கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ்
தவத்திரு சிதம்பர சுவாமிகள்
வருகைப்பருவம்6 / 10
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ் · தவத்திரு சிதம்பர சுவாமிகள்
வருகைப்பருவம்
52✓
பூக்குங் கமலப் பொற்கழலிற்
பொன்றா நீழல் வண்டினங்கட்
போதை கான்றப் பறந்திருக்கப்
போம்போ திருகண் கூசலபித்
தீர்க்கக் கரத்தைக் காந்தளென்ற
திடத்தைக் கொண்டு சேர்ந்திறகைச்
சிலிர்க்கச் சிலிர்க்கா துழலமணிச்
செவ்வாய் மழலைத் தேனொழுக்கத்
தூக்கத் தினிலோர் விரல்சுவைத்துத்
தூதார் கொடுத்த பொன்னுரசற்
றொட்டி கிடத்தித் தோராட்டுந்
தொழில்மீ னாட்குச் சுதன்கவலை
போக்கப் பிறந்த திரவியமே
பொன்னாட் டரசே வருகவே
பொழில்சூழ் கழுகும லைக்குள்வளர்
பொருளே வருக வருகவே.
53✓
வானத் தருவின் றேன்கணங்கள்
மழையிற் குலவி வரத்தரங்க
மடங்குங் கடலி னிப்பிகள்வாய்
வதிந்து குவிந்து மணிதிரண்டு
ஞானச் சுடரி னொளிபரப்பி
நகையுள் ளடக்கி நறுமுறுவ
நாப்பண் டொழும்பர்க் கின்பமல்கு
நலஞ்சே ராறு முகங்கொஞ்சுங்
கானக் குறவ ரிளங்குயிலுங்
கலப மயிலுங் கற்பூரக்
கருணைச் செபத்தில் நீவிளங்கக்
காட்சி கொடுக்குங் கந்தாவிண்
பூனைப் பறளுக் கருள்புரிந்த
பொன்னாட் டரசே வருகவே
பொழில்சூழ் கழுகும லைக்குள்வளர்
பொருளே வருக வருகவே.
54✓
குழலுக் கிசைந்து கூத்தாடக
கோமான் குழுக்கள் குதூகலிப்பக்
கொட்டாட் டினிக்க நிர்த்தனத்தைக்
கொண்டோன் குரக்கி னதிகாரச்
செழுமைப் பாத தெரிசனத்திற்
றிகட்டும் வெங்கடே சுரரெட்டச்
சீமான் குலமுந் தலமும்நலஞ்
செழிக்குஞ் செந்தூர் வேல்முருகா
பழமைத் யான பூசனையும்
பணிவுந் துணிவும் பலகாரப்
பதியும் நிதியுங் கொடுத்தருளும்
பழனிக் கிறைவா நறுங்களபப்
புழுகைப் புனைந்த புயபாரா
பொன்னாட் டரசே வருகவே
பொழில்சூழ் கழுகும லைக்குள்வளர்
பொருளே வருக வருகவே.
55✓
குவியக் குவளைக் குறிவசிக்குங்
குறிப்புத் ததும்பு மங்கயற்கண்
குலவச் செழியன் றவத்தேந்தி
கொஞ்சு மயில்தன் மடிபுரண்டு
ரவியிற் பனகக் கனகமணி
நகையிற் கழுத்திற் கரந்தடவ
நகைக்கச் சொலிக்கும் பற்கீரி
நளினக் குதலைத் தேன்வளர்ச்சி
செவியிற் கதுவத் தாலாட்டித்
திமிர்ந்த களபக் குறும்பைமுலைச்
செவ்வா யிருத்திக் காலாட்டத்
தீம்பா லூட்டிப் பசிதவிர்க்கப்
புவியிற் றவுழ்ந்த சிங்காரப்
பொன்னாட் டரசே வருகவே
பொழில்சூழ் கழுகும லைக்குள்வளர்
பொருளே வருக வருகவே.
56✓
மகரக் குழைகள் பிடரலைப்ப
மணிவா யூறி மழலைமொழி
வசனம் வளரக் கைமாறி
மாறித் தவள முகிலோகை
பகரக் குழலா ளுமைவயிறு
பல்லான் மாக்கள் கெற்பமுலைப்
பாலை மறக்கக் கிலுக்குவர்ணப்
பாவை கொடுக்கச் சோதரனென்
றிகரப் பகரத் திம்மென்ப
தேய்ந்த முகவ னைங்கரங்க
ளெடுத்துக் கொஞ்ச முகந்தடவ
வெழுப்பு வானத் திருவுந்தி
புகரக் கரங்க ளனுஷ்டானம்
பூத்த குழந்தாய் வருகவே
பொழில்சூழ் கழுகும லைக்குள்வளர்
பொருளே வருக வருகவே.
