முருகன் App
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ்
தவத்திரு சிதம்பர சுவாமிகள்
சிற்றில்பருவம்9 / 10
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ் · தவத்திரு சிதம்பர சுவாமிகள்

சிற்றில்பருவம்

82✓
வேதா புவனத் தோகைமன்
வேட்கைக் காமர் வெண்கமலம்
விருப்புற் றிருக்கத் ராவிடத்தார்
வியக்குஞ் ஸ்லோகப் பெம்மாட்டி
மாதா பனுவற் கானரச
மகர வீணா மிர்தராணி
வாக்கிற் றவள நேத்ரக்ருபை
மங்கா தழைத்த பஞ்சவர்க்குத்
தூதா குறங்கும் பாற்கடலிற்
றொனிக்குந் தரங்கக் கையோச்ச
சுலவு மணியும் பொன்மணலும்
தொகுத்தார் தொண்டர் வாழ்க்கைதமக்
காதா ரகத்தின் கழுகுமலைக்
கரசே சிற்றி லழியேலே
அமர சமர குமரவென்பார்க்
கடியேன் சிற்றி லழியேலே.
83✓
கங்கா தரனுங் கண்ணனொடுங்
கமலக் கோவுங் கண்டறியா
கருத்தே செனித்த பக்திரசக்
கந்தா கடம்பா தெய்வீக
மங்காப் பொருளே மருக்கொழுந்தே
மருவே வள்ளி மணவாளா
மகுடச் செழியன் றமிழ்தழைக்கு
மணியே மயிலி னின்றாடும்
பொங்கே புலவா விண்ணாட்டைப்
புரக்குங் கருணைப் பேராளா
பொன்னே புனலே புவனக்ருபைப்
புயலே வடியார் போற்றுபொழு
தங்கா தரத்தின் கழுகுமலைக்
கரசே சிற்றி லழியேலே
அமர சமர குமரவென்பார்க்
கடியேன் சிற்றி லழியேலே.
84✓
தாதை விரகத் தாதையலென்
றாயு மருவச் சந்தோடந்
தவழ நாத விந்தளித்த
சடமே பொய்யோ மெய்யோயான்
பேதை மனமோ கெட்டதுனைப்
பேணற் கில்லா தற்பர்கள்பாற்
பெருமைக் கவிதைப் பாராட்டிப்
பிழைக்கத் துணிந்தே னந்தேயென்
காதை நவிலற் கொண்ணாத
கவடக் களங்கக் கன்மவினை
கலக்க மறுத்துக் காப்பாற்றக்
கடன்காண் கந்தா சந்தோடத்
தாதை மகிமைக் கழுகுமலைக்
கரசே சிற்றி லழியேலே
அமர சமர குமரவென்பார்க்
கடியேன் சிற்றி லழியேலே.
85✓
தாலம் வருகை சப்பாணி
தனக்கோர் முத்தஞ் செங்கீரை
தளராக் காப்பம் புலிசிறுதேர்
சமர்த்துக் கொருவ ரீடாமோ
மூலா தாரத் தெய்வக்கிருபை
முளையிற் கிளர்ந்த பழம்பாடல்
முழக்கச் சரண கெம்பீர
முருகா னந்தச் சீர்தழைக்கும்
கோலா கலத்தின் மணப்பெருமை
குறத்தி வணங்கிக் கொண்டாட
குழந்தைப் பருவச் சீர்காட்டுங்
குகனே கிராத மின்னார்சு
ளாலோ லத்தென் கழுகுமலைக்
கரசே சிற்றி லழியேலே
அமர சமர குமரவென்பார்க்
கடியேன் சிற்றி லழியேலே.
86✓
நீயும் நானு மொன்றெனவும்
நிதியும் பதியு மொன்றெனவும்
நனைப்பும் விழியு மொன்றெனவும்
நிறையுங் குறையு மொன்றெனவும்
தாயுந் தகப்ப னொன்றெனவும்
தனமுங் கனமு மொன்றெனவும்
சடமு முயிரு மொன்றெனவும்
தவமுந் தயையு மொன்றெனவும்
மாயுங் கவலை யொன்றெனவும்
மதித்துத் துதித்தே னென்பிறவி
மயக்கக் கடலின் கரையேற்று
மகிமைத் தோணி வல்லாளா
ஆயுந் தமிழ்சேர் கழுகுமலைக்
கரசே சிற்றி லழியேலே
அமர சமர குமரவென்பார்க்
கடியேன் சிற்றி லழியேலே.
