முருகன் App
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்
மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
சிற்றிற்பருவம்8 / 10
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ் · மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்

சிற்றிற்பருவம்

72✓
கடவா ரணமா முகத்தவுணன்
கடும்போர் துளைத்துப் பொருதிரண
களத்திற் புகுந்து மருப்பிவரக்
கதிக்குந் தரளம் பிரித்தெடுத்து
மடவார் கூடி மனைவகுத்து
மலைய வரைச்சந் தனக்குழம்பு
வாய்த்த பனிநீர் வார்த்துரைத்து
வழித்து நிறைசந் தனக்குழம்பிற்
படவா ளரவின் முடிதாங்கும்
படிமேல் விளங்க நிலம்பூசி
பதுமத் தரசி யெனுமாதர்
பரிவாய்க் கூடி விளையாடுந்
திடவா ரணத்தி னுடன்பிறந்த
தேவே சிற்றிற் சிதையேலே
சிகண்டி மலைமேல் வீற்றிருக்குஞ்
செல்வா சிற்றிற் சிதையேலே.
73✓
தாங்கும் புவிக்கோ ராடையெனத்
தவமா முனிக்கு முணவாகத்
தயங்கும் பாரா வாரமுன்னாட்
டானே சுவற வேலெறிந்து
நீங்கும் புனலாற் குடவளைக
ணிலமே லொதுங்க மரகதத்தால்
நிரைத்த வடுப்பின் மிசையேற்றி
நினது நதித்தே னுலைவார்த்து
வாங்கும் வயிரப் பொடியதனை
மறுப்பார்த் தெடுத்துக் களைந்தரிசி
வாகாப் புகட்டி நின்னாட்டு
மடவார் கூடி விளையாடுந்
தேங்கும் புகழ்சேர் குன்றைநகர்த்
தேவே சிற்றிற் சிதையேலே
சிகண்டி மலைமேல் வீற்றிருக்குஞ்
செல்வா சிற்றிற் சிதையேலே.
74✓
கதறு மவுண ரிரிந்தோடக்
கலங்கு மாயா புரியழித்த
காலத் தவர்மா ளிகைப்பவளக்
காலே யவர்க்குத் தனமாகப்
பதறு மகர மடமாதர்
பரிக்குந் திருமங் கலப்பூணிற்
பதிக்கு நடுநா யகமணியாம்
பகர்மா ணிக்க மிருட்பிழம்பை
உதறும் படிக்குக் ககனமணி
யொளிசேர் தூண்டா விளக்கெனவே
யுயிரோ வியம்போன் மடமாதர்
உனையே யடுத்து விளையாடும்
சிதறுந் தரங்கத் தேனாற்றுத்
தேவே சிற்றிற் சிதையேலே
சிகண்டி மலைமேல் வீற்றிருக்குஞ்
செல்வா சிற்றிற் சிதையேலே.
75✓
கூட்டுந் தரங்க மிரங்குதெண்ணீர்க்
குளிர்தே னாற்றி னீராடிக்
கூந்தல் விடுத்துத் திலதமிட்டுக்
குவளை விழிக்கஞ் சனமெழுதிப்
பூட்டு மணிகள் பலவணிந்து
பூம்பட் டாடை விரித்துடுத்துப்
புகலுங் களபங் கமகமெனப்
பூசித் தரள வடம்பூண்டு
சூட்டு மலர்மா லிகைதரித்துத்
துலங்குங் கழங்கம் மனையெறிந்து
சுரும்பா ரரும்பு கறிதிருத்திச்
சுடுசோ றாக்கி விளையாடுந்
தீட்டுந் திலத நுதற்குமரா
சிறியோர் சிற்றிற் சிதையேலே
சிகண்டி மலைமேல் வீற்றிருக்குஞ்
செல்வா சிற்றிற் சிதையேலே.
76✓
வருமோ கார கிரிசூழ
வலமாய் நடந்து பூங்காவின்
மலர்பூப் பறித்து மலையேறி
வனச மலர்த்தாண் மிசைசொரிந்தங்
குருமே றெனவே யெதிர்த்தடரு
மொருவேல் பாடி மயில்பாடி
யுபய மடமா னடிகடொழு
துனதா றெழுத்துங் கருத்தில்வைத்துத்
தருமே னியிலோவெண் ணீறணிந்துன்
றனையே துதித்துச் சிறுசோறுன்
றனக்கே படைத்துத் தனித்தனியுன்
றாளே வணங்கி விளையாடுந்
திருமே னியிலும் புழுதிபடச்
சிறியோர் சிற்றிற் சிதையேலே
சிகண்டி மலைமேல் வீற்றிருக்குஞ்
செல்வா சிற்றிற் சிதையேலே.