57வேறு✓
சக்கொரி சலக்குறி தருக்கொடு சிரிக்கச்
சபாசென் றிடத்தி ரிபுரந்
தகனித்த கயிலாய பரமப்ர மானந்த
சந்தோட சம்பின் சுதக்
குக்குட கரக்குமர கொக்கு நறவக்கனி
குறித்துப் புவிப்ர காரங்
கொண்டரவ சட்டகச் சண்டமா ருதமயில்
குலுங்கப் ரசண்ட வீரா
சர்க்கரை மொழிக்குற வளிக்கொடி மணக்குமர
சந்தான பாக்ய வேலா
தருமோக னந்தந்த திருஞான சம்பந்த
சர்வ ஜீவப்ர யாணா
கைக்கிளி குஞ்சரி மணாள கோலாகலக்
கடவு ணாயக வருகவே
கழுகாசலத் தில்வளர் கவிராசர் பக்திபுரி
கந்த நாயக வருகவே.
58✓
செனனக் குறிப்பறிகி லாதன்னை தந்தைநீ
சிறுவனென் றுண்மை கேட்கத்
தெய்வப் பரஞ்சோதி யுந்தேவி யுஞ்சித்த
சின்மயப் பாலூட் டவே
வினைமுத் தொழிற்குமும் மூர்த்திப் ரகாசம்நேர்
விக்ரகத் திருவு ளத்தால்
வேதாந்த சைவசம யச்சோதி யார்தந்த
வேட்கைப்ர சாத மென்ன
நினைவிற் கடங்காத கண்டவெளி நன்மார்க்க
நிலையென் றிடப்பிள் ளையார்
நீதன்வந் தான்குமர நாதன்வந் தான்றிருவெண்
ணீறன்வந் தானெ னுஞ்சொற்
கனவிற் பனாகர மயூரபரிபூரணக்
கடவு ணாயக வருகவே
கழுகாசலத் தில்வளர் கவிராசர் பக்திபுரி
கந்த நாயக வருகவே.
59✓
வானத் துடுக்கணஞ் செக்கரிற் றோன்றிய
வளப்பத் தின்மணி மின்னவே
மகுடகே யூரப்பொன் மாணிக்க மணிமாலை
மிலிகங் கணங்க டாவ
ஞானப்ர காசமன மோகப்ர சாதக்ருபை
நயனம் பராமுக மில்லா
ஞாபக குதூகலத் தேவர்கள் குழாம்பக்தி
நவரஞ் சிதஞ்செ ழிக்க
மீனக்கொடிச் செழியர் வேற்றுமை தவிர்த்தகை
விபூதி மங்கா திருக்கு
வேதத்தி லும்விந்து நாதத்தி லுங்குடிசிலை
விலகாத சுழிமு னையிலும்
கானக் கலாபமயில் நடனமிடு சரவணக்
கடவு ணாயக வருகவே
கழுகாசலத் தில்வளர் கவிராசர் பக்திபுரி
கந்த நாயக வருகவே.
60✓
கரடகொம் பற்கிளைய கவிதை விம்பப்பரத
கவன கெண்டைக் கொடியினாள்
கனககும் பக்கலச முலைதரும் புத்தமுது
கமழநண் புற்றுணு செவ்வாய்
மருவுதங்கச் சரணில் மகரபைம் பொற்குழையில்
வதன தொந்தக் கருணையில்
வசனசிந் தைத்தெளிவில் மகுடபண் புச்சிரசில்
வரத சங்கற்ப நிலையில்
உரகர் கும்பர்க்குசித மூலவுசந் தர்ப்பமதி
லுருகிடும் பற்றுடை யனான்
உனைவிளங் கப்புகலு மெனதிடந் தக்கசெய
லுதவுகந் தப்ப னெனவே
கருதுதென் புக்குரிய ரடியர்நெஞ் சத்திலுயர்
கடவு ணாயக வருகவே
கழுகாசலத் தில்வளர் கவிராசர் பக்திபுரி
கந்த நாயக வருகவே.
61✓
பாராள வருகவிண் ணூராள வருகவேற்
பண்டார ரூப வருக
பாராயணா வருக நாராயணன் மருக
பஞ்சர் மிர்தா வருகவே
சீராள வருகசெய லேராள வருகசொற்
சிங்கார தூல வருக
சீமாட்டி வருகவென் பாள்ப்ராட்டி முத்தாடு
செல்வக் குழந்தை வருக
தாராள வருகசூர்ப் போராள வருகநற்
சந்தோஷ கோல வருக
சாலோக வருக சாமீப சாரூபசா
யூட்சியசம்போக வருக
காராள வருகமின் கற்பூர தெரிசனக்
கடவு ணாயக வருகவே
கழுகாசலத் தில்வளர் கவிராசர் பக்திபுரி
கந்த நாயக வருகவே.