முருகன் App
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்
மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
சப்பாணிப்பருவம்4 / 10
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ் · மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்

சப்பாணிப்பருவம்

32✓
நீராட்டி யாட்டுமண் ணீர்கொடு சுழற்றியெழு
நீணிலக் காப்புமிட்டு
நிலவொழுகு பட்டாடை கொண்டுட றுடைத்துவெண்
ணித்திலச் சுட்டிகட்டிச்
சீராட்டி மடியில்வைத் தீராறு கையுஞ்
செலுத்திக் குறங்குதட்டித்
தெள்ளமு தெடுத்துவெண் சங்கிடை குலுக்கிநற்
செவ்வா யுறப்புகட்டிப்
பாராட்டி யிருகவு ணெரித்துச் செறித்துவெம்
பணைமுலைப் பாலருத்திப்
பவளவாய் வைத்துண்ண வாய்க்கடங் காதபால்
பாற்கட லெனப்பெருக்கித்
தாராட்டி யிருமூவர் முத்தாடு முத்தைய
சப்பாணி கொட்டியருளே
தங்கமலை நிகரான துங்கமலை யாதிபதி
சப்பாணி கொட்டியருளே.
33✓
சீரிட்ட குழியக் கொண்டையுந் தமனியத்
திருபறையும் வெயிலுமாறாத்
திலகநுத லிலகவரு சுட்டியும் பட்டமுந்
திங்கண்மறு வனையபொட்டு
நேரிட்ட மகரகுண் டலமுமிரு கண்டசர
நித்திலக் கொத்துமணிவாய்
நின்றொழுகு மழலைவா யமுதப் பெருக்குமணி
நீலவளை யுங்காப்புமேல்
வீரிட்ட லம்பூஞ் சிலம்புநிறை கிண்கிணியு
மேவுமரை வடமுமார்பின்
மேலிட்டு மாறாடு கொத்துச் சரப்பணியு
மேனியும் புழுதிதோயத்
தாரிட்ட வீரரொடு விளையாடு மதகளிறு
சப்பாணி கொட்டியருளே
தங்கமலை நிகரான துங்கமலை யாதிபதி
சப்பாணி கொட்டியருளே.
34✓
மதிகொண்ட வான்முக டளாவிவஞ் சனைகொண்ட
மாமரம டர்த்தகையால்
வாரணர்க் குமரிதா ளம்மிசை வைக்கவே
மலரடி யெடுத்தகையால்
துதிகொண்ட வள்ளிமண மாலையிட் டுப்பிறகு
தோண்மாலை யிட்டகையால்
சூழலுகு செவிடடக் கூவுசே வற்கொடி
துலங்கி மணிக்கரத்தாற்
றிதிகொண்ட குறுமுனிக் குபதேச நாட்செய்த
சின்முத் திரைக்கரத்தால்
செந்தமி ழுகந்தநற் கீரனை யகோரமாஞ்
சிறைவிடுத் திடுகரத்தால்
குதிகொண்டு வருமயிற் பரிநடத்தி டுகையால்
கொட்டியருள் சப்பாணியே
கொண்டலம் புகழ்பருகு குன்றையம் பதிமுருக
கொட்டியருள் சப்பாணியே.
35வேறு✓
மானா ரெனுமறு மீனார் தருபுலி
கொட்டுக சப்பாணி
மழலைக் கிளிபுகல் பழனிக் கதிபதி
கொட்டுக சப்பாணி
சேனா பதியென வானோர் பணிபத
கொட்டுக சப்பாணி
செந்தூர் வருகுக விந்தூ ரறுமுக
கொட்டுக சப்பாணி
நீநா னெனவெதி ரானோர் பொருபவ
கொட்டுக சப்பாணி
நேமத் தொடுகதிர் காமத் துதிமதி
கொட்டுக சப்பாணி
கோனா ரொடுவளர் தேனா டுடையவ
கொட்டுக சப்பாணி
குன்றைப் பதிவள ரண்டர்க் கதிபதி
கொட்டுக சப்பாணி.
36வேறு✓
கரமொன்று பொன்வளை கலீரென்ன மாறாது
கங்கணத் தொனிபுலம்பக்
காந்தளம் போதெனக் கரதலஞ் சேப்பநற்
கணையாழ் விரலழுந்தச்
சிரமுஞ்ச டாடவியு மசையவெண் ணிலவோடு
தெண்ணிலவு மூரல்காட்டிச்
சிவனுஞ்ச பாசென்ன வுமையவள் சரோருகச்
சித்தங் களிக்கவேதன்
னுரமுந்தி டுக்கென்ன வாணிநெஞ் சஞ்சவா
னும்பர்கோ னூழிகாலத்
துருமேறி தாமென்ன விண்ணவர் நடுங்கவே
யொருதரத் திரண்டு
தரமுங்க ணீரிடக் குட்டுமொரு செங்கையாற்
சப்பாணி கொட்டியருளே
தங்கமலை நிகரான துங்கமலை யாதிபதி
சப்பாணி கொட்டியருளே.
