முருகன் App
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ்
வ.த. இராம சுப்பிரமணியம்
தாலப்பருவம்3 / 10
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ் · வ.த. இராம சுப்பிரமணியம்

தாலப்பருவம்

21✓
முகமா றுடையாய் மஞ்ஞையமர்
முருகா அருளார் அழகோனே
மூவா சேவற் கொடியுடனே
முந்தும் அருளைப் பொழிவோனே
இகவாழ் வினிலே ஏற்றமுடன்
எழிலார் கருணை புரிவோனே
ஈசன் போற்றும் குமரோனே
இமவான் மடந்தைப் புதல்வோனே
புகலும் அடியார் நலம் பெறவே
புரக்கும் வானோர் பெருமானே
பூவைக் குறத்திப் பணியதனைப்
போற்றும் தணிகைப் பதியோனே
தகவான் காஞ்சிப் பதியினில் வாழ்
தலைவா தாலோ தாலேலோ
தரமார் படைப்புத் தொழில் மேவும்
தனிவே லவனே தாலேலோ.
22✓
அருளார் கனியைப் புவிக்களிக்கும்
அமைப்பார் பழநிப் பதியிலுறை
அமுதே தேவர் குலப்பதியே
அயன்மால் போற்றும் அரும்பொருளே
அருணை முனிவர் அருந்தமிழில்
அழகாய் நிலவும் கருப்பொருளே
அணியார் தெய்வ யானையுடன்
அணங்காம் வள்ளிக் குறமகளை
அருளால் மணங்கொள் முருகோனே
ஆறு படைகொண் டொளிர்வோனே
அருவாய் உருவாய் அருவுருவாய்
அனைத்தும் ஆகும் தனியோனே
அருளார் காஞ்சிப் பதியினில்வாழ்
அழகா தாலோ தாலேலோ
அருளார் படைப்புத் தொழில்மேவும்
அமரா தாலோ தாலேலோ.
23✓
புனிதம் காக்கும் பரந்தாமன்
புகழார் இராமன் காகுத்தன்
பொங்கும் கடலிற் றுயில்மாயன்
போதன் போற்றும் வேங்கடவன்
நனிசீர் வரதன் கோவிந்தன்
நாதன் கண்ணன் கோபாலன்
நலம்சேர் ஆழிப் படைகொள்ளும்
நாரா யணனாம் நரசிங்கன்
இனியன் துளபன் வாமனனாய்
இகவான் அளக்கும் கார்வண்ணன்
எனவாய் விளங்கும் திருவரங்கன்
எழிலார் மருகா பேரின்பக்
கனியார் காஞ்சிப் பதியினில் வாழ்
கந்தா குகனே தாலேலோ
கவினார் படைப்புத் தொழில் மேவும்
கனியே தாலோ தாலேலோ.
24✓
பழநிப் பதியில் சிறந்தொளிரும்
பதியே பால முருகோனே
பாவைக் குறமா மகளுடனே
பரவும் வேடர் போற்றிடவே
அழகார் வேங்கைத் தருவாகி
அருளும் தணிகைக் குமரோனே
ஆடும் மஞ்ஞை மகிழ்ந்திடவே
அமரும் பதியே வேலவனே
வழங்கும் தமிழைக் குறுமுனிக்கு
வகையாய் ஓதும் புலவோனே
வணங்கும் அடியார் வாழ்வுறவே
வரங்கள் அருளும் குருபரனே
முழங்கும் காஞ்சிப் பதியினில்வாழ்
முதல்வா தாலோ தாலேலோ
மொழியும் படைப்புத் தொழில்மேவும்
முருகா தாலோ தாலேலோ.
25✓
வலமார் சூரன் றனைமாய்த்து
மகிழ்வால் சேவல் மயிலாக்கி
வடிவார் தெய்வ யானையுடன்
வள்ளிக் குறமர் மகளோடு
நலமே புரியும் தகைமையிலே
நாளும் விளங்கும் அடியவர்கள்
நனிசேர் புகழும் செல்வமுடன்
நற்றாள் போற்றும் செம்மையுற
நிலங்காண் தெய்வ மணிவிளக்காய்
நிலவும் முருகா சிவகுமரா
நெடியோன் போற்றும் வடிவழகா
நெறியார் தேவர்க் கிறையோனே
குலமார் காஞ்சிப் பதியினில் வாழ்
குமரா தாலோ தாலேலோ
குணமார் படைப்புத் தொழில் மேவும்
குகனே தாலோ தாலேலோ.
