முருகன் App
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ்
வ.த. இராம சுப்பிரமணியம்
காப்புப்பருவம்1 / 10
காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத்தமிழ் · வ.த. இராம சுப்பிரமணியம்

காப்புப்பருவம்

1✓
சீரார்ந்த தேவியாம் காமாட்சி யன்னையார்
செம்மையாய் ஆட்சி செய்யத்
தேசார்ந்த நலமெலாம் சீராநக் காணவே
திண்மையாய் ஓங்கி நிற்கப்
பேராயி ரத்தொடும் பித்தான ஏகனின்
பெருமையை வாழ்த்தி என்றும்
பேறாக வாய்த்துநற் பிள்ளையாய்ப் பூவினிற்
பீடுறும் சிவக ணேசா
ஏரார்ந்த வேலினை ஏந்துங்க ரத்தனாய்
இனமுறும் வள்ளி மானை
இன்பப் பெருக்குடன் நன்மணம் நாடிநல்
ஏசலை விழைந்த முருகன்
காராளும் காஞ்சியிற் கனிவாக மேவினன்
கருத்துடன் காக்க வாவே
கயிலாய நாதனுக் கரும்பொருள் சாற்றிடும்
கந்தனைக் காக்க வாவே.
2✓
சிந்திடும் முறுவலால் திரிபுரம் தீய்த்தவன்
தேவியும் மலைக்கு மாறு
சீலமார் பூசையில் சந்தமார் கங்கையைச்
சீற்றமாய் ஏவ விட்டு
முந்துறும் அன்பினாற் றழுவிடத் தோன்றிடும்
முதல்வனின் திறத்தை விஞ்சும்
மூலமாய் முதலதாய் மும்மலச் சேற்றினை
முற்றுமாய் அகற்றும் முதல்வா
நந்துறும் நல்லருள் புரிந்திடும் ஐங்கரா
நாரணன் போற்றும் திலகா
நாளெலாம் நின்னையே நினைபவர்க் கின்னருள்
நலமுடன் அருள்க ணேசா
முந்தையார் காஞ்சியிற் குமரகோட் டத்துறை
முருகனைக் காக்க வாவே
முன்னுருத் திரமணி கமண்டலம் ஏந்திடும்
முத்தனைக் காக்க வாவே.
3✓
மேனாளில் தக்கனின் தீச்சொலாற் றேய்ந்திடும்
வெம்மையைப் பெற்ற மதியை
மேன்மையாய்க் காக்கவே தரித்தருள் நல்கிடும்
விமலனை மணம்பு ரிந்த
மீனாட்சி யம்மையின் மணமலர்ச் செல்வனே
மிகையுடன் அருளும் வண்ணம்
மெய்மையைக் காத்திடும் முகுந்தனின் மருகனாய்
விளங்கிடும் ஆனை முகனே
வாணாளும் தேவரும் வாணரும் முனிவரும்
வாழ்வுறச் செய்யும் சீரால்
வடிவேலும் சேவலும் வளமுடன் தாங்கிமா
மஞ்ஞையில் அமரும் முருகன்
தேனாடும் காஞ்சியின் குமரகோட் டத்தனாம்
தேவனைக் காக்க வாவே
திகழக்க மணியுடன் கமண்டலம் ஏந்திடும்
சேந்தனைக் காக்க வாவே.
4✓
சொற்றமிழ்ச் சுந்தர வள்ளலின் வாய்மொழிச்
சுருதியை ஏற்று கந்துத்
தொன்மையார் நேயனாய்த் தோழனாய்த் தரணியில்
சூழ்மணம் புரிந்த நோக்கில்
பற்றுடன் ஆட்கொளும் ஈசனார் திருவருட்
பாங்கினில் புதுமை சேர்க்கப்
படர்விழிப் பார்வையைத் தந்திடும் அம்பிகை
பரவிடும் ஆனை முகனே
உற்றநற் புத்தியும் ஒளிதரும் சித்தியும்
உவப்புடன் அமர்ந்தி ருக்க
ஓதரும் பிரணவப் பொருளென நின்றனை
உலகெலாம் போற்றி நிற்கக்
கற்றநற் காஞ்சியின் குமரகோட் டத்தனைக்
கனிவுடன் காக்க வாவே
காணக்க மணியுட ன் கமண்டலம் ஏந்திடும்
கந்தனைக் காக்க வாவே.
5✓
மகமாயி கங்கையாய் நீலியாய்ச் சத்தியாய்
மனோன்மணி கௌரி யாகி
வாசமிகு சாமளை துர்க்கைமீ னாட்சியாய்
மனோகரி வராகி யாகி
அகமோங்கும் நங்கையாய்த் திகம்பரி நிமலையாய்
ஆயகல் யாணி யாகி
அபிராமி யன்னையாய்க் காளியாய்க் கன்னியாய்
அணிமிகும் பவானி யாகிப்
பகர்கின்ற மாரியாய் மலையனூர் வல்லியாய்ப்
பதிவிளக் கன்னை யாகிப்
பரிவாக அருள்தரும் அம்பிகை தந்தருள்
பார்புகழ் ஆனை முகனே
புகழோங்கும் காஞ்சியின் குமரகோட் டத்துறை
புனிதனைக் காக்க வாவே
புகழக்க மணியுடன் கமண்டலம் ஏந்திடும்
புனிதனைக் காக்க வாவே.