37✓
மீன்கொண் டிரங்குந் தரங்கஞ் செறிந்தமணி
வேலையினில் வேலையிட்ட
மெல்விரற் கையாற் க்ரவுஞ்சகிரி தூளிபட
வேலெறிந் திடுகரத்தால்
வான்கொண்ட தேவர்மா ரகனான தாரகனை
மறலிக் களித்தகையால்
வாரணத் தொகுதிகட வாரணத் தூற்றுமத
வாரணம் பொருகரத்தா
லான் கொண்ட தேவுக்கு மீன்கொண்ட தேவுக்கு
மபயங் கொடுத்தகையால்
ஐயான னத்தெவ்வை யாறான னங்கொண்
டடர்த்திடு மணிக்கரத்தால்
கூன்கொண்ட பிறையெயிற் றசுரனைத் தெறுகையால்
கொட்டியருள் சப்பாணியே
கொண்டலம் புகழ்பருகு குன்றையம் பதிமுருக
கொட்டியருள் சப்பாணியே.
38வேறு✓
ஏல மலர்க்குழல் வான்மதி பெற்றவ
கொட்டுக சப்பாணி
யேரக மேவிய தாரக மாரக
கொட்டுக சப்பாணி
சோலை மலைப்பதி மேவிய வித்தக
கொட்டுக சப்பாணி
சுந்தர வள்ளி மணந்தரு ணாயக
கொட்டுக சப்பாணி
ஞால மளித்தவன் மேல்விரு திட்டவ
கொட்டுக சப்பாணி
நந்தமு லாவு பரங்கிரி வாழ்குக
கொட்டுக சப்பாணி
கோல மயிற்பரி மேல்வரு விக்ரக
கொட்டுக சப்பாணி
குன்றைப் பதிவள ரண்டர்க் கதிபதி
கொட்டுக சப்பாணி.
39✓
சிங்க மடர்ந்திடு துங்கம லைக்கிறை
கொட்டுக சப்பாணி
தேனா றுடையவ வாரணா ரருள்பவ
கொட்டுக சப்பாணி
சங்கரி பெற்றருள் மங்கள விக்ரக
கொட்டுக சப்பாணி
தாமப் புயமலி நேமத் ததிபதி
கொட்டுக சப்பாணி
புங்கவ ராகிய சங்கர பாலக
கொட்டுக சப்பாணி
பொன்னா டெனவளர் நன்னா டுடையவ
கொட்டுக சப்பாணி
குங்கும வெற்பணி தங்கு திரட்புய
கொட்டுக சப்பாணி
குன்றைப் பதிவள ரண்டர்க் கதிபதி
கொட்டுக சப்பாணி.
40✓
இருமயில் மோகன வொருமயில் வாகன
கொட்டுக சப்பாணி
யெண்ணிய வேளையி னெண்ணிய வாரண
கொட்டுக சப்பாணி
யரிமரு மகனென வருசுர வணபவ
கொட்டுக சப்பாணி
யக்கர மாறுள குக்கிட கேதன
கொட்டுக சப்பாணி
முரசொலி தரவரு மமருல குடையவ
கொட்டுக சப்பாணி
முருகு கடம்பலர் பெருகு தடம்புய
கொட்டுக சப்பாணி
குருபர னெனவுல கிணையடி பணிமுதல்
கொட்டுக சப்பாணி
குன்றைப் பதிவள ரண்டர்க் கதிபதி
கொட்டுக சப்பாணி.
41வேறு✓
திங்கண்முக மடவார்க ளாரிரு செவிக்குமே
தேன்மழை சொரிந்ததென்னச்
செங்கண்மா லின்னமுஞ் செவிவேண்ட நான்முகத்
தேவுமென் செவிபுதைப்பக்
கங்கையணி வார்செவிகள் பத்துக்கு மேதேவ
கானவொலி கானவொலியாய்க்
கைக்கவா ரணமுகத் தரசுதழை செவிமதங்
கரைபுரண் டோடவெங்கட்
பொங்கரவ வின்கண பணாடவிக் கட்செவி
புதைப்பவிமை யோருமகிழப்
போராட வருநிருதர் செவியெலாஞ் செவிடிடப்
பொருசூத னஞ்சலிக்கச்
சங்கரி திருச்செவிக் கமுதமென வொலிதரச்
சப்பாணி கொட்டியருளே
தங்கமலை நிகரான துங்கமலை யாதிபதி
சப்பாணி கொட்டியருளே.