காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ்
வ.த. இராம சுப்பிரமணியம்
சிறுதேர்ப்பருவம்10 / 10
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ் · வ.த. இராம சுப்பிரமணியம்
சிறுதேர்ப்பருவம்
91✓
மாதவம் புரிந்து நாதனை மணந்து
வளமார் அறங்கள் செய்து
மாணருள் சொரிந்து மாநிலம் புரந்து
வடிவார் நடம்ப யின்று
மாதவன் தங்கை யாயநன் நங்கை
மலையான் மகிழ்ந்து பெற்ற
வாசமார் அன்னை நேசமாய் ஈன்ற
வடிவேற் குமார வேளே
நாதமார் காஞ்சிச் செல்வனாய் ஒளிர்ந்து
நலமாய்ச் செழிக்கும் முருகா
ஞானமார் வள்ளி மங்கையும் தெய்வ
நங்கையும் மலர்ந்தி ருக்கத்
தீதகன் றேகிச் செவ்வருள் நாடும்
சிறுதேர் செலுத்தி யருளே
தெவ்வரும் காயத் தொல்வினை ஓயச்
சிறுதேர் செலுத்தி யருளே.
92✓
வேலனே வெற்பின் நேயனே மாந்தர்
மிடியைத் தகர்க்குங் குகனே
மீனவன் மகனே வேடனே கடையூர்
விமலைக் குகந்த சுதனே
மாலயன் போற்றும் வேந்தனே தெய்வ
மயில்மீ தமரும் பரனே
மாநலம் நல்கும் மன்னனே மன்னும்
வடிவேற் கரத்த னேவெங்
காலனைக் காயும் கந்தமா மணியே
கச்சிக் குமார வேளே
கார்த்திகை மாதர் போற்றுநன் மழலைக்
கனியிற் கலந்த தேனே
சீலரைக் காக்கும் செம்மலே தேற்றும்
சிறுதேர் செலுத்தி யருளே
தீவினை வாடிச் சீரெழில் நாடச்
சிறுதேர் செலுத்தி யருளே.
93✓
முத்தனே மேவும் மூலநான் மறையின்
முதலாய் விளங்குங் குகனே
முருகனே போற்றும் வானவர்க் கருளும்
மொழியார் பதத்த னேசெம்
பித்தனின் மகனே பேணுமால் மருகா
பிரமன் புகழ்ந்து போற்றும்
பெரியனே வள்ளிக் காந்தனே சீரார்
பெருஞ்சொல் பகர்ந்த கோனே
நித்தனே காஞ்சி நாதனே நேய
நிதியார் படைப்பு முதலாய்
நேயநன் மணிகொண் டொண்முதற் றொழிலில்
நிதமும் சிறக்கும் நலனே
சித்தமே மலரச் செழுமையே பெருகச்
சிறுதேர் செலுத்தி யருளே
செய்யவள் நாடச் சுற்றமும் வாழச்
சிறுதேர் செலுத்தி யருளே.
94✓
ஈசனை வணங்கிப் பூசனை புரிந்தின்
இணையாய் நிலைத்து வானோர்
ஏத்திடத் திகழ்ந்தித் தரணியும் விளங்க
எழில்வேற் கரத்த னாகிச்
காசிபன் விளைக்கும் வேள்வியைப் புரக்கும்
கருத்துற் றிலைய வேலூர்
காணரும் சிறப்பின் மேவிநல் லருளைக்
கனிவாய்ச் சொரிந்து காக்கும்
வாசமார் காஞ்சி முருகனே யக்க
மணிகொள் முதல்வ னேயென்
மாசெலாம் தீர்க்கும் மணியவே முத்தி
வழங்கும் தனித்த பொருளே
தேசமார் சுடர்கொண் டியாவையும் புரிவோய்
சிறுதேர் செலுத்தி யருளே
சீலமேர் ஆறு படைகொளும் குமரா
சிறுதேர் செலுத்தி யருளே.
95வேறு✓
பாயவந் தேபொருந் மானொடு வேங்கையும்
பணியும் திறத்தில் நோக்கிப்
பைரவன் பார்த்திபன் பாவலன் என்றருட்
பரிவாற் சிறந்து மேவி
மாயவன் வேண்டுநல் லாழியும் தந்துசெவ்
வருளே வடிவ மாகி
மாதொடு விளங்குநற் பரமனின் மைந்தனே
மணிவேற் கரத்த னேநல்
தூயமாக் காஞ்சியின் குமரகோட் டத்தனே
சுருதிப் பொருட்கும் முதலே
சோதியார் சேவலும் மஞ்ஞையும் தேர்ந்துவெந்
துயரைத் தீர்க்கும் முருகா
தீயரை மாற்றவும் சீலரைக் காக்கவும்
சிறுதேர் செலுத்தி யருளே
தீமைகள் சாயவும் தேவைகள் நாடவும்
சிறுதேர் செலுத்தி யருளே.
