்மையாய் அப்பனாய் அத்தனாய் அண்ணலாய்
அறுமுகச் சிவனு மாகி
அழகனாய்க் குமரனாய் விருத்தனாய் வேடனாய்
அணிதிகழ் வேங்கை யாகி
மும்மரைத் தீர்த்திடும் மணியனாய் வேலனாய்
மதிநிறை புலவ னாகி
வல்வினை போக்கிடும் வாசனாய் வள்ளியின்
மனம்வளர் செல்வ னாகி
நம்பனே கம்பனின் நுதலினிற் றோன்றிடும்
ஞானமார் தழல தாகி
நற்றவம் மல்கிடும் திருமுறைப் பனுவலை
நாள்தொறும் ஓதி மேவும்
செம்மைக்கொள் காஞ்சியில் ஓங்கிடும் சேந்தனே
செங்கீரை யாடி யருளே
சிந்தையார் மணியுடன் கமண்டலம் கொண்டவா
செங்கீரை யாடி யருளே.
19✓
பகலவன் றன்னொடு மதியையும் பரிவுடன்
பகர்கின்ற விழிக ளாக்கிப்
பார்திகழ் குக்குடப் பதாகையும் கொண்டுநற்
பரிசமாய் அத்தி தன்னை
மகபதி யளித்திடத் திருமணம் புரிந்துநன்
மஞ்ஞையில் அமர்ந்து பாரில்
மகிழ்வுடன் அறுபடைக் கதிபனாய் வரதனாய்
மாட்சிமை புரிந்து சீரார்
தகவுறும் அருணகி ரிக்கருள் முருகனே
தலந்தொறும் வீற்றி ருக்கும்
தனிப்பெருங் கந்தனே வள்ளியின் காந்தனே
சந்ததம் விழாமு யங்கித்
திகழுநற் காஞ்சியின் குமரகோட் டத்தனே
செங்கீரை யாடி யருளே
சீரக்க மணியுடன் கமண்டலம் கொண்டவா
செங்கீரை யாடி யருளே.
20✓
ஆர்கடல் ஈட்டிய ஆலமும் வாய்த்திடும்
அமுதெனப் பருகு வானோர்
அயர்வினைத் தீர்த்துநல் உலகினைக் காத்திடும்
அமரனுக் குரைபு கன்று
தேர்ந்தருட் பாங்குடன் பாம்பனார் போற்றிடும்
சிந்தையார் வடிவில் தோன்றித்
திருத்தலம் காட்டிடும் தனிப்பெரும் குமரனே
தேவானைக் குகந்த குகனே
பேர்திகழ் தேவாரா யர்தமக் கருள்தரும்
பிரியனே சுப்ர மண்யா
பெருமைசேர் அழகொடும் இலட்சதீ பங்களாற்
பிரணவப் பொருளை வாழ்த்தும்
சீர்திகழ் காஞ்சியின் குமரகோட் டத்தனே
செங்கீரை யாடி யருளே
சீலமார் மணியுடன் கமண்டலம் கொண்டவா
செங்கீரை யாடி யருளே.