முருகன் App
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்
மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
வருகைப்பருவம்6 / 10
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ் · மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்

வருகைப்பருவம்

52✓
ஞாலம் படியும் விரற் காழி
நல்க வருக மதகயம்போல்
நடந்து வருக வொருமாற்றம்
நவில வருக விளங்குதண்டைக்
காலன் வருக வெனதிருகண்
களிக்க வருக விழிக்குமலர்க்
கண்ணே வருக மணியரைஞாண்
கட்ட வருக வுமையவடன்
பாலன் வருக நடந்தநடை
பார்க்க வருக நுதற்றிலதம்
பதிக்க வருக மழலைமொழி
பகர வருக வெவர்க்குமனு
கூலன் வருக தேனாற்றுக்
குரிசில் வருக வருகவே
குன்றாக் குடியில் வீற்றிருக்குங்
குமரா வருக வருகவே.
53✓
தேனே வருக வமரர்தொழுந்
தேவே வருக முத்துவடஞ்
சேர்க்க வருக விழிகளின்மை
திருத்த வருக வரிக்குமரு
மானே வருக மயிலேறும்
வள்ளல் வருக வள்ளிமண
வாளன் வருக வானவர்கோன்
மருகன் வருக நடந்தோடித்
தானே வருக வேலெறிந்த
சமர்த்தன் வருக கடாநடத்துஞ்
சதுரன் வருக வசுரர்பகை
தாண்ட வருக சிகண்டிமலைக்
கோனே வருக தேனாற்றுக்
குரிசில் வருக வருகவே
குன்றாக் குடியில் வீற்றிருக்குங்
குமரா வருக வருகவே.
54✓
பூவே வருக பூவினறைப்
பொலிவே வருகப் பொலிந்தமலர்ப்
புயவேள் வருக புயலொதுங்கும்
பொழிலே வருக பொழிலினிளங்
காவே வருக காவினறுங்
கனியே வருகக் கனிந்தரசக்
கரும்பே வருக கரும்புருவக்
கண்ணே வருக கண்ணனுக்குந்
தேவே வருகத் தேவர்சிறை
தீர்த்தோன் வருக தீர்த்துகந்த
செவ்வேள் வருக செவ்விதழ்சேர்
சேயே வருக சிகண்டிமலைக்
கோவே வருக தேனாற்றுக்
குரிசில் வருக வருகவே
குன்றாக் குடியில் வீற்றிருக்குங்
குமரா வருக வருகவே.
55✓
மாமா னுதவு மொருமயிலை
மணஞ்சேர் மாலை யிடவருக
வானோர் சிறையின் மயங்காமன்
மதவா ரணத்தைப் போல்வருக
காமா நலஞ்சே ரிபமடந்தை
கரபங் கயத்தைத் தொடவருக
கவிக்கே யிரங்கி நற்கீரர்
கடிய சிறையை விடவருக
நாமான் கொழுந னறியாத
நலஞ்சேர் பொருளைத் தரவருக
நாட்டுக் குயர்ந்த வளர்நேம
நாடன் வருக சிகண்டிமலைக்
கோமான் வருக தேனாற்றுக்
குரிசில் வருக வருகவே
குன்றாக் குடியில் வீற்றிருக்குங்
குமரா வருக வருகவே.
56✓
வண்டல் படியுஞ் சுரநதிதன்
மதலை வருக மதம்பெருக்கு
மதவா ரணத்தி னிளவலென
வாய்த்த மயிற்சே வகன்வருக
அண்டர் பணிக்குக் குடமுயர்த்த
வதுலன் வருக வெனையாளும்
ஐயன் வருக மெய்யிலகும்
அண்ணல் வருக விண்ணுயர்கோ
தண்டன் வருக கடப்பமலர்த்
தாமன் வருக வறுகோணச்
சக்ரன் வருக வாறெழுத்துத்
தலைவன் வருக சிகண்டிமலைக்
கொண்டல் வருக தேனாற்றுக்
குரிசில் வருக வருகவே
குன்றாக் குடியில் வீற்றிருக்குங்
குமரா வருக வருகவே.
