முருகன் App
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ்
வ.த. இராம சுப்பிரமணியம்
முத்தப்பருவம்5 / 10
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ் · வ.த. இராம சுப்பிரமணியம்

முத்தப்பருவம்

41✓
வினையிலே கிடந்து வேர்த்திடும் வகையில்
வேதனை பெருக்கி வாடும்
வெய்யனேன் றன்னை நின்னருட் கருணை
விளையுமா றுகந்து காட்டித்
தினையள வெனினும் செய்திடாற் குகனே
சிந்தையும் தேறி நிற்பேன்
தினைப்புனம் காக்கும் திருவினை மணந்த
செல்வனே மஞ்ஞை யேறி
அனைவரும் போற்ற அவனியில் விளங்கும்
அமுதனே ஆறு முகனே
அருவமாய் உருவ அருவுரு எனவாய்
அருள்தரும் சிவகு மாரா
மனைவளர் காஞ்சிக் குமரகோட் டத்தின்
மணியனே முத்த மருளே
மாதிகழ் கமண்ட லத்துடன் திகழும்
மணியனே முத்த மருளே.
42✓
சீர்மிகும் தெய்வச் சக்கரப் படையைச்
செருக்குடன் மார்பில் தாங்கித்
தேவரும் வான யாவரும் மருளத்
தெவ்வரைத் தாக்குந் தீயன்
தேர்மிகுஞ் சூரன் தாருகன் வெருளத்
தீரவேல் செலுத்தி வென்று
செப்பருஞ் சீரா றெழுத்தினைப் பருகும்
சிந்தனைச் செல்வர் மகிழ
ஊர்தொறும் ஏகி ஒண்ணருள் புரியும்
உம்பர்தம் தலைவ மாந்தர்
உற்றிடும் இடரைத் தீர்த்தருள் நல்கும்
ஒருவனே முருக வேளே
கார்வளர் காஞ்சிக் குமரகோட் டத்தின்
கந்தனே முத்த மருளே
கைவளர் கமண்ட லத்துடன் மேவும்
கடம்பனே முத்த மருளே.
43✓
அருளோங்கு தேவியின் திருக்கரந் தன்னிலோர்
அறுமுகத் தண்ண லாகி
அழகுறும் கார்த்திகை மாதரின் அன்பிலார்
அணிதிகழ் பால னாகித்
திருவோங்கு வாய்மையால் தரணிவாழ் மகிமையால்
ருள்நிறை ஆறு பதியின்
சேந்தனாய் வீற்றிடுந் தின்னருட் கருணையைச்
செம்மையாய் மகிழ்ந்து நல்கிப்
பொருளோங்கு பிரணவப் பெரும்பொருள்
மாட்சியைப்
புகன்றிடும் பெற்றி காணாப்
பொன்மலர் வாசமார் பிரமனின் செருக்கினைப்
போக்கவே தடிந்து காக்கும்
தருவோங்கு காஞ்சியின் குமரகோட் டத்தனே
சத்தான முத்த மருளே
தனித்திரு மணியுடன் கமண்டலம் கொண்டவா
சாலநல் முத்த மருளே.
44✓
வேங்கையின் தோலுரித் தணிந்து மான் மழுவொடும்
வெற்றிகொள் சூலம் தாங்கி
வெங்கரித் தோலுரித் தொல்லைமுப் புரந்தனை
வீழ்த்திடும் முறுவல் காட்டி
ஓங்குயர் வாதவூர் அண்ணலார் அருள்மொழிக்
குகந்துநற் குருந்தை யேகி
ஓதரும் கங்கைநல் வைகையின் மேவலால்
ஒருதனிக் கூலி யாகி
ஏங்கிடும் வந்தியார் பிட்டினை மாந்திநல்
எளியனாய்க் காட்சி நல்கும்
ஈசனார் போற்றிடும் வாசமார் மைந்தனே
ஈரிலா உமையின் மகனே
பாங்குயர் காஞ்சியின் குமரகோட் டத்தனே
பரிவுடன் முத்த மருளே
பகர்திரு மணியுடன் கமண்டலம் கொண்டவா
பரந்தரும் முத்த மருளே.
45✓
தேவமா தேவனாய் நேயனாய்ப் பாணனாய்த்
தேர்ந்தநல் தோழ னாகிச்
செய்யமுக் கண்ணனாய் நாதனாய் வேடனாய்ச்
செவ்வருள் தாயு மாகி
மாவடி யேகுநல் ஏகனாய்க் கம்பனாய்
மங்கைநற் பாக னாகி
வாதிடும் வண்ணனாய் வேதனாய் வேந்தனாய்
வன்னியைத் தாங்கி மேவும்
கோவணத் தண்ணலாய்க் கூலிக பாலியாய்க்
கூத்தனாய்ப் பித்த னாகிச்
கோலமார் அரவொடும் திங்களைத் தரித்திடும்
கொன்றையார் பரமன் ஈன்ற
ஆவளர் காஞ்சியின் குமரகோட் டத்தனே
அன்புடன் முத்த மருளே
அரன்விழி மணியுடன் கமண்டலம் கொண்டவா
அன்புடன் முத்த மருளே.