26✓
செந்திற் பதிவாழ் சிவகுமரா
சீரார் தணிகைப் பதிமேவித்
தெய்வத்தலமாம் பரங்குன்றில்
திகழும் பொருளே வேலவ்னே
வந்திப் பவரைக் காத்தருளும்
வாழ்வே என்றன் மனக்கொழுந்தே
வளமைக் கணியாய் செழித்தோங்கும்
வயலூர் மேவும் நன்மணியே
முந்தைப் பொருளே மேதினியின்
முதல்வா சைவத் திருமணியே
முந்தி யருளும் முதற்பொருளே
மூவர் போற்றும் விழுப்பொருளே
கந்தா காஞ்சிப் பதியினில் வாழ்
கார்த்தி கேயா தாலேலோ
கனிவார் படைப்புத் தொழில்மேவும்
கடம்பா தாலோ தாலேலோ.
27✓
பாட்டும் பொருளும் தானேயாய்
பாடற் கினிய வாக்களிக்கும்
பரமாய் நின்றவ் வடிபவர்தம்
பரவும் நெஞ்சிற் புகுந்திருந்து
வாட்டம் போக்கும் நிலைபுரிந்து
வளமும் நலமும் செய்வித்து
மகிழும் முருகா குறமகளை
வரிக்கும் அழகா இளங்குமரா
தேட்டம் பெருகப் போற்றிடவே
தெவிட்டா இன்பம் பரிந்தளிக்கும்
திருவே தணிகைப் பதியரசே
சிவனார் போற்றும் இளவரசே
காட்டும் நலங்கொள் காஞ்சியில்வாழ்
கந்தா குகனே தாலேலோ
கவினார் படைப்புத் தொழில்மேவும்
கடம்பா தாலோ தாலேலோ.
28✓
அழியாச் சூரன் செருக்கடக்கும்
ஆறு முகனே அருணகிரிக்
கருளும் குகனே அவனிதனில்
ஆறு படைகொண் டொளிர்பவனே
விழியீ ராறும் வேற்படையும்
மேவும் புகழார் ஆறெழுத்தும்
மெய்யுறை யாக அடியவர்க்கு
மேலாய் அருளும் நன்மணியே
விழைவாய் மயிலம் இரத்னகிரி
வேலூர் வயலூர் குமரகிரி
மிளிரும் பேரூர் மருதமலை
மின்னும் புகழார் தலத்தமர்ந்து
மொழியார் காஞ்சிப் பதியினில்வாழ்
மோன ஒளியே தாலேலோ
முதலாம் படைப்புத் தொழில்மேவும்
முருகா தாலோ தாலேலோ.
29✓
தேவர் துயரைத் தீர்த்தருளச்
சேனா பதியாய் வந்தவனே
தேராச் சூரன் றனைமாய்த்துத்
தேரும் செயலைப் புரிந்தவனே
கூவற் செங்கட் கிடாவதனின்
கொட்டம் அழிக்கும் குமரோனே
கூறும் மறையின் பொருளறியாக்
குறைசேர் அயனைத் தடிந்தவனே
ஏவும் கிறிசெய் மலையனுடன்
இகலே புரியும் மாகறனும்
இளங்கெட் டழியச் செய்திடவே
இனிமை புரியும் வேலவனே
சேவைக் குரிய காஞ்சியில்வாழ்
சிவனார் புதல்வா தாலேலோ
திருவார் படைப்புத் தொழில்மேவும்
சேந்தா தாலோ தாலேலோ.
30✓
அன்னப்பறவை எனவாகி
அரனைத் தேடும் வழியினிலோர்
அமையா வொருசொல் புகன்றமையால்
அலரை யடைந்த நான்முகனும்
மன்னும் மறையின் நற்பொருளை
மயங்கும் அறிவால் மறந்திடவே
வளரும் அருளாற் சிறையிருத்தி
வயங்கும் பொருளை நனியுரைக்கும்
மின்னும் ஞானப் பெருநிதியே
மேவும் சுவாமி மலைக்கரசே
வெல்லும் தனிவேற் படையுடனே
விளங்கும் பதியே செம்மையெலாம்
நண்ணும் காஞ்சிப் பதியினில்வாழ்
ஞானக் குமரா தாலேலோ
நயமார் படைப்புத் தொழில்மேவும்
நாதா தாலோ தாலேலோ.