77✓
வானத் தவுண ரெதிர்த்தடர
வரும்பா ளையமோ மலர்த்தாளில்
வணங்கா நிருதர் படைவீடோ
மாயா புரிக்கொத் தளமீதோ
கானக் குறவர் பசுங்குடிலோ
களிக்குங் குறத்தித் தினைப்புனத்தைக்
காக்கும் வேலித் திறமீதோ
கதிக்குங் க்ரவுஞ்ச கிரிதானோ
ஞானத் தவர்க டமையமக்கி
நாளும் பிறப்புக் கிடமாக்கி
நலியும் வலிய வினைப்பயனோ
நளின மலர்த்தா ளாலழிக்க
ஆனக் கொருகே சரியான
அரசே சிற்றி லழியேலே
அகிலம் பரவுந் துங்கமலைக்
கரசே சிற்றி லழியேலே.
78✓
நிலஞ்சேர் மாட்டுக் குளப்படியி
னீர் போ னிறைத்து விளையாடு
நீலக் கடலின் புனலிதுவோ
நினது மலர்த்தாள் வணங்காத
குலஞ்சேர் வீர மாகேந்த்ரக்
கொடிய நகரோ சிங்கமுகன்
கொலுவீற் றிருக்கு மண்டபத்தின்
கொடுங்கை யிலங்கு மணிமுகப்போ
பொலஞ்சேர் கிரியும் இமையவெற்பும்
பொருந்தும் படிக்கக் கழங்கெனவே
பூட்டித் தெறிக்கும் மலையிதுவோ
புகலும் பதத்தா னீயழிக்க
அலஞ்சேர் கரத்தான் மருகனெனு
மரசே சிற்றி லழியேலே
அகிலம் பரவுந் துங்கமலைக்
கரசே சிற்றி லழியேலே.
79✓
தரிக்கு மமரர் சிறையிருக்குஞ்
சாலை யிதுவோ நற்கீரன்
தமிழுக் கிரங்கிச் சிறைவிடுத்த
தலமா மலைக் குகையிதுவோ
விரிக்கு மிலங்கா புரிக்கோட்டை
மேலை வாயிற் படியிதுவோ
வேலைக் கொருவே லியுமாக
விளங்கு மெழுதீ வோவருண
கிரிக்கு மனச்சஞ் சலந்தீர்த்துன்
கிருபை யளிக்கு முன்னாளிற்
கிளைக்கும் வினையோ வனசமெனக்
கிளரும் பதத்தா னீயழிக்க
அரிக்கு மருமை மருகனெனு
மரசே சிற்றி லழியேலே
அகிலம் பரவுந் துங்கமலைக்
கரசே சிற்றி லழியேலே.
80✓
சரண மெனவே வந்தடைந்த
தவஞ்சேர் முனியாங் கவுசிகன்மேற்
றானே நடத்து முனிவேள்வித்
தலமோ சமணர் குடியிருப்போ
வாரண மெனவே யவர்விடுத்த
வனலோ மதுரைக் கரசன்மிசை
யங்கந் துளைக்குங் கொடுஞ்சுரமோ
வாற்றோ டேறி வரும்புனலோ
மரண மடையு மருமறையோன்
மங்கை யுயிரைக் கவர்ந்தெடுத்த
மறலி யுலகோ வனசமெனு
மலர்த்தாள் சிவக்க நீயழிக்கத்
திரண மெனவே மதித்தருள்செய்
தேவே சிற்றிற் சிதையேலே
சிகண்டி மலைமேல் வீற்றிருக்குஞ்
செல்வா சிற்றிற் சிதையேலே.
81✓
மோக்கக் குழையு மனிச்சமலர்
முனிவர் மனத்தி லுறநினைத்து
முயங்கக் குழையு முனதுபத
முளரிக் கிணையென் பாரறியார்
தாக்கச் சிவக்கு மலர்ப்பதத்திற்
றனித்தாள் பொதியு மணியழுத்துந்
தமியேன் மனது சஞ்சலிக்குஞ்
சகிக்க வறியே மெமைநாளுங்
காக்க வுனக்கே பாரமலாற்
கதிவே றுண்டோ காப்பவனே
காவ லழித்தாற் கணக்கேதுன்
கருணை யிலங்கக் காலமன்றோ
வாக்கம் பெருகுங் குன்றைநகர்க்
கரசே சிற்றி லழியேலே
அகிலம் பரவுந் துங்கமலைக்
கரசே சிற்றி லழியேலே.