87✓
தில்லைக் கடவுண் முத்தொழிற்கோ
செழியன் றவத்தோ கற்பகத்தாள்
திருப்பூட் டுதற்கோ தொண்டருக்கோ
சிற்றூர் வேட ராஜாத்தி
புல்லத் தானோ சேவல்மயில்
பொருந்து தற்கோ தேவர்குழாம்
புரக்கக் கருணை வெள்ளமழை
பொழிந்து கடைக்கண் பார்த்திடவோ
மல்லற் கழலுஞ் செஞ்சிலம்பும்
வடிவேல் துலங்குங் கண்காட்சி
வகைக்கோ நீ ஸ்ரீ மீனாட்சி
வயிற்றிற் பிறந்த தெவ்வகைகாண்
செல்வத் துரையே சொல்வாயான்
சிறியேன் சிற்றில் சிதையேலே
சிவணத் துவண கிரிக்குமர
தேவா சிற்றில் சிதையேலே.
88✓
காம்பார் கமலப் பூயனக்
கண்ணன் மருகா கற்பூரக்
கந்தா கடம்பா ருத்ராட்சா
கருணா கரத்தின் றெய்வீகப்
பாம்பார் க்ரீடத் தேவாரா
பரமா னந்தப் பக்திரசப்
பாதா பழனிப் பண்டாரா
பஜனை த்யானா பரிமளிக்கும்
வேம்பார் செழியர்க் கவதரித்த
மீனாள் புதல்வா சிறுகுழந்தை
வேலா கவிஞர் விர்த்தாந்தா
விமலா கும்பன் விஞ்சைமந்த்ரத்
தேன்பால் சொரியும் பழங்கவிதை
சிறியேன் சிற்றில் சிதையேலே
சிவணத் துவண கிரிக்குமர
தேவா சிற்றில் சிதையேலே.
89✓
கல்லா வஞ்ச நிர்மூடக்
காமக் குருட்டுக் கள்வருக்குக்
காலாள வீணர் முன்னோடிக்
கருப்பன் போலுங் காவல்கொள்வார்
எல்லாந் தனக்கே சொந்தமென்பார்
இருக்கு மனையிற் றியாகமென
என்போ லெளியர் சென்றாக்கா
லெடுப்பார் தடியா லடிவிழுமுன்
சொல்லா தோடென் றழிப்புசெய்வார்
சுற்றம் பேணார் துலையும்வண்ணம்
சுடர்வே லெடுத்தா லன்னவர்க்குத்
துணைவே றுண்டோ தொல்லுலகில்
செல்லார் குழலாள் வள்ளிமன்னா
சிறியேன் சிற்றில் சிதையேலே
சிவணத் துவண கிரிக்குமர
தேவா சிற்றில் சிதையேலே.
90✓
வேதப் பலகை வீற்றிருந்து
விதியார் முதலோர் முத்தொழிற்கும்
வேட்கை கூர்ந்து செழியர்குலம்
விளங்கத் தோன்றி வீர்வயிந்து
நாதத் தெளிவாய் எவ்வுயிர்க்கும்
நாட்டஞ் செலுத்தி நயந்தவிண்ணோர்
நாட்டுக் கரசன் வாழ்கமயில்
நடத்தை புரிந்த நட்பாளா
காதற் கனியே சொற்சுவையின்
கரும்பே சுரும்பே வள்ளியம்மை
கணவா முருகன் றுணையெனுஞ்சொற்
காட்சிக் கிசைந்த மெஞ்ஞான
சீதப் புனலே பக்திரசச்
சிறியேன் சிற்றில் சிதையேலே
சிவணத் துவண கிரிக்குமர
தேவா சிற்றில் சிதையேலே.
91✓
மோக மடந்தை சேருடம்பன்
முயக்கத் துதித்த மாயையென்பாள்
மோசத் தமர்ந்த பூவுலகில்
முயற்சிக் கிணங்குஞ் சம்சார
போக செனன மரணவலை
புக்கா தெளியார் பாலமைத்த
பொறுமைக் கருணை மழைபொழியும்
புயலே புலமைக் கெம்பீரா
நாக மணியாள் சிற்றூர்தன்
னாட்டுக் குறத்தி வேட்டகத்தில்
நட்பா ரிதயப் பண்புசித
நலத்தாற் றெய்வ மணம்புரிந்த
சிநேகப் பெருமை கொண்டாடுஞ்
சிறியேன் சிற்றில் சிதையேலே
சிவணத் துவண கிரிக்குமர
தேவா சிற்றில் சிதையேலே.