96✓
வாமனன் தங்கையாய்ப் பர்வதன் நங்கையாய்
ராகி நீலி யாகி
மாரியாய்க் காளியாய்க் கங்கையாய்த் துர்க்கையாய்
வாணிகா மாட்சி யாகிப்
பூவளர் அங்கமாய்க் கற்பகத் தன்னையாய்ப்
புகலுமி னாட்சி யாகிப்
பொன்னியாய் வன்னியாய்க் கன்னியாய்க் காத்தருள்
பூவைக் குகந்த குமரா
நாமமார் காஞ்சியின் கந்தனே வேலனே
நலமே வளர்க்கும் குகனே
நாதனே வேதனே ஞானமார் பாதனே
நவிலும் மறைக்கு முதலே
தேமணம் சூழவும் செவ்வருள் நாடவும்
சிறுதேர் செலுத்தி யருளே
சீர்மலிந் தோங்கவும் செம்மனம் வாழவும்
சிறுதேர் செலுத்தி யருளே.
97✓
பாரோங்கி வாழுநற் பான்மையால் விளங்குசீர்
பாண்டிப் பிரானென் றாகிப்
பத்தியாய்ப் போற்றுநற் றொண்டர்தம் நெஞ்சிலே
பஞ்சாட் சரமும் ஆகி
ஏரோங்குந் தில்லையும் திருமுது குன்றமும்
எழிலார் கயிலை மலையும்
இனிதோங்கி வீற்றிருந் தாட்கொளும் ஈசனின்
இடப்பா கத்தில் ஓங்கிக்
காரோங்கு காஞ்சியும் ஆலவாய் நெல்லையும்
காசியாம் செம்மைப் பதியும்
கனிந்தோங்கச் செய்தருள் அம்பிகை நன்மனக்
கருத்திற் கிசைந்த முருகா
சீரோங்கு காஞ்சியின் தனிப்பெருந் தேவனே
சிறுதேர் செலுத்தி யருளே
செம்மைகொள் சேந்தனே வேலனே கந்தனே
சிறுதேர் செலுத்தி யருளே.
98வேறு✓
ஞாலமேர் அறங்கள் நாளெலாம் புரியும்
நலமிகுந் தொளிரும் மாண்பும்
நாநிலம் புரக்கும் நற்றிருப் பணியும்
நலமாய் மொழியும் சீரும்
பாலறா வாயன் பைந்தமிழ் இசைக்கும்
பண்பால் ஒளிரும் நிலையும்
பயன்தரும் சொல்லைப் புகன்றிடும் கலையும்
பரிவால் திகழும் மனமும்
சாலநல் வளமும் சார்ந்தநற் பொருளும்
தருமம் தழைக்கும் வாழ்வும்
சந்ததம் நின்னைப் போற்றுநற் பதமும்
தரமாய்த் தழைத்து மேவச்
சீலமார் காஞ்சிக் குமரனே கோலச்
சிறுதேர் செலுத்தி யருளே
செவ்வருள் புரியும் சேந்தனே மன்னும்
சிறுதேர் செலுத்தி யருளே.
99வேறு✓
இரும்புமனத் தடியேனின் இகல்கொள்ளும் ஒருநிலையை
இயல்பாய்ப் பகர்வ தென்றால்
இமயத்தின் பெரிதான தோற்றத்தின் பொருளாகி
எதிர்கொண் டலைக்கும் அந்தோ
கரும்புமனப் பரம்பொருளே நின்னடியைப் போற்றுஞ்சீர்க்
கருத்திற் செழிக்கும் அன்பர்
காண்கின்ற நலங்காணப் புவிகளிக்கும் மனமினிக்கும்
கருவில் திருவும் சேர்க்கும்
விரும்புமனத் தடிசிலென உனைக்காணும் உத்தமரின்
மிடிதீர்த் தருளும் முருகா
விழைகின்ற நெஞ்சமதில் தழைக்கின்ற செழுஞ்சுடரே
விரைவாய் அருள் செவ்வேளே
செருமனத்தின் செலவொழித்துச் சிவஞானம் செழித்தோங்கச்
சிறுதேர் செலுத்தி யருளே
திருவோங்கும் காஞ்சியினில் சிறந்தோங்கும் திருக்குமரா
சிறுதேர் செலுத்தி யருளே.
100வேறு✓
பாதச் சிலம்பின் நாதத் தொளிரும்
பரிவாற் கருணை புரிந்தோங்கும்
பான்மைக் குவந்து பாரில் தவழ்ந்து
பரணில் திளைக்கும் தவமானைக்
காதற் சிறக்கும் போதத் துயிர்க்கும்
கலையார் வேடன் வடிவாகிக்
காணக் களிக்கும் மாணத் தளிர்க்கும்
கருத்தால் மணங்கொள் முருகோனே
வேதந் தழைக்கும் அயனார் பிழைக்க
மிகவாய்ப் படைக்கும் திறலோடு
மேகம் செழிக்கும் போகம் வளர்க்கும்
விழைவார் காஞ்சிப் பதிமேவி
சேதம் தகர்க்கும் குமரா புவிக்கண்
சிறுதேர் செலுத்தி யருளாயே
சேவைக் களிக்கும் குகனே விளக்கும்
சிறுதேர் செலுத்தி யருளாயே