முருகன் App
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்
மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
சிறுதேர்ப்பருவம்10 / 10
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ் · மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்

சிறுதேர்ப்பருவம்

92✓
பண்டேறு கந்தருவர் விண்ணவர் குழாமெலாம்
படையாக வடமேருவே
பாரவில் லாகவா சுகியுமே நாணெனப்
பச்சைமால் கணையாகவே
மண்டேறு தேராக மறைநான்கு புரவியா
மலரயனும் வலவனாக
மதியமும் பருதியும் தேருருளை யாகநம்
வாசவன் தெண்டனிடவே
கண்டேறு தேன்பொழிப் பச்சைப் பசுங்கொடி
கலந்திடப் பாகம்வளரக்
கருதுதிரி புரநிருதர் நகையிலெழு சிகரியெழக்
கண்டுநிர்த் தூளிபடவே
திண்டேரு ருட்டிவரு கயிலைநா யகன்மகன்
சிறுதேரு ருட்டியருளே
செங்கமலை யகலாத துங்கமலை யாதிபதி
சிறுதேரு ருட்டியருளே.
93✓
உருத்தேறு திசைமுகன் றலைபனங் காயென்ன
வுதிரவான் முகடுமட்டும்
உயர்கின்ற செய்குன்றி லுதவுமிள விசையமக
ளுவகையொடு விளையாடவே
கருத்தேறு மாமணிப் பந்தெறிந் தேயலகை
களிகொண்டு கூத்தாடவே
கழுகுக்கு மாங்கூடி யிருகாலி லெற்றிக்
கழங்கென் றுளங்குளிரவே
செருத்தமரி னிசிசர ரிரிந்தோட நிலமங்கை
செங்குருதி யுண்டுதேக்கத்
தென்றிசைக் கடவுள்படை முன்பகை தடிந்திடத்
தேவர்கோன் வரவிடுத்த
திருத்தேர் நடத்திவரு செங்கண்மான் மகிழ்மருக
சிறுதேரு ருட்டியருளே
செங்கமலை யகலாத துங்கமலை யாதிபதி
சிறுதேரு ருட்டியருளே.
94✓
காரேறு முகிலெனக் கடகளிறு வீரிடக்
கரடமத முன்றுபெருகக்
கடலுடைத் தாலென்ன நிரைநிரைய தாகவே
கலினவாம் பரிநெருங்கப்
போரேறு மன்னவர்கள் வாய்மடித் தேகொடிய
புலிபோ லெதிர்த்துநிற்கப்
பொருதுமட் சோணிகண் மூவாறு மோரேழு
புணரியென வந்துசூழச்
சீரேறு முரசுக்கே தன்வெகுள மறலியருள்
செல்வனு மகிழ்ந்துநிற்கச்
செங்கண்மா னனிட்ட மூவாறி லேகுருச்
சேந்திரர்கள் களம்விளங்கத்
தேரேறு மரசர்கதை யெழுதுமிப முகனிலவல்
சிறுதேரு ருட்டியருளே
செங்கமலை யகலாத துங்கமலை யாதிபதி
சிறுதேரு ருட்டியருளே.
95✓
மன்றலந் தெரிவையர்கள் பரிவார மேசூழ
வட்டமதி குடைநிழற்ற
மதவார ணக்கங்கு லிரவிநில வென்னுமிரு
மணிகணீ ரெநடலக்கத்
துன்றுமேழ் கடன்முரசு மிகவார்ப் பரிக்கச்
சுரும்பர்கள் சுரும்புசேரச்
சோலைக்க ருங்குயில்கள் எக்காள மூதவிரு
தூணியு மரும்புநிறையக்
குன்றவில் லியைமூல வடதருவி லுறையுமெங்
கோவான ஞானமுதலைக்
கோதிலா மறைதேடு மெய்ப்பொருளை யுமையோடு
கூட்டுதற் கெளிதாகவே
தென்றலந் தேரிநடத் தியமாரன் மைத்துனன்
சிறுதேரு ருட்டியருளே
செங்கமலை யகலாத துங்கமலை யாதிபதி
சிறுதேரு ருட்டியருளே.
96✓
கனகவரை பளபளென வொலியையக லாதிடக்
கங்குலு மறைந்துநிற்கக்
கமலா கரத்தினி லரும்புகள் சுரும்பொடு
களிக்கவே சக்ரவாகம்
அனவரத முஞ்சோடு பிரியாம லின்பமுற
வந்தணர் கடன்கழிக்க
அருணனொடு பச்சைப் பசுங்குதிரை மேற்கசைய
யடித்திடப் பரிநடக்கப்
பனகனுடல் குலையவொரு பாசமென வேநின்ற
பாசமுந் தணியவுருளை
பரிவர்த்த னஞ்செய்ய வுயர்சக்ர வாளகிரி
பாரம்ப ரிக்கவானிற்
றினகரன் றேர்செல்ல விளையாடு மொருபிள்ளை
சிறுதேரு ருட்டியருளே
செங்கமலை யகலாத துங்கமலை யாதிபதி
சிறுதேரு ருட்டியருளே.