57வேறு✓
மேனாள் வரும்பகைக் காற்றாத நெஞ்சமொடு
மிக்ககவு சிகனும் வெருள
விரிமலர்க் கோகநக மேவுநான் முகன்மகன்
விரும்பியே யருள்செய் குவான்
கூனாரி எம்பிறை யெயிற்றரக் கனையாவி
கொல்லவர வடுபு ழிக்குக்
குருகுலத் தவர்சரிதை குறுமுனி மகிழ்ந்துடன்
கூறிடக் கோப முனிவன்
வானாடு மகிழவே நிருதமா ரணவேள்வி
மற்றும் மியற்ற வங்கோர்
மறைமுனி தவர்த்துவளர் கவுசிகன் மேல்விடவ
மறையவன் சரண மெனவே
தேனான மதுரமொழி சொல்லியஞ் சேலென்ற
தேவ நாயகன் வருகவே
திமிர்தின கரன்வருக வமரர்தள பதிவருக
குமரகுரு பரன் வருகவே.
58✓
நிருதரிநி தரவருக வமரர்சிறை விடவருக
நிமலன்மன மகிழவருக
நிகிலமறை தொழவருக மறையவன்வெ நிடவருக
நினதுநடை பயிலவருக
வொருவன் முது கினில்வருக வரிசமையின் மிசைவருக
வுமையவடன் மதலைவருக
வுலகமகிழ் தரவருக வரதன்மரு மகன்வருக
வுபநிடத முதல்வன்வருக
விருவிழிமை யிடவருக வரிவளைக டொடவருக
வினியமொழி பகரவருக
இலகுமறு முகன்வருக நுதல்வெயர்வு தரவருக
இபவதந னிளவல்வருக
குருகிரியி லரசபுரி மதுநதிம னவன்வருக
குலதிலக முருகன்வருக
குடகர்கரு நடர்பரவு விகடமயின் மலைமருவு
குமரகுரு பரன்வருகவே.
59✓
அண்டர்மனை வியரணியு மங்கிலியம் வளரவளர்
ஐந்துமுகன் மதலை வருக
வன்றசுரர் பொருமணியி லிந்திரனு மபயமென
வஞ்சலெனு முருகன் வருக
மண்டலமு மெழுகடலு நின்றவட வரையுமொலி
மண்டுமெயின் முதல்வன் வருக
மங்கையர்க டொழுமமர குஞ்சரிமி னிடுகளப
மஞ்சரிகொள் கணவன் வருக
தண்டமிழி னிசைபழகு சங்கமதி லொருவனிசை
தந்ததமிழ் புனைய வருக
சந்தமிகு மருணகிரி செந்தமிழி னுடனிலகு
தங்கவட மணிய வருக
கொண்டல்படி தருநெடிய தென்றலொடு பொழிலிலகு
குன்றைநக ரதிபன் வருக
குடகர்கரு நடர்பரவு விகடமயின் மலைமருவு
குமரகுரு பரன் வருகவே.
60✓
தஞ்சமென மருவுகுற வஞ்சியிணை முலைமுனைக
டங்குபுய முருகன் வருக
தண்டையுட னொலிகுமுறு கிண்கிணியு மொளிபெருகு
தண்டரன மணிய வருக
வஞ்சமிடு மசுரர்படை நெஞ்சுபறை யறையவடு
வன்கையயி லெறிய வருக
மங்கையர்கண் மயறணிய நின்றவர்கண் மிடிதணிய
வந்துகிருபை சொரிய வருக
விஞ்சையர்கள் புடைபெருகு துங்கமலை தனிலுலவு
வெங்களப மதலை வருக
விம்பவித முழகுசொரி கின்றதுளி பெருகிநிறை
மிஞ்சுநதி பெருக வருக
கொஞ்சுகிளி யொடுபழகு தண்டலைகள் புடைபெருகு
குன்றைநக ரதிபன் வருக
குடகர்கரு நடர்பரவு விகடமயின் மலைமருவு
குமரகுரு பரன் வருகவே.
61✓
திங்கண்முடி மருவுகிர வுஞ்சகிரி தகரவொரு
செங்கையயி லெறிய வருக
திரைகடலு மரவணையி லரியுமன மறுகியலை
சிதறவயி லெறிய வருக
வெங்கணசி சரர்குருதி கங்கமொடு நரிபருக
விந்தையயி லெறிய வருக
விகடமிடு மலைகயுட லடுகிழி படவொருவன்
வினவுமயி லெறிய வருக
துங்கமலை பணிபவர்க டங்கள்வினை தணியவொரு
கொந்தவயி லெறிய வருக
சுரர்பணியு மரியையமர் பொருதுமனன் மடியவிசை
தொடருமயி லெறிய வருக
கொங்குபயில் நறுமலர்க டென்றலுட னசையவரு
குன்றைநக ரதிபன் வருக
குடகர்கரு நடர்பரவு விகடமயின் மலைமருவு
குமரகுரு பரன் வருகவே.