மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்
மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
செங்கீரைப்பருவம்2 / 10
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ் · மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
செங்கீரைப்பருவம்
12✓
வரையிட்ட சக்ரகிரி சங்ககிரி யுயர்சக்ர
வாளகிரி மலைய கிரிநீள்
வடபொலன் கிரிகைலை யங்கிரிவ ராககிரி
மறுகுமந் தரகி ரிமகா
தரையிட்ட வுதயகிரி யத்தகிரி யிந்த்ரகிரி
சந்த்ரகிரி விந்த கிரியோர்
சத்யகிரி ரத்நகிரி சிரகிரி விசாலகிரி
சையகிரி யிமய கிரிவா
னிரையிட்ட ராமகிரி சோமகிரி யேமகிரி
நீலகிரி சிகர கிரிசேர்
நிடதகிரி கந்தமா தனகிரிக டோரகிரி
நீலமா யூர கிரியுந்
திரையிட்ட மலர்வாவி சூழவிளை யாடுமுகில்
செங்கீரை யாடி யருளே
திங்கட்கு வட்டிலெழு துங்கக்கி ரிக்கிறைவ
செங்கீரை யாடி யருளே.
13✓
கூனாரி எம்பிறைக் குஞ்சரக் கோட்டினெழு
குளிர்மணித் தரள மள்ளிக்
குமுறுகண் டீரவக் குருளைவெரு ளச்செழிய
குங்குமச் சினையொ டித்து
மானாக முட்கொண்டு வடகுவடெ னுங்கடிய
மலைவிட் டிறங்கி வலமும்
வாரிச் சுழித்துச் செழித்துநிரை கொண்டுநுரை
மண்டிவலை கொண்டெ ழும்பி
மேனாடு செவிடட முழங்கித் திரண்டுகரை
மேவுகா லானி றைப்ப
வேரிச் செழுங்கமல வாவித் தடம்பெருகி
வீசுசல ராசி தேடித்
தேனாறு புடைபெருகு மாயூர கிரிமுருக
செங்கீரை யாடி யருளே
திங்கட்கு வட்டிலெழு துங்கக்கி ரிக்கிறைவ
செங்கீரை யாடி யருளே.
14✓
பொன்னிறத் தூவிகொண் டணைத்துவெள் ளோதிமம்
பொற்பிளம் பார்ப்பி னுக்குப்
புணர்மலைப் பாலொடு கலந்துசெங் கமலப்
பொகுட்டுறை நறவெ டுத்துத்
துன்னிதழ்ச் சங்கொடு புகட்டிவத னத்திடை
சுழற்றிக் குறங்கு தட்டித்
துய்யபங் கேருக மணித்தொட்டி லிட்டுத்
துதைத்துதா லாட்டி யிரவின்
மன்னுசெங் குமுதப் பசுந்தேற லூட்டிமலர்
வாய்வளைய மாறி யுண்டு
மணிவயிறு தேக்கிட்டி ரதிகேளி விளையாடி
மார்பினிடை துயில்கூ ரவே
தென்னிடுங் களிவண்டு சூழ்நேம நாடனே
செங்கீரை யாடி யருளே
திங்கட்கு வட்டிலெழு துங்கக்கி ரிக்கிறைவ
செங்கீரை யாடி யருளே.
15✓
மன்றலந் தெரிவையர் குழாமெதிர் செலக்காள
மாவினங் குயில்கள் கூவ
வன்கமுகி னம்பாளை சாமரையி ரட்டமுகை
மல்லிகைச் சங்கொ லிக்க
இன்றுதின நன்றென விளந்தெங்கு தலையசைத்
திளநீர் குலுங்க வரிவண்
டிசைபாட வனசமுகை மலரமலர் வாய்திறந்
தெதிர்மொழி தரக்கிஞ் சுகம்
துன்றுசெங் காந்தளங் கைகுவிய நறுமலர்கள்
சொரிகடம் பலர்வி ரிக்கத்
தும்பைமலர் நறவொழுகு மன்னரா சிகளெனத்
தொடவேள் விருந்த ருந்தத்
தென்றலங் குலவிவரு குன்றையம் பதிமுருக
செங்கீரை யாடி யருளே
திங்கட்கு வட்டிலெழு துங்கக்கி ரிக்கிறைவ
செங்கீரை யாடி யருளே.