97✓
மூவர்களு நிலைகொண் டிருக்கவிண் ணவர்கள் பொன்
முடிமீன் சுமையுமாற
முனிவோர் சடாமுடி மதுக்குடந் தாங்கலு
முலைக்குட மிரண்டுதாங்கும்
பாவையர்கண் பூமுடிக டண்ணீர்க் குடங்கொண்ட
பாரமற வாயுநிருதன்
பைம்பொனரண் மனைவாயின் முன்றிலிற் றூளுதறு
பாவங்க டரவருணன்
மேவுமறன் மனைதொறுஞ் சாணிநீர் தூற்றுவினை
மீண்டுவினை யகலவனலி
வேண்டுமொரு தூண்டா விளக்கென்ற துயர்நீங்க
வீறுபொன் னாடுநருளாற்
றேவர்கோன் பொற்றேர்ந டரத்தவரு சிறுபிள்ளை
சிறுதேரு ருட்டியருளே
செங்கமலை யகலாத துங்கமலை யாதிபதி
சிறுதேரு ருட்டியருளே.
98✓
கும்பத னங்கொண்ட விந்த்ராணி கடிதடக்
கோமளத் தேரேறவே
குலிசதரன் முனிவோர் மகம்பல வியற்றியே
கூறுபூந் தேறேறவே
கம்பக் கடக்களிற் றரசுர்போ ராடவே
கடவுபொற் றேறேறவே
காசினி விளங்கவரு மாலயமெ லாந்தேவர்
கற்பகத் தேரேறவே
வம்புற்ற தனமாதர் தன்னெறி வழாமையான்
மண்டலத் தேரேறவே
மாதமும் மாரியும் வழங்கலாற் கடல்துழும்
வையகத் தேரேறவே
செம்பொற் பெருந்தேரி லேறுமொரு சிறுபிள்ளை
சிறுதேரு ருட்டியருளே
செங்கமலை யகலாத துங்கமலை யாதிபதி
சிறுதேரு ருட்டியருளே.
99✓
ஒருநாலு வேதமும் விளங்கமறை யோர்குலமு
முலகத்தி லேவிளங்க
வும்பருட னும்பர்கோ மானும்வி ளங்கமக
மேருவாம லேவிளங்க
வருநாடு காவலன் சசிவர்ண மகராசன்
மைந்தன்மிக வும்விளங்க
வானாடு போலவே நேமநா டெந்நாளு
மகிழ்வாக வேவிளங்கத்
தருநாவ லோர்தமிழ் விளங்கவளர் குன்றைநகர்
சந்ததமுமே விளங்கத்
தானமொரு பரிகலஞ் சந்திரா தித்தர்வரை
சந்ததிவி ளங்கநிதமும்
திருநாள் விளங்கவொரு தேரேறி வருமுருக
சிறுதேரு ருட்டியருளே
செங்கமலை யகலாத துங்கமலை யாதிபதி
சிறுதேரு ருட்டியருளே.
100✓
தங்கமலை நிகரான துங்கமலை வாழ்கவே
சரவணப் பொய்கைவாழ்க
சந்த்ரமண் டலமளவு மாயூர கிரிரசித
சைலமென நிதமும்வாழ்க
மங்களம் பெருகுதே னாறுவா னாறென்ன
மாறாது பெருகிவாழ்க
மதுநதீ சுரமிலகு வாமபாகத் தில்வளர்
மரகதக் கொடியும்வாழ்க
வெங்களப முகன்முதற் றேவதா பரிவார
மேன்மேலு வாழ்கவுனது
விரைமலர்த் தாண்மீதி லன்புவைத் தவரெலாம்
வீறுபிறை போலவாழ்க
திங்கண்மும் மாரியொடு சகதலம் வாழ்கவே
சிறுதேரு ருட்டியருளே
செங்கமலை யகலாத துங்கமலை யாதிபதி
சிறுதேரு ருட்டியருளே.
101✓
பார்வாழி குகுடக் கொடிவாழி பச்சைப்
பசுந்தோகை வாழியுனது
பரிவார கணம்வாழி நவவீர ரும்வாழி
பரிவாக வோங்கும்வடிவேற்
கூர்வாழி வள்ளியங் கொடிவாழி வளர்தெய்வ
குஞ்சரிம டந்தைவாழி
கூறுபிள் ளைத்தமிழ்க் கவிவாழி யரசர்செங்
கோல்வாழி யிலகுகுன்றை
யூர்வாழி தானமொடு பரிகலம் வாழிமறை
யோர்குல மிகுத்துவாழி
யுலகுபுகழ் மாயூர கிரிவாழி சந்நிதி
யுயர்ந்துமேன் மேலும்வாழி
சீர்வாழி யெழில்பெருகு குமரகுரு பரமுருக
சிறுதேரு ருட்டியருளே
செங்கமலை யகலாத துங்கமலை யாதிபதி
சிறுதேரு ருட்டியருளே.