46✓
பாண்டவர் பசியறப் பாத்திரம் நல்கியும்
பார்த்திபன் நேய னாகிப்
பரிவுடன் சுபத்திரை நங்கையைத் தந்துநற்
பாங்குடன் மணமு டித்தும்
மாண்புடன் கீதையைப் பகர்ந்திடும் ஞானியாய்
மாபெருங் காட்சி நல்கி
மன்னுயிர் காத்திடும் வாமனன் மருகனே
மஞ்ஞையில் அமருங் குகனே
வேண்டுவார்க் கருள்தரும் வள்ளலே குன்றமர்
வேலனே கார்த்தி கேயா
வெற்றியார் சேவலும் நின்புகழ் சாற்றநல்
மேதினி காக்கும் முருகா
நீண்டுயர் காஞ்சியின் குமரகோட் டத்தனே
நித்தனே முத்த மருளே
நீலநன் மணியுடன் கமண்டலம் ஏந்திடும்
நிமலனே முத்த மருளே.
47✓
முன்வினை தந்திடும் வெம்மையால் நைந்துயான்
முழைபடல் காண விலையோ
முந்துறும் தீமையால் உருக்குலைந் தழிந்திடும்
முறியனைக் காண விலையோ
என்வினைக் கீழ்மையை நின்னருட் கருணையால்
இணைத்தருள் புரிய நின்றன்
எழில்மிகும் பதமலர் காட்டிடும் பாங்கினில்
இன்னமும் தாம தித்தால்
பின்னையும் காப்பவர் யாருளர் எந்தையே
பேரருள் புரியும் குகனே
பிஞ்சுகன் மைந்தனே காஞ்சியின் குமரனே
பிரணவப் பொருள்ப கர்ந்த
வண்ணனே நின்னருட் கருணையின் அங்கமாய்
மகிழ்வுடன் முத்த மருளே
மருளெலாம் தீரவும் திருவருள் சேரவும்
மகிழ்வுடன் முத்த மருளே.
48✓
அஞ்சியே வாடும் அடியவன் மனத்தின்
அச்சமும் போக்கி மேவும்
ஆவலாற் செய்யும் செய்கையால் தோன்றும்
அல்லலைத் தீர்த்தும் என்றன்
நெஞ்சமும் நின்னை நேயமாய்ப் போற்றி
நித்தமும் வாழ்த்தும் திறமும்
நேரிடும் வாழ்வில் மிடியுறா நிலையும்
நெக்குறும் மனமும் மற்றும்
விஞ்சுநின் சீரைச் செப்பிடும் பண்பும்
விருப்புடன் வழங்குஞ் சீரும்
மேன்மையாய் நல்கும் வாய்மைசேர் பாங்கும்
மேதினி தனிற்சி றக்க
நெஞ்சமார் காஞ்சிக் குமரனே என்றன்
நேயனே முத்த மருளே
நீலநன் மணியும் கமண்டலம் ஏந்தும்
நிமலனே முத்த மருளே.
49✓
பத்தரைப் போற்றும் பாங்கினை யறியாப்
பாவியேன் தேரும் வண்ணம்
பத்தியும் பண்பும் பாரினில் தந்தும்
பரிவுடன் காத்து நின்றும்
நித்தமும் சேரும் நீள்வினைப் பிணியால்
நீத்திடும் வாழ்வு தன்னில்
நேரிடும் துயரைத் தீர்த்தருள் புரியும்
நியமமும் வண்மை சீரும்
முத்தியின் நலமும் மோனமும் நின்பால்
முனிதலில் லாத அன்பும்
மூப்புறு எழிலும் மிடியுறா வளமும்
முந்துறும் கருணை யோங்க
வித்தையார் காஞ்சிக் குமரனே குகனே
வேலனே முத்த மருளே
வேயுநன் மணியைக் கனிவுடன் ஏந்தும்
மெய்யனே முத்த மருளே.
50✓
காலனைக் காலால் தடிந்திடும் செம்மைக
காட்சியைத் தந்த பரமன்
காலபை ரவனாய்த் திகழ்ந்திடும் தூயன்
கங்கையைத் தாங்கும் இறைவன்
மாலவற் காழி தந்திடும் வரதன்
மங்கையோ டொளிரும் அழகன்
வன்னியோ டரவும் சூழவே விளங்க
வள்ளலாய் அருளும் தேவன்
சீலமாய்த் தில்லைச் சபையினில் ஆடும்
செம்மலாம் ஈசன் பெற்ற
சேந்தனே வள்ளிக் காந்தனே நிலவும்
தினைப்புனம் திரிந்த கோனே
கோலமார் காஞ்சிக் குமரனே குகனே
குழைவுடன் முத்த மருளே
கொன்றையார் சடையன் மைந்தனே
குணமிகும் முத்த மருளே.