6✓
தக்கனின் வேள்வியைக் காய்ந்திடும் ஈசனும்
தகவுடன் உவந்து போற்றும்
தனிப்பெரும் வண்ணனே நேயனே நாதனே
தடாதகைக் குகந்த மகனே
மிக்கசீர் தந்திடும் மோதகச் செல்வனே
மேன்மைகொள் திறத்தி னோடு
விமலனோ டன்னையை வலம்வரும் செம்மையால்
மேவுநற் கனியை யேந்தி
தக்கநற் பதிதனை விளக்கிடும் அண்ணலே
தரணியிற் றிகழும் முதலே
சந்ததம் ஓங்கிடும் வானவர் தலைவனே
தைவளர் ஆனை முகனே
அக்கமார் காஞ்சியில் ஓங்கிடும் குமரனை
அன்புடன் காக்க வாவே
அணிமயில் மீதமர் அறுமுகச் செம்மலை
அன்புடன் காக்க வாவே.
7✓
வேதனைச் சிறையிடும் அறுமுகன் கங்கையார்
விமலனின் இளைய மைந்தன்
விலங்கலை யழித்துவெவ் வசுரனை யடர்த்திடும்
விடையனின் இனிய செல்வன்
மாதினை மாவினை விழைந்துநல் வள்ளியை
மணங்கொளும் தணிகை முருகன்
மதியுடன் வன்னியும் மெய்யுறக் கொண்டருள்
மாசிலா மணியின் மகனாய்
வேதமார் காஞ்சியின் குமரகோட் டத்தினில்
விருப்புடன் விளங்கி நாளும்
மேனலம் புரியவும் செவ்வருள் மலரவும்
மேன்மையாய் வீற்றி ருக்க
நாதமார் கணபதிச் செம்மலே வாகைசேர்
நலமுடன் காக்க வாவே
நானிலம் காத்தருள் நலமிகும் நாதனே
நயமுடன் காக்க வாவே.
8✓
பாற்கடல் நாயகன் வாழ்த்திடும் சேந்தனாய்ப்
பாரினிற் செம்மை தேக்கிப்
பரிவுடன் அருள்தரும் அம்பிகை மைந்தனாய்
பாலசுப்ர மண்ய னாகி
வேற்படை கொண்டருள் சீலனாய் வேந்தனாய்
வேடனாய் விருத்த னாகி
வெற்றிகொள் குக்குடப் பதாகையும் சேர்ந்திடும்
வீரனாய்ச் சூரன் றன்னைக்
காற்படுத் தியாண்டருள் கந்தனாய் எந்தையாய்
காஞ்சியிற் கோலம் தாங்கிக்
காணரும் முதற்றொழில் மேவிடும் முருகவேள்
கனிவுடன் விளங்கி நிற்க
நாற்புயத் தண்ணலே ஐங்கரத் தோன்றலே
நயமுடன் காக்க வாவே
நற்றொழில் காத்திடும் ஆனைமா முகத்தனே
நலமுடன் காக்க வாவே.
✓
பச்சைமா மஞ்ஞையில் இச்சையாய் அமர்ந்துநற்
பாரெலாம் வலமும் வந்து
பாங்குடன் காசிபன் வேள்வியைக் காத்திடும்
பரிவினிற் றிகழ்ந்து மேவும்
செச்சைமீ திவர்ந்திடும் சேந்தனாய்க் குறமகள்
செம்மையாய் அளித்த தேனைத்
தேட்டமாய் அருந்திடும் சீரினைப் போற்றிடும்
திருவினார்க் கருளும் முருகன்
மெச்சுநற் பண்பினாற் போற்றிடும் தொண்டரை
மேன்மையாய்க் காக்கு மாறு
வித்தையார் காஞ்சியின் குமரகோட் டத்தினில்
விழைவுடன் வீற்றி ருக்கக்
கச்சையார் அரவுகொள் கணபதிச் செல்வமே
கவினுடன் காக்க வாவே
கனிவுடன் அருள்தரும் ஐங்கரத் தண்ணலே
கந்தனைக் காக்க வாவே.
10✓
பனிமலை மேவிடும் பரமனின் நுதலினிற்
பரிவுடன் உதித்த குமரன்
பச்சைமா மயில்மிசைப் பாரினை வலம்வரும்
பழமுதிர் சோலை முருகன்
கனிவுடன் வள்ளியைக் கடிமணம் புரிந்தவன்
கருத்தினிற் றிகழும் அழகன்
கலைமகள் நாதனுக் கருளுரை செய்தவன்
காசினி போற்றும் அமரன்
இனிமையார் காஞ்சியிற் குமரகோட் டத்தினில்
எழிலுடன் காட்சி நல்கி
ஏத்திடும் அடியவர் நெஞ்சினிற் குடிபுகுந்
தேற்றமாய் நிலைத்தி ருக்கத்
தனிப்பெரும் வள்ளலே கணபதிச் செம்மலே
சால்புடன் காக்க வாவே
சாலநற் பெருமைசேர் சண்முகத் தண்ணலைச்
சந்ததம் காக்க வாவே.