16✓
கடலகுடு கிழியவரு மலைசுவற நெடியவட
கனககிரி நிலைபெ யரநீள்
கறையொழுகு படவரவு திசைகள்பட விசையினொடு
கடகளிறு பிளிற நெடுமால்
வடதருவின் மறையமறை புகலுமய னகல்வனச
மலரில்விழ வமர ரிரிய
மதிபருதி தனுதிசை விடவுடுவி வுலகினிடை
மலர்சொரிவ தெனவு திரநீள்
புடவிகெடு கிடெனவுமை யவளுமெம தரணுமிது
புதுமையென வுடல்ப தறியே
புயல்கள் சளசளெனவிழு மழைசொரிய வினவசுரர்
பொருமனது பறைய றையவே
திடதுடின மொடுகடின நடனமிடு மயின்முருக
செங்கீரை யாடி யருளே
திங்கட்கு வட்டிலெழு துங்கக்கி ரிக்கிறைவ
செங்கீரை யாடி யருளே.
17வேறு✓
காதலு டன்குற மாதுபு ணர்ந்தவ னாடுக செங்கீரை
கங்கைந திக்கு ளெழுந்தம தக்களி றாடுக செங்கீரை
கோதறு சந்த்ரக லாதிரி தந்தவ னாடுக செங்கீரை
குஞ்சரி மெய்ப்புற மஞ்சரி யிட்டவ னாடுக செங்கீரை
மோதக முண்டபி ரானொடு வந்தவ னாடுக செங்கீரை
முண்டக னைப்பெரு வன்சிறை வைத்தவ னாடுக செங்கீரை
யாதியொ டந்தமி லாதசெ முஞ்சுட ராடுக செங்கீரை
யங்கசன் மைத்துன துங்கம லைக்குக னாடுக செங்கீரை.
18✓
நாரண னுந்திரு மாதும கிழ்ந்திட வாடுக செங்கீரை
நஞ்சுமி டற்றினர் நெஞ்சம றைப்பொரு ளாடுக செங்கீரை
வாரண மொன்றட ரானன பஞ்சக னாடுக செங்கீரை
மந்தர வெற்பினு யர்ந்த திரட்புய னாடுக செங்கீரை
பூரண சந்த்ரசு பானன ரஞ்சித னாடுக செங்கீரை
பொங்குதி ரைக்கட லுண்டவன் மெய்க்குரு வாடுக செங்கீரை
யாரண முந்திசை மாமுக னுந்தொழ வாடுக செங்கீரை
யங்கசன் மைத்துன துங்கம லைக்குக னாடுக செங்கீரை.
19✓
கூர்கொண்ட வேலையுங் கைப்படுத் திப்பகழி
கொடியொரு தூணி யாக்கிக்
குரைகடலை முனிவாய்ம டுத்துமா னிரிதரக்
குவளையை வனம்பு குத்தி
வேர்கொண்ட கமலத்தை முட்டாளெ னத்துறி
மீனையிமை யாதி ருத்தி
வெங்கட்கொ டுங்கூற்றை யந்தகனெ னத்தள்ளி
வெவ்விடம் பயிலிட் டுமைக்
கார்கொண்டு விளரியரு கடைசிவந் தையரி
கலந்துமை யெழுதி வள்ளைக்
காதளவு செல்லுங் கருங்கட் குறத்தியிரு
கனதனமு மொய்ம்பு தோயச்
சீர்கொண்டு முன்னின்ற மதவார ணத்திளவல்
செங்கீரை யாடி யருளே
திங்கட்கு வட்டிலெழு துங்கக்கி ரிக்கிறைவ
செங்கீரை யாடி யருளே.
20✓
வண்டிசை பெற்ற கடம்பம லர்ப்பய செங்கோ செங்கீரை
மன்நன் மிகப்பொலி குன்றை நகர்க்கிறை செங்கோ செங்கீரை
யெண்டிசை மெச்சுசி கண்டி மலைத்துறை செங்கோ செங்கீரை
யெங்கள் குறப்பெண் மணம்புணர் வித்தக செங்கோ செங்கீரை
யண்டினர் துக்க மடங்க வொழித்தவ செங்கோ செங்கீரை
யந்தரி பெற்றருள் சுந்தர விக்ரக செங்கோ செங்கீரை
தெண்டிரை வற்ற வெறிந்தவ யிற்கர செங்கோ செங்கீரை
சிங்கம டர்த்தவ துங்கம லைக்குக செங்கோ செங்கீரை.
21✓
ஐந்து முகத்தினர் தந்தசு புத்திர செங்கோ செங்கீரை
யன்றிலெ னத்தகை குன்று துளைத்தவ செங்கோ செங்கீரை
யிந்து முகத்தில குந்தில தத்தொரு செங்கோ செங்கீரை
யெங்கும துப்பொலி கின்றந திக்கிறை செங்கோ செங்கீரை
முந்துத மிழ்க்கவி ருன்சிறை விட்டவ செங்கோ செங்கீரை
மொய்ம்பரு ணைப்புல வன்கவி யிட்டவ செங்கோ செங்கீரை,
சிந்துரவெற்பைய டர்ந்ததி ரட்புய செங்கோ செங்கீரை
சிங்கம டர்த்தவ துங்கம லைக்குக செங்கோ செங்கீரை.